
ம.கா.செந்தில்குமார், படம்: தி.குமரகுருபரன்

‘‘‘எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்க’னு மூணு வருஷமா நாங்க அஜித் சாரைக் கேட்டுட்டிருந்தோம். ஒருநாள் அஜித் சாரிடம் இருந்து எங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு. ‘வேதாளம்’ படத்துக்கு அடுத்து அதே காம்பினேஷன்ல உங்க பேனருக்குப் படம் பண்றேன்’னு சொன்னார். அவ்வளவு சந்தோஷம். ஆடிப் பெருக்கு அன்னைக்கு பெல்கிரேடில் ‘அஜித்-57’ படப்பிடிப்பு தொடங்கிடுச்சு. 2017-ல் ஏப்ரல் மாசம் படம் ரிலீஸ். ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு’’ - ‘சத்யஜோதி’ டி.ஜி.தியாகராஜனின் பேச்சில் அப்படி ஓர் உற்சாகம். இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் ரவி கே.சந்திரன், மணிகண்டன்... உள்பட பல சினிமா ஆளுமைகள் இவரின் அறிமுகங்களே. அப்பா, இவர், தற்போது இவரது மகன்கள் என மூன்று தலைமுறைகளாக டி.ஜி.தியாகராஜன் குடும்பம் சினிமா தயாரிப்பில் உள்ளது!
‘‘என் பெரியப்பா என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம் அம்மாளின் சகோதரிதான் என் அம்மா. என் அப்பா டி.கோவிந்தராஜன், ஆரம்பத்தில் என்.எஸ்.கே ஃபிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவா இருந்தார். பிறகு வீனஸ் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸைத் தொடங்கினார். இயக்குநர் ஸ்ரீதருடன் சேர்ந்து இவர்கள் தயாரித்த முதல் படம்தான் ‘அமரதீபம்’. பிறகு தமிழ், இந்தி, தெலுங்கில் நிறையப் படங்கள் எடுத்தனர். நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ முடிச்சிட்டு அங்கேயே பேங்க் ஆஃப் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் வீனஸ் பிக்சர்ஸில் நிறையப் பிரச்னைகள். அதனால நான் சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய சூழல். அப்பாவும் ஆர்.எம்.வீரப்பன் சாரும் நெருங்கிய நண்பர்கள். ஆர்.எம்.வீரப்பன் சாரின் மகளைத் திருமணம் முடித்தேன். ரஜினி சார் நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை சத்யா மூவீஸ் தயாரித்த சமயத்தில், நான் அங்கு வேலைசெய்ய ஆரம்பித்தேன்.
ஆர்.எம்.வீ சாரிடம்தான் சினிமா கத்துக்கிட்டேன். சத்யா மூவீஸ்ல பெரிய கமர்ஷியல் படங்கள் எடுத்துட்டிருந்த சமயத்தில் ‘நம் டேஸ்ட்டுக்கு வித்தியாசமான படங்கள் எடுக்கணும்’னு நினைச்சு, 1980-ம் ஆண்டில் தொடங்கினதுதான் சத்யஜோதி ஃபிலிம்ஸ். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘மூன்றாம் பிறை’, ‘பகல் நிலவு’னு 36 வருடங்கள்ல 31 படங்களே பண்ணியிருக்கேன். எண்ணிக்கை குறைவா இருந்தாலும் வித்தியாசமான நல்ல படங்கள் பண்ணியிருக்கோம்கிற திருப்தி இருக்கு.’’

‘‘அஜித் படம் என்ன ஸ்பெஷல்?’’
‘‘ ‘வேதாளம்’ படம் ரிலீஸுக்குப் பிறகு அஜித் சாரின் முழங்கால், ஷோல்டரில் ஆபரேஷன் நடந்தது. பிறகு இந்தப் படத்துக்குத் தயாராகி வர்றதுக்காக ஏழு மாசம் ஓய்வில் இருந்தார். ஆனால், அது ஓய்வு கிடையாது எங்க படத்துக்கான தயாரிப்புனு பிறகுதான் தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணி ரெடியாகியிருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள்தான் பிரதானம். அது பிரமாண்டமாக இருக்கணும்னுதான் இந்த மெனக்கெடல்.’’
‘‘உங்க படங்களுக்குக் கதைகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பீங்க. இந்தப் படத்தின் கதையம்சம் எப்படி இருக்கும்?’’
‘‘இயக்குநர் சிவா ஏற்கெனவே அஜித் சாருக்கு பண்ணின ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் மாதிரி இல்லாம இது வேற பேட்டர்ன் படம். தமிழ்நாட்டில் ஒரு குற்றம் நடக்கும். அதைத் தோண்டித் துருவி விசாரிக்கும்போது, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அது தொடர்பான விஷயங்கள் கிளை பரப்பியுள்ளது தெரியவரும். அதை விசாரித்து உண்மையைக் கண்டறியும் இன்டர்போல் அதிகாரியாக அஜித் வருகிறார். இது அஜித் சாருக்கு வேறுவிதமான ஸ்டைலிஷ் படமா வரும். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன்... நடிக்கிறாங்க. ஃபாரீன் ஆர்ட்டிஸ்ட் பலரும் இதில் இருக்காங்க. அனிருத் இசை. தீம் மியூஸிக் எல்லாம் ரெடி பண்ணிட்டார். படத்துல மொத்தம் நான்கு பாடல்கள். எழுபது சதவிகிதப் படப்பிடிப்பு ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு லொக்கேஷன்கள்ல நடக்குது. 30 சதவிகிதம்தான் இந்தியாவில். இந்தப் படத்தை அஜித்தின் `உலகம் சுற்றும் வாலிபன்’னு சொல்லலாம்.’’

‘‘தனுஷின் `தொடரி’, விக்ரம் பிரபுவின் ‘முடிசூடா மன்னன்’ என ஒரே சமயத்தில் பல படங்கள் தயாரிக்கிறீங்களே?’’
‘‘ ‘கும்கி’ பட ட்ரெய்லரைப் பார்த்துட்டு விக்ரம் பிரபுவை வெச்சு படம் எடுக்கலாம்னு முடிவுபண்ணினோம். அந்தப் படம் தள்ளிப்போய் இப்பதான் முடிஞ்சிருக்கு. அதுதான் ‘முடிசூடா மன்னன்’. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக் ஷன், யுவன் ஷங்கர் ராஜா மியூஸிக், மஞ்சிமா மோகன் ஹீரோயின். எஸ்.ஆர்.பிரபாகரன் கதை, திரைக்கதையில் ரொம்ப ஸ்ட்ராங். வயலன்ஸினால் நிச்சயம் அமைதி கிடைக்காது என்ற மெசெஜை அவ்வளவு அழகான கதையோடு சொல்லியிருக்கார்.

‘மைனா’ பார்த்த பிறகு பிரபுசாலமனை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு விரும்பினேன். ‘கும்கி’க்கு முன்னரே எங்க பேனர்ல படம்பண்ண ஒப்புக்கிட்டார். ‘கயல்’ படத்தை முடிச்சுட்டு வர்றேன்’னு சொல்லி, இப்ப எங்களுக்காக தனுஷை வைத்து ‘தொடரி’ முடிச்சிருக்கார். ஒட்டுமொத்தப் பட சம்பவங்களும் ஓடும் ரயிலில் நடக்கும்படி திரைக்கதை அமைச்சிருக்கார். படம் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி ரிலீஸ்.’’
‘‘வாரத்துக்கு ஏழெட்டு படங்கள் ரிலீஸ், சேட்டிலைட் ரைட்ஸ் விற்காதது... ஒரு சீனியரா இப்ப உள்ள தயாரிப்பாளர்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீங்க?’’
‘‘இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு புதியவர்கள் வர்றதை வரவேற்கிறேன். ஆனால், நிறையப் பேர் இந்தத் தொழிலைச் சரியா புரிஞ்சுக்காம வரும்போதுதான் பிரச்னையில் சிக்கிக்கிறாங்க. இன்னைக்கு சேட்டிலைட் ரைட்ஸ் விக்காதப்ப, அந்த வியாபாரத்தையும் கணக்குல சேர்த்து கூடுதலா செலவு பண்ணிடுறாங்க. இதில் சிக்காம இருக்கணும்னா புதுசா படம் எடுக்கிறவங்களுக்கு ரெஃப்ரஷிங் கோர்ஸ் மாதிரி சினிமா பற்றி சொல்லிக் கொடுக்கணும். சின்ன பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரி இங்கே உள்ள ரிலீஸ் சிஸ்டத்தை வரைமுறைப்படுத்தணும். அப்பதான் எல்லா படங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்.’’
‘‘திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு இந்தத் தயாரிப்பாளர் பயணம்?’’
‘‘1980-ல் ஆரம்பிச்சு இப்ப 2016-ல் இருக்கேன். குறைவான படங்கள்தான். ஆனால் கடவுளின் அருளால் நிறைய வெற்றிப் படங்கள் பண்ணியிருக்கோம். தேசிய, மாநில அரசு விருதுகள் நிறைய வாங்கியிருக்கோம். நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு பலரை அறிமுகப்படுத்தியிருக்கோம். தொழில்நுட்பத்தில், வேலைபார்க்கும் விதத்தில், மனிதர்களின் மன மாற்றத்தில் என இந்த 36 வருடங்கள்ல நிறைய மாற்றங்கள். காரணம், ஜெனரேஷன் சேஞ்ச். அப்ப மதியம் லன்ச் பிரேக்ல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். மத்த கோ ஸ்டார்ஸ் பக்கத்து செட்ல இருந்து எல்லாம் வந்து பேசுவாங்க. அந்த ஃபீலே அவ்வளவு பாதுகாப்பா உணர வைக்கும். ஆனால் இப்ப இந்த கேரவேன் கல்ச்சர் வந்த பிறகு முன்னமாதிரி இல்லை. ஷாட் முடிஞ்ச உடனேயே கேரவேனுக்குள்ள போயிடுறாங்க. இதனால அவங்களுக்குள் இன்டராக்ஷன்ஸ் பழைய மாதிரி இல்லை. ஆனால், என் மகன்கள் செந்தில், அர்ஜுன் இருவரும் இப்ப உள்ள ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்கள்கூட எளிதா ஜெல் ஆகுறாங்க. ‘பணம் போடுறது மட்டும் தயாரிப்பாளர் வேலை கிடையாது. அந்தத் தொழிலை ரசிச்சுக் கத்துக்கிட்டு வேலை செய்யணும்’னு ஆர்.எம்.வீ சார்ட்ட இருந்து நான் கத்துக்கிட்டதை அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். அதுவே அவங்களை வழிநடத்தும்.’’