
பா.ஜான்ஸன்

தெலுங்கு தேசத்தின் தெறி இயக்குநர்கள் இந்த ஐந்து பேர். இவர்களைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த டோலிவுட்டும் கமர்ஷியல் கோலி ஆடுகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் மாஸ் ஹீரோக்களின் பேட்டையில் அடுத்தடுத்த மெகா புராஜெக்ட்களில் பயங்கர பிஸி! ஹிட்டுகள் பல கொடுத்து சிக்ஸர்கள் வெளுக்கும் இந்த இயக்குநர்கள் பற்றிய மினி ட்ரெய்லர்...
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

அடிப்படையில் வசனகர்த்தா. அதன்வழியே இயக்குநர். முதல் படம் `நுவ்வே நுவ்வே' ஹிட்டுக்குப் பிறகு, `அத்தடு' படத்தில் மகேஷ் பாபுவையும், மூன்றாவது படத்தில் பவன் கல்யாணையும் இயக்கி ஹாட்ரிக் ஹிட்ஸ் கொடுத்தவர். ஃபேமிலி சென்டிமென்ட் + காமெடி + மாஸ் இவைதான் த்ரிவிக்ரமின் சக்சஸ் ஃபார்முலா. சென்டிமென்ட்டும் வசனமும்தான் இவருடைய பலம். `அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தில் `சிங்கத்துக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்யாசம்தாண்டா... அது தாடி வெச்சுக்கும், நான் ஷேவ் பண்ணிடுவேன்' என பவன் கல்யாண் பேச, ரசிகர்களின் ஆரவாரத்தில் தியேட்டர் கூரைகள் பிய்த்துக்கொண்டன. மெகா ஹிட்ஸ் மேக்கரின் அடுத்த படம் பவன் கல்யாணுடன். இன்னொரு `அத்தாரின்டிக்கி தாரேதி'யை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
போயப்பட்டி ஸ்ரீனு


பக்கா மாஸ் இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு. ஃபேமிலி சென்டிமென்ட் இல்லாத ஹரி படங்கள்தான் போயப்பட்டி ஸ்டைல். ஆக்ஷனுக்கு நடுவில்தான் காட்சிகளே வரும். உதாரணம், பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய `சிம்ஹா', `லெஜண்ட்'. சமீபத்தில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கிய `சரைனோடு', பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட்களை அடித்து நொறுக்கியது. ஒரு மாஸ் சீன் எப்படி அமைக்க வேண்டும், அதைச் சுற்றி கதையை எப்படி எழுதவேண்டும் என ஒரு வடிவமைப்பு செய்த பிறகுதான் திரைக்கதையே எழுதுவார். அரதப்பழைய மாஸ் காட்சிகளை வடிவமைத்துக்கொண்டிருந்த இயக்குநர்கள் மத்தியில், மாஸ் சீன் ஸ்ட்ரெக்சரை வடிவமைத் ததில் போயப்பட்டி ஸ்ரீனு பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்து, புதுமுக ஹீரோவுடன் களம் இறங்க உள்ளார். `ரொமான்ஸா?' என்றால், `ஆள்தான் புதுசு, ஆக்ஷன் அதேதான்!' என்கிறார்.
வி.வி.விநாயக்


ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், நிதின் இவர்களின் ஆரம்ப காலகட்டத்தை வடிவமைத்ததில் வி.வி.விநாயக்கின் பங்கு மிக அதிகம். காதல், பழிவாங்கல் இரண்டும்தான் விநாயக்கின் ஏரியா. சிரஞ்சீவியை வைத்து `ரமணா' படத்தை தெலுங்கில் இவர் ரீமேக் செய்த `தாகூர்' தாறுமாறு ஹிட். அந்த சென்டிமென்ட் காரணமாகவே இப்போது சிரஞ்சீவியின் 150-வது படமான `கத்திலாண்டோடு' (`கத்தி' தெலுங்கு ரீமேக்) படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் விநாயக்.
சுகுமார்


கல்லூரிப் பேராசிரியராக இருந்தவருக்கு க்ரியேட்டிவாக ஏதாவது செய்ய விருப்பம். `தில்' படத்தில் உதவி இயக்குநராகச் சேருகிறார். படத்தில் வேலைசெய்யும்போதே படத்தின் தயாரிப்பாளரிடம் தன் `ஆர்யா' படக் கதையைச் சொல்லி ஓ.கே வாங்குகிறார். படம் ஹிட்! இரண்டாவது படம் `ஜகடம்' ஃப்ளாப். ஆனால், அடுத்த இரண்டு படங்கள் `ஆர்யா-2', `100% லவ்' ரெக்கார்ட் பிரேக்கிங் ஹிட். தன்னை ஹிட் இயக்குநராக நிரூபித்த பிறகு சோதனை முயற்சியில் இறங்கிசெய்த படம்தான் `நேனொக்கடினே'. மாஸ் ஹீரோ மகேஷ் பாபு இருந்தும் படம் சுமாராகவே ஓடியது. ஆனால், சுகுமார் சோர்ந்துவிடவில்லை. `நானாக்கு ப்ரேமதோ' என ஜூனியர் என்.டி.ஆருடன் களம் இறங்க, அவருடைய கணக்கு தப்பவில்லை. படம் ஆல் சென்டரிலும் ஹவுஸ்ஃபுல். கணிதம், இயற்பியல் இரண்டு சப்ஜெக்ட்களையும் சினிமாவின் மூலம் ரசிகனுக்கு க்ளாஸ் எடுப்பதில் கில்லாடி இந்த புரொஃபசர்.
பூரி ஜெகன்நாத்


ராம்கோபால் வர்மாவின் சிஷ்யர். முதல் படமே பவன் கல்யாணுடன்... `பத்ரி'. `நடிக்கவே தகுதியில்லாத மூஞ்சி' எனச் சொல்லி தெலுங்கு சினிமா ஓரங்கட்டிய ரவி தேஜாவை `மாஸ் மஹாராஜா'வாக்கிய டக்கர் இயக்குநர். புனித் ராஜ்குமாருக்கு, கன்னடத்தில் வெடி என்ட்ரி கொடுத்து அறிமுகப்படுத்திய பெருமையும் பூரிக்கே. இவரின் மேக்கிங்கில் அசுரவேகம் இருக்கும். திடீரென ஒரே வருடத்தில் நான்கு படங்கள் எடுத்துவிடுவார். அதில் இரண்டு தோல்வி அடைந்தாலும், இரண்டு படம் மரண மாஸ் ஹிட்டடிக்கும். அப்படியான ஒரு படம்தான் மகேஷ் பாபுவின் `போக்கிரி'. யாரும் யோசிக்காத விதத்தில் ஒரு வசனம் வைப்பதில் பூரி செம கில்லி! தற்போது `ஜன கண மன' படத்துக்காக மீண்டும் மகேஷ் பாபுவுடன் இணைகிறார் பூரி.
சுரேந்தர் ரெட்டி


பவர்ஃபுல் ஹீரோ, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், எமோஷனல் ட்விஸ்ட்... இவைதான் சுரேந்தர் ரெட்டியின் ஃபார்முலா. முதல் படம் `அத்தனொக்கடே' மூலம் கரியரை ஆரம்பித்தார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் `அஷோக்கா'வுக்குப் பிறகு இயக்கிய `கிக்' (தமிழில் `தில்லாலங்கடி') படம் மூலம் தேசிய கவனம் பெற்றார். அதன் பிறகு இயக்கிய `ஓசரவள்ளி' மிகப்பெரிய ஓப்பனிங் உள்ள ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆரை மாற்றியது. அதற்குப் பிறகு இயக்கிய `ரேஸ் குர்ரம்' சுரேந்தரை சூப்பர் இயக்குநராக்கியது. இப்போது `தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `துருவா' பட இயக்கத்தில் இவர் செம பிஸி.