பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அப்பா - சினிமா விமர்சனம்

அப்பா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பா - சினிமா விமர்சனம்

அப்பா - சினிமா விமர்சனம்

அப்பா - சினிமா விமர்சனம்

ரு நல்ல பெற்றோருக்கான ‘கையேடு’ இந்த ‘அப்பா’.

தன் மகனுக்கு வாழ்க்கைக் கல்வி தர விரும்பும் சமுத்திரக்கனி, குழந்தை பிறந்ததுமே `டாக்டர்' அடைமொழியுடன் அழைக்கும் தம்பி ராமையா, ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா’ என்னும் நமோ நாராயணன்... இந்த மூன்று அப்பாக்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் இடையே நடக்கும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்தான் கதை.

இயக்குநர் சமுத்திரக்கனி நேர்மறை மெசெஜ் சொல்லும் கேரக்டர்களில் இத்தனை நாள் நடித்ததே ‘அப்பா’வுக்காகத்தானோ? கல்வி முறையில் இருக்கும் சிக்கல், அதற்கு ஒரு தீர்வுசொல்வது என சீனுக்கு சீன் அட்வைஸ் சொல்லியே அப்ளாஸ் அள்ளுகிறார். `ஐ வான்ட் மார்க்ஸ் ஒன்லி’ அப்பாவாக தம்பி ராமையா நல்ல தேர்வு. பெரிய காக்காமுட்டை விக்னேஷ், யுவஸ்ரீ என வாண்டுகள் எல்லோருமே மனதில் ஒட்டிக்கொண்டாலும், தனித்துத் தெரிகிறார் நஸாத். அந்த முட்டைக்கண்களில் ஆயிரம் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், எல்லோரிடமும் தெரியும் சற்றே அதீத நடிப்பு உறுத்துகிறது.

சிசேரியன் மருத்துவமனையில் தொடங்கி, ‘மார்க் ஸ்பெஷல்’ பள்ளிகள் வரை ‘அப்பா’ விமர்சிக்கும் எல்லாமே இன்றைய சமூகத்தின் மிக முக்கிய பிரச்னைகள். பள்ளி சொல்லும் புராஜெக்ட்டை அவனாகச் செய்யும் கனியின் மகனுக்கு தலையில் குட்டும், கடையில் வாங்கி வருபவர்களுக்கு ‘வெரி குட்'-டும் கிடைக்கும் முரண்தான் இன்றைய யதார்த்தம். அதன் வேரைச் சரியாகப் பிடித்துப் பிடுங்க நினைக்கிறார் ‘அப்பா’. எந்த வணிகச் சமரசங்களையும் செய்யாத தயாரிப்பாளர் சமுத்திரக்கனிக்கு ஸ்பெஷல் பாராட்டு.

நெய்வேலியைத் தாண்டாத சிறுவன் நீச்சலில் கின்னஸ், ஐந்து பேர்கொண்ட குழுவில் இரண்டு பேர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் என நெகிழ்ச்சியான தருணங்களில் எல்லாமே சினிமாத்தனம். பிள்ளைகள் வளர்ப்பில் தொடங்கி எங்கெங்கோ சென்று, கல்வி வணிகத்தில் போய் நிற்கிறது திரைக்கதை. பாடத்தை வெறும் பாடமாக மட்டுமே சொல்லித்தருகிறார்கள் என வருத்தப்படுகிறார் இயக்குநர். ஆனால், படமும் சொல்லவந்த கருத்தைக் கருத்தாக மட்டுமே சொல்கிறது. ஒரு கலைப்படைப்பாக இந்தப் படம் மாறியிருந்தால், தமிழ்ச் சினிமாவின் முக்கியப் படங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

அப்பா - சினிமா விமர்சனம்

இன்றைய பெற்றோர்கள், வணிகமாகும் கல்வி நிலையங்கள் மீது சாட்டையைச் சுழற்றுகிறார் இந்த நல்ல `அப்பா’.

- விகடன் விமர்சனக் குழு