Published:Updated:

“பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக்கிறேன்!”
“பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
“பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக்கிறேன்!”

`ஆங்கிலக் கலப்பு இல்லாமல், சம்ஸ்கிருத வார்த்தைகள் சேர்க்காமல், ஆபாச வார்த்தை களைத் தூவாமல் 1,000 பாடல்கள்...’ எனும் சாதனையை நோக்கி நகர்கிறார் தாமரை. பாடல்கள், அரசியல், மனித உரிமை, மேடைப்பேச்சு, போராட்டக் களம் என உற்சாகமாக வலம்வந்தவர், ஏனோ  அமைதியாகிவிட்டார். பேட்டி, தொலைக்காட்சி மேடைகளைப் புறக்கணித்து வருபவரைச் சந்தித்தேன்.

தாமரையின் வீட்டுக்குள் நுழைகையில் ஐந்தாறு பூனைக்குட்டிகள் வரவேற்கின்றன. ‘`பல பூனைகள் என் வீட்டில் வந்து குட்டி போட்டுட்டுக் காணாமப்போயிருதுங்க. வளர்க்கிற பொறுப்பு என் தலையில். நம்மை அண்டி வாழும் விலங்குகளை நாமதானே பார்த்துக்கணும்” என, பூனையின் தலையைத் தடவியபடி பேசத் தொடங்குகிறார் தாமரை.

“ ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல வர்ற ‘ராசாளி... ராசாளி...’ பாட்டு இப்போ செம ஹிட். எப்படிப் பிடிக்கிறீங்க இந்த வார்த்தைகளை..?”

“இந்தப் பாடல்தான் நாங்க எழுதவும் இசையமைக்கவும் நீண்டகாலம் எடுத்துக்கிட்ட பாடல். 2013-ம் ஆண்டு கடைசியில் பல்லவிக்கான மெட்டு மட்டும் போட்டுக் கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்பவே பல்லவி எழுதி முடிச்சிட்டேன். ஆனா, அதை ரஹ்மான் பார்க்கும் முன்னர், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஆரம்பமாகிடுச்சு. 2015, பிப்ரவரி மாதம்தான் திரும்பவும் இதற்கு வர்றோம். இந்த ஒன்றரை ஆண்டுகாலத்துல என் வாழ்க்கையில் பயங்கரமான பல சம்பவங்கள். என் தந்தையார் இறந்துபோறார். தியாகு எங்க வீட்டைவிட்டு இரண்டாவது முறையா ஓடிப்போறார். அவர் தொடர்புள்ள எல்லா திராவிடத் தேசிய, தமிழ்த் தேசியக் கதவுகளையும் தட்டிப்பார்த்துட்டு எதுவும் திறக்கலைனு ஆன பிறகு, `வெளிப்படையாப் போராடுறது’னு முடிவுக்கு வந்தேன். அப்பதான் கௌதம் மறுபடியும் பாடல் எழுதக் கூப்பிடுறார். அவர்கிட்ட நான் என் பிரச்னையைச் சொல்லி, `போராட்டம் முடிச்சிட்டு வர்றவரைக்கும் காத்திருக்க முடியுமா?’னு கேட்டேன். அதிர்ச்சியாகிட்டார். போராட்டம் முடிஞ்ச மறுநாள் கூப்பிட்டார். ரஹ்மானும் கௌதமும் என்னைப் பரிவோட அணுகினாங்க. எழுதுற மனநிலையில இருக்கேனானு கேட்டுக்கிட்டாங்க. ஒன்றரை ஆண்டுக்கு முன்னாடி எழுதி வெச்சிருந்த பாடலை எடுத்துட்டுப் போயிருந்தேன். என்ன எழுதினேன்னு எனக்கே மறந்துபோயிருந்தது. படிச்சுப் பார்த்த ரஹ்மான், ‘பறவை போலாகினேன் இன்று...’னு நான் எழுதியிருக்கிறதைப் பார்த்துட்டு, `ஒரு பறவை பேர் சொன்னா நல்லா இருக்குமே’னு சொன்னார். உடனே `ராஜாளி’னு சொன்னேன். ஆனா, `ஜ’, `ஷ’ மாதிரி வடமொழி எழுத்துக்களை நான் தவிர்ப்பதால் அதை ‘ராசாளி’னு பாடலாம்னு சொன்னேன். `அடடே, `ராஜாளி'யைவிட `ராசாளி' நல்லா இருக்கே’னு ரஹ்மான் உற்சாகமாகிட்டார்.

வரிகளைக் கவனிச்சா தெரியும். `எட்டுத் திசை முட்டும் எனைப் பகலினில், கொட்டும் பனி மட்டும் துணை இரவினில், மடிவேனோ, வெயில் மழை வெட்கும்படி நனைவதை, விண்மீன்களும் வீம்பாய் எனைத் தொடர்வதை, ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை, மறவேனோ!' - வரிகள் அனைத்தும் இரவு பகலாக நானும் சமரனும், இடம் இடமாக மாறித் தெருவில் கிடந்து துன்புற்ற போராட்டக் கதையைச் சொல்லும். சிம்புவுக்கும் மஞ்சிமாவுக்குமான மகிழ்ச்சி வரிகள், எனக்கும் சமரனுக்கும் எதிர்வகை வரிகளாகப் பொருந்தின. என்ன விந்தை!”

“ ‘தள்ளிப் போகாதே’ பாடல் எழுதினது பற்றிச் சொல்லுங்க...”

“அந்தப் பாட்டுக்கான மெட்டு ரஹ்மான் விமானப் பயணத்துல போட்டுக் கொடுத்தது. மின்னஞ்சலில் கௌதமுக்கு வந்திருந்தது. கௌதமும் நானும் மாறி மாறி அந்த மெட்டைக் கேட்டோம். ஒண்ணுமே புரியலை. இசை இருக்கு, நடுவுல நடுவுல ரஹ்மான் குரல் எங்கேயோ ஒலிக்குது. அரபி, இந்துஸ்தானி, தமிழ், இந்தி, சூஃபினு கலந்துகட்டி அடிச்சிருக்கார். ‘இது ஆகிறதில்லை’னு நான் கிளம்பிட்டேன். கௌதம் பிடிச்சு உட்காரவெச்சார். திரும்பத் திரும்பக் கேட்டு, ஒரு சின்ன மெட்டைக்கூட விடாமத் தோண்டித் தோண்டி எடுத்தோம். இதுக்கு முழுசா அஞ்சு மணி நேரம் ஆச்சு.

தோண்டி எடுத்த வரை என் அறையில் உட்கார்ந்து, பாடலாக எழுதி முடிச்சேன். அவர் எங்கேயோ ஓரிடத்துல ‘வவவா’னு முனகினதைக்கூட ‘எனது’னு எழுதிட்டேன். எல்லாம் முடிச்சதும் கௌதம்கிட்ட கொடுத்து, ‘இது ஒரு பாட்டே கிடையாது, ஏழு துண்டு பாடியிருக்கிறார். அத்தனை துண்டுக்கும் தனித்தனியா கவிதை வரிகளை அமைத்துக் கோத்து எழுதிட்டேன். இதுல இவ்வளவுதான் பண்ண முடியும்’னேன். பாடல் பதிவு பண்ணும்போதுதான் ரஹ்மானோட மேதைமை புரிந்தது. இசையும் புதுக்கவிதை மற்றும் மரபு வரிகளும் இன்றைய இளம் தலைமுறை யினருக்குச் சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சி.’’

“காதலை, காமத்தை எழுதும்போதுகூட ஆபாசம் இல்லாம, அழகான புதிய வார்த்தைகளைப் போட்டு இவ்வளவு ரொமான்ட்டிக்கா எழுதுறீங்களே எப்படி?”

“எனக்கு என் முந்தைய தலைமுறை நல்ல பாடல்களைக் கொடுத்து என் ரசனையை வளர்த்த மாதிரி, நான் என் அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடல்களைக் கொடுக்க விரும்புறேன். அகம், புறம் என இரண்டு பெரும் திணைகளை உள்ளடக்கியதுதானே தமிழர் வாழ்க்கை! என்னை காதல் பாடல்கள் எழுதச் சொன்னால், இந்தப் பாடலில் ‘காதல்’ என்ற வார்த்தையே வரக் கூடாது என வரையறுத்துக்கொண்டுதான் எழுதத் தொடங்குவேன். ‘பார்த்த முதல் நாளே...’, ‘அனல்மேலே பனித்துளி...’, `கண்கள் இரண்டால்...', ‘தள்ளிப் போகாதே...’ வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க, பாடலில் ‘காதல்’ எனும் வார்த்தையே இருக்காது. ரொம்ப  அரிதாகத்தான் ‘காதல்’னே எழுதுவேன்.

காட்சியை உள்வாங்கிக்கொண்டு, கண்களை மூடி நானே சூர்யாவாகவும், ஜோதிகாவாகவும், கமலாகவும், கமாலினியாகவும், சிம்புவாகவும், மஞ்சிமாவாகவும் மாறித்தான் எழுதினேன். ஓர் ஆழ்நிலை தியானம் மாதிரி இருக்கும். அப்ப யார், என்ன பேசினாலும் என் காதுல விழாது; என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் தெரியாது. இறுதியில் பாடல் ஓர் அழகான வடிவம் பெற்றிருக்கும்.”

“பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக்கிறேன்!”

“தியாகுவுடனான பிரச்னை, உங்களின் வெளிப்படையான போராட்டம்?”

நிமிர்ந்து அமர்கிறார். “தியாகு, ஒரு தனிநபர் அல்ல; ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் என்ற ஓர் அரசியல் இயக்கத்தின் நிறுவனர்; தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி என்ற ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளர். இன்னும் மனித உரிமைப் போராளி, பெண்ணுரிமைவாதி, மார்க்சியர் என்ற பல முகங்கள் அவருக்கு உண்டு. அனைத்தும் பொது வாழ்க்கைக்கு உண்டானவை. இவரை நம்பி பலபேர் வீட்டைவிட்டு வெளியே வந்து இவருக்காகவே உழைக்கிறோம். அப்படிப்பட்டவர் திடீரென தன் மனைவி குழந்தையை விட்டுவிட்டு, ஓடித் தலைமறைவாகிறார். அதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் கிடையாது. ‘நான் புரட்சி செய்யப்போகிறேன், அதற்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருக்கிறது’ எனக் கடிதம் எழுதுகிறார். அப்படி என்றால், அவர் என்ன புரட்சி செய்தார், என்ன இயக்கம் நடத்தினார், அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் என்ன கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா?

‘புரட்சி’ என்பது, பொய்க் காரணம் என தியாகுவுக்குத் தெரியும், எனக்குத் தெரியும், ஊருக்கே தெரியும். `30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தியும் 30 பேர்கூட  இல்லை என்றால், ‘இயக்கம்’ என்ற பெயரில் நடத்தியது என்ன?’ எனக் கேள்வி எழுப்பினோம். 20 ஆண்டுகளாக தியாகுவுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டதோடு, இயக்கம், பள்ளி என அனைத்துக்கும் கொட்டி அழுதவள் நான் என்ற முறையில், இவர் ஏன் ஓடிப்போனார் எனத் தெரிந்து, ஊருக்கு அறிவிக்க எனக்கு உரிமை உண்டு. இவர் பேசுவது, முன்னெடுப்பது எல்லாம் ‘தமிழ்த் தேசியம்’ என்பதால், அதுவும் கேள்விக் குள்ளாகிறது. நாளைக்கு இவர்கள் தமிழ்த் தேசம் அமைத்தால், அங்கு பெண்களின் நிலை என்ன? குடும்பம் என்ற அமைப்பு இருக்கிறதா அல்லது திறந்தவெளிப் பல்கலைக்கழகமா? ‘எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடலாமா? இவற்றுக்கு எல்லாம் எனக்கு பதில் வேண்டும்.”

“அப்படியானால், தியாகு மறுபடியும் வீட்டுக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்களா?”

“ஏதோ நான் தியாகு திரும்ப எங்கள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் எனப் போராட்டம் நடத்தியதாகப் பலரும் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். அது தவறு. ஒரு கணவன், அதுவும் பொது வாழ்க்கையில் பொறுப்பு உள்ளவன், தமிழ்த் தேசிய அரசியல் பேசுபவன் அப்படியெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வீட்டைவிட்டு ஓடிவிட முடியாது. அப்படி  ஓடினால், மனைவி குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதைத்தான் என் போராட்டத்தில் வலியுறுத்தினேன்.

புரட்சிக்காரனுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன தொடர்பு? நீதிமன்றத்தில் அனுமதி வாங்கித்தான் புரட்சி செய்கிறார்களா? புரட்சி, மக்களுக்கானது எனில், புரட்சிக்காரன் மக்கள் மன்றத்தில்தான் பதில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு என்னை ‘நீதிமன்றத்துக்குப் போ’ என நெருக்குவதன் உள்நோக்கம் புரிகிறது அல்லவா? ‘சாதி, மதங்களைவிட்டு வாருங்கள், தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என அறைகூவல் விடுக்கிறார்கள் அல்லவா... அதன் பொருள் என்ன? நான் சாதி, மதம் முதலான அடையாளங்களை அடியோடு விட்டொழித்தவள்; தமிழராக இணைவதில் பேரார்வம்கொண்டிருந்தவள்.

ஆனால் நடந்தது என்ன? `எனக்கொரு பிரச்னை... அதுவும் தமிழ்த் தேசியவாதியால்’ என உதவி கோரினால் அறைகூவல் விடுத்து, ஆள் பிடித்தவர்கள் எல்லாம் ஓடி ஒளிந்துகொண்டனர். அப்புறம் எதற்கு ‘தமிழர்களாக’ ஒன்றிணைவது?

நான் என் சாதிக்குள் நின்றிருந்தால், என் உறவினர்கள், சமூகத்தினர் தியாகுவை உலுக்கி எடுத்திருப்பார்கள் அல்லவா? என் மத அடையாளங்களைப் பேணியிருந்தால், என் மதத்தினர் தட்டிக்கேட்க முன்வந்திருப்பார்கள் அல்லவா? இந்தப் போலிகளையும் போக்கிரிகளையும் நம்பி எல்லாவற்றையும் விட்டு வந்து என்ன ஆயிற்று? ‘நடுத்தெருவுக்கு’ வர நேர்ந்தது. அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் ‘திரிசங்கு நரகம்’ ஆயிற்று. இதைத்தான் பொதுமக்களுக்குக் காட்ட விரும்பினேன்.”

“சமரனைத் தனியாக வளர்ப்பதில் பிரச்னை இல்லையா?”

“ நினைத்துப்பார்க்க முடியாத துன்பம் அது. மனசாட்சி உள்ள எவரும் அப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டார். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, குழந்தைகள் என எல்லோரும் இருந்தாலே ஒரு குடும்பத்தை நடத்துவது எத்தனை சிரமமானது என உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க, அத்தனை கதாபாத்திரங்களையும் நானே ஏற்று 24x365 நடத்தவேண்டும் என்றால் எத்தனை வேதனை அது?

என் அன்றாட வாழ்க்கை பெருந்துயரம். தினமும் அதிகாலையில் எழுந்து பாலைப் பொங்கவிடுவதில் ஆரம்பிக்கிறது என் நாள். பொறுப்புகளாலும் பதற்றங்களாலும் சூழப்பட்டிருக் கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் சேர்ந்தாற்போல நான் ஆறு மணி நேரம் தூங்கியதே இல்லை என்றால் நம்புவீர்களா? ‘Life of a single mom’ என தனிக்கட்டுரையே எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே எப்படி பாடல் எழுதுகிறீர்கள்?”

“உண்மைதான், கடுமையான மனஉளைச்சல், மனஅழுத்தத்துக்கு இடையேதான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். சிறுவன் சமரனைக் கவனித்தாக வேண்டுமே! பாவம், குழந்தைக்குத் துன்பம் தரக் கூடாது என்று நான் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறேன். என்னையே பிளவுபட்ட ஆளுமையாகத்தான் பார்க்கிறேன். ‘அந்நியன்’ மாதிரி அடுக்கு ஆளுமைக் கோளாறு! (Multiple Personality disorder) பாடல் எழுதுவதற்கு ஒன்று, பாடாய்ப்படுவதற்கு ஒன்று!”
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு