Published:Updated:

ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்
ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

கோடம்பாக்கத்தில் இது `பெண்கள் ஸ்பெஷல்' சீஸன்.

அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் தள்ளிப்போகும் மியா ஜார்ஜ்...
 
மீடியா வேலையால் மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடும் ரித்விகா... காதலனின் தாழ்வுமனப்பான்மையால் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் நிவேதா பெத்துராஜ்... திருமணம் என்னும் ‘ஒரு நாள் கூத்து'க்காக இந்த மூவரின் வாழ்க்கையையும் குழப்பிவிடும் மூன்று ஆண்களின் கதை.

தமிழ்ச் சமுதாயம், திருமணத்தின்மீது தீராக் காதல்கொண்டது. இங்கே ஒருவரின் வாழ்க்கையின் அடிப்படை, திருப்புமுனை, காரணம் எல்லாமே திருமணம்தான். அதன் எதிர்மறை விளைவுகளை முதல் படத்திலே பேசத் துணிந்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்.திருமணம் தள்ளிப்போக எடுத்துக்கொண்ட மூன்று காரணங்களிலும் வித்தியாசமும் யதார்த்தமும் ரசனை.

அறிமுகம் நிவேதா பெத்துராஜ், நடிப்பில் குறையொன்றுமில்லை. அப்பாவை மீற முடியாமல் திணறும்போது க்ளாஸ் மியா ஜார்ஜ், நம்பிப்போனவன் சறுக்கியதும் வீடு திரும்பிய பின்னர் பேசும் ஒற்றை வசனத்தில் மாஸ். ஆர்.ஜே என்றால் செலிபிரிட்டி என்ற மாயையை உடைத்து, யதார்த்தத்தை அட்டகாசமாகப் பிரதிபலிக்கிறார் ரித்விகா. இந்த மூன்று பேருக்கு முன்னால் திணறிப்போகிறார் `அட்டகத்தி' தினேஷ்.

ஆர்.ஜே-வாக வரும் ரமேஷ்திலக் மட்டும் ரேடியோ தன் தாய்வீடு என்பதால் மிளிர்கிறார். பால சரவணன், `சாப்பாட்டுராமன்' செந்தில் விஜய்யின் காமெடி அதிரடி.

பெண்கள் கதாபாத்திரத்தில் இருக்கும் தெளிவு, ஆண்கள் விஷயத்தில் இல்லாமல்போனதாலே ஏமாற்றம் வருகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் தன் கவலையைச் சொல்லும் தினேஷ், முன்னரே ஏன் சொல்லவில்லை? ரித்விகாவை மனதார விரும்பும் ரமேஷ், திடீரென அந்த முடிவை எடுக்க என்ன காரணம்? மியா ஜார்ஜின் அப்பா ஏன் திருமணத்தைத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார்?

ரியாக்‌ஷன்களை சரளமாகச் சொல்லும் திரைக்கதையில், அதற்கான ஆக்‌ஷன் பக்கங்கள் இல்லாமல்போனதுதான் பிரச்னை. அழகான மலைச்சாலையில் அழைத்துச் சென்று பாலைவனத்தைக் காட்டியதுபோல் இருக்கிறது அந்த ட்விஸ்ட் வெறி க்ளைமாக்ஸ்.

ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

சீரியல் வாசனை தெரியாமல் இருக்க, காமெடி மசாலாக்களைச் சேர்த்த சங்கர்தாஸ் - நெல்சன் வெங்கடேசன் வசனக் கூட்டணிக்கு பெரிய நன்றி. `அடியே அழகே...’, ஜஸ்டின் பிரபாகரனின் ஆல் டைம் டாப் 3-ல் நிச்சயம் சேரும். பின்னணி இசையிலும் ஜஸ்டினுக்கு ஜே!

இன்னொரு முறை ஒருவரிடம் `எப்ப கல்யாணம்?’ எனக் கேட்கும் முன்னர் யோசிக்கவைக்கும், இந்த `ஒரு நாள் கூத்து'.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு