பிரீமியம் ஸ்டோரி
பேய் எல்லாம் சும்மா இல்லை!

மீண்டும் கான்ஜுரிங் ஜூரம். 1977-ம் ஆண்டில் ஹாட்ஜ்ஸ்ன் என்பவரது குடும்பத்தில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகளை வைத்து தி கான்ஜுரிங் 2-வை எடுத்திருக்கிறார்கள்.

கொடூர ஆயுதங்கள், பயமுறுத்தும் விஷுவல் எஃபெக்ட்ஸ், மேக்கப் பேய்கள், அச்சுறுத்தும் இசை போன்றவற்றை அடக்கிவிட்டு, கதையில் கவனம் செலுத்தியதால்தான் 20 மில்லியன் டாலரில் உருவான `தி கான்ஜுரிங்' திரைப்படம், 318 மில்லியன் டாலர்களை அள்ளியது. அதை இரண்டாம் பாகத்திலும் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வான்.

லண்டனில் கணவனைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்துவருகிறார் பெக்கி ஹாட்ஜ்ஸ்ன். பெக்கியின் வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அவரது 11 வயது இளைய மகள் ஜேன்ட் ஹாட்ஜ்ஸ்னுக்குப் பேய் பிடிக்கிறது. விஷயம் பேய்த்தனமாக ஊர் முழுவதும் பரவ, வீட்டைக் காலிசெய்து வேறு வீட்டில் குடிபெயர்கிறார்கள். ஹட்ச் நாய் போல், பேயும் கூடவே வருகிறது.

சிறுமிக்கு உண்மையிலேயே பேயால் பிரச்னை இருக்கிறதா, இல்லை நடிக்கிறாளா என்பதைக் கண்டறிய அங்கு இருக்கும் சர்ச் நிர்வாகம் பேய் ஓட்டும் ஸ்பெஷலிஸ்ட்டான வாரன் தம்பதிக்கு (எட், லொரைய்ன்) அழைப்பு விடுக்கிறார்கள். கணவர் எட்டை, ஒரு பேய் கொல்லப் போகிறது என்பதை முன்னரே கணிக்கும் லொரைய்ன், முதலில் தயங்குகிறார். பின்னர் இருவரும் லண்டனுக்கு விரைகிறார்கள். சிறுமி சொல்வது உண்மையா, பேயைக் கண்டுபிடித்து, சிறுமியைக் காப்பாற்றினார்களா... என்பதோடு முடிகிறது திரைப்படம்.

பேய் எல்லாம் சும்மா இல்லை!

ரசிகனின் பார்வையில் கேமராவை நகர்த்தி, திகிலூட்டுகிறார் கேமராமேன் டான் பர்கெஸ். வயதான பேய் சொல்லும் வார்த்தைப்புதிர்கள், பேயை வைத்து காய் நகர்த்தும் பெரிய பேய், தி க்ரூக்கட் மேன் பொம்மை எனத் தொடர்ச்சியாக ரசிகனை பேயோடு ஒன்றவைத்திருப்பது கான்ஜுரிங் ஸ்பெஷல்.

சமீபகாலமாக கோலிவுட்டில் வரும் சென்டிமென்ட் பேய், கவர்ச்சிப் பேய்களைப் பார்த்து தெம்பாகிப்போன தமிழன், `அட பேயா, பாப்கார்ன் சாப்பிடுறியா?' என்பதுபோல் ஆரம்பத்தில் பேயை டீல் செய்தாலும், சில நிமிடங்களில் தொடர்ந்து வரும் திக் திக் காட்சிகளில், ஸீட்டைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறான்.

பேய் பட விரும்பிகள் படத்தை தாராளமாக ரசிக்கலாம். `பேய் எல்லாம் சும்மாப்பா!' என நினைப்பவர்கள், நிச்சயமாகப் பார்க்கலாம். இறுதியாக வரும் காட்சிகளில், 1977-ம் ஆண்டில் சம்பவம் நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு கிலி ஏற்படுத்துகிறார்கள்.

எது எப்படியோ, ஹாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான எந்த ஒரு சீக்வலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதை உடைத்தெறிந்து, பேய்தான் மாஸ், என கில்லியாக நிற்கிறது `தி கான்ஜுரிங்-2'.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு