பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

டக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்!

டக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
டக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்!

ம.மாரிமுத்து, சீ.சுசித்ரா

டக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்!

‘உன் அடையாளம் இழந்தால்... உன் தாய்நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய். இது மாட்டைப் பத்தின பிரச்னை இல்லை, உன் நாட்டைப் பத்தின பிரச்னைடா!’ -  சமீபத்தில் வைரலாகியிருக்கும் `ஹிப் ஹாப்' ஆதியின் ‘டக்கரு டக்கரு’ மியூஸிக் வீடியோவில் வரும் வார்த்தைகள் இவை. இந்த வீடியோ பாடலுக்கு நடிப்பு, இசை, இயக்கம் என எல்லாமே ஆதிதான்.

 `‘உலகத்துலேயே இரண்டே பேர்தான், அவங்க உழைப்பு சுரண்டப்பட்டாலும் மீண்டும் மீண்டும் உழைச்சுக்கிட்டே இருக்காங்க. ஒண்ணு, தேனீ; இன்னொண்ணு விவசாயி. அவங்களுக்கு உணவு இல்லாதபோதும் நமக்கு உணவு அளிப்பார்கள். அவங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் கிடையாது. அவங்களுக்கு யாராவது குரல்கொடுக்கணும். அதான் இந்தப் பாட்டு’’ - மீசை முறுக்கி, சீரியஸாகப் பேசுகிறார் ஆதி.

``ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணணும்கிற ஆர்வம் எப்போது வந்தது?''

``என் சொந்த ஊர் புளியம்பட்டி. எங்க அம்மா விவசாயக் குடும்பத்துல பிறந்தவங்க. வீட்ல முப்பது மாடுகள் வளர்த்திருக்கோம்.  ஒரு டி.வி சேனலில்  ஜல்லிக்கட்டு பற்றிய விவாத நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாதிபதி பேசியதைப் பார்த்தேன். நிறைய உண்மைகள் சொன்னார். அவரைப் பற்றித் தெரிஞ்சுக்க ஆர்வம் வந்தது. அந்தத் தேடலின் முடிவுதான் இந்தப் பாடல். இதுக்காக மதுரைக்குப் போனோம். நிறைய விவசாயிகளைச் சந்திச்சோம். மாடுகளை, அவங்க குழந்தை மாதிரி பார்த்துக்கிறாங்க. அங்கே எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வீடியோவா எடுக்கணும்; வெளியிடணும்னு நினைச்சோம். அதுதான் ‘டக்கரு டக்கரு’. இது யார் மீதான தாக்குதலும் இல்லை. இது கைவிடப்பட்ட விவசாயிகளின் குரல்.''

``ஆனால், சினிமாவில் இருந்து மற்ற யாரும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே?''

``நான் இந்த வீடியோவை சினிமா மியூஸிக் டைரக்டரா செய்யலை. பி.இ படிச்சு; எம்.பி.ஏ முடிச்சு, பிஹெச்.டி பண்ணிட்டிருக்கிற ஒரு மாணவனா, தெளிந்த நல்லறிவோடு பார்த்து, கேட்டு, தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை வீடியோ பண்ணியிருக்கேன். சினிமா நிழல், இது நிஜத்துல நடந்துட்டிருக்கிற விஷயம். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். ‘டக்கரு... டக்கரு’க்காக நிறைய இளைஞர்கள் ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் ஷேர் பண்ணிட்டிருக்காங்க. இந்தப் பாடல், மூணு நாட்கள்ல பத்து லட்சம் வியூஸைத் தாண்டியிருக்கு. இளைஞர்கள் ஆதரவு இருந்தால் போதும். மாற்றங்கள் ஈஸியா நடக்கும்.''

டக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்!

‘` `ஹிப் ஹாப் ஆதி, மியூஸிக்கை மட்டும் பார்த்தால் போதும். ஜல்லிக்கட்டு விஷயத்துல தலையிட வேணாம்’ என பீட்டா அமைப்பைச் சேர்ந்தவங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்களே?''

`` `எந்த நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர்னு  இருக்கீங்க. இளைஞர்களுக்கு சமுதாய அக்கறையே இல்லை'னு குற்றம்சாட்டுறாங்க. நாங்க யாராவது சமுதாய அக்கறையோடு நல்ல விஷயங்கள் சொல்ல வந்தா, `நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க’னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுவீங்களா? நான் ஓர் இளைஞனா என் கருத்தைப் பதிவுசெஞ்சிருக்கேன். ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக, விவசாயிகளுக்காகக் குரல்கொடுத்திருக்கேன்... அவ்வளவுதான்.''

``ஓ.கே.. உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன?''
 
``கே.வி.ஆனந்த் சார் படத்துக்கு மியூஸிக் பண்ணிட்டிருக்கேன். அடுத்து தெலுங்குல ஒரு படத்துக்கு மியூஸிக் பண்றேன். அதுக்கு அப்புறம் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் - ஹிப் ஹாப் தமிழா. ஆமாம், நானே ஒரு படம் இயக்கி நடிக்கப்போறேன். இவ்வளவு நாட்கள் என்கூட டிராவல் பண்ணிட்டிருந்த  எல்லாரும் இந்தப் படத்துல நடிகரா, டெக்னீஷியனா அறிமுகம் ஆகுறாங்க. இது ஹிப் ஹாப் கூட்டணியின் முதல் படம்.''