Published:Updated:

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

அதிஷா, படம்: பா.காளிமுத்து

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக இருந்தாலும், தனக்கான தனி அடையாளத்துடன் குழந்தைகள் மற்றும் கல்வித் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார் லதா ரஜினிகாந்த். காணாமல்போகும் தெருவோரக் குழந்தைகளை மீட்பதற்காக `அபயம்' என்ற அமைப்பைத் தொடங்கி, மும்முரமாகச் செயல்பட்டுவருகிறார்.

``பல ஆண்டுகளாக குழந்தைகளுக்காகவும் குழந்தைகளோடும்தான் அதிகம் வேலைபார்க்கிறீங்க. மிக நீண்ட பயணம்...''

``35 வருஷங்கள் ஆகிடுச்சு. இந்த உலகையே அலங்கரிக்கக்கூடிய இறைவனின் தூதுவர்கள், குழந்தைகள். அவர்களோடு இருப்பதே ஒருவகை தியானம்தான். குழந்தைகள்தான் ஒரு வீட்டின் கொண்டாட்டம். அன்பையும் ஆதரவையும், எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாத நேசத்தையும் குழந்தைகளிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் கற்றுக்கொள்கிறேன்.''

`` `அபயம்' உதித்தது எப்படி?''

``தெருவோரவாசிகள், நாள் முழுக்கக் கடினமான வேலைகள் செய்கிறார்கள்;  நகரத்தை உருவாக்கு கிறார்கள்; பராமரிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றி எங்கும் பேசப்படுவதே இல்லை.

தெருவோரத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களில் எட்டு மாதக் குழந்தை ஒன்றும், பத்து மாதக் குழந்தை ஒன்றும் சமீபத்தில் காணாமல்போனது. அதைப் பற்றி யாருமே பேசவில்லை. முந்தானையில் இருந்த குழந்தையை, சேலையை வெட்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இன்னொரு குழந்தை, தாய்க்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் போதே தூக்கிச் சென்றுவிட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் என்னைச் சந்தித்து அழுதனர். அந்தக் குழந்தைகளைப் பற்றிய சிந்தனை என்னை பெரிய அளவில் பாதித்தது. பல நல்ல உள்ளங்களும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து, அந்தக் குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளில் உடனடியாக இறங்கினோம். காவல் துறையில் புகார்கள் கொடுத்தோம். நீதிமன்றத்திலும் வழக்குகள் பதிவுசெய்துள்ளோம்.

இந்த விஷயத்தில் இறங்கிய பிறகுதான், தமிழ்நாடு முழுக்க உள்ள தெருவோரவாசிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் திருடப் படுவது தெரியவந்தது. இந்த நிலையை மாற்றத்தான் `அபயம்' புராஜெக்ட்டைத் தொடங் கினோம். காணாமல்போன குழந்தைகளை மீட்பதோடு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கவும் முடிவுசெய்துள்ளோம்.

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

`` `அபயம்' மூலமா அடுத்து என்ன செய்யப்போறீங்க?''

``தயா பவுண்டேஷன் மூலமா ஏற்கெனவே நிறைய விஷயங்கள் செய்துக்கிட்டிருக்கோம். பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால் தனித்துவிடப்பட்ட குழந்தைகள், விபத்தில் இறந்தவர்களுடைய பிள்ளைகள், ஏழைக் குழந்தைகள் என பலருக்கும் உதவிகள் செய்துவருகிறோம்.

இப்போது `அபயம்' மூலமா `சிட்டிசன் பிளாட்ஃபார்ம்' என்ற விஷயத்தைச் சேர்த்திருக் கிறோம். தெருவோரக் குழந்தைகளுக்காக உதவ நினைக்கும் யாரும் இதில் பங்குபெறலாம். இந்தக் குழந்தைகள் பாதுகாக்கப்படணும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதோடு அவர்களுக்கான கல்வி, உணவு, வாய்ப்புகள் என மற்ற விஷயங்களிலும் வேலை செய்யப்போகிறோம்.''

``சூப்பர் ஸ்டார் எப்படி இருக்கார்?

``உங்க எல்லோருடைய வாழ்த்துக்களோடும் அன்போடும் பிரார்த்தனைகளோடும் ரொம்ப  உற்சாகமா இருக்கார்.''

``ஒரு சூப்பர் ஸ்டாருக்கு மனைவியா இருப்பதால் மற்ற பெண்களைப்போல சுதந்திரமாக இயங்க முடியவில்லையேனு நினைச்சிருக்கீங்களா?''

``எனக்கு அப்படித் தோணினதே இல்லை.என்னால அவருக்கு எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாதுனு நான் நினைச்சிருக்கேன். அவரோடு வாழ்வது என்பதே எனக்கு மிகப்பெரிய ஹானர். அவரை ஒவ்வொரு நாளும் பார்க்கிறதும் பழகிறதும் அவரோடு நேரம் செலவழிக்கிறதும் எனக்குக் கிடைச்ச பெரிய கௌரவம்.''

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

`` `கபாலி' பார்த்தீங்களா... மகிழ்ச்சியா?''

`` `கபாலி' எனக்கு மறக்க முடியாத அனுபவம். கல்யாணம் ஆனதில் இருந்தே அவருடைய படங்களை முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களோடு சேர்ந்து பார்த்துடுவேன். `கபாலி'க்குக் கிடைச்ச வரவேற்பு அவ்வளவு பிரமாண்டமா இருந்தது. உலகம் முழுக்கக் கொண்டாடினாங்க. 

`கபாலி' டைம்ல இரண்டு படங்கள் ஒண்ணா வேலைபார்த்தார். அப்போ இருந்த சூழ்நிலைகள், அவர் அனுபவிச்ச கஷ்டங்கள் ரொம்ப அதிகம். பேக் டு பேக் ஷூட்டிங், ஓய்வு இல்லாத உழைப்பு. நினைச்சுப் பார்த்தா, கனவு மாதிரி இருக்கு. இதுவரைக்கும் எத்தனையோ படங்களுடைய ரிலீஸ் பார்த்திருக்கோம். இந்தப் படம் மூலம் எனக்குக் கிடைத்த உற்சாகமும் எனர்ஜியும் மிகப்பெரியது. `கபாலி' எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த படம். அந்த ரோல்ல, அவரோட ஸ்டைல் அவ்ளோ அழகு!''

``ஸ்டைலிஷ் ரஜினி - பெர்ஃபாமிங் ரஜினி... உங்களுக்குப் பிடித்தவர் யார்?''

``அவர் இரண்டும் கலந்த காம்பினேஷன். அவர் ஒரு நேச்சுரல் ஆர்ட்டிஸ்ட். அவர் கற்றுக் கொண்டவரோ அல்லது தன்னை நடிகராக மாற்றிக்கொண்டவரோ அல்ல. அவர் எது செய்தாலும் அதில் இயற்கையான இயல்பான ஒரு வெளிப்பாடு இருக்கும். அவருக்குள் எப்போதும் பிரமாதமான ஒரு நடிகர் விழித்துக்கொண்டே இருப்பார். அவருடைய கமர்ஷியல் படங்களில்கூட பிரத்யேகமான ஒரு தனித்துவம் இருக்கும். நடிப்புல என்னதான் அசத்தினாலும் ஸ்டைல் இல்லாம அவரைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஒரு `காளி’யா வந்தாக்கூட அங்கேயும் ஒரு ஸ்டைல் இருக்கும். இந்த காம்பினேஷன் இறைவனால் அவருக்குக் கிடைச்ச பெரிய வரம்.''

``அவர் மேல எப்பவாவது கோபப்பட்டது உண்டா?''

``கோபம்னு இல்லை, அவருக்காக வருத்தப் பட்டது உண்டு. சில நேரங்களில் பாதுகாப்பு இல்லாம எங்கேயாவது போயிடுவார்; கூட்டங்களில் சிக்கிக்கொள்வார். தன்னை சாதாரண ஒரு மனிதரா நினைச்சுக்கிட்டு எங்கேயாவது எதையாவது செஞ்சுடுவார். அப்போ வருத்தப்படுவேன்.''

``ஒரு பெற்றோரா, உங்க பசங்களை எப்படி உருவாக்கினீங்க?''

``ஒரு காரியத்தைச் செய்வதற்கான முனைப்புதான் முக்கியம். எந்த ஒரு முயற்சியையும் மதிக்கணும். அதற்குப் பின்னால் இருக்கும் கஷ்டங்களை அப்ரிஷியேட் பண்ணணும். வாழ்க்கையில் எங்கேயுமே குழந்தைகளிடம் நெகட்டிவா பேசக் கூடாது. அவங்ககிட்ட டிஸ்கரேஜிங் வார்த்தைகள் சொல்லவே கூடாது. அது குழந்தைகளின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கிற மாதிரி.''

“ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!”

``பேரப்பசங்க, ரஜினி ஸ்டைல் பண்றாங்களா?''

``தாத்தா மாதிரி பண்ணி பார்க்கிறதுதான், யாத்ரா-லிங்காவோட பெரிய என்டர்டெயின் மென்ட். என்னதான் ரியல் ரஜினி சாரைப் பார்த்தாலும், அவங்களுக்கும் அவர் சூப்பர் ஸ்டாராத்தான் இருக்கார். இரண்டு பேரும் `நெருப்புடா... நெருங்குடா... மகிழ்ச்சி!'னு சொல்லிக்கிட்டு அவரை மாதிரியே நடந்து காட்டுறது, அவரை மாதிரியே பேசறதுனு எல்லாமே செய்றாங்க. யாத்ராவுக்கு, நான் நிறையக் கதைகள் சொல்வேன். அவர் அதை எல்லாம் அப்படியே படங்களா வரைவார். அப்புறம் `பெருசாகி, அதை எல்லாம் படமா எடுக்கப்போறேன்'னு சொல்லியிருக்கார்.''

``கணவர் ரஜினி... அப்பா ரஜினி... தாத்தா ரஜினி... யார் பெஸ்ட்?''

``பெஸ்ட் தாத்தா. ரொம்ப பிஸியா இருந்த டைம்லதான் அவர் அப்பாவா இருந்தார். அப்போ ராப்பகலா உழைச்சுக்கிட்டிருந்தார். அதனால, அவரால் பிள்ளைங்களோடு அதிக நேரம் செலவழிக்க முடியலை. அதுக்கு எல்லாம் இப்போ காம்பென்சேட் பண்ற மாதிரி இருக்கு தாத்தா ரோல். ஐஸ்வர்யா - சௌந்தர்யாவோடு என்ன எல்லாம் செய்ய முடியலையோ, அதை இப்போ பேரப்பசங்களோடு உற்சாகமா செய்றார். அவங்களோடு பேசுறது, கதை சொல்றது, அவங்க உலகத்துலயே இருக்கிறது, அவங்களை வெளியே அழைச்சுக்கிட்டுப் போறது, ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் விடுறது, அவங்களுக்குச் சாப்பாடு தர்றதுனு முழுமையான தாத்தாவா ரசிச்சு வாழ்றார். நாங்க இரண்டு பேருமே அதிகமா நேரம் செலவழிக்கிறது அவங்களோடுதான். ரஜினி தாத்தாதான் பெஸ்ட்!''