என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு

விகடன் விமர்சனக் குழு

##~##

மிழர்களே மறந்த ஒரு தமிழனின் பெருமையைச் சமரசம் செய்து கொள்ளாமல் சினிமா ஆக்கியதற் காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வாழ்த்துக்கள்!

 சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி!  

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தர்மன், தன் குருவின் ஆணையின் படி சீனாவுக்குச் செல்லும் சமயம், அங்கு கொள்ளைநோய் ஒன்று மக்களைப் பலி கொள்கிறது. மூலிகை மருத்துவம் மூலம் நோயை ஒழிப்பவர், அந்த மக்களுக்கு தற்காப்புக் கலையையும் கற்றுத் தருகிறார். சீனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விஷம் உண்டு அங்கேயே சமாதிநிலை அடைகிறார் போதி தர்மன். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நிகழ்காலத்தில் இந்தியா மீது சீனா உயிரியல் யுத்தம் தொடுக்க இருக்கும் சூழல். போதி தர்மனின் பரம்பரையைச் சேர்ந்த சர்க்கஸ் கலைஞன் சூர்யாவுக்கு போதி தர்மனுடைய டி.என்.ஏ. அமைப்பு 83 சதவிகிதம் பொருந்தி இருப்பதைக் கண்டறிகிறார் ஜெனடிக் இன்ஜினீயரிங் மாணவி ஸ்ருதி. நோய்க்கொல்லிக் கிருமியைப் பரப்பவும் ஸ்ருதியைக் கொல்லவும் ஓர் உளவாளியை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்கிறது சீன அரசு. அந்த அசகாய உளவாளியின் திட்டத்தை முறியடிக்க சூர்யாவின் டி.என்.ஏ-வுக்குள் ஒளிந்திருக்கும் போதி தர்மனின் ஆற்றலைத் தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஸ்ருதி. 'போதி தர்மன்’ மீண்டு எழுந்தாரா... தமிழகத்தைக் காப்பாற்றினாரா என்பது பரபர... தடதட க்ளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு

சீனாவிலும் வியட்நாமிலும் இப்போதும் யோகியாகக் கொண்டாடப்படும் போதி தர்மனைப் பற்றிய ஆரம்பக் காட்சிகள்...  சர்ப்ரைஸ் சந்தோஷம்!  

கனிவு ததும்பும் பார்வை முதல் தற்காப்புக் கலைக்கான உடல்மொழி வரை போதி தர்மன் அவதாரத்துக்கு இஞ்ச் இஞ்சாக உழைத்திருக்கிறார் சூர்யா. எதிரியை எதிர்கொள்ளும்போதும் மக்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உட்கொள்ளும்போதும் சலனம் இல்லாத அன்பு மட்டுமே வெளிப்படுத்தும் யோகியாக அப்படியே கூடு பாய்ந்திருக்கிறார் சூர்யா. சர்க்கஸ் கலைஞனாக வில்லனுக்குப் பயந்து ஓடி ஓடி ஒளிந்து, க்ளைமாக்ஸில் ஒட்டுமொத்தக் கோபம் திரட்டித் திருப்பித் தாக்குமிடத்தில் மிரள வைக்கிறார்.    

தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் லூஸுப் பெண் காதலியாக இல்லாமல், ஸ்ருதி கமலுக்கு நடிகையாக இது நல் அறிமுகம்! ஆனால், முகத்தில் பொங்கும் பொலிவும் இளமையும் உடல்மொழியில் மிஸ்ஸிங். ''காதலைத் தவிர வேறு எதுவும் தெரியாதா உனக்கு?'' என சூர்யாவிடம் கோபம் காட்டு வதிலும் அவரை போதி தர்மனாக மறுஉருவாக்கம் செய்யும் வேகத்திலும் ஈர்க் கிறார்.

அத்தனை வலிமையான போதி தர்மனை எதிர்க்கும் சீன வில்லன் கதாபாத்திரத்துக்கு மிரட்டல் சாய்ஸ் ஜானி ட்ரி நுயென்! ஐஸ் கத்தி கண்களைக்கொண்டே அசாத்திய காரியங்களைச் சாதிக்கிறார். அந்த நரம்பு உடம்பை இறுக்கி முறுக்கி வில்லாக வளைந்து எதிரிகளைத் துவம்சம் செய்யும்போது... டாங் லீ... செம ஸ்ட்ராங்லீ!

சினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு

''ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒருத்தனைக் கொன்னதுக்குப் பேரு வீரம் இல்ல... துரோகம்!'' என சூர்யா பேசும் வசனம் செம சூடு. 'அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்க முடியாத தமிழுக்கும்’ என இறுதியில் திரையில் ஒளிரும் வரிகள் ஒரு சேர கோபத் தையும் துயரத்தையும் உள்ளுக்குள் தூண்டு கின்றன!

ஸ்ருதிக்கு சூர்யா கொடுக்கும் யானை லிஃப்ட், 'ஒருத்தவங்களப் பத்தி கெட்ட விஷயங்களை தெரிஞ்சுக்க குப்பைக் கூடை யைத் தோண்டு’ என்று சூர்யா சொன்ன உடன் ஜி-மெயிலின் த்ராஷ் ஃபோல்டரை ஸ்ருதி ஆராய்வது என்று ஆங்காங்கே 'அட’ போடவைக்கிறது முருகதாஸ் டீம். ஆனால், போகிறபோக்கில் ரிசர்வேஷனை ஏதோ ரெக்கமண்டேஷன் அளவுக்கு குற்றம் சொல்லிப்போவது எல்லாம் அபத்தம்!

கத்தியின்றி ரத்தமின்றி ஒற்றைப் பார்வை யிலேயே எதிராளியைச் சாய்க்கும் 'ஹிப் னாட்டிஸம்’ என்னும் நோக்கு வர்மம்... 'டேய்ய்ய்ய்ய்... டூய்ய்ய்ய்ய்ய்’ தமிழ் சினிமா வில்லன்களிடம் காணக் கிடைக்காத அதிசயம்! அத்தனை பேரை எளிதாக வசியப்படுத்தும் டாங் லீ, சூர்யாவிடம் தடுமாறும் இடத்தில் அள்ளுகிறது அப்ளாஸ். ஆனால், அதற்காக வில்லன் எதற்கெடுத்தாலும் 'நோக்கி’க்கொண்டே இருப்பதும் ஒரே நொடியில் எந்தத் திசையில் இருக்கும் எதிராளியையும் வசப்படுத்துவதும்... திரைக்கதையை இன்னும் கொஞ்சம் 'நோக்கி’ இருக்கலாம் சாரே!  

சுவாரஸ்யம் இல்லாத காதல் அத்தியாயம், லாஜிக் இல்லாத வில்லனின் நடமாட்டம் ஆகியவை ஒருகட்டத்துக்குப் பிறகு... முடியலை யுவர் ஹானர்! இப்படி ஒரு வில்லன் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது இந்திய உளவுத் துறைக்குத் தெரியவே தெரியாதா? விஷயம் தெரிந்த ஸ்ருதி அண்ட் கோ ஏன் போலீஸுக்கு ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் அலைகிறார்கள்? அட, அதைக்கூட விடுங்கள்... அத்தனை போலீஸ்காரர்களைக் கொன்ற, வீடியோவிலும் பதிவான டாங் லீயைக் கண்டுகொள்ளாமல் அத்தனை நாட்களும் தமிழகக் காவல் துறை என்னதான் செய்துகொண்டு இருக்கிறது?

'யம்மா யம்மா காதல் பொன்னம்மா’,  'முன் அந்திச் சாலையில்...’ பாடல்களில் மட்டுமே ஆறுதல் தருகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'ரிங்கா ரிங்கா’ பாடலை 'டாக்ஸி டாக்ஸி’யாகக் கேட்ட நினைவு. பின்னணி இசை... ம்ஹூம்!

போதி தர்மனைப் பற்றிய ஆரம்பக் காட்சி களிலும் அந்த சீனப் பயணத்திலும் பிரமாண்டமாக உழைத்திருக்கிறது ரவி கே. சந்திரனின் கேமரா. பார்த்துப் பழகிய குங்பூ கலையில், சினிமாவுக்கான கமர்ஷியல் சேர்த்திருக்கிறார் பீட்டர் ஹெயின். ஆனால், அத்தனை திறமைகள் நிரம்பிய வில்லனை க்ளைமாக்ஸில் வீழ்த்த கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசிக்க மாட்டாரா 'போதி தர்மன்’? சும்மா பறந்து பறந்து அடித்துக்கொண்டே இருந்தால் ஆச்சா?

சீனர்கள் பெருமிதம்கொள்ளும் ஒரு கலைக் குத் தமிழனே தந்தை என்று தொடக்கக் காட்சிகள் தரும் பெருமித உணர்வை அடுத்தடுத்த காட்சிகளில் தக்க வைத்துக்கொள்ளத் தவறுகிறது திரைக்கதை.

தமிழனின் திறமையை உலகுக்கு உணர்த்திய விதத்தில், 'ஆறாம் அறிவு’ சுட்டிக் காட்டும் குறைகளை மறந்தால், இந்த '7ஆம் அறிவு’ பெருமை கொள்ளவைக்கும் முயற்சி!