Published:Updated:

‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”
‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

கவலையுடன் கெளதம் மேனன்ம.கா.செந்தில்குமார்

‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

‘‘சூர்யாவுடன் செய்ய இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் டிராப் ஆகி பல்வேறு பிரச்னைகளில் இருந்த சமயத்தில், ‘பிரதர், நீங்க எனக்காக ஒரு படம் பண்ணணும்’னு நான் கேட்டப்ப கதையைக்கூட கேட்காமல் என்னை நம்பி நடிக்க ஒப்புக்கிட்டார் சிம்பு. பிறகு, எனக்கு திடீர்னு அஜித் சார் படம் வந்தப்ப, ‘நல்ல வாய்ப்பு பிரதர். நீங்க அதை முடிச்சுட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்’ என்றார்.  பிறகு, சிம்பு படம் ஆரம்பிச்சு ஃபண்டிங் கேட்டுப் போனப்ப, ‘அவர் ஷூட்டிங்குக்கே வர்றது இல்லைனு கேள்விப்பட்டோம்’னு சொல்லி, ஃபண்டிங் தர யாரும் முன்வரலை. `நல்ல ஆள்யா அவர். எனக்காக நிச்சயமா வருவார்’னு அவங்களுக்கு உறுதிகொடுத்தேன். ஆமா, இப்பவும் சிம்பு வருவார்னுதான் காத்திருக்கேன்’’ - கௌதம் வாசுதேவ் மேனன் வார்த்தைகளில் அவ்வளவு வலி.

சிம்பு-ரஹ்மான்-கௌதம் மேனன் காம்பினேஷனில் ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள் மாஸ் ஹிட். ஆனால், அப்படி ஹிட் அடித்த ‘தள்ளிப் போகாதே...’ பாடலை கௌதம் மேனனால் இன்னும் ஷூட் பண்ண முடியவில்லை. காரணம், சிம்பு.  ஆழ்வார்பேட்டை ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பில் கௌதமைச் சந்தித்தேன்.

‘‘ `அச்சம் என்பது மடமையடா' என்ன மாதிரியான படம்?’’

‘‘இது ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இரு மொழிப் படம். ரெண்டு ஜானரை ஒரே படத்தில் பண்ணும் முயற்சிதான் கதை. படம் பார்க்கும்போது அதுக்கான காரணம் புரியும். நம்மளை மாதிரி எளிமையான வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தன், எதிர்பாரா சூழ்நிலை வரும்போது, அதை எப்படிச் சமாளிக்கிறான்; அதனால அவன் வாழ்க்கை எப்படி மாறுது என்பதே படம். அதை ஒரே ஓர் இடத்தில் மட்டும் கமர்ஷியலா சொல்லியிருக்கேன். மற்றபடி இது என் ஸ்டைல் படம். இரண்டாவது பாதியில் ஒரு விஷயம் நடக்கும்.  அதை அவன் இன்டலிஜென்ட்டா ஹேண்டில் பண்ணினா செத்துருவான். அதை வயலன்ட்டா எப்படி ஹேண்டில் பண்ணினான்னு காட்டியிருக்கேன். இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகணும் என்பது என் விஷ். காரணம், இதில் எல்லா பாடல்களுமே ஹிட்டானால்தான், இதோட திரைக்கதை வொர்க்கவுட் ஆகும். ஆடியோ பெரிய ரீச். படம் எப்படினு நீங்கதான் பார்த்துட்டுச் சொல்லணும்.’’

‘‘எல்லா பாடல்களுமே செம ஹிட். அதோட மேக்கிங் அனுபவம் சொல்லுங்க...’’

‘‘முதல் பாதி முழுவதும் மியூஸிக்கல் ட்ரீட்மென்ட். பேக் டு பேக் பாடல்கள் வந்துட்டே இருக்கும். ரோட் ட்ரிப் பாட்டை ஃபாரீன் கேமராமேன் டான் மெக் ஆர்த்தர், அவர் பார்வையில் நம் ஊர் எப்படி இருக்கும்னு ஷூட் பண்ணியிருக்கார். அதேபோல படத்துல ஹைலைட் சிச்சுவேஷன்ல வர்ற பாட்டு ‘தள்ளிப் போகாதே...’. அப்படியான சிச்சுவேஷனைக் கேட்டுப் பண்ணின அந்தப் பாட்டை, என்னால இன்னும் ஷூட் பண்ண முடியலை என்பதுதான் வருத்தம். அந்தப் பாடல் ஷூட்டிங்குக்கு சிம்பு இதுவரை வரலை. அவர் வந்தார்னா, அந்தப் பாடல் ஸ்கீரின்ல இருக்கும். அவர் வரலைனா, அந்தப் பாடல் ஸ்கீரின்ல இருக்காது. அதுக்கு, தமிழ் ஆடியன்ஸ் என்னை மன்னிக்கணும்.’’

‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

‘‘அவர் ஷூட்டிங் வராததுக்கு என்ன காரணம்?’’

‘‘ ‘சிம்பு வரலை’னு நான் சொன்னா, ‘ஏன் வரலை தெரியுமா?’னு அதுக்கு அவங்க ஒரு காரணம் சொல்வாங்க. இப்ப நான் அவரைப் பற்றி எது சொன்னாலும் இதுக்கு முன்ன அவரை நான் பாராட்டினதும் புகழ்ந்ததும் இல்லைனு ஆகிடுமோங்கிற பயம் எனக்கு உண்டு. அவர் எவ்வளவு ஃபைன் ஆக்டர் என்பது அவருக்கே தெரியும். என் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது, ‘என்ன பிரதர் லேட் ஆகிடுச்சா? வாங்க, ஒரு மணி நேரத்துல முடிச்சிடலாம்’னு சொல்லிட்டுத்தான் வருவார். அதேபோல லேட்டா வந்தாலும் சிங்கிள் டேக்ல எல்லாத்தையும் முடிச்சுக் கொடுப்பார். ஆனால், அவர் இப்ப வராமல் இருக்கிறதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியலை. இந்தப் படத்தை நம்பி நிறையப் பேர் இருக்காங்க என்பதை அவர் புரிஞ்சுக்கணும்.’’

‘‘ `துருக்கியில் தனுஷ் பட ஷூட்டையும் அவர் பட ஷூட்டையும் ஒரே சமயத்தில் நடத்தியதால்தான் அவர் அங்கே வரலை'னு சொல்றாங்களே?’’

‘‘துருக்கி ஷூட்டிங் ப்ளான் சிம்பு, தனுஷ் ரெண்டு பேருக்குமே தெரியும். தனுஷும் எனக்கு போன் பண்ணிக் கேட்டார். `ஆமாம் பிரதர், நீங்க போன  பிறகுதான் அவர் வருவார். ‘தள்ளிப் போகாதே...' பாடலைத்தான் ஷூட் பண்ணப் போறோம்’னு சொன்னேன். ‘சூப்பர் சாங் பிரதர் பண்ணுங்க’னு சொன்னார். கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் செலவு பண்ணி, யூனிட் ஃபுல்லா அழைச்சுட்டுப் போயிட்டேன். முதல் மூணு நாட்கள் தனுஷ் பட ஷூட். அதை முடிச்சுட்டு, அங்கே இருந்து எட்டு மணி நேரம் டிராவல் பண்ணி, வேற ஒரு சிட்டியில் சிம்பு பட ஷூட். தெலுங்கு ஹீரோ வந்துட்டார். ஆனால் சிம்பு  மட்டும் வரலை. காத்திருந்தோம். அவரைத் தொடர்புகொண்டோம். அவர் வரலை. தெலுங்கு வெர்ஷனுக்கான பாடலை மட்டும் ஷூட் பண்ணிட்டு, சென்னை திரும்பிட்டோம். ‘சென்னையிலேயே வெச்சு எடுத்துடலாம் பிரதர்’னு சொல்லியிருக்கார். காத்திருக்கோம்.’’

‘‘ஆனால், `நீங்க டீ.டி.எஸ் ஆறு லட்சம் தராம மீதி வெச்சிருக்கிறதால்தான் அவர் வரலை'னு டி.ராஜேந்தர் சொல்லியிருக்காரே?’’

‘‘கடைசி நாள் சன்ரைஸ் ஷூட் ஒண்ணு சென்னையில் வெச்சிருந்தோம். தெலுங்கு ஹீரோ, முதல் நாள் நைட்டே இங்கே வந்துட்டார். அன்னைக்குக் காலையில 5:30 மணிக்கு ஷூட். ஆனா சிம்பு, 8 மணி வரைக்கும் வரலை. ‘டீ.டி.எஸ் ஆறு லட்சம் ரூபாய் நீங்க கட்டலை. அதனால அவர் வரலை’னு சொன்னாங்க. இன்னும் ‘தள்ளிப் போகாதே...’ ஷூட் இருக்கு. பிறகு, டப்பிங் இருக்கு. முதல் பாதி டப்பிங் முடிச்சுட்டு பேமென்ட் வரலைன்னா, ரெண்டாவது பாதி ஹோல்டு பண்ணலாம். அதுக்காக ஷூட்டிங்குக்கு வரலைனு சொல்றது எந்த வகையில் நியாயம்? `சிம்பு, ஷூட்டிங்குக்கு வரலை'ங்கிறது ஒரு நாளிதழ்ல செய்தியா வந்தது. எப்படி வந்ததுனு தெரியலை. நான் எப்பவும் எனக்குள்ள ஆதங்கப்படுவேனே தவிர, என் ஹீரோவைப் பற்றி வெளியே தவறா சொல்ல மாட்டேன். `இந்தச் செய்தியை பத்திரிகைக்கு யார் சொன்னா?’னு உடனே எங்களுக்கு போன். அதுக்கு அவங்க அப்பா மறுநாள் காலையில ‘டீ.டி.எஸ் ஆறு  லட்சம் ரூபாய் தரலை. அதனால நான் அவரை ஷூட்டிங்குக்கு அனுப்பலை’னு விளக்கம் தர்றார்.

‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

ஒரு ஹீரோவை, அதுவும் எங்களை மதிச்சுவந்த ஒரு ஹீரோவை, நாங்க அப்படியே விட்டுடுவோமா? ஆனா, ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வளவு பிரச்னை இருக்கும்னு தயாரிப்பாளரான டி.ஆர் சாருக்குத் தெரிய வேணாமா? இப்பக்கூட சிம்பு மேல இருக்கிற பாசத்துலதான் பேசுறேன். ஆனா, இப்படி நான் பேசுறதுக்குக்கூட கவுன்ட்டர்தான் கொடுப்பாங்க. திரும்பவும் சொல்றேன், அவரைப் பற்றி இதுக்கு முன்ன பேசினது எல்லாம் தப்பா ஆகிடுமோனு பயமா இருக்கு.’’

‘‘இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, தனுஷ் படம் எந்தச் சமயத்தில் தொடங்குனீங்க?’’

‘‘ ‘ஒரு படம் பண்ணலாமா?’னு தனுஷும் நானும் அடிக்கடி பேசிட்டிருப்போம். சிம்பு பட ஷூட் போயிட்டு இருக்கும்போது, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசனை. அப்ப சிம்பு ஷூட்ல பெரிய கேப். அப்பதான், ‘ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. படிச்சுப்பாருங்க. பிடிச்சிருந்தா சொல்லுங்க’னு தனுஷுக்கு அந்த ஸ்கிரிப்டை அனுப்பினேன். நாலு மணி நேரத்துல, ‘எக்ஸ்ட்ரார்டினரியா இருக்கு ப்ரோ. மீட் பண்ணலாமா?’னு தனுஷ்கிட்ட இருந்து ரிப்ளை. சந்திச்சோம். ‘இந்தப் படத்தை  உங்களால் எப்ப ஆரம்பிக்க முடியும்?’னு கேட்டார். ‘நாளைக்கே'னு சொன்னேன். ‘அப்படின்னா ஒரு 10 நாட்கள் ஷூட் போலாமா?’னு கேட்டார். அப்படி ஆரம்பிச்ச படம்தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. 35 நாட்கள் ஷூட் பண்ணிட்டோம். இன்னும் 20 நாட்கள்ல படம் முடிஞ்சிடும்.’’

‘‘ ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, தலைப்பிலேயே தெரியுது இது ஆக்‌ஷன் படம்னு. என்ன கதை?’’

‘‘இது நான் பண்ணின படங்கள்ல இருந்து ஒட்டுமொத்தமா வேறு ஒரு ஸ்ட்ரக்சர்.

கம்ப்ளீட் வாய்ஸ் ஓவர் பேஸ்டு ஃபிலிம். ஃபர்ஸ்ட் ஹாஃப் ஃபுல்லா அழகான ஒரு லவ், செகண்ட் ஹாஃப்  முழுவதும் பவர்ஃபுல்லான ஆக்‌ஷன். படத்துல சினிமா உலகமும் இருக்கு. ஆமாம், படத்துல நடிக்கும் மேகா ஆகாஷ், கதைப்படி ஒரு ஹீரோயின். நமக்கு நெருக்கமானவங்க நம்மைவிட்டுப் போயிட்டாங்கனு நினைக்கும்போது, ‘இல்லை, அவங்க இருக்காங்க’னு தெரியவருது. ஆனால், அவங்க ரொம்ப இக்கட்டான சூழல்ல இருக்காங்க. அதில் இருந்து அவனும் தன்னைக் காப்பாத்திக்கணும், அந்தப் பொண்ணையும் காப்பாத்திக் கொண்டுவரணும். அதுதான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.’’

‘‘இதில் தனுஷ் ஸ்பெஷல் என்ன?’’

‘‘அவர் ஏன் இவ்வளவு சிறந்த நடிகரா இருக்கார்னு, அவர்கூட வொர்க் பண்ணும்போது தெரியுது. பெர்ஃபார்மன்ஸ்ல எந்தவித ரிகர்சலும் கிடையாது. டயலாக்கைக்கூட ஒரே ஒருமுறைதான் பார்க்கிறார். டேக் போனா, அந்த டயலாக் அப்படியே இருக்கும். கதையை உள்வாங்கிட்டு ஈஸியா பெர்ஃபார்ம் பண்றார். அதேபோல ஆக்‌ஷன் சீக்வென்ஸ் அவருக்கு அவ்வளவு சூப்பரா வருது. ‘பிரதர், நீங்க சும்மா `கஷ்டம் அது இது'னு சொல்லிட்டிருக்கீங்க. எவ்வளவு ஈஸியா வருது பாருங்க. உங்களுக்குள்ள ஒரு புரூஸ்லீ மாதிரியான விஷயங்கள் இருக்குனு எனக்குத் தெரியும்’னு சொல்வேன்.  ‘உடம்பெல்லாம் வலிக்குது பிரதர்’னு சிரிச்சுப்பார். அவருக்கும் படத்துல ஒரு புது லுக் கொடுத்திருக்கோம்.’’

‘‘சிம்பு-தனுஷ் இரண்டு பேர்கூடவும் படம் பண்ணியிருக்கீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?’’

‘‘இதை நான் சிம்பு, தனுஷ் ரெண்டு பேர்கிட்டயுமே சொல்லியிருக்கேன். ஸ்பான்டேனியஸ், நேச்சுரல், கேண்டிட், ரா. எனக்குத் தெரிஞ்சு அவங்களுக்குப் பெரிய ரிகர்சல் எல்லாம் கொடுக்கவே கூடாது. ராவா அந்த ஃபர்ஸ்ட் பீல் வரும் தெரியுமா? அப்படியே கேப்சர் பண்ணிக்கணும். ரெண்டு பேரையும் நடிப்புல சமநிலையாத்தான் பார்க்கிறேன்.

ஒரு விஷயம் சொன்னா, ரெண்டு பேரும் அதை ஹேண்டில் பண்றது வித்தியாசமா இருக்கும். சிம்புகிட்ட ஒரு விஷயம் சொன்னா, அவர் வேற மாதிரி பண்ணுவார். அதுவும் நமக்குப் பிடிக்கும். சிம்பு பண்ணின ஒரு விஷயத்தை தனுஷ்கிட்ட கொடுத்தா, அவர் அதை வேற மாதிரி பண்ணுவார். அதுவும் பிடிக்கும். ரெண்டு பேருமே பெஸ்ட் ஆக்டர்ஸ்.’’

‘‘அடுத்த புராஜெக்ட் என்ன?’’

``அடுத்த வருஷம் நாலு ஹீரோக்களை வெச்சு செம எமோஷனலான ஒரு படம் ஆரம்பிக்கிறோம். அந்தப் படத்துக்குப் பேர்தான் ‘ஒன்றாக’. மலையாளத்துல இருந்து ப்ருத்விராஜ், தெலுங்குல இருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்துல இருந்து புனித் ராஜ்குமார், தமிழில் இருந்து ஒரு ஹீரோனு ஒரே படத்துல நாலு ஹீரோ. இவங்க எல்லாரும் ஒண்ணுசேர்ந்து ஒரு ட்ரிப்புக்குப் போவாங்க. அங்கே நடக்கிற விஷயங்கள்தான் படம். இந்த மூணு ஹீரோக்கள்கிட்டயும் ஹீரோயின்களா அனுஷ்கா, தமன்னாகிட்டயும் பேசி அட்வான்ஸ் கொடுத்தாச்சு. தமிழ் ஹீரோ, மூன்றாவது ஹீரோயினுக்கான தேடல் போயிட்டு இருக்கு.’’

‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்!”

‘‘இத்தனை வருட அனுபவங்கள்ல இருந்து சொல்லுங்க, ‘சினிமாவில் இதெல்லாம் மாறினால் நல்லா இருக்கும்’னு நினைக்கிற விஷயங்கள் என்னென்ன?’’

‘‘தமிழ் சினிமாவில் ஃபண்டிங்தான் பிரச்னை. இன்னும் ஃபைனான்ஸியர்களை மட்டுமே நம்பிட்டு உட்கார்ந்திருக்கோம். அந்த ஃபண்டிங்கும் அதே ரெண்டு மூணு சோர்ஸ்ல இருந்துதான் எடுக்குறாங்க. ஏதோ ஒரு பிரச்னையால படம் தாமதமாச்சுனா  பட செலவுல பாதி வட்டிக்கே போகுது. அடுத்து ரிலீஸ் ஸ்ட்ரக்ச்சர்ல நிறைய ஆப்ஷன்ஸ் இல்லை. நேரடியா தியேட்டர்களுக்கு நாமளே கொடுக்க முடியலை. இரண்டு மூன்று பேர் மூலமாகத்தான் ரிலீஸ் பண்ண முடியுது. நம்ம சூழலைப் பயன்படுத்திக் கிட்டு சாட்டிலைட் ரைட்ஸ்கூட கம்மியாக் கேக்கிறாங்க. அதேபோல ஆடியோ ரைட்ஸுக்கும் இதே நிலைமைதான். இந்த மாதிரி விஷயங்கள் மாறணும்னு நினைக்கிறேன்.’’

‘‘ரொமான்டிக் இயக்குநர் நீங்க. உங்க ஹீரோயின் என்ன சொல்றாங்க?’’

‘‘நான் என்ன படம் பண்றேன், இன்னைக்கு எங்கே இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியும். டயர்டா, மூட்-அவுட்ல இருக்கிற மாதிரி தெரிஞ்சா, ‘என்ன ஏது?’னு விசாரிப்பாங்க. மற்றபடி என் சினிமா உலகத்துக்குள்ள அவங்க இல்லை. ஆனால், அதுதான் நம்மை ரியாலிட்டிக்குக் கொண்டுபோகும் உண்மையான உலகம். நடுவுல ஷூட்டிங் போகும்போதுதான் `போலியான ஒரு வாழ்க்கை வாழவேண்டியதா இருக்கோ'னு தோணுது. ஏன்னா, வீட்ல ‘வர்றேன்’னு சொல்லிட்டு நாலைஞ்சு நாள் வரலைன்னா, நிச்சயமா சண்டைபோடுவாங்க. ஆனால், அந்த மாதிரி என்னால ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்துக்க முடியலையே. மூணு நாள் ஷூட்டுக்கு வரலை. நாலாவது நாள் ஒருத்தர் வர்றார்னா, ‘வாங்க பிரதர், எல்லாம் ஓ.கே’னு சொல்லிட்டு நான் ஷூட் பண்ண வேண்டியதா இருக்கு. ஏன்னா, எனக்குக் கவலை. என் படம் நல்லா வரணும், இங்கே 15 கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். இப்ப வருத்தத்தைச் சொன்னா, படம்தான் கெட்டுப் போகும்னு போலியான ஒரு வாழ்க்கையைத்தானே வாழ்ந்துட்டிருக்கேன். ‘ஏன் நேத்திக்கு வரலை'...னு கேட்கதான் மனசு நினைக்குது. ஆனால், கேட்க முடியலை. அதனாலதான் இதை `போலியான வாழ்க்கை'னு சொல்றேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு