Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 18

குறும்புக்காரன் டைரி - 18
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 18

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 18

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 18
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 18
குறும்புக்காரன் டைரி - 18

‘பர்த்டே பார்ட்டியைச் சொதப்புவது எப்படி?'னு கேட்டா, பக்கம் பக்கமா எழுதுற அளவுக்கு சில விஷயங்கள் கத்துக்கிட்டேன். நேத்து ஜெகனுக்கு பர்த்டே. மூணு நாள் முன்னாடியே அவன் மறக்க முடியாதபடி ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு பிளான் பண்ணலாமேனு மிஸ்கிட்ட பெர்மிஷன் கேட்டோம். ‘தாராளமா பண்ணுங்க'னு சொன்னதும் களத்துல இறங்கினோம்.

என்ன கிஃப்ட் வாங்கலாம்னு யோசிக்கும்போது, என் கிளாஸ்மேட் ரித்தேஷ் ஞாபகம் வந்துச்சு. ஏன்னா, அவன்தான் கிஃப்ட் குடுக்குறதுல ஸ்பெஷலிஸ்ட். போன மாசம் எங்க கிளாஸ்ல ஒரு பையனுக்கு பிறந்தநாள் வந்தப்போ, காபி கப்ல பிறந்தநாள் பையனின் போட்டோவை பிரின்ட் பண்ணி கொடுத்தான். அது செம ஹிட்!

அவன்கிட்டபோய் ‘ஜெகன் பர்த்டேக்கு என்ன கிஃப்ட் குடுக்கலாம்?'னு கேட்க, அவன் தாடையைத் தடவி யோசிச்சுட்டு, ‘அலிபாபாவும் ஆண்ட்ராய்டு போனும்'னு ஒரு நாவல். அதை வாங்கிக்குடு. நாலு தலைமுறைக்கு உன்னை ஞாபகம் வெச்சுப்பான்'னு சொன்னான்.

70 வயசு கிழவனா லொக்கு லொக்குனு இருமிக்கிட்டே ஜெகன், பேரன்கிட்ட நைஞ்சுபோன அந்த நாவலை எடுத்துக்காட்டி, ‘இது, என் ஃப்ரெண்டு கிஷோர் கிஃப்ட்டா குடுத்தது'னு சொல்ற காட்சி மனசுக்குள்ளே வந்துபோச்சு.

‘அந்த புக், இந்த ரோடு முக்குல இருக்குற புக் ஸ்டோர்ல கிடைக்கும்'னு சொன்னான்.

சாயந்திரமே அந்தக் கடைக்கு ஓடி, ‘அங்கிள், அலாவுதீனும் ஆண்ட்ராய்டு போனும் புக் குடுங்க'னு கேட்டேன். அவர் என்னை ஏலியன் மாதிரியே பார்த்துட்டு, புத்தகத்தைக் கொடுத்தார்.

கிஃப்ட் ரெடி. அடுத்தது, பர்த்டே கேக். பசங்க ஒண்ணா சேர்ந்து, சாக்லேட் கேக் ஆர்டர் கொடுத்தோம். மினியன்ஸ் வரைஞ்சு, ‘ஹேப்பி பர்த்டே ஜெகன்'னு எழுதி, செம மாஸா இருக்கணும்னு சொன்னோம்். கேக் ஆர்டர் கொடுத்துட்டு வெளியில வரும்போது இன்னொரு ஐடியா தோணிச்சு. ‘கேக் வெட்டும்போது ஸ்நோ ஸ்ப்ரே அடிச்சா, கலாட்டாவா இருக்கும்'னு சொல்ல, ரித்தேஷ், ‘நாளைக்கு நானே வாங்கிட்டு வந்துடுறேன்'னு சொன்னான்.

பர்த்டே பார்ட்டியில் மேஜிக் ஷோ இருந்தா நல்லா இருக்குமே. எங்க இங்கிலீஷ் சார் டேவிட், ஒரு மேஜிஷியன்கூட! அவர்கிட்டயும் பிளானை சொல்ல, அவரும் ‘ஓகே' சொன்னார்.

எல்லாம் பக்காவா ரெடி. காலையில் எல்லாரும் கிளாஸ்ல ஆஜர் ஆனோம். பிளான் என்னன்னா, ஜெகன் ஸ்கூலுக்கு வந்ததும், அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து, ஸ்டாஃப் ரூமுக்கு மிஸ் அனுப்பி வெச்சுருவாங்க. நாங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு படிக்கிற மாதிரி உட்கார்ந்துருவோம். அவன் கிளாஸ் உள்ளே நுழைஞ்சதும், எல்லாரும் எந்திரிச்சு கேக்கை நீட்டுவோம். பயல் திகைச்சுடுவான்.

குறும்புக்காரன் டைரி - 18

பிளான் பண்ண மாதிரியே, அவனுக்கு வேலை கொடுத்து ஸ்டாஃப் ரூமுக்கு அனுப்பியாச்சு. எல்லாமே அரேஞ்ச் பண்ணிட்டோம். நான் எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் கொடுக்கலாமேனு டேபிள் டிராவுக்குள்ளே என் கிஃப்ட்டை ஒளிச்சு வெச்சேன்.

ரித்தேஷ் கையில் ஒரு பூனைக்குட்டியோட வந்தான். ‘இது என் பெட் கிஷோர். கேக்குனா என் பூனைக்கு ரொம்பப் புடிக்கும். அதான், பார்ட்டிக்கு தூக்கிட்டு வந்தேன்'னு சொன்னான். ஏதோ பண்ணிட்டுப் போறான்னு விட்டுட்டோம்.

‘டேய் ரித்தேஷ், எல்லாம் ரெடி. நீ போய் ஜெகனை கூட்டிட்டு வா'னு சொல்ல, அவனும் பூனையைத் தூக்கிட்டுக் கிளம்பினான். நாங்க எல்லாரும் சீரியஸா படிக்கிற மாதிரி உட்கார்ந்துட்டோம்.

கொஞ்ச நேரத்துல, ரித்தேஷ் ஜெகனுடன் நுழைஞ்சான். உள்ளே வரும்போதே, ‘என்னங்கடா ஏதோ சர்ப்ரைஸ் பார்ட்டியாமே'?னு கேட்டான்.

‘அடப்பாவி, கூப்பிட்டு வாடானு சொன்னா, பிளானையும் சொல்லியா  கூப்பிட்டு வர்றது?'னு ரித்தேஷை முறைச்சோம்.

‘ஹி... ஹி... அதான் வந்துட்டான்ல. பார்ட்டியை ஆரம்பிங்க'னு சமாளிச்சான் ரித்தேஷ். முதல் பிளான் சொதப்பல். நான், ஜெகன் காதுக்கிட்டே போய், 'ஹேப்பி பர்த்டே ஜெகன். உனக்கு ஒரு கிப்ஃட் கொடுக்கணும். அது நம்ம கிளாஸ்லதான் இருக்கு. நீயே தேடிக் கண்டுபிடி பார்க்கலாம்'னு சொல்லிட்டு இருக்கும்போதே, ரித்தேஷ் வந்து, ‘டேய் கிஷோர், உன் கிப்ஃடை டேபிள் டிராவுக்குள்ளயே வெச்சுட்டே... இந்தா'னு நீட்டினான். தலைலயில் அடிச்சுக்கிட்டேன்.

அப்புறம், ஹேப்பி பர்த்டே பாட்டு பாடி, ஒன் டூ த்ரீ சொல்லி எல்லாரும் ஒரே நேரத்துல கிஃப்ட் எடுத்து நீட்டினோம். சொல்லி வெச்ச மாதிரி எல்லார் கையிலும் ஒரே புத்தகம். ‘இதுதான் உங்க சர்ப்ரைஸா?'னு கேட்டான் ஜெகன்.

எல்லாரும் ரித்தேஷைப் பாத்தோம். ‘டேய், நீ எல்லாருக்கும் ஒரே ஐடியாவையே  கொடுத்தியா'னு செம கடுப்பாக, அவன் கூலா பூனையைத் தடவிக்கிட்டே, ‘எனக்கு என்னடா தெரியும்... எல்லாரும் இதையே வாங்குவீங்கனு! எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். சரி சரி, டேவிட் சார் ரெடியாகிட்டாரா? மேஜிக் ஷோ எப்போ?'னு கேட்டான்.

‘என்னது மேஜிக் ஷோவா?'னு ஜெகன் குஷியாக, அடுத்த சர்ப்ரைஸும் அவுட்.

ரித்தேஷ் மேல் மொத்த கிளாஸும் கொலைவெறியா இருந்தோம். உடனே பழிவாங்கலைனா மனசு ஆறாதே..! டேவிட் சார் தனது தந்திரங்களை ஆரம்பிச்சார். ஒரு பேனாவை தொப்பிக்குள்ளே போட்டு மறையவெச்சார். உடனே, ஐடியா வந்தவனாக, ‘சார், ரித்தேஷ் பூனையை மறையவைங்க பாக்கலாம்'னு அவன் பூனையைப் பிடுங்கி நீட்டினேன்.

‘அய்யோ... வேணாம் சார்'னு ரித்தேஷ் கதற, டேவிட் சார் தொப்பிக்குள்ளே பூனையைப் போட்டு மந்திரம் சொல்லி, தொப்பியைக் கவிழ்த்தார். அவ்ளோதான்... போயேபோச்சு பூனை! அவனுக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு.

குறும்புக்காரன் டைரி - 18

எல்லாம் முடிஞ்சு, கடைசியா கேக் வெட்டுற வைபவம். கேக் பாக்ஸை ஜெகன் முன்னாடி நீட்டி, ‘இந்த கேக்கை மட்டும் நீ பார்த்தே அசந்துடுவே'னு சொன்னோம்.

அதுக்கு அவன், ‘அதான் ஏற்கெனவே பாத்துட்டேனே'னு ஷாக் கொடுத்தான்.

‘இன்னும் பிரிக்கவே இல்லை. எப்படா பார்த்தே?'னு கேட்டேன். அவன் சிரிச்சுக்கிட்டே, ‘நீங்க கேக் வாங்கும்போதே ரித்தேஷ் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பிட்டான்'னு சொன்னான்.

மெதுவா டேவிட் சார்கிட்ட போய், ‘சார், அந்தப் பூனை இனிமே வராதா?'னு கேட்டேன். ‘என் கோட்டுக்குள்ளேதான் இருக்கு. அப்புறமா கொடுத்துடலாம்'னு சொன்னார்.

கொஞ்ச நேரமாச்சும் அழட்டும்னு கேக் வெட்ட தயாரானோம். எல்லாரும் ‘ஹேப்பி பர்த் டே டு யூ' பாடினோம்.

ஜெகன் கத்தியைக் கையில் எடுக்க, திடீர்னு சாரின் கோட்டுக்குள்ளே இருந்து ஜம்ப் பண்ணி கேக் மேலே குதிச்சது பூனை. எல்லோரின் முகத்திலும் கேக் தெறிக்க, ஒரே களேபரம்.

கடைசியில், ‘பிறந்தநாள் ஜெகனுக்கா... பூனைக்கா?'னு ஆனதுதான் மிச்சம்!

(டைரி புரட்டுவோம்...)