பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!

ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!

அதிஷா

ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!

ந்திய சூழலில் இன்னமும் எளிய மனிதர்களுக்கு நடுவில், சாதி கண்களுக்குத் தெரியாத ஒரு மெல்லிய நரம்பைப்போல இயங்குகிறது. அது எந்த விதத்தில் தலித்களையும் சிறுபான்மை யினரையும் அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்பதை நுணுக்கமாகச் சொல்கிறது மலையாளத் திரைப்படம் `ஒழிவுதிவசத்தே களி’ (ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு). வெறும் 20 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மிகச் சிறிய இந்தத் திரைப்படம், மலையாள சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சல். மதவாத அரசியலையும் கேரள கம்யூனிஸ்ட்களின் தலித்கள் இல்லாத வர்க்க அரசியலையும் நேரடியாக இந்தத் திரைப்படம் சாடுகிறது.  

சென்ற ஆண்டுக்கான கேரளா மாநில விருதுகளில் இது, `சிறந்தத் திரைப்படம்’ விருது வென்றது. தவிரவும், பல சர்வதேச விருதுகளையும் வென்றது. இருப்பினும் கேரளாவில் திரையரங்குகள் கிடைக்காமல், வெளியிட வழி இல்லாமல் முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை முன்னணி மலையாள இயக்குநர்களில் ஒருவரான ஆசிக் அபு கையில் எடுத்துக்கொண்டு கேரளாவில் 25 திரையரங்கு களில் வெளியிட ஏற்பாடு செய்தார். (சென்னையிலும் இந்தத் திரைப்படம் ஒரு தியேட்டரில் ஒரு ஷோ என வெளியானது). இதன் புரொமோஷன்களில் மம்மூட்டியும் ஃபகத் பாசிலும் தோன்றி, பட வெளியீட்டுக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்தார்கள்.

மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து தன் அருமையான கதைகளால் (சார்லி, லீலா) கவனம் ஈர்த்துவருபவர் எழுத்தாளர் உண்ணி.ஆர் அவரின் சிறுகதையான `ஒழிவுதிவசத்தே களி'யை அதே பெயரில் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சனல்குமார் ­சசிதரன்.

உண்ணியின் சிறுகதை மிக எளிமையானது.  ஒவ்வொரு ஞாயிறும் ஒரு ஹோட்டல் அறையில் குடித்துவிட்டு உரையாடுகிற நான்கு நண்பர்கள், ஒருமுறை அரசியல், குடும்பப் பிரச்னை, திண்ணைப் பேச்சை... என எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு, விளையாட்டு ஒன்றை விளையாட முடிவெடுக்கிறார்கள். அந்த விளையாட்டு வினையாகிறது. அதுதான் `ஒழிவுதிவசத்தே களி’. அதன் முடிவு நாம் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று.

இந்த எளிய கதையைத் திரைவடிவமாக மாற்றியிருக்கிறார் சனல்குமார். ஒரு தேர்தல் நாளில் வாக்களிக்காமல், அருவிக்கரை ஒன்றின் அருகே இருக்கிற பங்களாவில் ஐந்து நண்பர்கள் கூடுகிறார்கள். அந்தச் சந்திப்பின் பிரதானம் குடி... குடி... குடி மட்டும்தான். இயற்கை அழகை ரசித்தபடி குடிக்கிற அவர்களுக்குள் போதை தலைக்கு ஏறுகிறது. போதையில் மிதக்கும் ஐவரிடமும் வெவ்வேறுவிதமான உணர்வுகள் வெளிப்படத் தொடங்குகின்றன. ஆணாதிக்கம், பெண் அடக்குமுறை, சாதியப் பெருமை, மதவாத அரசியல், சுயநல கம்யூனிஸம்... என அந்த உணர்வுகளுக்குள்ளும் உரையாடல்களுக்கு நடுவிலும் பயணிக்கின்றன காட்சிகள். இறுதியில் அவர்கள் அந்த `விடுமுறை நாளின் விளையாட்டை' ஆட ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!

ராஜா, மந்திரி, போலீஸ், திருடன்... என எழுதப்பட்ட சீட்டுகளைக் குலுக்கிப்போட்டு, அவற்றை நால்வரும் எடுக்கவேண்டும். அதிர்ஷ்டம் உள்ளவர் ராஜா ஆகிறார். இன்னொருவர் திருடன், போலீஸாக இருப்பவர் திருடனைக் கண்டுபிடிக்கவேண்டும். தவறுதலாக ராஜாவை `திருடன்' எனச் சொன்னால், போலீஸுக்கு ஐந்து அடிகள் கிடைக்கும். அந்த ஆட்டத்தின் போக்கும் முடிவும் ஜனநாயக முறையை, தேர்தலைப் பரிகசிக்கிறது. நம் சமூகக் கட்டமைப்பை எள்ளி நகையாடுகிறது.  கொஞ்சம் கடுகடு கதைதான். என்றாலும் அதை எங்குமே சலிப்படையாமல், பதற்றமும் அச்சமும் நிறைந்த ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லராக மாற்றியிருக்கிறார் சனல்குமார்.

படத்தின் பல காட்சிகளும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டவை... குறிப்பாக இடைவேளைக்குப் பிறகான காட்சிகள். படம் முழுக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒற்றை ஷாட் முறையின் தாக்கம், பார்வையாளர்களுக்கு காட்சிகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் மிகப் பெரிய ஈடுபாட்டை உருவாக்குகிறது. படத்தில் நடித்திருக்கிற பெரும்பாலானவர்களுக்கு, இதுவே முதல் படம் என்பதால் அவர்களைத் தாசனாகவும் தர்மனாகவும் அசோகனாகவும் திருமேனியாகவும் நிஜ மனிதர்களாகவே நடமாடுகிறார்கள். மிக மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிற ஆழமான இசை, `மூன்றாவது கண்’போல செயல்படுகிற கேமரா, அச்சு அசலான இயற்கையின் சத்தங்கள்... ஆகியவை பார்வையாளனை ஒரு பாத்திரமாக மாற்றக்கூடியதாக இருக்கின்றன. இவற்றின் வழி அங்கே நிகழ்கிற ஒவ்வொரு செயலுக்கும் நாமும் எதிர்வினையாற்றத் தொடங்குகிறோம்.  கதாபாத்திரங்கள் குடித்திருக்கிறார்கள் நாம் குடித்திருக்கவில்லை என்பது மாத்திரம்தான் வேறுபாடு. ஆனால், அடர்த்தியான காட்சிகளின் வழி அந்தப் போதையின் நிழல் நம் மீதும் படிகிறது.

அரசின் எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, ஊழலிலும் லஞ்சத்திலும் மலிந்துபோய் இன்னமும் பந்த்களை, தர்ணாக்களை நடத்திக்கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட்கள், எந்த நேரமும் ஆதிக்கச் சாதி என்ற அகம்பாவத்தில் திரிகிறவர்கள், உலகில் எது நடந்தாலும் அதைப் பற்றி விமர்சனங்களை முன்வைத்துவிட்டு விலகிக்கொள்கிற நடுத்தரவர்க்கத்தினர்... என படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் அரசியல் கருத்தியலாக உருமாறுகிறார்கள். அவர்கள் பெயர்களும் உடையும் பாவனைகளும் வசனங்களும் அவற்றைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நடக்கிற அனைத்தையும் மெல்லிய சலனத்துடன் வேடிக்கை பார்க்கிற இயற்கையும்கூட கதாபாத்திரமாக மாறிவிடுகிறது.

ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!

படம் பேசும் அரசியலில் இலகுவாக நாமும் கலந்துகொள்கிறோம். சமயங்களில் கொல்லப் படுபவனாகவும், இன்னொரு தருணத்தில் கொலைகாரனாகவும் நம்மைப் பொருத்திக்கொள்ளும் சாத்தியங்களை இந்தத் திரைப்படம் உருவாக்குகிறது. அதனாலேயே இது இந்தக் காலகட்டத்தின் முக்கியப் படமாக மாறிவிடுகிறது. ஒரு கவிதையின் கடைசி வரியைப்போல நிகழ்த்தப்படுகிற அந்த இறுதிக் காட்சி பார்வையாளரை உலுக்குகிறது.

வெறும் ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, இத்தனை குறைந்த செலவில் ஓர் அரசியல் படத்தை எடுத்து அதை தியேட்டருக்கும் கொண்டுவருவது எல்லாம் கேரள சினிமாவில்தான் சாத்தியமோ!