பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

பா.ஜான்ஸன்

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

```குற்றமே தண்டனை’ ட்ரெய்லர் வெளியிடும் முன்னர், அதுக்கு ஒரே அடையாளம் என் பேர் மட்டும்தான். இப்போ அதுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்க்கும்போது, தனக்கான அடையாளத்தை அதுவே வாங்கியிருக்குனு தோணுது. படத்துல பாட்டு இல்லை. ஆனா, பின்னணி இசையில ராஜா சார் அசத்தியிருக்கார். இப்போதான் படத்தின் இசை மிக்ஸிங் முடிச்சுட்டு வர்றேன். இன்னும்கூட அந்த இசை காதுக்குள் ஒலிச்சிட்டிருக்கு'' என மகிழ்ச்சியுடன் பேசுகிறார் இயக்குநர் மணிகண்டன்.

`காக்கா முட்டை' படத்துக்குப் பிறகு `குற்றமே தண்டனை' படம் முடித்து, ரிலீஸ் வேளைகளில் பிஸியாக இருப்பவர், விஜய் சேதுபதி, நாசர், ரித்திகா சிங், பூஜா தேவரியா என வித்தியாச காஸ்ட்டிங் பிடித்து `ஆண்டவன் கட்டளை' படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

`` `குற்றமே தண்டனை' படம் எப்படி வந்திருக்கு?''

`` `குற்றமே தண்டனை’ கமர்ஷியல் படம் கிடையாது. சடசடனு போகக்கூடிய காட்சிகள், பாட்டு, ஃபைட்டுனு எதுவும் இருக்காது. இதைப் பார்க்கிறதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும். ஆனந்த விகடன் படிக்கிறதுக்கும் குறுநாவல் படிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல. அதுபோலத்தான் இந்தப் படமும். இந்த மாதிரியான ஜானர்ல படங்கள் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை. 33 நாட்கள்ல இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடிச்சிருக்கோம்.’'

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

``இரண்டாவது படத்திலேயே ஒரு பரிசோதனை முயற்சியா?''

``எழுத்தாளர்களுக்கு இருக்கும் கற்பனைச் சுதந்திரம் இயக்குநர்களுக்குக் கிடையாது. ஆனா, அவங்களைவிட 100 மடங்கு பவர்ஃபுல் சினிமா மீடியம் இயக்குநர்கள்கிட்ட இருக்கு. ஒரே கதையை ஒரே பேட்டர்ன்ல இத்தனை வருட சினிமாவா மாறி மாறிப் பண்ணிட்டே இருக்கோம். நான் `காக்கா முட்டை' படத்தையும் சேர்த்துதான் சொல்றேன். ஒரு மராத்தி இயக்குநர் டக்குனு போய் கேன்ஸ் பட விழாவுல உட்கார்ந்திருப்பார். அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களை கேன்ஸ்ல ஸ்கிரீன் பண்ணுவாங்க. பெங்காலியில் இருந்து ஒருத்தர் போய் லைஃப் டைம் ஆஸ்கர் வாங்கிட்டு வருவார். ஆனா, அந்தப் பாதைகள்ல போக நம்ம இயக்குநர்களுக்குப் பயம். அந்த முயற்சிகளில் நாம இறங்கலைனா குண்டுச்சட்டியிலதான் குதிரை ஓட்டிக்கிட்டு இருப்போம்.’’

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

`` `காக்கா முட்டை' படத்துக்குக் கிடைச்சப் பாராட்டு, அங்கீகாரம் எல்லாம் அடுத்த படங்களிலும் தக்கவைக்கணும்கிற பயம் இருக்கா?’’

``இருக்கு. அதே மாதிரி எதிர்பார்ப்பாங்கனு ஒரு பயம். ஆடியன்ஸ் எதிர்பார்ப்பாங்கங்கிறதை மீறி, தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பாங்க. அதனால ரெண்டாவது படத்தை முதல் படத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வகையில் எடுக்கணும்னு முடிவுபண்ணேன்.  `காக்கா முட்டை’ மாதிரி மூணு படங்கள் எடுத்தா நிச்சயமா சலிச்சுப்போயிடும். நாலாவது படத்துலயே ஆடியன்ஸுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிடும். எனக்குத் தெரிஞ்சு பெரிய இயக்குநர்கள்கூட ஒரே ஜானர்ல அஞ்சு படங்கள் எடுத்து  வேற ஜானர்ல முயற்சி பண்ண முடியாம இருக்காங்க. அதனால, என் மேல இருந்த பார்வையை நான் ரெண்டாவது படத்துலயே பிரேக் பண்ணாத்தான் நீண்ட நாட்கள் ஃபீல்டுல இருக்க முடியும்.''

`` `ஆண்டவன் கட்டளை’ என்ன சொல்லப்போகுது?''

`` `காக்கா முட்டை' படம் மாதிரி இதுவும் ஒரு ரியல் லைஃப் டிராமாதான். நண்பர் அருள்செழியன் எழுதிய கதை இது. ஒரு பாஸ்போர்ட் எடுக்கப் போய், டாக்குமென்ட்டைத் தப்பா ஃபில் பண்ணி, அதனால் நடக்கும் பிரச்னைகள்தான் கதை.

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

வழக்கமா கவர்மென்ட் வேலைகள் எல்லாத்துக்கும் நாம ஒரு ஷார்ட்கட் வெச்சுக்கிட்டுத்தானே போவோம். நம்ம யாருக்குமே இதுவரைக்கும் லைசன்ஸை ஸ்ட்ரெய்ட்டா போய் எப்படி எடுக்கிறதுனு தெரியாது. எல்லாத்துக்குமே ஒரு புரோக்கர் பிடிப்போம். அதுல ஏதாவது தப்பு நடந்தா எவ்வளவு பிரச்னைகள் அனுபவிக்க வேண்டிவரும்கிறதை ஹ்யூமர் கலந்து சொல்ற படம்தான் `ஆண்டவன் கட்டளை'. இதுல ஃபேமிலி கோர்ட் போர்ஷன் ஒண்ணு இருக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன் அதுதான். நம் ஊர் ஃபேமிலி கோர்ட் கிட்டத்தட்ட ரேஷன் கடை மாதிரி இருக்கும். அதை அப்படியே விஷுவல் பண்ணியிருக்கோம். அங்கே எப்படி விவாதிக்கிறாங்க, என்னென்ன நடக்குதுனு, காமெடியா காட்டியிருக்கோம்.''

``உங்க முதல் குறும்படத்தோட ஹீரோ விஜய் சேதுபதி. இப்போ அவரை சினிமாவில் இயக்கியிருக்கீங்க. எப்படி இருந்தது அனுபவம்?''

``ஆமாம். முதல் படமே நான் விஜய் சேதுபதியை வெச்சு பண்ணவேண்டியதுதான். ஆனா, அது முடியாமத்தான் `காக்கா முட்டை' பண்ணேன். நான் `வின்டு' குறும்படம் பண்ணும்போது விஜய் சேதுபதிக்கு ஹீரோவா நடிக்கிறதுல ஆர்வம் இல்லை. நான் அடிக்கடி அவர்கிட்ட `நீங்க லீடா பண்ணலாம். நாம சேர்ந்து படம் பண்ணுவோம்'னு சொல்லிட்டே இருப்பேன். நான் `காக்கா முட்டை’ பண்ணி முடிக்கிறதுக்குள்ள அவர் நடிச்சு ரெண்டு படங்கள் ஹிட் ஆகிடுச்சு. அவர் ஸ்டார் ஆகிட்டார். எப்பவோ சேரவேண்டியது, `ஆண்டவன் கட்டளை’ மூலமா இணைஞ்சிருக்கோம். விஜய் சேதுபதியின் வேற லெவல் பெர்ஃபாமன்ஸை இதில் பார்க்கலாம். நான் அந்தக் குறும்படம் எடுத்து ஆறு வருஷங்கள் ஆகிடுச்சு. விஜய் சேதுபதியோட நடிப்புத்தரம் ரொம்பவே கூடியிருக்கு. ஆனா, அவர் அப்படியேதான் இருக்கார். கொஞ்சமும் மாறலை. விஜய் சேதுபதி தவிர நாசர் சார், ரித்திகா சிங், பூஜா தேவரியானு முக்கியமான பலர் நடிச்சிருக்காங்க. இதுல ஹீரோ ஹீரோயின்னு யாரும் இருக்க மாட்டாங்க. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். முக்கியமான விஷயம், இது லவ் ஸ்டோரி கிடையாது. அதனால காதல் காட்சிகள் மாதிரி எதுவும் இதுல இருக்காது. `கிருமி' பட இயக்குநர் அனுசரண் எடிட்டிங் பண்ணியிருக்கார். `யுத்தம் செய்', `கிருமி' படங்களுக்கு இசையமைத்த கே மியூஸிக் பண்ணியிருக்கார். `ரெளத்திரம்’ பட ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம்தான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு.''

“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”

``ரெண்டு காக்கா முட்டைகளும் இப்போ என்ன பண்ணிட்டிருக்காங்க?''

`` `பெரிய காக்கா முட்டை’ விக்னேஷ் `அப்பா' படத்துல சமுத்திரக்கனி சார் பையனா நடிச்சிட்டான். சின்னவன் ஒரு பெரிய படத்துல கமிட் ஆகியிருக்கான். அவங்களை நிறையப் படங்கள்ல நடிக்கவிடுவது இல்லை. வெளியே இருந்து பார்க்கும்போது நல்ல வாய்ப்பு கிடைக்கவிடாம பண்ற மாதிரி தோணும். ஆனா, இப்போதைக்கு அவங்களுக்குப் படிப்பு முக்கியம். படிச்சு முடிச்சதும் சினிமா ஆர்வம் இருந்தா அவங்களை டி.எஃப்.டி படிக்கவைக்க தனுஷ் சார் ரெடியா இருக்கார். ஒரு குழந்தை நட்சத்திரமா நடிச்சு, அதன் உச்சபட்ச அங்கீகாரமா தேசிய விருது வாங்கிட்டாங்க. இனி படிக்கட்டும்.''