Published:Updated:

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

Published:Updated:
ஜோக்கர் - சினிமா விமர்சனம்
ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ம்மில் யார் ஜோக்கர்? மக்கள் பிரச்னை களுக்காக அதிகாரத்தின் கதவுகளில் ரத்தம் வர முட்டிக்கொள்ளும் தனிமனிதப் போராளிகளா? இவர்கள் முன்னெடுக்கிற போராட்டங்கள் யாருக்கானவை என்ற தெளிவுகூட இன்றி விமர்சித்தும் நகைத்தும் கடக்கும் பொதுஜனமா? ஜோக்கர் பேசும் பவர்ஃபுல் பாலிட்டிக்ஸ் இது.

அன்பான மனைவி, அரசின் அலட்சியத்தால் கோமாவில் வீழ்கிறார். அதனால் மனம் பிறழும் குரு சோமசுந்தரம், தன்னையே `மக்கள் ஜனாதிபதி' என அறிவித்துக்கொள்கிறார். நாட்டில் நடக்கும் எல்லா அதிகாரவர்க்க அநீதிகளை எதிர்க்கும் பொன்னூஞ்சலும், மதுவுக்கு கணவனைப் பலிகொடுத்த இசையும் ஜனாதிபதிக்கு பக்கத்துணை. இந்த மூவர் கூட்டணியின் போராட்டங்களும் விளைவுகளும்தான் களம்.

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சசிபெருமாள், டிராஃபிக் ராமசாமி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி என நாம் வாழும் காலத்தின் நியாய சாட்சிகளே பாத்திரங்களாக படம் முழுக்க வலம்வருகிறார்கள். காணும் அநீதிகள் அனைத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விமர்சனங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.

மாற்றுச்சிந்தனை மனிதர்களின் ஒவ்வொரு வசனங்களிலும் `பராசக்தி' காலத்து அரசியல் பாய்ச்சல்!
கள்ள ஓட்டு அரசியல்வாதிகள், கல்விக் கொள்ளையர்கள், பேனர் நாயகர்கள் தொடங்கி... முப்பாட்டன் முருகன், முகநூலின் விரல் வீரர் வரை சகலரும் இந்தத் திரைப்படத்தின் விமர்சன சல்லடைக்குத் தப்பவே இல்லை. தமிழ்நாட்டின் சமகாலப் பிரச்னைகள் அனைத்தையும் தொட்டுச்செல்கிறது நேர்கோட்டில் அமையாத திரைக்கதை.

‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்டுல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்க!’ ‘ஒருத்தியோட அன்புக்குச் சமானமா இந்த உலகத்துல எதுவுமே இல்லை’ என, படம் முழுக்க வல்லின மெல்லின வசனங்கள். படத்தில் யார் வாயைத் திறந்தாலும் `ராஜுமுருகனிஸம்!'

கதை நாயகன் மன்னர்மன்னனாக  குரு சோமசுந்தரம். கோபத்தில், காதலில், கையறுநிலையில் என இந்த மனிதர் காட்டுகிற மல்ட்டிப்பிள் மாடுலேஷன் எல்லாமே ஆசம்... ஆசம்... `கோபம் வந்துச்சு... பகத்சிங்கை அவுத்துவிட்ருவேன் பாத்துக்க‌!’ என நிகழ்காலத்தில் பேசும் ஜனாதிபதிக்கும், ‘ரோஸ்கார்டன் வரைக்கும்தானே வரக் கூடாதுனு சொன்னீங்க!’ என ஹீரோயின் பின்னால் காதல் கிறக்கத்தில் சுற்றுபவருக்கும் நூற்றிச்சொச்ச வித்தியாச‌ங்கள்.

ஜெயகாந்தனை நினைவூட்டுகிற தோற்றத்தில் பொன்னூஞ்சலாகவே மு.ராமசாமி. க்ளைமாக்ஸில் மு.ரா பேசும் ஒரு பாரா வசனம், சமூக அழுக்குகளை அடித்துத் துவைத்துக் கிழித்து எறியும் அரசியல் ஆசிட்.

மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன், ரூரல் பியூட்டி. கொஞ்ச நேரமே வந்தாலும் பிரமாதப்படுத்துகிறார். சோமுவின் வீட்டில் ‘டாய்லெட் இல்லியா?’ எனக் கண்களாலேயே தேடுவதும், ‘சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும். அதைப் பார்த்து நாம அழுவுணும்’ என‌ இயல்பான நடிப்பிலுமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். மிலிட்டரியாக வரும் எழுத்தாளர் பவா செல்லதுரையும், சிறைக்கைதி அருள் எழிலனும் கச்சிதமான பாத்திரத் தேர்வு.

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

நையாண்டி மேளமும், நற்காதல் கீதமுமாக ஷான்ரோல்டனின் இசை. செழியனின் காட்சி யமைப்புகளும் ஒளியமைப்புகளும் யதார்த்தம். மனசுக்குள் விளையாடுகிறது யுகபாரதியின் வெள்ளந்தித் தமிழ். அன்பால் இழைகிறது ரமேஷ் வைத்யாவின் செல்லத்தமிழ்.

தமிழில் பெயர்வைத்தால் வரிச்சலுகை என்பதில் தொடங்கி, கோடம்பாக்கத்துச் சமரசங்களை ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ளி, புத்தம்புதிதாகக் கதை சொல்ல முயலும் அரிதான அரசியல் சினிமாவுக்காக கங்கிராட்ஸ் ராஜுமுருகன்!

கொஞ்சமாக ரிவெஞ்ச், இன்னும்கூட ஜாலி காமெடி, எக்ஸ்டெண்டட் காதல் எல்லாம்

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

சேர்த்திருக்கலாம்தான். ஆனால், ராஜுமுருகன் இது பிரசார சினிமா என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அவர் சொல்ல விரும்பியது எல்லாம் தான் நம்புகிற நேர்மையான அரசியலை மட்டும்தான். படம் முழுக்க காதலிலும் மோதலிலும் அழுகையிலும் சிரிப்பிலும் நிறைந்திருப்பது அத்தனையும் சமூகக் கோபம். படம் முடிந்து வெளியேறும் சகமனிதனிடம் ‘நாளை போராட்டம்... வீதிக்கு வா தோழா’ என அழைக்கிறது திரைப்படம்.

லாஜிக் மீறல்கள், யதார்த்தங்களை மீறும் காட்சிகள் என எக்கச்சக்கக் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளவைக்கிறது இந்த சினிமாவின் அசலான நோக்கம்.

சசிபெருமாள்கள் வீதியில் செய்ய முயல்வதை, ராஜுமுருகன் திரையில் செய்துகாட்டுகிறார்... தனிமனிதனாக இன்னொரு ஜோக்கராக!

இது, எளிய மனிதனின் வலிய போராட்டம்!

- விகடன் விமர்சனக் குழு