Published:Updated:

"எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
"எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

ம.கா.செந்தில்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

``பேசுறதுக்கு எதிர்ப்பே வரக் கூடாதுன்னா, நீங்க கோயில்ல உபன்யாசம் மட்டும்தான் பண்ண முடியும். அப்படி என் பேச்சால் இழந்தேனா, பெற்றேனாங்கிறது இப்ப எனக்குத் தெரியாது. ஆனா, இன்னைக்கு ‘இது சரினு தோணுது’ பேசுறேன். ஒருவேளை தப்புன்னா மாத்திப்பேன். மாற்றம் ஒன்றைத் தவிர மற்றது எல்லாம் மாறக்கூடியதுதானே...’’

- எளிமையாகவும் உறுதியாகவும் பேசுகிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற இவரின் பேச்சு, அந்த நிகழ்ச்சிக்கு அப்பாலும் இன்னும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அலையடித்தபடி இருக்கிறது. அந்த இடத்தை, சூழலைத் தன்வயப்படுத்தும் பழனி, தற்போது ‘கள்ளன்’ பட ஹீரோ.

‘‘பேச்சாளர்களில் எனக்குப் பிடிச்சவங்க ரெண்டு பேர். ஒருத்தர் குன்றக்குடி அடிகளார். ஆரம்பம் முதல் கடைசி வரை தான் எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து ஒரு நூல்கூட விலகாமல் பேசக்கூடியவர்.

இன்னொருத்தர் வைகோ. 1991-ம் ஆண்டு திராவிடர் கழகப் பவழ விழா மாநாடு. இடம் மதுரை தமுக்கம் மைதானம். மதியம் 2:30 மணிக்கு மைக் பிடித்த வைகோ, அடுத்த இரண்டரை மணி நேரம் இடைவிடாது பேசினார். அந்த உணவு வேளையிலும் ஒருத்தர்கூட அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. அதே மாதிரி அவர் அரசியல் கலக்காமலும் பேசக்கூடியவர். அது இளையராஜா இசை அமைத்த `திருவாசகம்' விழா. ஒரு துளி அரசியல் சேர்க்காமல் பேசினார். ஒருவகையில் இவங்கதான் என் பேச்சுக்கு இன்ஸ்பிரேஷன். அடுத்து, வாசிப்பும் அதையொட்டிய உரையாடலும்கூட என் பேச்சுப் பயிற்சிக்குக் காரணம்னு சொல்லலாம்.’’

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

`‘உங்க புத்தக வாசிப்பு, எந்தப் புள்ளியில் தொடங்கியது?’’

‘‘‘புத்தகம் படி’னு என்னை யாருமே சொன்னது கிடையாது. எங்க வீட்டுல எப்பவும் நிறையப் புத்தகங்கள் இருக்கும். பொழுதுபோகாமல் அதை எடுத்துப் புரட்ட ஆரம்பிச்சேன். அப்படியே ஒருகட்டத்துல தொடர்ந்து படிச்சேன். பாலகுமரனைப் படிக்கப் படிக்க, அவர் மேல ஈர்ப்பு வந்தது. அவருடைய அடுத்தடுத்தப் புத்தகங்கள் என்னன்னு தேடித் தேடிப் படிச்சு முடிச்சேன். அடுத்து ஜெயகாந்தன், தொடர்ந்து ஆங்கில எழுத்தாளர் அயன் ராண்ட் (Ayn Rand)னு தேடல் பெருசாச்சு. இப்படி நிறைய வாசிக்கிறவன் என்ன பண்ணுவான்? ஒண்ணு பேசுவான்... இல்லைன்னா எழுதுவான். நான் பேசுறேன். நான் நல்லா பேசுறேன்னு நீங்க நினைச்சா, அதுக்குக் காரணம் என் வாசிப்புதான்.

நாம ஒரு விஷயத்தை வாசிப்பது மூலமா அது நம்ம மனசுல பதியும். படிச்சதை இன்னொருத்தருக்குச் சொல்லும்போது, அது இன்னும் ஆழமாப் பதியும். அப்படி கவிதையோ, கட்டுரையோ நீங்க படிச்சதைப் பகிர்ந்துக்கும்போது, அது இன்னொரு முறை படிச்ச மாதிரி இருக்கும்.''

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

‘‘இப்ப நீங்க இயக்குநர், நடிகர். ஆனா, சின்ன வயசுல என்னவா ஆகணும்னு நினைச்சீங்க?’’

‘‘கல்லூரியில் படிக்கும்போதுகூட நான் என்ன ஆகப்போறேன்னு தெரியாமதான் இருந்தேன். அப்பதான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்ட அறிவிப்பைப் பார்த்தேன். தமிழ்நாடு முழுக்க ஐயாயிரம் பேர் கலந்துக்கிட்டு, அதுல ஐம்பது பேர் தேர்வு ஆகுறாங்க. அந்த ஐம்பதுல நான் ஒருத்தனா... இல்லையானு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டுத்தான், அந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்து, தேர்வானேன். ரெண்டு வருஷம் பத்திரிகையாளரா வேலை.

அடுத்து எம்.ஏ படிச்சேன். அதை முடிச்சதும் அப்பா, `நீ எங்கேயாவது போ. வீட்டுல இருக்காத!'னு சொன்னார். காரணம், 22 வயசு வரை வீட்டில் பாதுகாப்பா, சொகுசா இருந்துட்டேன். ‘உன் கால்ல நிற்கக் கத்துக்கோ’னு சொன்னார். ‘சினிமாங்கிறது இங்கே பெரிய மீடியா. அதுல பெரிய வேலை டைரக்டர். நாம டைரக்டராவோம்’கிற ஆர்வத்துலதான் சென்னை வந்தேன். பார்த்திபன் சார்கிட்ட அசிஸ்டன்டா சேர்ந்தேன். உடனே டைரக்டர் ஆகிடலாம்னு நினைச்ச எனக்கு, அந்த வேலைதான் கஷ்டம்னு இங்கே வந்த பிறகுதான் தெரிஞ்சது.’’

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

‘‘ ‘பார்த்திபன் கனவு’, `பிரிவோம் சந்திப்போம்’, `மந்திரப் புன்னகை'னு ரசனையான படங்களை எடுக்கிறீங்க. ஆனா, ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு தாமதம்?''

``நான் எப்பவுமே கப்பல் தரைதட்டினதுக்கு அப்புறம்தான், அடுத்த வேலை என்னன்னு யோசிப்பேன். அதனால, நான் பதற்றமே ஆகுறது கிடையாது. அமையும்போது சரியா பண்ணலாம்னு காத்திருப்பேன். இப்ப அப்படி ஒரு படம் அமைஞ்சிருக்கு. படம் பேரு, `கிராமபோன்'. ஹீரோ மாதவன். அவர் இப்ப ரெண்டு படங்கள்ல நடிச்சுட்டிருக்கார். நான் ‘கள்ளன்’ தவிர வேறு ஒரு படத்துலையும் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைகளை முடிச்சுட்டு, ஆற அமர ரசிச்சு செய்யலாம்னு இருக்கோம்.’’

‘‘இயக்குநர் டு நடிகர். என்ன காரணம்?''

``நான் எடுத்த `மந்திரப் புன்னகை'யில் எந்தத் தொழில்முறை நடிகரும் நடிக்க மாட்டாங்கனு நினைச்சு, நானே அதுல நடிச்சேன். அப்ப  அந்தப் படத்தை பாலசந்தர் சார் உள்பட ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாராட்டவே இல்லை. ஆனா, இப்ப டி.வி-யில பார்த்துட்டு `பிரமாதமா இருக்கு'னு சொல்றாங்க. நடிக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருது. அதுவும் ரெகுலரான நடிகர்கள் நடிக்கத் தயங்கும் படங்கள்தான் அதிகமா வருது. நான் பெரிய வியாபாரம் பண்ற நடிகன் கிடையாது. ‘இவன் சொன்னா கேட்பான்’னு நினைச்சுத்தான் வர்றாங்க.  எனக்கு எந்த இமேஜும் கிடையாது. எனக்கான கதாபாத்திரங்கள்ல தொடர்ந்து நடிப்பேன்.''

‘‘இப்ப நீங்க ஹீரோவா நடிக்கும் `கள்ளன்' என்ன மாதிரியான படம்?’’

‘‘ ‘கள்ளன்’, மூன்று திருடர்கள் பற்றிய கதை. நம்ம சமூகம், வேட்டைச் சமூகம். இது இப்ப இருக்கா? இல்லை. அழிஞ்சுபோயிடுச்சு. இதை மையமா வெச்சு, ஒரு கதையை கமர்ஷியலா சொல்லியிருக்காங்க அறிமுக இயக்குநர் சந்திரா. இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநரா இருந்தவங்க. ரொம்ப அழகா முழுமையா பண்ணியிருக்காங்க.

‘‘இங்க பெண் இயக்குநர்கள் ரொம்பக் குறைவா இருக்காங்களே?’’

``இயக்குநர்கள்ல ஆண், பெண் வேறுபாடு கிடையாது. பெண் இயக்குநரும் இயக்குநர்தான். ஒரு டைரக்டர் மதுரையில் இருந்து வந்து ஜெயிச்சா, அடுத்த நாளே ஆயிரம் பேர் அங்கே இருந்து சென்னைக்கு வர்ற மாதிரி, `இறுதிச்சுற்று’ சுதா, `கள்ளன்' சந்திராவைத் தொடர்ந்து நிறையப் பெண்கள் சினிமாவுக்கு வருவாங்கனு நம்புறேன்.’’

‘‘தமிழ் சினிமா இப்போ எப்படி இருக்கு?’’

``அப்ப, இப்ப, எப்பவும் சினிமா நல்லாத்தான் இருக்கு. நம்ம தொழில் நல்லா இருந்தா சினிமா நல்லா இருக்கிற மாதிரியும், நாம தொய்வா இருந்தா நம் துறையும் தொய்வடைஞ்சுட்டதா மாதிரியும் தோணும். இதுல நாம என்னவா இருக்கோம்கிறதுதான் முக்கியம். தனக்கான காலகட்டங்கள் வரும்போது சினிமா மாறிட்டே இருக்கும். அதுகூட நீங்களும் மாறி அப்டேட் ஆகிட்டீங்கன்னா பிரச்னையே இல்லை. இயக்குநர்கள் மேலதான் இங்கே எல்லா சுமைகளும் இருக்கு. அடிப்படையில் சினிமா, நடிகர்களைச் சார்ந்ததா இருக்கு. ஏன்னா, நடிகர்கள்தான் வியாபாரத்தைப் பெருசுபடுத்துறாங்க. இது கலைதான். ஆனா, வியாபாரம்னு வரும்போது லாப, நஷ்டங்களும் இருக்கே.''

   "எனக்குனு எந்த இமேஜும் இல்லை!”

‘‘அனைவரும் அனைத்தையும் விமர்சனம் பண்ற இந்தச் சமூக வலைத்தள மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

‘‘ `எதிர்காலத்தில் எல்லோரும் 10 நிமிடப் பிரபலங்களாக இருப்பார்கள்’னு சுஜாதா சொன்னதுதான் இப்ப ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் நடந்துட்டிருக்கு. என் சின்ன வயசுல ஒரு கடையில் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சுவாரஸ்யமாகப் பேசுவோம். யார் ஒருத்தன் அப்படிப் பேசுறானோ... அவன் வருகைக்காகக் காத்திருப்போம். அதைப்போல இப்போ சோஷியல் மீடியாவில் ஒண்ணுகூடிப் பேசுறாங்க. சோஷியல் மீடியா வந்ததும் எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

இங்கே ஒரே ஒரு கெடுதல் என்னன்னா, நிஜத்தை மறைக்கவேண்டிய சூழல் இருக்கிறதால, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு இருக்கு. நன்மைன்னா பியூஸ் மானுஷ் போன்றோர் பரபரப்பாகப் பேசப்பட்டது இங்கேதான். அதனால, நன்மைகளும் அதிகம் இருக்கு. தவிர, இப்ப செய்தி ஊடகங்கள் எல்லாமே சோஷியல் மீடியாகிட்ட போட்டிபோட வேண்டியிருக்கு. அவனைத் தாண்டி அவனுக்குத் தெரியாத விஷயங்களை அவன் விரும்புற வடிவில் கொடுத்தாத்தான் தாக்குப்பிடிக்க முடியும்கிற நெருக்கடி ஊடகங்களுக்கு வந்திருக்கு. இந்தப் போட்டி, போராட்டம், விமர்சனம் ஒருவகையில் நல்லது.'’