பிரீமியம் ஸ்டோரி
ரியல் சண்டைக்காரி!

``திருமணமானபோது, எனக்கு 15 வயதுதான். செக்ஸ் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு முன்னால் என் மாமியார் நின்றுகொண்டு, `டேய்... அவளுடைய உடைகளைக் கிழித்து, அவளை...' என உத்தரவிடுவார். நான் கதறி, தடுப்பேன். அடி, உதைகள் கிடைக்கும். எத்தனையோ இரவுகள் இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. தினமும் குடித்துவிட்டு வரும் கணவன், என்னை அடித்து உதைத்து ஒவ்வோர் இரவிலும் பாலியல்ரீதியில் துன்புறுத்துவான். அதற்கு அவனுடைய தாயும் உடந்தையாக இருப்பார்.

நான் கர்ப்பமாக இருந்தேன். அப்போதும் என் மீதான வன்முறை தீரவேயில்லை. காவல் துறை உதவியை நாடினேன். `புருஷனை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இரும்மா... எல்லாம் சரியாகிடும்’ எனத் திருப்பி அனுப்பிவைப்பார்கள். எத்தனை நாள்தான் என் மீதான இந்த வன்முறையைப் பொறுத்துக்கொள்ள முடியும்? என் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடினேன்.''

பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் சண்டைப் பயிற்சியாளர் கீதா டாண்டனின் ஆரம்பகால வாழ்க்கை இது. `சென்னை எக்ஸ்பிரஸ்’ தொடங்கி, `சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ வரை கீதா டாண்டன் இல்லாமல் பாலிவுட்டில் இன்று ஆக்‌ஷன் படங்களே இல்லை. தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா தொடங்கி பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் அத்தனை பேருக்கும் அதிரடிக் காட்சிகளில் டூப் போடுபவர் கீதா.

ரியல் சண்டைக்காரி!
ரியல் சண்டைக்காரி!

ஆனால், கீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணீரும் ரத்தமும் நிறைந்திருக்கின்றன. கீதாவின் அம்மா இறந்தபோது அவருக்கு வயது 10. வாழ்க்கையைக் கடத்துவதற்கு வழி தெரியாத ஏழைத் தந்தை. 15 வயதில் திருமணம். நமக்கான உணவு தடை இல்லாமல் கிடைக்கும் என்கிற ஆசையில், திருமணத்துக்குத் தலையாட்டினார் கீதா. நல்ல வீடு, அருமையான குடும்பம் என்ற அடிப்படையில் வந்துசேர்ந்த மணமகனுடன் திருமணம். அங்கு சந்தித்த அத்தனைக் கொடுமைகளும், இப்போதும் கீதாவை நினைவுகளாகத் துரத்துகின்றன; இரவுகளில் பேய்களைப்போல துன்புறுத்துகின்றன.

கணவன் வீட்டில் இருந்து தப்பித்து, வேறு ஓர் இடத்தில் வேறு ஒரு வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினார் கீதா. மின்சாரமோ, தண்ணீரோ இல்லாத அந்த வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் அவதியுறும் கீதாவிடம், அந்த வீட்டைக் காட்டிய பெண்மணி, `வீட்டின் உரிமையாளரை அட்ஜஸ்ட் செய்துகொண்டால் மகாராணியாக வாழலாம்’ என்றார். உடனடியாக அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பிறகு, இன்னொரு பெண்ணின் நட்பு கிடைத்தது. கொஞ்ச நாட்கள் சப்பாத்தி தயாரிக்கும் வேலை. ஆனால், அந்தச் சம்பாத்தியம் போதவில்லை. அதன் பிறகு, திருமணங்களில் ‘பாங்ரா’ நடனம் ஆடும் குழுவில் வேலை கிடைத்தது. ஒரு திருமணத்துக்கு 400 ரூபாய் சம்பளம். அங்கு கீதாவைச் சந்தித்த ஒரு பெண், அவருக்கு பாலிவுட்டுக்கு வழிகாட்டுகிறார்.

ரியல் சண்டைக்காரி!
ரியல் சண்டைக்காரி!

முதன்முதலில் சினிமாவில் ஸ்டன்ட் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது கீதாவுக்கு. நெருப்பு பற்றி எரியும் அந்த சீனில் அவருக்கு பலத்த காயம். குடும்பத்தினரும் குழந்தைகளும் `இந்த வேலை வேண்டாம்’ என்றார்கள். ஆனால், அந்தச் சமயத்தில்தான் உறுதியாக முடிவெடுத்துள்ளார் கீதா... ‘இந்த வேலைதான் இனி என் வாழ்க்கைக்கான ஆதாரம்.’

அதற்குப் பிறகு கீதாவுக்கு ஏறுமுகம்தான். கீதா ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் ஏகப்பட்ட வலிகளைத் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கும். சினிமாவில் கதாநாயகிகள் மேல் விழவேண்டிய  ஒவ்வோர் அடியும் இவர் மேல்தான் விழும். அதற்கு முன்னர் தன் வாழ்க்கையில் வாங்கிய எதையும்விட அவை வலிமிகுந்தவை அல்ல என நம்பினார் கீதா. படிப்படியாக இவ்வளவு இடையூறுகளையும் தாண்டி வளர்ந்துவந்திருக்கும் கீதாவுக்கு, இன்று மும்பையில் சொந்தமாக ஒரு குடியிருப்பு இருக்கிறது. தன்னுடைய வருமானத்தில் இரண்டு குழந்தைகளையும் கௌரவமாக வளர்த்துவருகிறார்.

ரியல் சண்டைக்காரி!

`வன்முறைக்கு ஆளாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். மனதைத் தளரவிடாதீர்கள், தொடர்ந்து போராடுங்கள், உங்கள் போராட்டத்தை எப்போதும் கைவிடாதீர்கள். எதிர்த்து நில்லுங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. உங்களுக்கு வருகிற தடைகளைத் தகர்த்து முன்னேறும்போதுதான் அதை உங்களால் உணர முடியும். காத்திருங்கள், உங்களுக்கான நல்லதெல்லாம் நிச்சயம் நடக்கும்' இதுதான் கீதா சொல்லும் செய்தி.

கீதாவின் வாழ்க்கை, 15 நிமிடக் குறும்படமாக யூடியூபில் காணக்கிடைக்கிறது. இதை இயக்கியிருப்பவர் ஜோய்னா என்கிற ஆவணப்பட இயக்குநர். இந்தப் படத்தில் கீதாவே தன்னுடைய வாழ்க்கை குறித்து விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்.

ரியல் சண்டைக்காரி!

`கீதா - தி ஃபிலிம்' என்ற இந்தச் சிறிய ஆவணப்படத்தை https://youtu.be/MSVOWg3FTsI என்கிற யூடியூப் லிங்க்கில் காணலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு