Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 17

குறும்புக்காரன் டைரி - 17
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 17

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 17

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 17
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 17
குறும்புக்காரன் டைரி - 17

போன வாரம் எங்க ஏரியாவில் சர்க்கஸ் போட்டிருந்தாங்க. எனக்கு சர்க்கஸ் எவ்ளோ பிடிக்கும் தெரியுமா?

ஏழாவது படிக்கும்போது, 'பெரியவனாகி என்னவாகப்போறே?’னு மிஸ் கேட்டப்ப, 'சர்க்கஸ்ல ரிங் மாஸ்டர் ஆவேன்’னு பெருமையா சொன்னேன். அப்படிப்பட்ட சர்க்கஸுக்கு இந்த வருஷம் இன்னும் போகலை.

'கிஷோர், இந்த வெள்ளிக்கிழமை வரைக்கும்தான் சர்க்கஸ் இருக்குமாம். ஸ்கூல் நாள்லதான் போகணும். ஆனா, வீட்ல கூட்டிட்டுப்போற மாதிரி தெரியலை’னு புலம்பினான் ஜெகன்.

'எனக்கும் அதே பிரச்னைதான். 'வருஷா வருஷம்தான் பார்க்கிறியே, இந்த வருஷம் வேணாம்’னு அப்பா சொல்லிட்டார். பேசாம ஸ்கூலை கட் அடிச்சிட்டுப் போலாமா?’னு கேட்டேன்.

'சூப்பர்டா போலாம்’னு கோரஸா குரல் வந்துச்சு. திரும்பிப் பார்த்தா, பின்னாடி பெஞ்ச்ல இருந்து நவீனும் ரித்தேஷூம். 'கமான் கய்ஸ்... இந்த ஆபரேஷனை வெற்றிகரமா முடிக்கிறோம்’னு மொத்தமா எட்டு தலைகள் முன்னாடி வந்துச்சு.

'இத்தனை பேரும் ஒரே நாள்ல லீவு போட்டா, என்ன காரணம் சொல்றது?’னு பீதியைக் கிளப்பினான் சூர்யா.

'ஐடியா! சுரேஷ் சாருக்கு ஆக்ஸிடென்ட் . அவரைப் பார்க்கப்போறோம்’ என்றான் ரித்தேஷ்.

'அது யாருடா சுரேஷ் சார்?’னு குழப்பமா கேட்டேன்.

'நாம எல்லாம் ஒரு சார்கிட்டே டியூஷன் போறோம். அவர் பேரு சுரேஷ். அவருக்குத்தான் ஆக்ஸிடென்ட். பஸ் ஏறிப் போகிற தூரத்துல இருக்கிற அவரோட மாமியார் வீட்டில் ரெஸ்ட்ல இருக்கார். காலையில் சீக்கிரமே போயிட்டுத் திரும்பிட நினைச்சோம். ஆனா, போன இடத்துல  லேட் ஆகிருச்சு. இப்படி ஒரு கதையை மிஸ்கிட்டே அடிச்சுவிடுறோம்’னு சொன்னான் ரித்தேஷ்.

அதைவிட பெட்டரா வேற யாருக்கும் ஐடியா வராததால், அதையே ஒப்புக்கிட்டோம். வீட்ல பணம் கேட்கிறதுக்கான பொய்க்கு அவங்கவங்களே யோசனை பண்ணிக்கிறதாவும் முடிவாச்சு. க்ளாஸ்ல இருக்கும்போதே, சர்க்கஸைப் பார்த்து என்ஜாய் பண்ற பகல் கனவும் வந்துச்சு

குறும்புக்காரன் டைரி - 17

முதல்முறையா ஸ்கூலுக்கு கட் அடிக்கிறதை நினைச்சு, கொஞ்சம் பதற்றமா இருந்துச்சு.  என் அண்ணன் லோகேஷ் எப்படியும் அனுபவசாலியா இருப்பானேனு நினைச்சேன். அதனால், வீட்டுக்கு வந்ததும் அவன்கிட்டே பிளானைச் சொன்னேன்.

அவன் சிரிச்சுக்கிட்டே, 'ஹா... ஹா... கட் அடிக்கிற விஷயத்துல குரூப் சேர்றது எப்பவுமே டேஞ்சர்டா. உங்க டீம்ல எப்படியும் ஒரு அப்புராணி இருப்பான். மிஸ் விசாரிக்கும்போது, ஆந்தை முழி முழிச்சுக்கிட்டே எக்குத்தப்பா உளறிடுவான். நீங்க எல்லாம் டீசி வாங்குறது கன்ஃபார்ம். ஆல் தி பெஸ்ட் கிஷோர்’னு சொல்லிட்டுப்போயிட்டான்.

எனக்கு இந்த சூர்யா பயல் ஞாபகம் வந்துச்சு. 'ஏன்டா ரெண்டு நிமிஷம் லேட்?’னு கேட்டா, 'சைக்கிள் பஞ்சர்’னு ஒரு வரியில் சொல்ல மாட்டான். சக்கரத்தின் பரிணாம வளர்ச்சியில் ஆரம்பிச்சு. சைக்கிள் கண்டுபுடிச்ச வருஷம், அப்பாகிட்ட சைக்கிள் கேட்டப்போ வந்த தகராறுனு எல்லாத்தையும் சொல்லி, 'எனக்கு அப்பவே தெரியும் மிஸ், நீலக் கலர் சாக்ஸ் போட்ட ராசிதான் பஞ்சர் ஆச்சு’னு ஃபினிஷிங் டச் கொடுப்பான்.

ம்ஹூம்... சர்க்கஸ¨ம் வேணாம்; ஒரு மண்ணும் வேணாம். ஒழுங்கா ஸ்கூலுக்குப் போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். மறுநாள், எல்லாருக்கும் முன்னாடி ஸ்கூலுக்கு கிளம்பி க்ளாஸ்ல நுழைஞ்சா, அங்கே உட்கார்ந்து திருக்குறள் படிச்சுட்டு இருந்தான் ஜெகன்.

'என்னடா நீயும் சர்க்கஸுக்குப் போகலையா?’னு கேட்டேன்.

'இல்லே கிஷோர். மிஸ்கிட்ட எவனாச்சும் உளறிட்டா வம்பு. சர்க்கஸை அடுத்த வருஷம் பார்த்துப்போம்’னு சொல்லிட்டு, 'பொய்மையும் வாய்மையிடத்துப் புரை தீர்த்த...’னு திருக்குறளை கன்டினியூ பண்ணினான்

குறும்புக்காரன் டைரி - 17

கொஞ்ச நேரத்தில் பிளானை ஆரம்பிச்ச ரித்தேஷூம் நவீனும் நுழைஞ்சாங்க. ஆக, ஒரு பயலும் போகலை. 'இதுக்காடா உட்கார்ந்து மேப்லாம் போட்டோம்’னு நினைச்சுக்கிட்டேன்.

மிஸ் அட்டென்டண்ஸ் எடுக்கும்போதுதான் சூர்யா இல்லாதது தெரிஞ்சது. 'பாவம்டா... பயத்துல அவனுக்கு ஜூரமே வந்துட்டு இருக்கும். அப்புராணி’னு ஜெகன் சொல்ல, சிரிச்சேன்.

மறுநாள் ஸ்கூலுக்கு வந்த சூர்யாகிட்டே, 'ஏன் நேத்து வரலை?’னு மிஸ் கேட்டாங்க.

'மிஸ்... என் டியூஷன் சார் சுரேஷூக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருச்சு. அவரோட மாமியார் வீட்ல ரெஸ்ட்ல இருந்தார். காலையில சீக்கிரம் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேனா, 'ஆஸ்பிட்டல் செக்கப் போறேன், துணைக்கு வா சூர்யா’னு கூப்பிட்டார். போயிட்டு வர லேட்டாயிருச்சு’னு உணர்ச்சிபொங்க சொன்னான்.

'ஓ... ஸாரி, டியூஷன் டீச்சர் மேலே இவ்வளவு அன்பா இருக்கியே வெரிகுட்’னு டீச்சரும் கண் கலங்கினாங்க.

இந்தப் பாசக் காட்சியை நாங்க எல்லோரும் அப்புராணிகளாப் பார்த்துட்டு இருந்தோம்.

                                            (டைரி புரட்டுவோம்...)