Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 16

குறும்புக்காரன் டைரி - 16
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 16

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 16

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 16
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 16
குறும்புக்காரன் டைரி - 16

போன வாரம், எங்க ஸ்கூல்ல மேத்ஸ் க்ளப், ரீடர்ஸ் க்ளப்னு நிறைய க்ளப் ஆரம்பிச்சாங்க. எங்க க்ளாஸ்ல, யார் யார் எந்தெந்த க்ளப்ல செலெக்ட் ஆகி இருக்காங்கனு லிஸ்ட் படிச்சாங்க. அதில், ஹிஸ்டரி க்ளப் மெம்பர்ஸ் பட்டியல்ல என் பேரைக் கேட்டதும், தூக்கிவாரிப்போட்டுச்சு.

'எனக்கும் ஹிஸ்டரிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை நாளைக்கு வரலாறுல இடம்புடிக்கப் போறதுக்கான சிம்பலா இருக்குமோ?’னு குழப்பம். நேரா ஹிஸ்டரி சார்கிட்டேயே கேட்டுட்டேன். 'ஹிஸ்டரி க்விஸ்ல வின் பண்ணினதையே மறந்துட்டியா? அதுக்கான பரிசுதான் இது’ என்றார்.

எனக்கு சிரிப்பே வந்துருச்சு. நான் ஃபர்ஸ்ட் வந்த வெற்றியின் ரகசியமே வேற.  கொஸ்டீன்ல யாரோட பேரையாவது கேட்டிருந்தா, ஆப்ஷன் கி. ஒரு சம்பவம் பத்தின வருஷம் கேட்டா, ஆப்ஷன் ஙி. வேற கேள்வினா, ஆப்ஷன் சி.  இப்படி ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு டிக் பண்ணினேன். கடைசியில பார்த்தா, எல்லாமே கரெக்ட் ஆன்ஸரா வந்திருக்கு. இதே ஹிஸ்டரியினால, ஒருமுறை க்ளாஸ்ல செம பல்பு வாங்கியதை சார் மறந்துட்டார் போல.

அன்னிக்கு ஹிஸ்டரி க்ளாஸ்ல, ஆங்கிலேயர் ஆட்சி பத்தி சொல்லும்போது என்னை எழுப்பி, 'இந்தியாவுக்கு ரயில்வே கொண்டுவந்து, இருப்புப் பாதையின் தந்தை எனப்பட்டவர் யார்?’னு கேட்டார்.

எனக்கு படிச்ச ஞாபகம். அவர் பேர்ல 'ஹெள’னு வரும். முழிச்சுக்கிட்டே, 'ஹெள... ஹெளசிக்’னு ஏதேதோ சொன்னேன்.

'உன் ஃப்ரெண்டு பேரெல்லாம் சொல்லிட்டு இருக்கே. அவர் பெயர், டல்ஹெளசி பிரபு’னு சொன்னார். நானும் 'அதேதான் சார்’னு அவரைப் பார்த்தேன்.

'காணாமப்போன டல்ஹெளசியவே தேடிக் கண்டுபுடிச்ச மாதிரி முகத்துல ரியாக்ஷனைப் பாரு’னு சார் கலாய்க்க, பசங்க எல்லாம் சிரிச்சாங்கெ.

அந்தச் சம்பவத்துக்கு அப்புறம், திரும்பவும் வரலாறு என் வாழ்க்கைல மூக்கை நீட்டுது. இதுல, என் அறிவுக்கொழுந்து நண்பன் ஜெகனும் ஹிஸ்டரி க்ளப்ல செலெக்ட் ஆகியிருந்தான். என்னாகப் போகுதோ

குறும்புக்காரன் டைரி - 16

இந்த ஹிஸ்டரி க்ளப்ல சேர்ந்ததில் ஒரே நல்ல விஷயம், தினமும் கடைசி பீரியட் கட். ஜாலியா க்ளப்புக்கு ஓடிருவோம். எங்க ஸ்கூல்ல 10 பேர் ஹிஸ்டரி க்ளப்ல செலெக்ட் ஆகியிருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு டாபிக் கொடுத்து, அது சம்பந்தமான ரிப்போர்ட் ரெடி பண்ணி, ஒரு வாரத்துக்குள்ள கொடுக்கணுமாம்.

எனக்கான டாபிக், 'சுதந்திரப் போராட்டம்’. ஜெகனுக்கு, 'மொகலாயர்கள்’. உடனே  லைப்ரரிக்குப் போய், குண்டு குண்டா நாலு புத்தகங்களைத் தூக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். என் அண்ணன் லோகேஷ§ம் சில குண்டுப் புத்தகங்களோட வந்தான்.

'நான் மேத்ஸ் க்ளப்ல செலெக்ட் ஆகியிருக்கேனாக்கும்’னு ராமானுஜன் லெவலுக்கு ஃபீல் பண்ணினான்.

விடிய விடிய நோட்ஸ் எடுத்துட்டேன். ஆனா, ரிப்போர்ட்டை நீட்டா ரெடி பண்ணணுமே! கிரிக்கெட், அரட்டைனு என் பிஸியான வேலையில் இது சரிப்படாது. என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

அட, அம்மா இருக்க கவலை ஏன்? 'உன் கையெழுத்து, முத்து மாலையைக் கோத்த மாதிரி அழகா இருக்கு’னு ஒரு வார்த்தை சொன்னா போதும், புல்லரிச்சுப்போயிருவாங்க. 'ஹாரி பாட்டர்’ மாதிரி வால்யூம் வால்யூமா எழுதிக் கொடுத்துருவாங்க. உடனே, எடுத்த நோட்ஸோட அம்மாகிட்ட போனா, எனக்கு முன்னாடியே என் அண்ணனும் நின்னுட்டு இருக்கான்.

'மம்மி, உன் கையெழுத்து பட்டைத் தீட்டின வைரம் மாதிரி இருக்கு’னு சொல்லிட்டு இருந்தான். அது சரி, ஒரே ரத்தமாச்சே.

'ஈவ்னிங் வரும்போது, உங்க ரெண்டு பேரின் ரிப்போர்ட்டும் ரெடியா இருக்கும். கவலைப்படாம போய்ட்டு வாங்க’னு சொன்னாங்க.

மறுநாள் அதை எடுத்துட்டுப் போய் பந்தாவா வெச்சாச்சு. எனக்கு முன்னாடியே ஜெகனும் ரிப்போர்ட் வெச்சிருந்தான். 'டேய் ஜெகன், நீ லைப்ரரி பக்கமே வரலியே. எப்படி ரிப்போர்ட் ரெடி பண்ணினே?’னு கேட்டேன்.

ஜெகன் சிரிச்சுக்கிட்டே, 'இதுக்காக எவன் புக்ஸ் படிப்பான். அம்மாகிட்டே 'ஜோதா அக்பர்’ படம் பார்த்து, மொகலாயர்கள் ரிப்போர்ட் எழுதச் சொல்லிட்டேன்’னு சிரிச்சான்.

மிஸ் ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் எடுத்துப் பார்த்தாங்க. என் ரிப்போர்ட் பார்க்கும்போது  அவங்க முகத்து ரியாக்ஷனைப் பார்த்ததும் புரிஞ்சுபோச்சு. 'வில்லங்கம் வேட்டைக்குக் கிளம்பிருச்சு, தயாரா இருடா கிஷோர்’னு மூளைக்குள் நோட்டிஃபிகேஷன் வந்துச்சு.

என்னைக் கூப்பிட்ட மிஸ், ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்து, 'எல்லாருக்கும் சத்தமா படிச்சுக் காட்டு’னு சொன்னாங்க. நானும் ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பிச்சேன்.

'காந்தி, உப்பு சத்தியாகிரகத்தின்போது மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நடந்ததால், 240 மைல்களைக் கடந்து, தண்டியை 23 நாட்களில் சென்றடைந்தார். இதுவே, மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருந்தால், 17 நாட்களில் கடந்திருப்பார்...’னு படிச்சுக்கிட்டே நிமிர்ந்து பார்த்தேன். எல்லோரும் 'கொல்’னு சிரிச்சுக் கொன்னாங்கெ.

'இதுதான் ரிப்போர்ட்டா? காந்தியின் தண்டி யாத்திரையப் பத்தி கேட்டா, எத்தனை கிலோமீட்டர் வேகத்துல நடந்தார்னு கணக்கு சொல்லிட்டு இருக்கே. இதுக்கு பேர்தான் காந்தி கணக்கா?’னு முறைச்சதும், மறுபடியும் 'கொல்’ சிரிப்பு

குறும்புக்காரன் டைரி - 16

மொத்த அர்ச்சனையையும் வாங்கிட்டு என் இடத்துல வந்து உட்கார்ந்தேன். ஜெகன் என்னைப் பார்த்து, 'ஹி...ஹி’னு சிரிச்சான். மேத்ஸ் ரிப்போர்ட்டையும் ஹிஸ்டரி ரிப்போர்ட்டையும் சேர்த்து எழுதிய அம்மா மேல செம கோவம். அந்தக் கோவத்துலயும் ஒரு சந்தோஷம். என் அண்ணன் லோகேஷ் ரிப்போர்ட் எப்படி இருக்கும்! பூஜ்ஜியத்தைக் கண்டுபிடிச்சது சுபாஷ் சந்திரபோஸ்னு எழுதி இருப்பாங்களோ. இந்நேரம் அவனும் பல்பு வாங்கி இருப்பான்.

'ஜெகன், கமின்’னு கூப்பிட்ட மிஸ் குரலில் பயங்கர டென்ஷன். அவன் பேய் முழி முழிச்சுக்கிட்டு எழுந்ததும், நான் சந்தோஷமா நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

அவன் ரிப்போர்ட்டை வாசிக்க வாசிக்க எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சோம். மூணு படம் இருக்கிற ஒரே டிவிடி-யை வாங்கிக் கொடுத்திருக்கான் ஜெகன். ஹிருத்திக் ரோஷன் நடிச்ச 'ஜோதா அக்பர்’ படத்தோட, ஷாரூக் கான் நடிச்ச 'அசோகா'-வையும் 'பாஜிரா மஸ்தானி’ படத்தையும் அவன் அம்மா பார்த்துட்டாங்க போல. எல்லாத்தையும் கலந்துகட்டி எழுதி இருந்தாங்க. ரன்வீர் சிங், தீபிகா படுகோன் பேரெல்லாம் வந்துச்சு.

ஈவ்னிங் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப, கம்ப்யூட்டர்ல ஏதோ சீரியஸா டைப் பண்ணிட்டு  இருந்த அம்மா, 'உஷ்ஷ்ஷ்... நாளைக்கு அப்பாவுக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு. அதுக்கு ரிப்போர்ட் எழுதிட்டு இருக்கேன்’னு சொன்னாங்க.

பக்கத்துல சமையல் குறிப்புப் புத்தகம் இருந்துச்சு. நானும் அண்ணனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்கிட்டோம்.

(டைரி புரட்டுவோம்...)