Published:Updated:

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

ம.கா.செந்தில்குமார்

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”
“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

செம தெளிவில் இருக்கிறார் விஷால். `கத்தி சண்டை’யில் வடிவேலு ரீஎன்ட்ரி, நடிகர் சங்கக் கட்டடம், தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகள், திருமணம்... என எந்தக் கேள்விக்கும் மறுக்காமல் மழுப்பாமல் வந்துவிழுகின்றன பதில்கள்.

‘‘ `கத்தி சண்டை' என்ன மாதிரியான படம்... இதில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘ வடிவேலு அண்ணன் அஞ்சு வருஷம் கழிச்சு, திரும்பி வர்ற படம். அடுத்து வடிவேலு அண்ணனும் சூரியும் முதல்முறையா சேரும் படம். காமெடியைத் தவிர இதுல அடுத்த முக்கியத்துவம் ஆக்‌ஷன். அதுவும் ஸ்டைலிஷான ஆக்‌ஷன். இனி என் ஒவ்வொரு படத்துலயும் சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துக்களைச் சொல்லணும்னு முடிவுபண்ணியிருக்கேன். நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரு மைண்ட்வாய்ஸ் சொல்லப்படாமலேயே இருக்கும். அது வெளிப்படையா ஒரு இடத்துல வெடிக்கக்கூடிய சூழல் வரும். அப்படி ஹீரோவின் மைண்ட் வாய்ஸ் வெளிப்படுற இடம்தான் க்ளைமாக்ஸ். அது என்ன விஷயம் என்பதுதான் கதை. ‘கத்தி சண்டை’ தீபாவளிக்கு ரிலீஸ்.’’

‘‘விஷால், சுராஜ், வடிவேலு, சூரி... இந்த காம்பினேஷன் எப்படி அமைஞ்சது?’’

``சுராஜ் சார் என்கிட்ட இந்த ஸ்கிரிப்ட் சொன்னப்ப, ‘வடிவேலு அண்ணன் பண்ணினால்தான் இந்தப் படம் எடுக்கணும். இல்லைன்னா வேற கதை பார்க்கலாம்’னு முடிவுபண்ணினோம். ஏன்னா, இதுல அவருக்கு ரீப்ளேஸ்மென்டே இல்லை. இந்த கேரக்டருக்கு ஒரே ஆள் அவர்தான். அவர் கதை கேட்டுட்டு, ‘நான் மீண்டும் வர்ற படமா இதுதான் சரியா இருக்கும்’னு சொல்லி ஒப்புக்கிட்டார். `எல்லாம் அமைஞ்சு வரும்னு சொல்வாங்க'ல அப்படி இதுல எல்லா விஷயங்களுமே சூப்பரா அமைஞ்சிருக்கு.’’

‘‘வடிவேலுவுக்கு அப்படி என்ன கேரக்டர்?’’

‘‘அவருக்கு ஒரு சீரியஸான சைக்யாட்ரிஸ்ட் கேரக்டர். பேர் டாக்டர் பூத்ரி. என்னைக் குணப்படுத்துறதுக்காக வர்றவர். அந்த எபிசோடுல நிறைய இங்கிலீஷ் பேசுவார். அவர் பேசுற டயலாக்குகளை, எதிர்காலத்துல பாட்டுல ஒரு வரியா வைப்பாங்க, படத் தலைப்பாவேகூட வைப்பாங்க. இதுல அவரின் பாடிலாங்வேஜை நகல் எடுப்பாங்க. அந்த வகையில் இது முக்கியமான படம். இந்தப் படத்துல வரும் காமெடி, அடுத்த பத்து வருஷத்துக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியா இருக்கும். அஞ்சாறு வருஷம் கேப் விட்டுட்டு வேற யாராவது வந்தா இந்த அளவுக்கு அவங்களுக்கு வரவேற்பு இருக்குமானு தெரியலை. ஆனா, வடிவேலு அண்ணனுக்காகக் காத்திருக்காங்க. இங்கே உங்களுக்கு எனக்குனு எல்லாருக்குமே ஒரு மாற்று இருக்கு... வடிவேலுவைத் தவிர. அப்படிப்பட்ட மனிதர் என் படம் மூலமா ரீஎன்ட்ரி கொடுக்கிறது எனக்கான பெருமை.’’

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

``முதல் முறை தமன்னா காம்பினேஷன்?''

‘‘கலரான நிறைய ஹீரோயின்கூட நடிச்சிருக்கேன். ஆனா, சுவருக்கும் இவங்களுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வெள்ளை. அந்த பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன்தான் இதுல ப்ளஸ். அவங்களுக்கு செம காமெடி சென்ஸ்; நல்ல டான்ஸர்; பெர்ஃபெக்ட் ஆர்ட்டிஸ்ட். எங்க ஆரம்பப் பாட்டே, ‘நான் கொஞ்சம் கறுப்புதான்...’னுதான் தொடங்கும். வழக்கம்போல பட்டையைக் கிளப்பியிருக்கான் ஹிப்ஹாப் ஆதி.’’

‘‘என்ன எல்லாம் செய்யணும்னு நினைச்சு ஜெயிச்சு வந்தீங்களோ, அதெல்லாம் நடிகர் சங்கத்தில் செய்ய முடியுதா?’’

‘‘முதல்ல கடனை அடைச்சோம். அடுத்து ஸ்டார் கிரிக்கெட் நடத்தி நடிகர் சங்க வரலாற்றிலேயே முதல்முறையா ஒன்பது கோடி ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டிருக்கோம். அடுத்து சங்க உறுப்பினர்கள் அனைவரைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டியிருக்கோம். அவர்களில் 80, 70, 60 வயசுக்கு மேற்பட்டவர்கள் யார் யார்னு பார்த்து, அவர்களை `குரு தட்சணை' திட்டத்தின் கீழ் கொண்டுவந்திருக்கோம். அதுல நாங்க 16 ஹீரோஸ். ஆளுக்கு 60 ஆயிரம் வசூல்செய்து, இப்ப 80 வயசுக்கு மேல் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாசாமாசம் 2,000 ரூபாய் உதவித்தொகை தர்றோம். அதை அடுத்து 70 வயசுக்கு மேற்பட்டவங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கோம். அடுத்து ஏ.சி.எஸ்., ஐசரி கணேஷ் அவர்களின் உதவியால் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி வழங்குறோம். சங்கத்துக்கு இணையதளம் தொடங்கியிருக்கோம்.

பெரிய ஹீரோக்கள்ல இருந்து நாடக நடிகர்கள் வரை எல்லா உறுப்பினர்களையும் போட்டோஷூட், வீடியோஷூட் பண்ணிட்டிருக்கோம். அதையும் எங்க இணைய தளத்துல அப்டேட் பண்றோம். இவை தவிர, எல்லா தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் தர, நடிகர் சங்கம் டைரக்டரி ஒண்ணு ரெடி பண்றோம். இப்படிப் பல விஷயங்கள் ஒவ்வொண்ணா நிறைவேத்திகிட்டே வர்றோம்.’’

‘‘நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் வேலைகள் எப்ப தொடங்கப்போறீங்க?''

‘‘கட்டடத்துக்கான வரைபடம், சி.எம்.டி.ஏ அப்ரூவலுக்குப் போயிருக்கு. 2018-ம் ஆண்டு பொங்கல் அன்னைக்கு நடிகர் சங்கக் கட்டடத் திறப்பு விழா நடத்தணும்கிறது எங்க டார்கெட். பில்டிங் கட்ட, முந்தைய நிர்வாகம் வெச்ச கடனுடன் சேர்த்து 26 கோடி ரூபாய் தேவை. அதுல ரெண்டு கோடி ரூபாய் கடனை நாங்க அடைச்சுட்டோம். இப்போ ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஒன்பது கோடி ரூபாய் இருக்கு. இது டிசம்பர் வரை பில்டிங் கட்டப் போதுமானது. மீதி நிதிக்காக, நாடக நடிகர்களும் சினிமா நடிகர்களும் கலந்துகொள்ளும் பிரமாண்டமான வரலாற்று நாடகம் நடத்தப்போறோம். அதை நாசர் சார்தான் ஒருங்கிணைக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல இடங்களில் இந்த நாடகத்தை மேடை ஏற்றப்போறோம். இது சின்சியர் முயற்சி. அதுல நாங்க இருப்போமா... இல்லையானு தெரியலை. ‘உங்களுக்கு ஏத்த கேரக்டர் இருந்தா கூப்பிடுறேன்’னு நாசர் சார் சொல்லியிருக்கார்.’’

‘‘அந்த நாடகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாம் இருப்பாங்களா?’’

‘‘கமல் சார் நிச்சயமா இருப்பார். நானே அதை உறுதியா சொல்வேன். அவர் எங்களுக்கு ஒரு தூண் மாதிரி பக்கபலமா இருக்கார். நாங்க ஜெயிச்சதும் ரஜினி சார் போன் பண்ணி வாழ்த்தினார். சி.சி.எல் கிரிக்கெட் மேட்சுக்குக் கூப்பிட்டதும் வந்தார். ஆனா, இந்த நாடகத்துல அவர் இருப்பாரானு தெரியலை. விஜய்கிட்ட ஸ்டார் கிரிக்கெட் ஃபங்ஷனுக்குக் கூப்பிடுறதுக் காகக் கேட்டேன். `விருப்பம் இல்லை'னு சொன்னார். அஜித் வாய்ப்பே இல்லை. நாங்க கேட்கவும் மாட்டோம். ஆனா, ஒவ்வொருவரின் முடிவை நாம மதிச்சே ஆகணும். சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. அவங்களுக்குப் பிடிக்கலைங்கிறதால நாம குறை சொல்ல முடியாது. அது அவர்களின் உரிமை.’’

‘‘நிறைய சினிமாக்கள்... அதில் பலரும் லாபம் அடைஞ்சாலும் தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடைகிறார். அதுக்கு என்ன காரணம்?’’

‘‘அதுக்கு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கமும்தான் காரணம். ஓர் இழப்பு எப்படி வருது, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம், அவசியம் இல்லாத செலவுகளை எப்படித் தவிர்க்கலாம், திருட்டு விசிடி-யினால் எவ்வளவு இழப்பு, திருட்டு விசிடி விக்கிறவங்களை என்ன பண்ணலாம், வருமானம் வரக்கூடிய இடங்கள் எவை, மும்பையில் ரிலீஸான 15-வது நாளே ஒரு படத்தின் டிவிடி-யை அதிகாரபூர்வமா ரிலீஸ் பண்ணுவதுபோல நாம பண்ணலாமா, ரிலீஸ் ஆன ஒரே மாசத்துல சிங்கிள் சாட்டிலைட் டெலிகாஸ்ட் ரைட்ஸ் கொடுப்பதுபோல நாம பண்ணலாமா, கமல் சார் சொன்ன மாதிரி முதல் நாளோ, 10-வது நாளோ, படத்தை டி.டி.ஹெச்-க்குக் கொடுத்து வருமானம் பண்ணலாமா, நெட் ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற ஆன்லைன்கள்ல நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணலாமா...

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

இப்படி எந்த நல்ல விஷயம் பேசி முடிவுபண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.’’

‘‘அப்ப நடிகர் சங்கம் மாதிரி வரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவீங்களா?’’

‘‘தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை. எப்படி நடிகர் சங்கத்தைக் கையில எடுத்துக்கவேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு. இது பதவிக்காக அல்ல. மறுபடியும் இளைஞர்கள் திரளணும்கிற அவசியமும் இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது ஜனவரி மாசம் நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை.’’

“அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்!”

‘‘வரலட்சுமியுடன் காதல். கூடியசீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது?’’

‘‘ வரலட்சுமியும் நானும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் கல்யாணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் கல்யாணம். இப்பவே கார்த்தியிடம் சொல்லி நான் புக் பண்ணிட்டேன். வந்து வாழ்த்துங்க!’’