Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 13

குறும்புக்காரன் டைரி - 13
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 13

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 13

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 13
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 13
குறும்புக்காரன் டைரி - 13

ர்ல இருந்து மாயா அத்தை வர்றதா அப்பா சொன்னதும், 'மாயா அத்தையா... அது யாரு?’னு கேட்டேன்.

'அடப் பாவி, மாயா அத்தையை மறந்துட்டியா? நாகர்கோவில்ல இருக்காங்களே... அப்பாவின் அப்பாவோட பங்காளி அண்ணன் மகனோட பொண்ணு. அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப, நமக்கு ஸ்வீட் பணியாரம் கொடுத்தாங்களேடா?’னு லோகேஷ் சொன்னான்.

அவன் சொன்ன விதமும் பார்த்த பார்வையும், 'நன்றி மறப்பது நன்றன்று’, 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ மற்றும் பல நன்றி மறத்தலைச் சொல்லி, 'துரோகி’னு குத்திக் கிழிக்கிற மாதிரி இருந்துச்சு.

எப்படி யோசிச்சாலும் அத்தை முகம் ஞாபகத்துக்கு வரலை. ரொம்பச் சின்ன வயசுல பார்த்தது போல. ஏதோ, இன்டர்வியூ விஷயமா வர்றாங்களாம். நாளைக்கு அவங்களை, ரயில்வே ஸ்டேஷன் போய் ரிசீவ் பண்ணப் போறதா அப்பா சொன்னார்.

'நாமும் போவோம் கிஷோர்.அவங்களைக் குஷிப்படுத்தி ஐஸ்க்ரீம், பீட்சா வாங்கிச் சாப்பிடுவோம்’னு ஆசைகாட்டினான் லோகேஷ்

குறும்புக்காரன் டைரி - 13

அதனால, வாழ்க்கையில் முதல்முறையா நடுராத்திரி நாலு மணிக்கு எந்திரிச்சு  ரெடியாகி, அப்பாவோடு கிளம்பினோம்.

'வண்டியை பார்க் பண்ணிட்டு வர்றேன். உள்ளே போய் அத்தையைப் பாருங்க’னு சொன்னார் அப்பா.

எனக்கு லைட்டா டவுட்டு. 'லோகேஷ், மாயா அத்தை முகம் எனக்கு சுத்தமா ஞாபகம் இல்லை. நீ கண்டுபுடிச்சுடுவியா?’னு கேட்டேன். அதுக்கு அவன், ரவுண்டு நெக் டி-ஷர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டு கெத்தா, 'டேய், நான் ஒருத்தரை ஒருவாட்டி பார்த்தேன்னா, வாழ்க்கை முழுக்க மறக்கவே மாட்டேன். வாடா’னு நடந்தான்.

'எட்டாவது ப்ளாட்ஃபார்ம், டி4 கோச்’னு நேத்து அப்பா சொன்ன ஞாபகம். நாங்க ஓடிப்போய் நிற்கவும், டிரெய்ன் வரவும் சரியா இருந்துச்சு. லோகேஷ், கம்பார்ட்மென்ட்டின் ஒவ்வொரு ஜன்னல் வழியா எட்டிப் பார்க்க ஆரம்பிச்சான். அவங்க எப்படி இருப்பாங்கன்னே எனக்குத் தெரியாததால, அத்தை ரேஞ்சுக்கு யாராச்சும் கண்ணுல படுறாங்களானு பார்த்துட்டே வந்தேன். அப்போ ஒரு ஆன்ட்டி இறங்க, 'இதோடா அத்தை’னு பாய்ஞ்சான்.

'இவங்களா? நம்ம சொந்தத்தோட எந்த ஜாடையும் இல்லையேடா’னு சந்தேகமா லோகேஷின் கையைப் பிடிச்சு நிறுத்தினேன்.

'இவங்கதாண்டா, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு’னு நேரா அவங்ககிட்ட போய் நின்னான்.

'ஹாய் ஆன்ட்டி, நான்தான் லோகேஷ். எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒரு தம்பி  இருப்பாரே... அவர் பேரு மறந்துபோச்சு. அவர் பேர் என்ன?’னு கேட்டான். அவங்க முழிச்சுக்கிட்டே, 'க்யா?’ன்னாங்க

குறும்புக்காரன் டைரி - 13

'பாரு கிஷோர், அத்தை பேரு மாயா. தம்பி பேரு க்யா. சரி, பேக்கை குடுங்க. நான் எடுத்துக்கிறேன்’னு பையைத் தொட்டதும், அவங்க ஹிந்தியில் கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

ரெண்டு பேரும் அப்படியே பின்வாங்கினோம். அடுத்து இறங்கிய ஒரு அங்கிள்கிட்ட, 'இது நாகர்கோவில் டிரெய்ன்தானே?’னு கேட்டேன்.

'நாகர்கோவில் டிரெய்ன் நாலாவது ப்ளாட்ஃபார்ம்ல வரும். இது எட்டாவது ப்ளாட்ஃபார்ம்’னு சொன்னாரு.

டி8 கோச், நாலாவது ப்ளாட்ஃபார்ம்னு அப்பா சொன்னதை மாத்திப் புரிஞ்சுக்கிட்டோம். மறுபடியும் மூச்சு இரைக்க படிக்கட்டில் ஏறி, நாலாவது ப்ளாட்ஃபார்முக்கு ஓடினோம். அங்கே ஒரு ஆன்ட்டி கையை ஆட்டி, 'நீங்க கிஷோர், லோகேஷ்தானே, அப்பா எங்கே?’னு கேட்டாங்க.

'பின்னாடியே வர்றார் அத்தை’னு அவங்க பையை வாங்கினேன்.

லோகேஷ் கொஞ்சமும் அசராம, 'ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒரு தம்பி இருப்பாரே, அவர் பேரு என்ன?’னு அதே டயலாக்கை திரும்பவும் அடிச்சான்.

அதுக்கு அத்தை, 'சத்யா’ன்னு சொல்ல, மறுபடியும் கிய்யா முய்யாவான்னு இருந்துச்சு. அதுக்குள்ளே அப்பாவும் வந்து, இந்தப் பஞ்சாயத்து முடிஞ்சு வீட்டுக்குப் போனோம்.

மாயா அத்தை இன்டர்வியூ போய்ட்டு ஈவ்னிங் வந்ததும், அவங்களோடு வெளியே கிளம்பினோம். ஹோட்டல்ல பீட்சா சாப்பிட்டுட்டு, பீச்சுக்குப் போனோம். அங்கே, சுண்டல் வாங்கித் தின்னுட்டு இருக்கும்போது, 'அதோ, என் ஃப்ரெண்டு வர்றாங்க’ன்னு சொன்னாங்க அத்தை

குறும்புக்காரன் டைரி - 13

'இந்த ஊர்ல உங்களுக்கு ஃப்ரெண்டா?’னு நிமிர்ந்து பார்த்தோம். ஒரு ஆன்ட்டி எங்களை நோக்கி வந்தாங்க. 'டேய், அவங்க யாருனு தெரியுதா?’னு லோகேஷ் காதில் ஊதினேன்.

அவன், 'எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு’னு சொன்னான்.

'நான்லாம் ஒருத்தரை ஒருவாட்டி பார்த்தேன்னா, மறக்கவே மாட்டேன்’னு அவன் சொன்ன டயலாக் ஞாபகம் வந்துச்சு. அவனைக் கொலைவெறியோடு முறைச்சு, 'அடப்பாவி, காலையிலதானே பல்பு வாங்கினோம், அதுக்குள்ள மறந்துட்டியா? மாயா ஆன்ட்டினு தப்பா நினைச்சு, பையைப் பிடுங்கினியே’ன்னு சொன்னேன்.

எங்களைப் பாத்ததும் அந்த ஆன்ட்டி திகைச்சு நின்னுட்டாங்க. மாயா ஆன்ட்டி, 'டெல்லியில் இருந்து இன்னிக்குத்தான் இவங்களும் வந்தாங்க. இன்டர்வியூல சந்திச்சு ஃப்ரெண்டு ஆகிட்டோம்’னு சொன்னாங்க.

'உங்களுக்கு முன்னாடியே இவங்களை நாங்க சந்திச்சுட்டோமே’ன்னு காலையில் நடந்த காமெடியைச் சொன்னோம்.

'எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி, யுவர் குட் நேம் ப்ளீஸ்?’னு லோகேஷ் கேட்க, 'சாயா’னு சொன்னாங்க.

ஆஹா... மறுபடியும் கிய்யா முய்யா

(டைரி புரட்டுவோம்...)