Published:Updated:

“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”
“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”

கே.ஜி.மணிகண்டன், பா.ஜான்ஸன் , படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”

``நல்ல சினிமா, கமர்ஷியல் சினிமா, ஓடக்கூடிய சினிமா, ஓடாத சினிமா, மோசமான சினிமா, பார்க்கக் கூடாத சினிமானு இங்கே நிறைய பிரிவுகள் இருக்கு. இதுல `நல்ல சினிமா'ங்கிறதை நான் உயர்ந்த இடத்தில் வைக்கிறேன்.  `மகாநதி', `சிறை', `பசி', `உதிரிப்பூக்கள்' மாதிரி'' -  `சவரக்கத்தி'யில் நடித்து முடித்துவிட்டு, `துப்பறிவாளன்' படத்தை இயக்கும் பரபரப்பில் இருந்த மிஷ்கினைச் சந்தித்தோம்.

``நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை; அதை எடுக்கிறதுக்காகப் பாடுபடும் ஒரு படைப்பாளி. ஜனரஞ்சகமான சினிமாக்கள் ஓடணும்.  `கபாலி'யும் ஓடணும்.  `சபாஷ் நாயுடு'வும் ஓடணும். எல்லா படங்களுமே ஓடணும். அதுதான் என் ஆசை.''

``நிறையப் புத்தகங்கள் படிக்கிறீர்கள். ஒரு நாவலையோ, சிறுகதையையோ படமாக்க வேண்டும் என நினைத்திருக்கிறீர்களா?''

``மிஷிமாவின் நாவல், அப்புறம் டால்ஸ்டாயின் சில கதைகளைப் படிக்கும்போது அப்படித் தோணும். ஆனா, அதை இந்த லேண்ட்ஸ்கேப்ல பண்ண முடியாது. சினிமா, நாவல் ரெண்டுமே மொத்தமா வேற வேற விஷயங்கள். ஏன் சொல்றேன்னா, ஒரு சிறுகதை அல்லது நாவலை சினிமாவுக்காக எழுதும்போது முழுதாக மாற்றவேண்டி  இருக்கும். நான் திரைக்கதைக்கு மாற்றும்போது, அது ஏமாற்றமா இருக்கும்.

நான் திரைக்கதை எழுதும்போது, மிகவும் எளிமையான முறையில, குறைவான இலக்கியத்தன்மையில் வாழைப்பழத்துக்குள்ள ஊசி ஏத்துற மாதிரிதான் எழுதுறேன். ஏன்னா, படம் பார்க்கும் 99 சதவிகிதம் பேருக்கு அது தேவைப்படாது. அப்புறம் எனக்குப் பெரிய கனவுகள், டிரீம் புராஜெக்ட், சாகுறதுக்கு முன்னாடி ஒரு படம்கிறதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது.  இப்போ விஷால்கூட படம் பண்றேன்னா, அதுதான் என்னுடைய டிரீம் புராஜெக்ட். எனக்கு இந்தப் பெரிய வார்த்தைகள் மீதும் கொம்புகள் மீதும் நம்பிக்கை இல்லை.''

``உங்களின் அடுத்த படமான `துப்பறிவாளன்' கதை என்ன?''

``ஷெர்லாக்ஹோம்ஸின் 56 கதைகளும், 4 நாவல்களும் படிச்சிருக்கேன். எனக்கு எழுத்தாளர் ஆர்தர் கோனான் டோயிலேயும், அந்தக் கதாபாத்திரமும் ரொம்பப் பிடிக்கும். அப்புறமா  `ஸ்பைடர்மேன்', `துப்பறியும் சாம்பு', `அம்புலிமாமா' கதைகள்ல வர்ற விக்கிரமாதித்தன், வேதாளம் எல்லாம் பிடிக்கும். கிட்டத்தட்ட விக்கிரமாதித்தனே ஒரு டிடெக்டிவ்தான். இந்த மாதிரியான ஒரு ஆர்க்கிடெக்டே நமக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அவன் நார்மல் ஆடியன்ஸைவிட கொஞ்சம் புத்திசாலி. நாம யோசிக்கிறதைவிட அவன் வேற கோணங்கள்ல யோசிப்பான்.

அப்படி ஒரு கதாபாத்திரம் ரொம்ப நாளா என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. விஷுவல்லயும் அது ரொம்ப அழகா வரும். இப்போ விஷாலுக்காக இதை நான் எழுதிட்டிருக்கேன். எழுதுறேன்னு சொல்றதைவிட, அந்தக் கதாபாத்திரத்தோடு சண்டை போட்டுட்டிருக்கேன்னு சொல்லலாம்.''

``உங்கள் படங்களின் திரைக்கதைகளைப் புத்தகங்களாக வெளியிடுகிறீர்களே ஏன்?''

``சினிமாவுக்கு வர்றவங்களுக்கு திரைக்கதை பற்றி சின்ன ஓப்பனிங் கொடுக்கிறதுக்காகத்தான் அந்தப் புத்தகங்கள். ஒரு நாவல்ல ஒரு கதாபாத்திரத்தை இருபது பக்கங்களுக்கு எழுதலாம். ஆனா, திரைக்கதையில ஒரே வார்த்தையில், ஒரு செயல்ல நான் சொல்லிக் காட்டணும். எனக்கு இதை மற்ற இயக்குநர்களும் பண்ணணும்னு ஆசை. ராம்கிட்ட சொல்லியிருக்கேன். `தேவர் மகன்' திரைக்கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லா நல்ல படங்களுடைய திரைக்கதைகளும் புத்தகங்களா வெளிவரணும்.''

“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”

``இருட்டு, அழுகை, மர்மம்- இவைதான் மிஷ்கினா?''

``இந்தக் கேள்விக்கு ஒரே பதில் `சவரக்கத்தி'. என் தம்பியும் உதவி இயக்குநருமான ஆதித்யா இயக்குகிறான். அந்தப் படத்துக்கான கதை, திரைக்கதையை நான்தான் எழுதியிருக்கேன். இதை யாரும் நம்ப மாட்டாங்க. அதைப் பாருங்க. அது உள்ளே இருக்கும் ஹாஸ்யத்தைப் பாருங்க. சுவாரஸ்யமான திரைக்கதையா இருக்கும். ரெண்டு படம் தேவையே இல்லாம நைட்ல எடுத்துட்டேன். அதனாலயே நான் `நைட் டைரக்டர்' ஆகிட்டேன். காலையில இருந்து சாயங்காலம் வரை நடக்கும் விஷயம்தான் இந்தப் படத்தோட கதை. ஒரு ஷாட்கூட நைட் இல்லை. `என்ன சார் காலையிலேயே எடுக்கிறீங்க. இனி நைட்ல எடுக்க மாட்டீங்களா?'னு என்னை கேட்கணும்னு ஆசைப்படுறேன்.''

``உங்களுடைய படங்களில் காதல் காட்சிகள் மிகவும் குறைவு. உங்கள் வாழ்க்கையில்..?''

``நான் ரொம்ப எளிமையா, வலிமையா, தீர்க்கமா காதலிச்சிருக்கேன். ஒவ்வொரு வருஷமும் காதல்வயப்பட்டிருக்கேன். இதெல்லாம் என்னால் வெளியே சொல்ல முடியாது. இப்போ என்னுடைய மகளைத்தான் அதிகமா காதலிக்கிறேன். ஒரு காதலி இருந்தாங்க. அவங்களை 10 வருஷம் காதலிச்சேன். அப்புறம் என் மனைவியைக் காதலிச்சேன். அவங்க என்னைவிட்டுப் பிரிஞ்சுட்டாங்க.

`இளையராஜாகிட்ட போய், `ஒரு பையனை ஒரு பொண்ணு பார்க்கிறா சார்'னு சீன் சொல்லி பாட்டு கேட்டா, என்னை காறித் துப்புவார். ஆனா, `மரிய சூசையின் காதல்'னு ஒரு கதை எழுதி வெச்சிருக்கேன். இயேசு கிறிஸ்து காதலிச்சார்னா எப்படிக் காதலிப்பார்ங்கிறதை பற்றிய கதை அது. அதை ஒரு படமா எடுத்துட்டு, அதோட இந்தக் காதலைக் குழிதோண்டி புதைச்சுடலாம்னு எண்ணம்.''

“நான் இன்னும் நல்ல சினிமா எடுக்கலை!”

``பிடித்த தமிழ்ப் படங்கள்?''

`` `தேவர் மகன்', `சிறை', சிவாஜி கணேசன் நடித்த `காத்தவராயன்', `கைதி கண்ணாயிரம்', `நெஞ்சம் மறப்பதில்லை', `காதலிக்க நேரமில்லை' `தங்கப்பதக்கம்'.''

``எப்போதும் நன்றி சொல்ல நினைக்கும் நபர்?''

``அகிரா குரசோவா.''

``கடவுள் நம்பிக்கை இழந்த தருணம்?''

``இந்தச் சமூகம் சொல்ற கடவுளை, எங்க அப்பா இரண்டு முறை மதம் மாறினப்பவும், எங்க அம்மா என்னை மசூதிக்குக் கூட்டிப்போனப்பவுமே  இழந்துட்டேன்.''

``மிஷ்கின் யார்?''

``ஒரு கோமாளி.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு