Published:Updated:

'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’
'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’

பா.விஜயலட்சுமி

பிரீமியம் ஸ்டோரி
'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’

கோலிவுட்டின் ட்ரெண்டிங் ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன். `பில்லா' முதல் `கபாலி' வரை கேங்ஸ்டர் படங்கள் என்றால், அனுதான் ஒரே சாய்ஸ். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியான அனு, இயக்குநர் விஷ்ணு வர்தனின் மனைவி.

``தாத்தா, சினிமாவில் இருந்திருந்தாலும் அப்பா-அம்மா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். ஆனால் எனக்கு, தாத்தா மாதிரி சினிமாவுக்குள் நுழையணும்னு ஆசை. அதனாலதான் லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். படிக்கும்போதே இயக்குநர் சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அப்போ என்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைலைப் பார்த்துட்டு `நீ ஏன் காஸ்ட்யூம் டிசைனர் ஆகக் கூடாது?'னு சந்தோஷ் சார் உற்சாகப்படுத்தினார். ஷாரூக் கான், அஜித் நடிப்பில் அவர் இயக்கிய ‘அசோகா’தான் காஸ்ட்யூம் டிசைனரா எனக்கு முதல் படம். `அசோகா'வில்  ஜாலியா தொடங்கிய பயணம், இப்போ `கபாலி' வரைக்கும் வந்திருக்கேன், மகிழ்ச்சி.''

``கேங்ஸ்டர் படங்கள்னா, கரெக்ட்டா உங்களைப் பிடிச்சுடுறாங்களே எப்படி?''

`` `வேதாளம்' ஷூட் பர்சேஸுக்காக நான் பேங்காக்ல இருந்தேன். அப்போ ஹேர் ஸ்டைலிஸ்ட் பானு எனக்கு கால் பண்ணி ` `கபாலி'யில் வொர்க் பண்ண முடியுமா... இன்ட்ரெஸ்ட் இருக்கா?'னு கேட்டாங்க. `ரஜினி படத்துல வேலை கிடைச்சா எப்படி மிஸ் பண்ணுவேன் பானு?'னு கேட்டேன்.

சென்னை வந்ததும் இயக்குநர் ரஞ்சித்தை மீட் பண்ணினேன். ரஜினி சார் யங்ஸ்டரா வர்ற போர்ஷன் எல்லாம் இருக்குனு கேட்டதும்,  செம குஷி.  படம் தொடங்கும்போதே என்கிட்ட ஃபுல் ஸ்கிரிப்ட்டையும் கொடுத்ததால், எந்தக் குழப்பமும் இல்லாம ஆடைகளை கெத்தா, ஸ்டைலா, பக்காவா டிசைன் பண்ணினேன் `கபாலி'யில் அது ஒரு மிகப் பெரிய டான் கேரக்டர். அதுக்கு கம்பீரமா இருக்கும்னு நான் செலெக்ட் பண்ணது லினன். ஆனா, ரஜினி சாருக்கு காட்டன் உடைகள்தான் ரொம்பப் பிடிக்கும். நான் `லினன் ஆடைகள் போடலாம் சார்'னு சொன்னதும், எந்த மறுப்பும் சொல்லாம ஓ.கே சொல்லிட்டார். நிறையப் பேருக்கு லினன் பிடிக்காது. காரணம், அது கொஞ்சம் கசங்கின மாதிரிதான் இருக்கும்.  என் லக்கு டைரக்டர் ரஞ்சித்துக்கும் லினன் ரொம்பப் பிடித்ததால், எல்லா ஆடைகளும் ரொம்ப ரிச்சா இருக்கும்னு லினன்லயே ரெடி பண்ணிட்டோம்.''

``ட்ரெய்லர்ல வர்ற ரஜினியோட ரெட்ரோ லுக் எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சிருந்தது. அதற்கான காஸ்ட்யூம் டிசைன் ரொம்ப சவாலா இருந்திருக்குமே?''

``முதல்ல அந்த போர்ஷனுக்காக நான் துணி எடுக்கப் போனப்போ, எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. பேனல், பேனலா தனித்தனியாதான் அந்தத் துணிகள் கிடைக்கும்.ரெண்டு தனித்தனி துணிகளையும் ஒண்ணா சேர்த்துத் தைக்கணும். அதனாலேயே `இதெல்லாமா வாங்குறாங்க?'னு என்னை வெறிச்சுப் பார்ப்பாங்க. நானே ஒருகட்டத்துல `ரொம்ப ஓவர் ரெட்ரோ ஸ்டைலுக்குப் போயிட்டோமோ'னு நினைச்சேன். ஆனா, அதை ஸ்டிச் பண்ணி, ரஜினி சாருக்குப் போட்டுப் பார்த்தப்போ, எல்லாருமே ரொம்பப் பாராட்டி னாங்க. டான் லுக்குக்கு `ஹேக்கிட் லண்டன்' பிராண்ட் ஜாக்கெட்ஸ் ரஜினி சாருக்கு ரொம்ப பெர்ஃபெக்ட்டா ஃபிட் ஆச்சு. அவருக்கும் அந்த ஃபிட்டிங் பிடிச்சுப்போக அதையே பெரும்பாலும் பயன்படுத்தினோம்.''

'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’

``ரஜினியின் எல்லா உடைகளிலும் வெள்ளை வண்ணத் தாக்கம் அதிகம் இருக்கிறதே?''

```கபாலி'க்காக ஒயிட் ஷர்ட்ல முதன்முதல்ல ட்ரையல் பார்த்தப்போ, நான் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டேன். ரஜினி சாருக்கு ஒயிட் ஷர்ட் அவ்ளோ கம்பீரம். பிளாக், பிரவுன், டார்க் புளூனு எல்லா கலர் ஷர்ட்டையும்விட அவருக்கு ஒயிட் ஷர்ட் செம லுக் கொடுத்துச்சு. அதனாலேயே எல்லா ஆடைகளிலும் வெள்ளை கலர் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம்.''

``சூப்பர் ஸ்டாருடன் முதல் படம். ரஜினி என்ன சொன்னார்?''

```கபாலி' ஷூட்டிங் முதல் நாள் காலையில 8 மணிக்குப் போய் நிக்குறேன். அங்கே எனக்கு முன்னாடி ரஜினி சார் இருக்கார். அவ்ளோ வொர்க்கஹாலிக். ஒரு சீனுக்கு 10 ஆடைகள் மாற்றினாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்க மாட்டார். அவர் மாதிரி நடிகர் ஒரு டீமுக்குக் கிடைக்கிறது கடவுளின் பரிசு.  `இந்த ஃபீல்டுல நீ இன்னும் நிறைய சாதிக்கணும்'னு வாழ்த்தினார். ரொம்ப தன்னம்பிக்கை கொடுத்தார். `கபாலி' எக்ஸ்பீரியன்ஸை வாழ்க்கையில் எப்பவுமே மறக்க முடியாது.''

`` `நானும் ரெளடிதான்' படத்தில் நயன்தாராவோட ஸ்கர்ட் டிசைன்ஸ், காலேஜ் பொண்ணுங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஐடியா எப்படிப் பிடிச்சீங்க?''

``நயன்தாரா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒரு டிரெஸ் போட்டுப் பார்த்துட்டு நிறைய கமென்ட்ஸ் சொல்வாங்க. காஸ்ட்யூம்ஸைப் பொறுத்தவரைக்கும் இயக்குநருக்கும், டிசைனருக்கும், நடிகருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்கணும். அப்பத்தான் அதுக்கான அவுட்புட் நல்லபடியா வரும். அது எனக்கும் நயனுக்கும் இடையே நிறையவே இருக்கு.

`நானும் ரெளடிதான்' படத்தின் கதையை விக்னேஷ் சிவன் சொல்றப்பவே, `நயன் ரொம்பக் குட்டிப் பொண்ணாத் தெரியணும்'னு சொன்னார். புதுச்சேரியில் நடக்கும் கதை என்பதால், ஸ்கர்ட் அண்ட் டாப் காஸ்ட்யூம் ரொம்ப அழகா இருக்கும்னு தோணுச்சு. அதை நயன்தாராவுக்குப் போட்டுப் பார்த்ததும் நயன் ரொம்பவே யங்கா தெரிஞ்சாங்க. நயன், ஹேர் பேண்ட்ஸ் அதிகம் யூஸ் பண்ணுவாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை நான் படத்திலும் அழகாகக் காமிக்க நினைச்சேன். காஸ்ட்யூமோட ஹேர் பேண்ட்ஸ், அவங்களுக்கு முகத்துல ஒரு இன்னொசன்ஸ் லுக்கைக் கொடுத்துச்சு. நயனே ‘வாவ்... எவ்ளோ அழகா இருக்கேன்!’னு சொன்னாங்க. அப்பவே இந்த காம்பினேஷன் காலேஜ் பொண்ணுங்ககிட்ட செமையா ரீச் ஆகும்னு நம்பிக்கை வந்துடுச்சு.''

``அஜித், சூர்யா, ஆர்யானு நிறைய ஹீரோக்களின் ஃபேவரிட் காஸ்ட்யூமர் நீங்க. ஹீரோவை மனசுல வெச்சுதான் காஸ்ட்யூம்ஸ் ரெடி பண்ணுவீங்களா?''

``கதைக்கு ஏற்ற மாதிரிதான் ஹீரோக்களுக்கு டிரெஸ் டிசைன் பண்ண முடியும். ஹீரோக் களுக்காக சின்ன கரெக்‌ஷன்ஸ் பண்ணிக்கலாம். ஒரு காஸ்ட்யூம், கதையோட பொருந்துறதுதான் சரி.''

``உங்கள் கணவர் விஷ்ணு வர்தனின் படங்களில் பெரும்பாலும் நீங்கள்தான் ஆடை வடிவமைப்பாளர். கணவரோடு இணைந்து வேலைபார்க்கும் அனுபவம் எப்படி இருக்கு?''

(சிரிக்கிறார்) ``பெரும்பாலும் இல்லைங்க, எல்லா படங்களுக்கும். வேலைனு வந்துட்டா அவரும் நானும் டெக்னீஷியன்ஸ் அவ்ளோதான். அதுவும் இயக்குநர்கள் `தங்களோட மனசுல இருக்கிற பிம்பம் கதாபாத்திரத்தோட ஆடைகள்ல பிரதிபலிக்கணும்'னு நினைப்பாங்க. விஷ்ணுவும் அப்படித்தான். ஏதோ ஒரு இடத்தில் அவர் நினைச்சபடி வரலைன்னா, `இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணேன்'னு சொல்வார். ஒரு டிரெஸ் டிசைன் பண்ணிட்டோமேங்கிறதுக்காக யூஸ் பண்ணிட முடியாது. இயக்குநரோட ரசனைக்கு ஈடுகொடுக்க எப்பவும் தயாரா இருக்கணும்.

இயக்குநரோட மனைவிங்கிறதைத் தாண்டி காஸ்ட்யூம் டிசைனரா நான் தனியா நிக்கணும்னு நினைப்பார். எங்களுக்கு கரண் வர்தன்னு ஒரு மகன் இருக்கான். அளவான, அழகான குட்டி ஃபேமிலி.''

'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்!’

``ஒரு டிசைனரா இந்த ஃபீல்டுக்கு வர ஆசைப்படுறவங்களுக்கு என்ன டிப்ஸ் கொடுக்க விரும்புறீங்க?''

``இந்த ஃபீல்டில் கடின உழைப்பும் நிறைய பொறுமையும் தேவை. முக்கியமா கலர்கள், ஆடைகளோட தரம் ஆகியவற்றை செலெக்ட் பண்றதில் திறமையை வளர்த்துக்கணும். ஸ்கிரிப்ட்டைப் பொறுத்தவரையில் இயக்குநர்தான் பாஸ். அவங்களோட டேஸ்ட்டுக்கு ஏற்ற மாதிரி உடைகளை வடிவமைக்கணும். சின்னச்சின்ன விஷயங்களைக்கூட தேடிப் பிடிச்சுக் கத்துக்கணும். அதுதான் ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளரா நம்மை மாத்துறதுக்கான ரூட்மேப்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு