Published:Updated:

விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்
விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்

ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்

பிரீமியம் ஸ்டோரி
விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்

விஜய்க்கு வயது 42. `துப்பாக்கி', `கத்தி', `தெறி' என படங்கள் ஏற, ஏற இன்னும் இளமையாகிக்கொண்டே போகிறார் இளைய தளபதி. சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள், 60-வது படம் என எண்ணிக்கை கூடிக்கொண்டே போனாலும்  அதே ஸ்லிம் உடம்பும், ஸ்லீக் ஸ்டைலும், சிம்பிள் நடிப்புமாகத் தெறிக்கவிடும் விஜய்யின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இங்கே...

• இதுவரை 21 அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் விஜய். இவரின் 60-வது படத்துக்காக இன்று முன்னணியில் உள்ள எல்லா இயக்குநர்களும் கதை சொல்லியிருந்தனர். பெரும்பாலானோரின் ஸ்கிரிப்ட் பிடித்திருந்தாலும் இயக்குநர் பரதனைத் தேர்வுசெய்தது பலருக்கும் ஆச்சர்யம். ‘எதுக்கு நீங்க பரதன் சாரைத் தேர்ந்தெடுத்தீங்க?’ என அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டபோது, ‘எல்லாரும் வெற்றிபெற்ற இயக்குநர்களுக்கே வாய்ப்பு தர்றாங்க. நம்ம மூலமா ஒரு இயக்குநர் வெற்றி பெற்றார்னா நமக்குப் பெருமைதானே! ஒரு வெற்றிக்காகத்தான் இந்தப் போராட்டம். பரதன் சாரும் வெற்றிக்கான மனிதர். ஒரு ஹிட் கொடுத்துட்டார்னா அவரும் ஹிட் லிஸ்ட்ல வந்திடுவார்ல’ என்றாராம்.

• எம்.ஜி.ஆர் உள்பட பல சீனியர் நடிகர்களின் படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், ‘விஜய்-60’யைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ள
எம்.ஜி.ஆர் படத் தலைப்புகளில் ஒன்றுதான் இந்தப் படத்தின் டைட்டில்.

• கிராமப் பின்னணியில் நடக்கும் கதை. சிறந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் ஒருமுறை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறாராம் இயக்குநர் பரதன். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களில் மூன்று பாடல்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஓப்பனிங், மெலடி என இரு பாடல்களை ஷூட் செய்து முடித்திருக்கிறார்கள்.

• வித்தியாசமான முயற்சி, அவார்டு வின்னிங் ஸ்கிரிப்ட் என்றால் விஜய்க்கு அலர்ஜி. ‘ஆர்வமா எதிர்பார்த்து வர்ற ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அனுப்புற மாதிரியான கமர்ஷியல் என்டர்டெய்னர்தான் நம்ம ஏரியா. அதைத்தான் என்கிட்ட ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க’ என்பார்.

• ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரசிகர்களை தன் அடையாறு அலுவலகத்துக்கு வரவழைத்துச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு முழுநாள் அவர்களுடன் இருந்து, ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொள்வார். என்னதான் பிஸி ஷெட்யூல் இருந்தாலும், இந்தச் சந்திப்பு தவறாமல் நடக்கும்.

•   ஒரு பிரபல நடிகரின் மகன், இவரின் தீவிர ரசிகர். சமீபத்தில் விபத்தில் சிக்கியவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுத் தேறிவருகிறார். ஓரளவு தேறிவந்தவர் கண் விழித்தபோது ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோஸ் வந்துள்ளது. அதைப் பார்த்தவர் அவரை அறியாமல் ‘தெறி’ எனச் சொல்லியுள்ளார். அதை அந்த நடிகர் விஜய்யிடம் ஷேர் செய்ய, விஜய் அப்போது கோவாவில் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். ‘நான் சென்னைக்கு வந்ததும் முதல் மீட்டிங் அந்தப் பையனைச் சந்திப்பதாகத்தான் இருக்கும்’ என்றவர், சென்னை வந்ததும் ஏர்போர்ட்டில் இருந்து நேராக அந்த நடிகரின் வீட்டுக்குப் போயிருக்கிறார். மகிழ்ச்சியில் நடிகரின் மகன் விபத்துக்குப் பின்னர் முதல்முறையாகச் சிரிக்க ஆரம்பித்திருக்கிறான்.

இரண்டு மணி நேரம் இருந்து ஜாலியாகப் பேசியவர், அவனின் போனை எடுத்து தன் பெர்சனல் செல் நம்பரை சேவ் செய்து கொடுத்துவிட்டு, ‘நீ எப்பவேனா என்கிட்ட பேசலாம். நீ எப்ப என்னைச் சந்திக்கணும்னு நினைச்சாலும் கூப்பிடு. நான் வந்துடுறேன்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதேபோல முதல் மீட்டிங்குக்குப் பிறகு இரண்டு முறை மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.

•   அரை மணி நேரம் ஜாகிங் அல்லது ட்ரெட்மில் வாக்கிங். இதைத் தாண்டி ஜிம்மில் பெரிதாக நேரம் செலவிடுவது இல்லை.

• காலை டிபன் இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. மதியம் சிக்கன் ப்ளஸ் சப்பாத்தி. சப்பாத்தி குறைவாகவும் சிக்கன் அதிகமாகவும் இருக்க வேண்டும். மாலையில் டீ, காபி அல்லது சூப். கொஞ்சம் பிஸ்கட். இரவு மீண்டும் இட்லி, தோசை. ஆனால், இரவு 7 மணிக்குள் சாப்பாட்டை முடித்துவிடுவார். 10 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவார்.

•   படப்பிடிப்பில் பல நடிகர்கள் வெளியில் இருந்து சாப்பாடு எடுத்துவரச் சொல்லி சாப்பிடுவார்கள். ஆனால், இவருக்கு எல்லோரும் சாப்பிடும் புரொடக்‌ஷன் சாப்பாடுதான்.

• ‘வயிற்றை ஃபில் பண்ணாதே’ இதுதான் விஜய்யின் டயட் மந்திரம். எவ்வளவு பசித்தாலும் எவ்வளவு ருசித்தாலும் கால் வயிறுக்குமேல் சாப்பிட மாட்டார். சிந்தி, சிதறி, வீணாக்கி... கசகசவென சாப்பிட மாட்டார். ஹோட்டலோ, வீடோ உணவை வீணாக்குவது பிடிக்கவே பிடிக்காது.

• மட்டனைத் தொட மாட்டார். மீன் ரொம்பப் பிடிக்கும்.

•   மாதம் ஒருமுறை சென்னைக்குள்ளேயே ஃபேமிலி அவுட்டிங் போவார். எந்த இடம் என்பதை முடிவுசெய்வது, மகன் சஞ்சய். பெரும்பாலும் அது சிட்டிக்குள் ஏதாவது ஒரு ஹோட்டலாகவே இருக்கும்.

•   பி.எம்.டபிள்யூ, மினி கூப்பர், ரோல்ஸ்ராய்ஸ் என வீட்டில் பல கார்கள் இருந்தாலும், கறுப்பு வண்ண ஸ்விஃப்ட்டைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார். அனைத்து கார்களுக்குமே ஃபேன்சி நம்பர்கள்தான். ஆனால், எல்லா கார்களுமே வெவ்வேறு எண்களில் இருக்கும்.

•   தானே கார் ஓட்டிக்கொண்டு லாங் டிரைவ் போகப் பிடிக்கும். பல சமயங்களில் நீலாங்கரை வீட்டில் இருந்து அடையாறு ஆபீஸ் வரை அவரே கார் ஓட்டிக்கொண்டு வந்துவிடுவார்.

•   டைம் மேனேஜ்மென்ட்டில் பின்னி எடுப்பார். ‘சாரோட கார் நுழைஞ்சா மணி ஏழு’ என இப்பவும் எப்பவும் ஷூட்டிங்கில் பேசிக்கொள்வார்கள். ‘ `வர்றேன்'னு சொன்னீங்க. ஏன் இன்னும் வரலை?’ என போன் அடிக்காமல், தன்னைச் சந்திக்க வருவர்களுக்காக ஒரு மணி நேரம்கூடக் காத்திருப்பார்.

விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்

• வெளிநாடுகளில் லண்டன், அமெரிக்கா பிடித்த நாடுகள். வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்துடன் லண்டனில் உள்ள மாமியார் வீட்டுக்கு விடுமுறைக்குப் போவார்.

•   வெளியூரில் படப்பிடிப்பு முடிந்து, நேரம் இருந்தால் அருகே உள்ள தியேட்டர்களுக்குக் கிளம்பிவிடுவார். `துப்பாக்கி', `தலைவா' ஷூட்டிங் மும்பையில் நடந்த சமயத்தில், அங்குள்ள தியேட்டர்களில் வாரம் தவறாமல் நண்பர்களுடன் போய்ப் படம் பார்த்து வந்தார்.

•   மனைவி, மகன், மகள்... எனக் குடும்பத்துடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பது, டி.வி பார்ப்பது... இவையே இவரின் முக்கியமான பொழுதுபோக்கு. வீட்டுக்குப் போய்விட்டால் விளையாட்டு, அரட்டை என அது மகன்-மகளுக்கான நேரம்.

•   மகன் சஞ்சய் 11-ம் வகுப்புப் படிக்கிறார். அவருக்கு சினிமா பார்ப்பது பிடிக்கும். சமீபத்தில் அவருக்குப் பிடித்த படம் ‘தெறி’. சஞ்சய்க்கு கிரிக்கெட்டராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக ஸ்பெஷல் கோச்சிங் போய்க்கொண்டி ருக்கிறார்.

• மகள் சாஷா திவ்யா ஆறாம் வகுப்பு படிக்கிறார். ‘தெறி’ பட க்ளைமாக்ஸில் விஜய் மகளாக நடித்திருப்பது திவ்யாதான். ‘எனக்கு ஓ.கே. பொண்ணுகிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’ - அட்லி கேட்டதும் விஜய் இப்படிச் சொல்ல, ‘ஒருநாள் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்’ என்ற சாஷா, மறுநாள் ஓ.கே சொல்லியிருக்கிறார்.

• மகன், மகள் இருவருக்குமே சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால், மாதம் ஒருமுறை அம்மா சங்கீதாவோடு போய், படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

•   குடும்பத்தைப் பொறுத்தவரை, சங்கீதாதான் டெசிஷன் மேக்கர். அவர் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்வார் விஜய்.

•   திரைக்கு வரும் பெரும்பாலான படங்களைப் பார்த்துவிடுவார். ஆனால், அவர் தியேட்டருக்கு வருவது யாருக்கும் தெரியாது. படம் நன்றாக இருந்தால் உடனே அவர்களைக் கூப்பிட்டுப் பாராட்டிவிடுவார். அப்படி சமீபத்தில் பார்த்துவிட்டுப் பாராட்டியது, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ஹீரோ நிவின் பாலி.

• கேட்ஜட் ஃப்ரீக். மார்க்கெட்டில் லேட்டஸ்டாக என்னென்ன எலெக்ட்ரானிக் கேட்ஜஸ்ட் வந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். அதேபோல ஐபோன், ஆண்ட்ராய்டில் என்னென்ன லேட்டஸ்ட் மாடல்கள் வருகின்றன என்பதையும் அப்டேட்டிக்கொள்வார்.

•   பாட்டு கேட்பது பிடிக்கும். தன் செல்போனில் ஃபேவரிட் ப்ளே லிஸ்ட் உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிலாக்ஸாக இருந்தால் தனியாக உட்கார்ந்து பாட்டு கேட்பார். பயணங்களிலும் பாடல்கள்தான் துணை.

• புத்தகங்கள் வாசிக்க மாட்டார். நியூஸ் பேப்பர், டி.வி., சமூக வலைதளங்கள்... இவைதான் இவரின் நியூஸ் சோர்ஸ். ‘என்ன லேட்டஸ்ட் செய்தி’ என்பதை உடன் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

•   டான்ஸ், விஜய் ஸ்பெஷல். ஆனால் வீட்டிலோ, ஷூட்டிங் ஸ்பாட்டிலோ ரிகர்சல் பண்ணுவது கிடையாது. முதலில் ஹீரோயின், டான்ஸர்களுக்கான ரிகர்சல் போகும். பிறகு அதிகபட்சம் மாஸ்டர் இரண்டு முறை ஆடிக் காட்டுவார். அவ்ளோதான்... அதன் பிறகு அது விஜய் ஆட்டம்!

•   ‘சினிமாவில் உங்களுக்கு சரியாகப் பொருந்தும் ஜோடி யார்?’ என்றால், ‘அப்போ சிம்ரன், அசின்’ எனப் பளிச்சென பதில் வரும். இன்றைய ஹீரோயின்களில் அப்படி யாரையும் இதுவரை சொன்னது இல்லை.

• பிடித்த விளையாட்டுக்கள் கிரிக்கெட், டென்னிஸ். கிரிக்கெட் மேட்ச் விரும்பிப் பார்ப்பார். தன் மகனுக்குப் பிடிக்கும் அதே சச்சின், தோனியை இவருக்கும் பிடிக்கும்.

• அம்மா பிள்ளை. படப்பிடிப்பில் என்ன பிஸி ஷெட்யூலில் இருந்தாலும் அம்மா ஷோபாவை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து விடுவார். சினிமாவில், குடும்பத்தில் என்ன நடக்கிறது... என்பது உள்பட நிறைய விஷயங்களை அம்மாவிடம் பகிர்ந்துகொள்வார்.

• தன் பெர்சனல் அசிஸ்டென்ட், டிரைவர், மேக்கப்மேன்... என ஆரம்ப காலத்தில் இருந்து அவர் கூடவே இருக்கும் 10 பேருக்கு சாலிகிராமத்தில் ஓர் அப்பார்ட்மென்ட் கட்டிக்கொடுத்திருக்கிறார். அவர்கள் அனைவரும் அங்குதான் வசித்துவருகிறார்கள்.

• திருநெல்வேலியைச் சேர்ந்த பழனியம்மாள் என்கிற பெண், சென்னையில் நடந்த விபத்தில் சிக்கி, கோமா ஸ்டேஜுக்குப் போய்விட்டார். அந்தச் செய்தி வாட்ஸ்அப் வழியாக ஃபார்வர்டாகி விஜய்க்குப் போக, ‘இது உண்மையா என செக் செய்து எனக்கு விவரம் சொல்லுங்கள்’ என, தன் ரசிகர் மன்ற நிர்வாகியிடம் சொல்லியிருக்கிறார். அது உண்மைதான் என்ற தகவல் வந்ததும், மனைவி சங்கீதாவிடம் சொல்லி, அந்தப் பெண்ணை வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றியிருக்கிறார்.

பிறகு, ஒரு வருடம் கழித்து அந்தப் பெண் தன் திருமணப் பத்திரிகையைக் கொடுக்க, விஜய்யின் அலுவலகம் வந்திருக்கிறார். அப்போது விஜய் படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருக்க, ‘விஜய் அண்ணனிடம்தான் பத்திரிகையைக் கொடுப்பேன்’ என அந்தப் பெண் பிடிவாதம் பிடிக்க... பத்திரிகையைப் பெறுவதற்காகவே விஜய் நேரில் வந்திருக்கிறார்.

• கவுண்டமணி, வடிவேலு இருவருக்கும் வெறித்தனமான ரசிகர்.

• நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட ஆறு பேர்கொண்ட பழைய கல்லூரி நண்பர்களுடன் இருக்கும்போது ரியல் விஜய்யைப் பார்க்கலாம். கலகலவெனச் சிரித்துப் பேசுவது, காமெடி, மிமிக்ரி... என ஏரியா களைகட்டும். ஒருவர் வீட்டு ஃபங்ஷன் என்றால், மற்ற ஐந்து பேரும் குடும்பத்தோடு அங்கு கூடிவிடுவார்கள்.

• அடிக்கடி பேசிக்கொள்ளும் சக ஹீரோக்கள், விக்ரம், சூர்யா. விஜய்யின் மனைவி சங்கீதாவும் அஜித்தின் மனைவி ஷாலினியும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் போனில் பேசிக்கொள்ளும் தோழிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு