
ம.கா.செந்தில்குமார்

‘‘ர ஃப் கட் டீஸர் ஒண்ணு ரெடி பண்ணியிருக்கோம். ஆனா, அதுக்கான கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியலை. செப்டம்பர் ரெண்டாவது வாரம் டீஸர் ரிலீஸ். ஆனா, ‘இது என்ன மாதிரியான படம்’கிற உங்களோட புரிதலுக்காக அந்த டீஸரைப் பார்த்துடுங்க'’ - பெரிய ப்ளாஸ்மா டி.வி திரையில் டீஸரை ஓடவிடுகிறார் இயக்குநர் கோகுல்.

குளம்புகள் தெறிக்கப் புழுதியைக் கிளப்பியபடி வேகமாக ஓடும் குதிரைகள், பிரமாண்ட அரண்மனைகள், எதிர் அணி படைவீரர்களை ஒற்றை ஆளாக நின்று துவம்சம்செய்யும் அரசன் என மிரட்டுகிறது டீஸர். உற்றுப்பார்த்தால் அது கார்த்தி! மொட்டை, தாடி, திமிர் லுக்... என ஆளே உருமாறி அமர்க்களமாக இருக்கிறார். ` ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் காமெடி செய்த இயக்குநர் கோகுலின் படமா இது!' - ஆச்சர்யப்படவைக்கிறது டீஸர்.
‘‘காஷ்மோரா, ராஜ்நாயக் உள்பட படத்தில் கார்த்தி சாருக்கு மொத்தம் மூணு கேரக்டர்கள். அதில் ‘காஷ்மோரா’ ரியல் லைஃப் கேரக்டர். அவன் உங்களை மகிழ்விப்பான். அந்த மகிழ்ச்சியை படம் முழுவதும் தக்கவைப்பான். ஹிஸ்டாரிக்கல் ‘ராஜ்நாயக்’ உங்களை ஆச்சர்யப்படுத்துவான். அந்த இன்னொரு கேரக்டர் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவான். ராஜ்நாயக் வரும் அந்த அரை மணி நேர ஹிஸ்டாரிக்கல் போர்ஷன்தான் எங்களின் துருப்புச் சீட்டு’’ - அரண்மனை தர்பார், போர்க் காட்சிகள், கவச உடைகள், ஆயுதங்கள் என மினியேச்சர்களால் சூழப்பட்ட இயக்குநர் கோகுலின் அலுவலகம், ஏதோ அரசவையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
‘‘இந்தக் கதையை எப்படிப் பிடிச்சீங்க?’’
‘‘செய்வினை வைப்பது, எடுப்பது, ஒரு விஷயத்தை க்ரியேட் பண்ணுவது... இது எல்லாமே பிளாக்மேஜிக்தான். ஆமாம் ‘காஷ்மோரா’ பிளாக்மேஜிக்கைப் பற்றிய படம். பிளாக்மேஜிக் தொடர்பான ஒரு ஆளைப் பார்த்தப்ப, சின்ன ஒரு இன்ஸ்பிரேஷன் வந்தது. ‘அப்படி அந்த ஆளு என்ன பண்ணினார்?’னு கேட்காதீங்க. ஏன்னா, அது எல்லாத்தையும் நான் கதையில் வெச்சுட்டேன். அந்த ஆள் இந்தப் படத்தைப் பார்த்தார்னா நிச்சயமா ஷாக் ஆகி, அவர் எனக்கு பிளாக்மேஜிக் வெச்சாலும் வெச்சுடுவார்.
பிளாக்மேஜிக் எப்படிப் பண்றாங்க, அதெல்லாம் உண்மையா... பொய்யா? அதற்கான தீர்வு என்ன... இந்த எல்லா விஷயங்களும் கதையில் இருக்கு. ஒரு ரோலர்கோஸ்டர் ரைடர்ல திடீர் திடீர்னு சிரிப்போம், கத்துவோம், ஷாக் ஆவோம் இல்லையா? அந்த மாதிரி இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு அனுபவமா இருக்கும்.’’
‘‘மூணு கேரக்டர்கள். கார்த்தி எப்படித் தயாரானார்?’’
‘‘மொத்தம் 47 லுக்ஸ் ரெடி பண்ணி, அதுல கார்த்தி தெரியவே கூடாதுனு மாத்தி மாத்தி முயற்சிபண்ணி, இந்த மூணு லுக்குகளைப் பிடிச்சோம். படம் தொடங்குறதுக்கு முன்னாடி, நுங்கம்பாக்கம் ஸ்டுடியோவுலதான் பாதி நாள் லுக் டெஸ்ட்ல இருந்தோம். அப்ப ‘இவனுங்க படம் எடுப்பானுங்களா... மாட்டானுங்களா? லுக் டெஸ்ட்டே சினிமா மாதிரி பண்றானுங்களே. சத்தியமா இவனுங்க ஷூட்டிங் போக மாட்டானுங்க’னு அங்கே உள்ளவங்களுக்கு நிச்சயமா டவுட் வந்திருக்கும். காரணம், நாங்க அவ்வளவு டைம் எடுத்துக்கிட்டோம்.
ஒருத்தரைப் பார்த்ததும் அவரை அப்படியே இமிடேட் பண்றதுதான் என் பலம். அப்படி பிளாக்மேஜிக் பண்ற ஆட்கள் பேசுற விதம், அது இதுனு நான் பார்த்தவங்கள்ல உண்மைக்கு நெருக்கமா இருந்த 12 பேர்களை அப்படியே `காஷ்மோரா’ கேரக்டர்ல கொண்டுவந்து வெச்சிருக்கேன். இதை கார்த்தி சார்கிட்ட சொல்லும்போது, சீனா ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. கார்த்தி இதை எப்படிப் பண்ணப் போறார்னு எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். அவர் ரொம்பப் பிரமாதமா பண்ணிட்டார். அவருக்கும் நல்லா ஹ்யூமர் வரும்... எனக்கும் நல்லா ஹ்யூமர் வரும். அதனால் ‘காஷ்மோரா’ கேரக்டருக்கு அது டபுள் ப்ளஸ். ஆனா ராஜ்நாயக் கேரக்டர் அவருக்குப் புதுசு. அவன் ஹிஸ்டாரிக்கல். அதையும் ஒருகட்டத்துல சரியா பிடிச்சு ‘ராஜ்நாயக்’கை அப்படியே கண் முன்னாடி கொண்டுவந்துட்டார்.’’

‘‘அந்த ‘ராஜ்நாயக்’ கேரக்டர்ல அப்படி என்ன ஸ்பெஷல்?’’
‘‘அவன்கிட்ட பேசுறதுக்கே எவனும் கிட்ட போக முடியாது. அவன் எல்லாம் தூரத்துல வெச்சுப் பார்க்கவேண்டியவன். அந்த அளவுக்கு அதிகாரத்தின், திமிரின் உச்சத்துல இருக்கிறவன். நிகழ்காலத்துல ஒருத்தன் திமிரா இருக்கான்னா, அவன் பேசுற ஒரு வார்த்தையிலேயே அவன் திமிர் பிடிச்சவன்னு தெரிஞ்சுடும். ஆனா, அதையே ஹிஸ்டாரிக்கல்ல பண்ணணும்னா... அந்த மொழிநடை எப்படி இருக்கும்னு எந்த ரெஃபரன்ஸும் கிடையாது. என் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கே மோர் ஆஃப் ஆக்ட்டிங்தான். நடிகர்கள் ஸ்கிரிப்ட்டுக்குள்ளேயே இருப்பாங்க. எல்லாமே பெர்ஃபாமன்ஸாவே இருக்கும். இது எல்லாத்தையும் நான் உட்கார்ந்து செதுக்கினேன்னு சொல்ல முடியாது. எங்க ஆபீஸ்லயே என் அசிஸ்டன்ட்ஸ் உள்பட பலரையும் கூத்துப்பட்டறை மாதிரி நடிக்கவெச்சு பிராக்டீஸ் கொடுத்து ஃபைனல் பண்ணினோம். ராஜ்நாயக்கின் கதாபாத்திரத்தை, நடிப்பை முடிவுபண்ணினதும் அப்படித்தான். கார்த்தி சார் ராஜ்நாயக்கா வந்து நின்னதும், பலருக்கும் சர்ப்ரைஸ்.
‘காஷ்மோராவுக்கே என் பொண்ணு மிரளுது. ராஜ்நாயக்கை எல்லாம் வீட்லயே காட்ட முடியாது’னு கார்த்தி சாரே சொன்னார். ‘எங்கேயாவது ஒரு ஷாட் அவரை மாதிரி வந்துட்டா, ‘ஐயய்யோ கார்த்தியா தெரியுறானே!’னு அவரே சொல்லி திருத்துவார். வேற ஒருத்தர் நடிச்சா எப்படி இருக்குமோ, அப்படி இருப்பான் ராஜ்நாயக். கார்த்தி சாரின் மெனக்கெடல்கள் பற்றி அடுத்தடுத்த பேட்டிகளில் பேசுறேன்.’’
‘‘நயன்தாரா என்ன சொல்றாங்க?’’
‘‘அவங்க இதுவரை வரலாற்றுப் படங்கள் பண்ணினதே இல்லை. சொன்னதும் பிடிச்சுக்கிட்டாங்க. `ரத்தின மகாதேவி'னு அழகும் திமிரும் கலந்த இளவரசி கேரக்டர். படத்தில் அவங்களுக்கு ஆக்ஷன் சீக்வென்ஸ் இருக்கு. அழகும் திமிரும் சேரும்போது அழகு கொஞ்சம் அடிபடும். ஆனா, நயன்தாரா பண்ணினதால அந்த அழகு அடிபடலை.'’
‘‘ஹிஸ்டாரிக்கல், ஹாரர்னு பெரிய கேன்வாஸில் சொல்லணும்னா, படம் டெக்னிக்கலா சவுண்டா இருக்கணும். எப்படி வந்திருக்கு `காஷ்மோரா'?’’
‘‘இவ்வளவு பெரிய செட் போடுறதுக்கு நம்ம ஊர்ல ஸ்டுடியோவே கிடையாது. அதுக்காக சென்னை வானகரத்துல ஒரு காலி இடத்தை லீஸுக்கு எடுத்து செட் போட்டோம். ராஜீவனின் செட் டிசைனை வெச்சு, ஒரிஜினல் செட் போடுறதுக்கே எட்டு மாசம் ஆகிடுச்சு. இதை கிராஃபிக்ஸ் பண்ணி பெரிசா காட்டவும், ஒரிஜினல் செட் போட ஆன அதே எட்டு மாசம் ஆகுது. எங்க தரப்புல எந்தவிதமான குறையும் வைக்காம பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னுதான் திட்டமிட்டு பண்ணிட்டிருக்கோம். இந்தப் படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலைகளை, இருபத்தைந்து கம்பெனிகள் ஒரே சமயத்துல செய்துட்டு இருக்காங்க. படம் தீபாவளி வெளியீடு.’’

‘‘படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ஸ்பெஷல் என்ன?’’
‘‘செமையான நாலு பாடல்கள் இருக்கு. படமே மூணு ஜானர்ல இருக்கிறதால, பாட்டும் மூணு ஜானர்ல இருக்கும். பாடல்கள் எல்லாம் கதையா இருக்கிறதால, அதைப் பற்றி இப்போதைக்குச் சொல்றது சிரமம். அடிப்படையில் நான் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபர். போட்டோகி ராஃபியில ஒரு படம் ரிச்சா வரணும்னு ஆசை இருந்தது. அதை ஓம்பிரகாஷ் நிறைவேத்திட்டார்; என் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கார். அவருக்கு இந்தப் படம் மூலமா நிச்சயமா நல்ல பேர் கிடைக்கும். அதேமாதிரி எடிட்டர் சாபு ஜோசப்புக்கும் இந்த உழைப்பில் பெரும் பங்கு உண்டு.’’
‘‘ `பாலகுமாரா...' பார்த்தவங்க, உங்ககிட்ட காமெடியை எதிர்பார்ப்பாங்களே?’’
‘‘டீஸரைப் பார்க்கும்போது `இதுல காமெடி இல்லையோ'னு நினைப்பாங்க. ஆனா, அதுவும் தேவையான அளவுக்கு உச்சக்கட்டமா இருக்கும். ஆனா, ‘இதற்குத் தானே...’வில் பார்த்த மாதிரி ஹைடெம்ப்பர் காமெடியா இருக்காது. இதுல வேற ஒரு ஸ்டைல் ஆஃப் காமெடி இருக்கும் `காஷ்மோரா'வுல கிடைச்சது மிகப்பெரிய அனுபவம். அந்த வகையில் இந்தப் படம் என் அடுத்தகட்ட நகர்வுன்னே சொல்லலாம்!’’