லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எம்.எஸ் - 100

எம்.எஸ் - 100
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.எஸ் - 100

வீயெஸ்வி, படம் உதவி: யோகா

எம்.எஸ் - 100

செப்டம்பர் 16...

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நிறைவு நாள்.

இசையோடு பிறந்து, இசையில் வளர்ந்து, இசையில் மூழ்கித் திளைத்து முத்துக்கள் எடுத்து இணையற்ற சரித்திரம் படைத்தவர், ‘குஞ்சம்மா' என நெருக்கமானவர்களால் அழைக்கப்பெற்ற எம்.எஸ். பக்தி எனும் சாம்ராஜ்ஜியத்தில் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்து, பண்டிதர்களையும் பாமரர்களையும் ஒருசேர பரவசப்படுத்திய ஒப்பில்லா மாமேதை!

ஆகச் சிறந்தப் பாடகியாக அகிலம் முழுவதும் அரசாட்சி புரிந்துவிட்டு மறைந்த எம்.எஸ் பற்றி, கடந்த ஒரு வருடமாக அநேகம் பேர் எழுதியும் பேசியும் உள்ளனர். இப்போது நூற்றாண்டு நிறைவுபெறும் நேரம்!

கடந்த சுதந்திர தினத்தன்று, மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் ஒரு நிகழ்வு. ‘முக்தி - VOICING FREEDOM' எனப் பெயரிட்டிருந்தார்கள். வடிவமைத்தவர், கௌரி ராம்நாராயண்.

தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘மீரா' படத்தில் நடித்து எம்.எஸ் வரலாறு படைத்தது ஒரு பக்கம். ரீங்கரிக்கும் சுலோகங்களையும், உள்ளத்தை உருக்கும் பஜனைப் பாடல்களையும் இவர் பாடி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஆலயங்களில் இன்று வரை அவை ஒலித்துக்கொண்டிருப்பது இன்னொரு பக்கம் இருந்தாலும், கர்னாடக இசையின் பாரம்பர்யங்களை வசப்படுத்திக்கொண்டவராக ரசிகர்களின் நினைவில் நிற்கிறார் எம்.எஸ். பாவத்தோடுகூடிய அவரது பக்தி இசை, பல்லாயிரக்கணக்கானவர்களைப் பரவசப்படுத்தியது என்பது நிதர்சனம்.

மேடையில் வித்வான் விஜய்சிவா - அமிர்தா முரளி (வயலின்) - ஜெ.வைத்தியநாதன் (மிருதங்கம்) - அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா). சற்று ஓரமாக செவ்வக பெஞ்சில் கௌரி ராம்நாராயண்.

எம்.எஸ் பற்றி ஒரு தகவல் சொல்வார் கௌரி. அந்தத் தகவலுக்குத் தொடர்புடைய பாடலை விஜய்சிவா பாடுவார். இப்படி இயலும் இசையுமாக இரண்டரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சி அது.
அன்னமாச்சார்யாவின் பாடல்கள் மீது எம்.எஸ் கொண்டிருந்த ஈர்ப்பு பற்றி முதலாவதாகச் சொல்லப்பட்டது. ‘நமோ நமோ ரகுகுல நாயகா...' எனத் தொடங்கும் நாட்டை ராகப் பாடலை விஜய்சிவா பாடினார்.

அடுத்து பாபநாசம் சிவன்.

சிவன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் எம்.எஸ். நேர்முகமாக அவரிடம் பாடல்கள் கற்றிருக்கிறார். பாபநாசம் சிவனின் இசையமைப்பில் ‘சேவா சதனம்' படத்துக்காக தான் பாடிய ‘மா ரமணன்...' பாடலை, கச்சேரிகளில் தொடர்ந்து பாடி பிரபலப்படுத்தினார். முருகன் மீது சிவன் பாடியுள்ள பல பாடல்களை பக்தி ரசம் ததும்பப் பாடுவார் எம்.எஸ்.

மறுபடியும் விஜய் சிவா முறை. காம்போதியை கம்பீரமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டு, ஸ்ரீலங்கா, கதிர்காமம் முருகன் மீது சிவன் பாடிய ‘கதிர் காம கந்தன் பூங் கழலினை பணி மனமே...' பாடலை சுத்தமான உச்சரிப்பில் பாடி, ‘நீ எங்கிருந்தாலும் உனது கஞ்ஜ பதமென் நெஞ்சம் மறவேன்...' வரிகளில் கலகலப்பு நிரவல்செய்து, ஸ்வரங்கள் பாடி முடித்தபோது, விசா இல்லாமல் கதிர்காமம் சென்று கந்தனை சேவித்து வந்த நிறைவு!

தியாகராஜர் மீது அளப்பரிய பக்திகொண்டிருந்தவர் எம்.எஸ். 1940-களில் தமிழிசையைப் பிரபலமாக்கும் தீவிரத்துடன் ராஜாஜி, கல்கி, டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றோர் களத்தில் குதித்தபோது, அவர்களுடன் இணைந்தவர் எம்.எஸ். அதனால் கச்சேரி மேடைகளில் தியாகராஜரின் பாடல்களை சில காலம் பாடாமலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம்.

‘`அதனால் என்ன... தியாகராஜரின் ஓரிரண்டு கீர்த்தனைகளை, வீட்டில் தினமும் தவறாமல் பாடிவந்தார் எம்.எஸ் அம்மா'' என்று பஞ்ச் வைத்தார் கௌரி.

சங்கராபரணம் என்றதும் எம்.எஸ் நினைவுக்கு வராவிட்டால், சம்பந்தப்பட்டவர் கர்னாடக இசையில் வீக் எனப் பொருள். எம்.எஸ் பாடிய சங்கராபரண ராக கீர்த்தனைகள் பல பிரபலம் அடைந்தன. இந்த ராகத்தில் சியாமா சாஸ்திரியின் ‘சரோஜ தள நேத்ரி...' கீர்த்தனையில் ‘சாமாகான விநோதினி' என்னும் வரிகளை எம்.எஸ் நிரவல்செய்து பாடும் நேர்த்தியை நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எத்தனையோ பேர் காத்துக்கிடந்தது உண்மை.

கல்யாணக் கச்சேரி என்றாலும், சபா கச்சேரி என்றாலும், லண்டன் ஆல்பர்ட் ஹால் கச்சேரி என்றாலும் பாரபட்சம் பாராமல் முக்கியத்துவம் குறைத்து ஏற்றாமல், ஒரே சீராகப் பாடிவந்தவர் எம்.எஸ்..

பதம் மற்றும் ஜாவளிகளை, செம்மங்குடியின் அறிவுரையின்படி டி.பிருந்தாவிடம் கற்றுக்கொண்டார் சுப்புலட்சுமி. ஆனால், கச்சேரிகளில் அவற்றைப் பாடவில்லை; ரெக்கார்டுகளுக்கு மட்டும்தான். ஒருமுறை பிருந்தாவின் 80-வது பிறந்தநாளையொட்டி நடந்த கச்சேரியில் அவர் முன்னிலையில் எம்.எஸ் பதம் ஒன்று பாட, பிருந்தா பாராட்டியது பரந்த புன்னகை வழியே... பூரித்தார் பாரத் ரத்னா!