லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாகா - சினிமா விமர்சனம்

வாகா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாகா - சினிமா விமர்சனம்

வாகா - சினிமா விமர்சனம்

வாகா - சினிமா விமர்சனம்

நாட்டுக்குள் மக்கள் நிம்மதியாக உறங்க, எல்லையில் விழித்திருக்கும் வீரர்களின் விழிகளே காரணம் என்பதை ஆவணப்படுத்தும் முயற்சி `வாகா’.

அப்பாவிடம் இருந்து தப்பிப்பதற்காக ராணுவத்தில் சேர்கிறார் விக்ரம் பிரபு.  எல்லையில் தனிமை அவரை வாட்ட, வசதியாக வந்துசேர்கிறார் ரன்யா ராவ். நாட்டோடு சேர்த்து அவரையும் விக்ரம் பிரபு காதலிக்க, பாகிஸ்தான் வழியாக வருகிறது ட்விஸ்ட். எல்லையில் பிரச்னை பக் பக் என எரிய, காதலியைப் பத்திரமாக விட்டுவர அவரது நாடான பாகிஸ்தானுக்குள் நுழைகிறார் விக்ரம் பிரபு.

பாகிஸ்தான் ராணுவம் அவரைச் சுற்றி வளைக்க, அவரும் அவரது காதலும் என்னவாகிறது என்பதே க்ளைமாக்ஸ்.

தேசபக்திக்கு நடுவே காதலைச் சேர்ப்பது கோலிவுட்டின் வழக்கம் என்றாலும், காதலைச் சற்றுத் தூக்கலாகத் தூவியிருக்கிறார் இயக்குநர் குமரவேலன். ஆக்‌ஷன் காட்சிகளில் சீறிப்பாயும் விக்ரம் பிரபு, கொஞ்சம் வெட்கப்படவும் கற்றுக் கொண்டுவிட்டார். `வாகா’ கைவிட் டாலும் வருங்காலம் கைவிடாது ப்ரோ. கோதுமை மேக்கப்போ என யோசிக்கவைக்கும் அழகி ரன்யா ராவ். `உனக்காக சந்திரமண்டலத்துக்குக் கூடப் போகலாம் பெண்ணே...' எனச் சொல்லவைக்கும் அழகு.

`என்கூடவே இருந்துடுறியா... இன்னைக்கு ஒரு நாள், ஒரு மாசம், என் வாழ்க்கை ஃபுல்லா...’ என பல இடங்களில் வாவ் வசனங்கள்.

இத்தனை இருந்தும் குழப்பியடிக்கிறது திரைக்கதை. படம் எதை நோக்கி நகர்கிறது என்பதும், பிரதானச் சிக்கல் எது என்பதும் க்ளைமாக்ஸ் வரும் வரை புரியவே இல்லை. இந்தியர் என்பதால் 23 பேர் அடைக்கப்பட் டிருக்கிறார்கள் என வருந்தும் விக்ரம் பிரபு, பாகிஸ்தான்காரர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வரிசையாகக் கொல்கிறார். இந்தியாவோ, பாகிஸ்தானோ... கைதிகளை ராணுவம் நடத்தும் விதமே இதுதானே. ஆனால், இந்திய ராணுவம் மட்டும் புனிதமாகக் காட்டப்படுகிறது.

வாகா - சினிமா விமர்சனம்

காதலிக்காக என்றாலும், விசா இல்லாமல் எல்லை தாண்டியது தவறுதானே? எரிக்கப்படும் அந்தப் பேருந்து இந்திய எல்லையில்தானே எரிகிறது... பிறகு ஏன் நாயகியை எல்லை தாண்டி அனுப்பிவைக்க குறுக்குவழியில் செல்கிறார் ராணுவ வீரர் விக்ரம் பிரபு? மேக்கிங்கில் காட்டிய அக்கறை பேப்பரிலும் இருந்திருக்கலாம்.

பாடல்கள் அழகு. பின்னணி இசை ஆர்ப்பாட்டம். இமானுக்கு மொத்தப் படக் குழுவும் நன்றி சொல்லலாம். எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் கேமராவில் காஷ்மீர் இன்னும் அழகாகத் தெரிகிறது. மொத்தப் படத்தையும் தன் மீது சுமக்கிறார் கனல் கண்ணன்.

எனினும் 3 ஜிபி ரேம் இருந்தும் ஹேங் ஆகும் ஆண்ட்ராய்டு மொபைல்போல திக்கித் திணறுகிறது `வாகா’!

- விகடன் விமர்சனக் குழு