Published:Updated:

தலைக்கறி தயிர்வடை, எஸ்.ஏ.ராஜ்குமார் ஹிட்ஸ், வட்ட பஸ்! - இது மாட்டுத்தாவணி அதகளம்

தலைக்கறி தயிர்வடை, எஸ்.ஏ.ராஜ்குமார் ஹிட்ஸ், வட்ட பஸ்! - இது மாட்டுத்தாவணி அதகளம்
தலைக்கறி தயிர்வடை, எஸ்.ஏ.ராஜ்குமார் ஹிட்ஸ், வட்ட பஸ்! - இது மாட்டுத்தாவணி அதகளம்

மதுரைன்னு சொன்னாலே மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்  நம்ம மனசுக்குள்ள வந்து போகும். அதுமட்டுமா மாட்டுத்தாவணியில நடக்குற காமெடி அக்கப்போருலாம் கண்ணுமுன்னாடி வந்து போகுமா இல்லையா..? வாங்க சொல்றேன்...

மதுரைன்னு சொன்னாலே மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்தான்  நம்ம மனசுக்குள்ள வந்து போகும். அதுமட்டுமா, மாட்டுத்தாவணியில நடக்கிற காமெடி அக்கப்போருலாம் கண்ணு முன்னாடி டான்ஸ் ஆடுமே..! மதுரையில நடக்கும் அதகள ஆட்டத்தின் ஒரு பார்வை...

* வெளியூர்லருந்து மாட்டுத்தாவணிக்கு வந்த ஆளா நீங்க இருந்தீங்கன்னா போச்சு.  சரியா ஒரு கிலோமீட்டருக்கு முன்னாடி மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி தாண்டின உடனேயே ஆட்டோக்காரர்கள் அட்ராசிட்டி ஆரம்பமாகிடும். ``பச்சை சட்டை என் ஆளு...', `மஞ்ச சேலை என் ஆளு!''னு அவர்கள் கூவிக் கூவி ஏலம்விடுவதை புதுசாக் கேட்டா யாருக்கும் ஷாக் ஆகிடும். படியைவிட்டு இறங்கிறதுக்கு முன்னாடி தரையில கால் படாம ஆட்டோவுல தூக்கிட்டுப்போகாத குறைதான். ஒரு சவாரிக்கு இத்தனை அக்கப்போறா ஆட்டோ பாய்ஸ்?

* மதுரையில மல்லிகைப்பூ ஃபேமஸ்தான். அதைவிட ஃபேமஸ் மல்லிப்பூ மென்மையில மதுரைக்காரய்ங்க சுடும் இட்லீஸ். பஸ் ஸ்டாண்டைச் சுற்றி ஆவி பறக்க இட்லிக்கடையைப் போட்டு அவங்க வியாபாரம் பண்ற அழகே தனி. வீட்டுல சாப்பிட்டுட்டு வந்திருந்தாலும் நம்மை `டெம்ப்ட்' பண்ணி, `இங்கேயும் ரெண்டு இட்லியை உள்ள தள்ளிட்டு பஸ்ல கெடையப் போட்ருவோம்!' என நினைக்கவைக்கும் அளவுக்கு விருந்தோம்பலில் பின்னிடுவாங்க. `பூப்போல இட்லி... புதினா சட்னி!' எல்லாம் சினிமாவுலதான். அதிகாலை 3 மணிக்கெல்லாம் குடல் குழம்போட இட்லிகளைச் சாப்பிடுறதுல நம்ம ஆளுங்களை அடிச்சுக்கவே முடியாது. 

* நடிகர் வடிவேலு ஒரு தீர்க்கதரிசிதான். `மருத மல்லி... மருத மல்லி...' என  ஜன்னலுக்கு வெளியே இருந்து தம்பிராமையாவா மாறி நம்மை மல்லிகைப்பூ வாங்க வைக்காமல் விட மாட்டார்கள்.  `பொண்டாட்டிகளுக்கு வாங்கிட்டுப் போங்கண்ணே!' என்பதெல்லாம் வெறித்தனம்.  

 * பஸ் ஸ்டாண்டுக்குள்ள நீங்க கடைகளைத் தாண்டி போயிடக் கூடாது. நீங்க சாப்பிட்டு முடிச்சிருந்தாலும் எப்படியாச்சும் கையப் பிடிச்சு உள்ள இழுக்கிற தோரணையில நாலு தடித்தம்பிங்க நிப்பாங்க. பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நிமித்தி வைத்ததுபோலவே இருக்கும் இவனுக சுட்டு வெச்ச சீனி முட்டாஸு பூரிகளும். இட்லியைக்கூட டபுள் எக்ஸெல் சைஸ்ல இங்கேதான் பார்க்க முடியும். வெள்ளன 3 மணிக்குச் சுட்ட பூரியை, சாயங்காலம் 3 மணி வரைக்கும் அப்படியே சரிஞ்சிடாம அடுக்கிவெச்சு அட்மாஸ்ஃபியர் காட்டுறதெல்லாம்  மதுரைக்கார பங்காளீஸுக்கு ஈடுஇணையே இல்லை.

* டவுன் பஸ் அட்ராசிட்டீஸ் தனி. அனாமத்தா போர்டே இல்லாம ஒரு பஸ் நிக்கும். இதுல போயி யாரு ஏறப்போறானு பார்த்துட்டு இருக்கும்போதே டிரைவரும் கண்டக்டரும் எங்கிருந்தோ வந்து சடக்குனு ஸ்டார்ட் செஞ்சு பஞ்சாப் பறப்பாங்க. `இம்புட்டு நேரம் இங்கன நின்னது பழங்காநத்தம் வண்டியா... மிஸ் பண்ணிடோமேப்பு!' என பெருசுகளை கதிகலங்கவிடுவதில் போக்குவரத்து பங்காளீஸுக்கு பெரும்பங்கு உண்டு. மாறு வேஷத்துல நிக்குறது மாதிரியே போர்டை மாத்தி நிக்கும் வண்டி கிளம்பப்போகும் கடைசி மொமன்ட்ல போர்டை மாத்திட்டு சிட்டாப் பறக்கும். 

* பஸ்ல ஏறி பாதி தூரம் வந்த பிறகுதான் `இது பெரியார் போகாது... அண்ணா நகர் சுத்திப்போகும்', `வண்டியூர்ல வளையாது',  `ஜங்ஷன்ல நிக்காது' - என பல கண்டிஷன்களை கண்டக்டர்கள் போடுவாங்க. அதுக்குள்ள தல்லாகுளமே வந்திருக்கும். `இறங்கி, வைகையாத்துப் பாலத்தைக் கடந்தே போயிடலாம்'னு நினைக்கவெச்சுடுவாங்க நம்ம மக்கா. ஏம்பா ஏன்..?

*  `வட்ட பஸ்'னு ஒண்ணு சொல்லுவாங்க. மாட்டுத்தாவணினு போர்டு மாட்டி டெஸ்டினேஷன்ல  பாதி தூரம் வந்தும் போர்டை மாத்தாம போய்கிட்டே இருக்கும். அது எங்கே போகுது. எங்கே நிக்குதுனு யாருக்கும் புரியாது. எம்.ஜி.ஆர் நிலையத்திலிருந்து எம்.ஜி.ஆர் நிலையத்துக்கே கிளம்பும் வட்ட பஸ் எந்த ரூட்டுல போகுது எங்கெல்லாம் போகுதுங்கிறது ஆயிரம் வாட்டி போன எனக்கே இன்னும் புரியல பாஸ்!

* புதுசுப் புதுசா எதையாச்சும் விக்கிற இடம்னா மாட்டுத்தாவணிதான். கறி தோசை ஃபேமஸ்னு சொன்னதை வெச்சே இன்னும் டெரரா தலைக்கறி தயிர்வடை, குடல் குஸ்கா, மூளை ஆம்லேட்னு மெனுக்கார்டிலேயே மிரளவைப்பாங்க. `பாருங்க சார்... இடியாப்பப் பிரியாணி, வல்லாரை வடை, கத்தாழை கட்லெட் உடல்சூட்டைத் தணிக்கும் சார். ரெண்டு கறி தோசைக்கு ஒரு சில்லி சிக்கன் ஃப்ரீ' என எதையாச்சும் ஆசை காட்டி அதையும் மோந்துபார்த்துட்டே காசு கொடுத்து வாங்கிட்டுப் போக வெச்சுடுவாங்க.

*  சென்னையோ, பெங்களூரோ கிளம்புவதற்கு முன் சில பாசக்காரப் பங்காளிகளுக்கு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் முழுசாய் ஒரு மணி நேரம் கிடைத்தால், நாக்கு சும்மா இருக்காது. டாஸ்மாக் பக்கம் ஒரு எட்டு போயிட்டு வந்திருவோமே என, கொம்பு முளைக்கும். அப்புறம் என்ன... பஸ்ஸில் பக்கத்தில் உட்காருபவர்கள் பெரும்பாவம் செய்தவர்கள். கப்பு பாதி... இவர்கள் பண்ணும் கலவரம் பாதி என அவர்கள் பயணம் ரணகளமாய் மாட்டுத்தாவணியில் தொடங்கும்.   

* `மாமோய்... நீ எங்கே இருக்கே..?', `பருத்தி வீரன்’ க்ளைமாக்ஸில் பிரியாமணி கதறி அழும்  `என்னை காணாப்பொணமா ஆக்கிடுறா வீரா...’, `குட்டிப்புலி’யின், `தாக்கியரே தாக்கியரே...' பாட்டையும்கூட ரிங்டோன்களாக வைத்துக்கொண்டு குறுக்க மறுக்க க்ராஸ் செய்துகொண்டிருப்பார்கள். சிலபேர் மட்டும் இன்னும் விசேஷம். சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல்களை உருக உருக லௌட்ஸ்பீக்கரில் கேட்டு நம்மைக் கிறங்கவைப்பார்கள். 

 இப்படி பலதரப்பட்ட பயலுக  கூட்டம் கூட்டமா புழங்குற இடம்தான் நம்ம மாட்டுத்தாவணி!

அடுத்த கட்டுரைக்கு