Published:Updated:

“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

ம.கா.செந்தில்குமார்

“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”
“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் அப்பா இறந்தநேரம்... வயதானவர்கள் யாரைப் பார்த்தாலும் அப்பாவைப் பார்ப்பது போன்ற உணர்வு. அதிலும் அலட்சியமான வேட்டி கட்டலும், கலைந்த தலையும் தாடியுமாக இயல்பான தோற்றத்தில் பஞ்சு சாரைப் பார்க்கும்போது இன்னும் நெருக்கமாக உணரவைத்தார். ‘கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர். யாருடைய ஸ்கிரிப்ட் பாதியில் நின்றாலும் அதைத் திருத்தி செப்பனிட்டுத் தந்தவர்...’ - இப்படி `திரைத்தொண்டர்' தொடர் எழுதுவதற்கு முன்னர் வரை எல்லோரையும்போல பஞ்சு சாரைப் பற்றி பொதுவான விஷயங்கள்தான் தெரிந்துவைத்திருந்தேன்.

அந்தச் சமயத்தில் ‘பிரபல கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகாலம் ஆகிறது’ என்ற துணுக்குச் செய்தியை இணையதளம் ஒன்றில் படித்தேன். ஏற்கெனவே அவர் மீது அபிமானம் கொண்டிருந்த நான், ‘அவரிடம் அந்தக் கால சினிமா அனுபவங்களைப் பேசிக் கட்டுரையாக்கலாமே’ எனத் தோன்றியது. பஞ்சு சாரின் மகன் சுப்புவிடம் பேசியபோது, ‘சார், நாங்க அப்பாவைப் பற்றி ஒரு டாக்குமென்ட்ரி பண்றோம். தனஞ்செயன் சார்தான் அதைப் பண்றார். அது ரெடியாகி நீங்க பார்த்துட்டீங் கன்னா, உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றார்.

பிறகு, தனஞ்செயன் அலுவலகத்தில் அந்த டாக்குமென்ட்ரியைப் பார்த்தேன். ரஜினி, இளையராஜா தொடங்கி பஞ்சு சாருடன் நெருக்கமாக இருந்த பலரும் அதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர். ‘எவ்வளவு அனுபவம். ஒவ்வொண்ணும் சுவாரஸ்யமா இருக்கே. இதை ஒரு வாரப் பேட்டியில் அடக்க முடியாதே’ என நினைத்தேன்.

நானும் தனஞ்செயனும் பஞ்சு சாரைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்றோம். ‘வாங்க சார்’ என்றபடி வரவேற்றார் பஞ்சு சார். கசங்கிய கைவைத்த பனியன், ஏற்றிக்கட்டிய நாலு முழம் வேட்டி. `எவ்வளவோ சாதனைகளைப் பண்ணின மனிதர் இவ்வளவு சாதாரணமா இருக்கிறாரே!' என எனக்குள் ஆச்சர்யம். பேசிக்கொண்டு இருக்கும்போது, ‘ஒரு வாரத்துல எப்படி சார் இவ்வளவையும் அடக்க முடியும்?’ என்றார். தன் அனுபவங்களைச் சொல்ல அவரும் ஆர்வமாக இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. பிறகு அவரே, ‘மூணு நாலு வாரத்துக்குள்ள தெளிவா சொல்லலாம் சார்’ என்றார். ‘மூணு வாரம் என்ன... எங்க எடிட்டர்ட்ட பேசி 30 வாரத்துக்கு ஓ.கே பண்ணிட்டு வர்றேன் பாருங்க’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அதேபோல தொடரும் தொடங்கியது.

‘திரைத்தொண்டர்’ என தொடருக்கான அவ்வளவு பொருத்தமான தலைப்பைத் தந்தவர் கண்ணன் சார். கமல்ஹாசனுடன் பஞ்சு சார் இருக்கும் ஒரு போட்டோவை மட்டும் அறிவிப்பில் வைத்தோம். `தலைப்பு, அறிவிப்பு பற்றி பஞ்சு சாரிடம் சொல்லவே இல்லை. அவர் கமலுடன் மட்டும் இருக்கும் படத்தை வைத்தால், ரஜினி, இளையராஜா எல்லாம் வருத்தப்படுவாங்களே. இது பஞ்சு சாருக்கு தர்மசங்கடமா இருக்குமே’ என நினைத்தேன். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

சாருக்கு, செல்போன் கிடையாது; வீட்டு லேண்ட்லைன் மட்டுமே. ஒருநாள் அழைத்தேன். பஞ்சு சாரின் மனைவிதான் எடுத்தார். ‘ரஜினி வந்திருக்காங்க. சார்கிட்ட பேசிட்டு இருக்காங்க’ என்றார். ‘ஓ.கே’ எனச் சொல்லிவைத்துவிட்டேன். ‘ஆஹா... ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ எடுத்தோம்னா தொடருக்குப் பயன்படுமே’ என யோசித்துவிட்டு, திரும்பவும் அழைத்தேன்.

‘ஸாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க. அவர் என்னை வழக்கமா பார்க்க வர்ற மாதிரி வந்திருக்கார். திடுதிப்னு போட்டோ எடுத்து அவரை ஏன் தர்மசங்கடப்படுத்தணும்? ஒருநாள் அவர் வீட்டுக்குப் போய் ரிலாக்ஸா எடுத்துப்போம்’ என்றார். இதேபோல்தான் இன்னொரு முறை இளையராஜாவுடன் இருக்கும்போதும் சொன்னார். இப்படி மற்றவர்களை தர்மசங்கடப்படுத்துவது பஞ்சு சாருக்குப் பிடிக்கவே பிடிக்காது.

மற்றவர்களை மிகுந்த மரியாதையாக அழைப்பார். அவரின் வயதில் பாதிக்கூட நிறைவடையாத என்னை, ‘சார்’ என்றுதான் அழைப்பார். போனில் அழைத்தால், ‘சொல்லுங்க சார்’ என்பார். நேரில் போனால் ‘வாங்க சார்’ என்பார். ஒருமுறை, ‘ரஜினி, கமல், இளையராஜாவை எல்லாம் வா... போனு கூப்பிடுவீங்களா... வாங்க... போங்கனு சொல்வீங்களா?’ என்றேன். ‘நான் எப்படிக் கூப்பிட்டாலும் அவங்க பேருக்குப் பின்னால ‘சார்’ சேர்த்துக்கங்க சார்’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

அதேபோல, ‘சார் சில விஷயங்களை டீட்டெயில் பண்ணி எழுதணும். இல்லைன்னா அந்த விஷயத்தையே ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடணும்’ என்பார். ‘இறந்தவங்களைப் பற்றி எழுதும்போது ரொம்பத் தப்பா எழுதிட வேணாம் சார். ஏன்னா, ஒண்ணு ‘அந்த ஆளு இல்லைனு அடிச்சுவிடுறான் பாரு’ம்பாங்க. இல்லைனா, ‘செத்தவனைப்போய் இந்த இடி இடிக்கிறான் பாரு’ம்பாங்க. அதனால கவனம் சார்’ என்பார்.

அவரின் பேச்சில் நன்றி உணர்வும் பாராட்டும் மேலோங்கி இருக்கும். ‘கவிஞர் சொல்லச் சொல்ல எழுதியது, பல கம்பெனிகளுக்கு அவரோட போனதுனு அப்போது கிடைத்த நட்பும் அனுபவங்களும் தான் என் வளர்ச்சிக்குக் காரணம்’ என கண்ணதாசன் குறித்து அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். ‘சோ சார் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கார்’ என்பார். ‘எனக்குத் தெரிஞ்ச வகையில் கவிஞரும் இளையராஜாவும் கற்பகவிருட்சம் மாதிரி’ என்பார்.

வில்லனை ஹீரோவாக்கி, ஹீரோவை வில்லனாக்கி, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தி, ரஜினி, கமலுக்கு அதிகப் படங்கள் எழுதி, கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து சினிமா கற்று, ஒரு சினிமா பத்திரிகையை நடத்தி... இவரின் அனுபவங்களைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவை சிறு பந்தாக்கி தான் நினைத்ததுபோல் எல்லாம் உருட்டி விளையாடியிருக்கிறார் என்பது தெரியும்.

தொடருக்காக அவர் பேசத் தொடங்கிய சில வாரங்களிலேயே அவர் இதயம் தொடர்பான பிசியோதெரபி பயிற்சிக்குப் போய் வந்துகொண்டிருந்தார். ‘காலை நேரத்துல வர வேண்டாம். ஆனா, என்கிட்ட கேட்கணும்னுகூட அவசியம் இல்லை. சாயங்காலம் 6:30 மணியில இருந்து நைட் 10 மணி வரை நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம் சார்’ என்றார். சமயத்தில் சாயங்காலம் போகும்போது ‘இன்னைக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கு. நாளைக்கு வெச்சுக்கலாமா?’ என்பார். ‘உங்களோட வசதிதான் சார்’ என்பேன்.

சில வாரங்களுக்கு முன்னர், `சார், எனக்கு `பேஸ்மேக்கர் வைக்கணும்'னு டாக்டர் சொல்றார். ஆனா, அது வைக்காமலேயே சமாளிச்சுடலாம்னு தள்ளிப்போட்டுட்டே வர்றேன். இன்னும் ரெண்டு வாரத்துல அமெரிக்காவுல இருக்கும் பெரிய பையன் வீட்ல போய் தங்கிட்டு வரலாம்னு போறேன். அதனால நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. தினமும் வாங்க. சீக்கிரமே தொடரைப் பேசி முடிச்சிடலாம்’ என்றார். நான்கைந்து நாட்கள் தொடர்ந்து போய்ப் பேசி வந்தேன்.

‘நான் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை வந்துடுறேன் சார்’ என்றேன். ஆனால், செவ்வாய்க்கிழமை என்னைச் சந்திக்காமலேயே இறந்துபோனார். அவர் இறக்கும்போது என்னை நினைத்திருப்பாரா... ‘ச்சே! தொடரை முடிக்காமல் போகிறோமே...' என வருந்தியிருப்பாரா என நிறைய யோசனைகளுடன் சாரைப் பார்க்க அடித்துப்பிடித்து ஓடினேன்.

வழக்கமாக ‘வாங்க சார்’ என என்னை எப்போதும் வரவேற்கும் பஞ்சு சார், பெட்ரூமில் படுக்கவைக்கப் பட்டிருந்தார். கடந்த ஐந்து ஆறு மாதங்களாக அவரின் வீட்டுக்குப் போய் வந்திருந்தாலும் அவரைத் தவிர நான் அந்த வீட்டில் யாரிடமும் பெரிதாகப் பேசிப் பழகவில்லை. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என, பலரால் அந்த வீடு நிறைந்து இருந்தது. அவ்வளவு பேர் இருந்தும் அந்த வீட்டில் நான் தனித்துவிடப்பட்டவனாக உணர்ந்தேன்.

பஞ்சு சார் பேசும்போது ‘அந்த விஷயத்தில் முத்துராமன் சார் கொஞ்சம் ஃபங்க் ஆகிட்டார். கமல் சார்கூட ஃபங்க் ஆனதா கேள்விப்பட்டேன்’ என ‘ஃபங்க்' என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். ‘உங்களோட இறப்பால் நானும் ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்’ எனக் கதறி அழவேண்டும்போல் இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism