என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

வெடிக்கிறார் சசிகுமார்இரா.சரவணன்

##~##

''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என்  குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத் தூக்கிட்டு ஓடுற எறும்புகூட ஒரு போராளிதான். அந்த மாதிரி, எங்கோ ஒரு மூலையில இருந்தபடி அனுதினப் போராட்டங்களை எதிர்கொள்கிற ஒருத்தன்தான் 'போராளி’!''

 'போராளி ஈழத்தின் கதையா?’ என்கிற கேள்விக்குத்தான் இப்படிப் பட்டாசாகப் படபடத்தார் சசிகுமார்.

''படத்தை விடுங்கள்... ஈழம் சம்பந்தமான பகிர்வு களில்கூட நீங்கள் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவதுஇல்லையே?''

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

''தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்த ணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ...  என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பவும் 'போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும் தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை. முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை. அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை. தமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது? கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது..? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!''

'' 'போராளி’க்காக இரட்டைக் குதிரை சவாரியில் பட்டையைக் கிளப்பி இருக்கீங்களே..  எதுவும் கிராஃபிக்ஸா?''

''கிராஃபிக்ஸானு நீங்க ஆச்சர்யமா கேட்கிறதே எங்க உழைப்புக்குக் கிடைச்ச வெற்றிதான். மெரினாவில் ஒத்தக் குதிரை சவாரி போறப்பவே உயிரைக் கையில பிடிச்சுக்கத் தோணும். அப்படின்னா, இரட்டைக் குதிரைச் சவாரி எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்க. இக்பால், திலீப்னு இரண்டு குதிரைகளுக்கு கடலை மிட்டாய்லாம் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி சவாரி பண்ணேங்க. குதிரைச் சவாரிக்கான பேலன்ஸே தொடைகள்தான். குதிரையை அப்படியே பிடிச்சுக்க கை, கால்களைவிட தொடைதான் முக்கியம். 'தொடை தட்டிக் கிளம்பிட்டான்’னு சொல்வாங்களே... அப்படி ஒரு மூர்க்கத்தோட இரட்டைக் குதிரைச் சவாரியை சக்சஸ் பண்ணி இருக்கோம்!''

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

''நடிகராகவும் இயக்குநராகவும் ரிஸ்க் இல்லாம சம்பாரிக்கிறதை விட்டுட்டு, ஏன் தயாரிப்பாளராகவும் மாறி பாரம் சுமக்குறீங்க?''

''இது நான் விரும்பிச் சுமக்கிற சுமை. முதல் படத்துக்கே தயாரிப்பாளர் தேடிப் போகாத நானா இனிமேல் தேடப் போறேன்? உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறவங்களைத் தயாரிப்பு உலகம் தள்ளி வெச்சுத்தான் பார்க்குது.

'இதான் கதை... இவ்வளவுதான் பட்ஜெட்’னு சொன்னா, இங்கே ஏற்க ஆள் இல்லை. 'இந்த பட்ஜெட்டுக்குள் முடிச்சிடலாம்’னு சொல்லிட்டு, டபுள் மடங்கா இழுத்து விடுற பழக்கம் எனக்கு இல்லை. 'புது முகங்களை வெச்சு பீரியட் ஃபிலிம்’னு சொல்லி, 'சுப்ரமணியபுரம்’ படத்துக்குத் தயாரிப்பாளர் தேடி அலைஞ்சிருந்தால், இன்னிக்கு வரைக்கும் ஒவ்வொரு ஆபீஸா ஏறி இறங்கிட்டுத்தான் இருந்திருப்பேன்.

இன்னும் உடைச்சுப் பேசணும்னா, யாரையும் திருப்திப்படுத்துற வேலையை என்னால செய்ய முடியலை. தயாரிப்பாளரைச் சுத்தி இருக்கிறவங்களோட அநாகரிகத் தலையீடுகளை ஒரு படைப்பாளியா பொறுத்துக்க முடியலை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு... எனக்கு நானே முதலாளியாக இருப்பதுதான்!

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

புதுமுக இயக்குநர்களுக்கோ, தோல்விப் படம் கொடுத்தவங்களுக்கோ வாய்ப்பு கொடுக்கப் பலரும் தயங்குறாங்க. இங்கே தோல்விங்கிறது புதைகுழியா பார்க்கப்படுது. ஆனால், நான் தோத்தவங்களை வாரி அணைச்சுக்க விரும்புறேன். கைதூக்கிவிடுறதுதான் நான் கத்துக்கிட்ட கலை. விழுந்து எந்திரிச்சு வர்றவங்களுக்குத்தான் என் ஆபீஸ் முதல்ல திறக்கும். போட்டி போட்டு ஸ்கூல் நடத்துறவங்களுக்கு மத்தி யில், டுடோரியல் சென்டர் நடத்துறதை நான் பெருமையா நினைக்கிறேன்!''

''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும்கூட கோடம்பாக்கத்துக்கு முழுமையான விடிவு கிடைக்கவில்லை என்கிறார்களே?''

''அரசியலுக்கும் அனுதினப் பொழுதுபோக்குக்கும் என்னங்க சம்பந்தம்? எப்பவுமே ரிமோட் மக்கள் கையில இருக்கு. இரண்டு நிமிஷம் போரடிச்சாலும் சேனலை மாத்திடு வாங்க. அவங்க கவனத்தைக் கட்டிப் போடுற அளவுக்கு நாமதான் போராடணும். கடந்த ஆட்சியிலும் புதுமுக இயக்குநர்கள் ஜெயிச்சாங்க. இந்த ஆட்சியிலும் ஜெயிக்கிறாங்க. மக்கள் தராசு முள் மாதிரி இருக்கிறப்ப, நம்மளோட வெற்றியை ஆட்சியோ, காட்சியோ தடுத்துட முடியாது!''

"வருமானத்தைவிட தன்மானமே முக்கியம்!" 

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

மிழனின் பெருமை பேசும் அதேவேளையில், இலங்கைக் கொடூரத்தைச் சாடிய '7ஆம் அறிவு’ படத்தை இலங்கையில் ரிலீஸ் செய்வதில் ஏக சிக்கல். 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒருத்தனை அடிச் சதுக்குப் பேரு வீரம் இல்லை... துரோகம்’ என்ற வசனத்தில் தொடங்கி, ஈழம் தொடர்பாகவும் தமிழனின் வீரம் தொடர்பாகவும் படத்தில் இடம்பெறும் வசனங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது இலங்கை அரசு. அத்தகைய வசனங்கள் நீக்கப்பட்ட பிறகே '7ஆம் அறிவு’ இலங்கையில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரான உதயநிதியிடம் பேசினோம்.

''சில வசனங்களை நீக்கிய பிறகுதான் இலங்கையில் '7ஆம் அறிவு’ படத்தை வெளியிட முடிந்தது. தமிழனின் அழுத்தமான அடையாளமாக எங்களின் படம் இலங்கையில் வெளியாக வேண்டும் என்று நினைத்தோம். சில வசனங்கள் தவிர்க்கப்பட்டால்கூட மிச்ச காட்சிகளாவது அவர்களைப்போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதால்தான் அதற்குச் சம்மதித்தோம். பெரிதான அளவில் அங்கே சென்சார் செய்யப்படா விட்டாலும், உலகத்துக்கு உரக்கச் சொல்ல வேண்டிய வசனங்கள்நீக்கப் பட்டதில் எங்களுக்கு மிகுந்த வருத்தம்தான்!'' என்றவரிடம்,''இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமையைக் கொடுக்கக் கூடாது'' என சசிகுமார் முன் வைக்கும் கருத்து குறித்துக் கேட்டோம்.

''தமிழர்களின் துயரச் சாட்சியாக இன்றைக்கு இலங்கை இருக்கிறது. போர்க் காலத்தில் நிகழ்ந்த துயரங்களைப் போலவே, வாழ்விடங்களுக்கே வழியற்றுத் தவிக்கும் இன்றைய தமிழர்களின் நிலையும் மிகுந்த வேதனையானது. அந்த விதத்தில் தமிழ்ப் படங்கள் அங்கே வெளியாக வேண்டிய அவசியம் இல்லை என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடுதான். அதேநேரம், வர்த்தகத்தைத் தவிர்த்துவிட்டு சினிமா உலகம் இயங்குவது  சாத்தியம் இல்லாதது. '7ஆம் அறிவு’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்கு நான் கொடுக்கவில்லை. அடுத்தடுத்த விநியோக வளையத்தின் மூலமாக அது கொடுக்கப்பட்டது. இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!'' என்றார் உதயநிதி ஸ்டாலின்.