Published:Updated:

`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு!’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன?

`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு!’ -  வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன?
`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு!’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன?

அதற்குள் ஒரு வருடம் கடந்துவிட்டதா என ஆச்சர்யமாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது... நம் செல்லூர் ராஜு வைகை அணைக்கு தெர்மாகோல் தடுப்பு போட முயன்ற அரிய நிகழ்வு. அன்று என்ன நடந்தது என ஃப்ளாஷ்பேக்கினேன்..!  

இதே போன்றதொரு சுட்டெரிக்கும் வெயில் தினம்தான் அது. காலையில் எழுந்ததும் நாளிதழ் நண்பர்களிடம் ’இன்றைக்கு என்ன பிளான்?’ எனக் கேட்டேன். ``வைகை அணைக்கு மினிஸ்டர்ஸ் வராங்களாம்" என்றனர். `எதுக்கு வராங்க? என்ன விஷயம்?’ என்ற கேள்விக்கு, `அதெல்லாம் தெரியல... ஏதோ சிறப்புத்திட்டமாம்!’ என்றார்கள். தெளிவான தகவல்கள் எந்த அதிகாரிக்கும் தெரியல..." என்றனர். அதென்ன சிறப்புத்திட்டம் என்ற யோசனையுடன் வைகை அணைக்குப் புறப்பட்டோம். வைகை அணையின் மேல் பொதுப்பணித்துறை பங்களா ஒன்று உள்ளது. அங்கே அமைச்சரை வரவேற்கக் காத்திருந்த கட்சி நிர்வாகிகள், பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் பலர் தங்களது மொபைல் போனில் மூழ்கிக்கிடந்தனர். அமைதியோ அமைதியாக இருந்தது.

வெளியில் வந்து சக பத்திரிகை நண்பர்களிடம் பேசினோம். ``அதென்னனு யாருக்குமே தெரியல... ஒரு பேனர் ரெடி பண்ணிருக்காங்க... அதையும் காட்டமாட்றாங்க..." என்றனர். மர்மத்தின் உச்சமாக இருக்கிறதே... என்ற யோசனையுடன் மெதுவாக அதிகாரிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். ``அணையை மூடப்போறாங்களாம்..." என்றார் ஒருவர். `என்னது அணையை மூடப்போறாங்களா?’ என்று அதிர்ச்சியில் கேட்க, "அணைத்தண்ணீரை மூடப்போறாங்களாம்..." என்றார் பதிலுக்கு. `அதெப்படி முடியும்?’ என்று பதில் கேள்விகேட்க, அமைதியாக நகர்ந்துவிட்டார். 

மேலும் ஒரு அதிகாரியிடம் பேச்சு கொடுத்தோம். அவரும் அதே அணை மூடும் கதையைச் சொன்னார். `என்னடா இது சோதனையா இருக்கு..!’ என்று நினைத்துக்கொண்டே மெல்ல உயர் அதிகாரிகள் இருக்கும் பங்களாவிற்குச் சென்றோம். ``பல லட்சம் ப்ராஜெக்ட்பா... வெளிநாட்டு ப்ராஜெக்ட்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க... அண்ணன் வரட்டும். தெரிஞ்சுரும்..." என்று கிசுகிசுத்தனர்.

எதிர்பார்ப்பு எகிறியது. சட்டென பரபரப்பானது சூழ்நிலை. நீண்ட வரிசையில் கார்கள் அணிவகுக்க அதில் ஒரு காரில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இறங்கினார். தடபுடலான வரவேற்பு வழங்கப்பட்டது. உடன் மதுரை ஆட்சியர் வீரராகவராவ், மதுரை மாநகராட்சி ஆணையர் வந்திருந்தனர். 

நேராக அணை பங்களவுக்கு வந்த செல்லூர் ராஜு, ``சொல்லுங்க... என்ன பிளான்?" என்றார் அதிகாரிகளைப் பார்த்து. ``சார்... வாங்க பேசிகிட்டே போகலாம்..." என்றனர். ``சரி வாங்க போகலாம்... நேரா அணைக்குள் இறங்கிடலாமா?" என்றார் செல்லூர் ராஜு. ``அதெல்லாம் இறங்கிடலாம் சார்.." என்ற அதிகாரியை ஒரு விநாடி அழுத்தமாக பார்த்துவிட்டு எழுந்தார். 

அதிகாரிகள் புடை சூழ நேராக அணைக்குள் இறங்கினார் செல்லூர் ராஜு. நாமும் அணைக்குள் இறங்க. அணைக்கரையில், பளிச்சிடும் பேனர் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ``நீர் ஆவியாதலைத் தடுக்கும் பணி!" என்று எழுதப்பட்டிருந்தது. நாடியில் விரல் வைத்து, அதென்ன நீர் ஆவியாதலைத் தடுக்கும் பணி என்று யோசித்தபோது, தூரத்தில் கண் கூசும் வெண்மை நிறத்தில் ஏதோ அட்டை போன்று வைக்கப்பட்டிருந்தது. சிலர் கலர் கலர் டேப் எடுத்து ஒட்டிக்கொண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து ஏதோ ஸ்பெஷல் அயிட்டம் இறக்குமதி செய்திருப்பார்களோ என்ற ஆர்வத்துடன் ஓட்டமும் நடையுமாக அருகில் சென்றுபார்த்தேன். அது.... தெர்மாகோல்..! உச்சி வெயிலில் பளீரென பளிச்சிட்டது!

பத்து பதினைந்து தெர்மாகோல் சீட்களை வரிசையாக வைத்து டேப் போட்டு ஒட்டியிருந்தார்கள். அதன் அருகில் அழைத்து வரப்பட்ட செல்லூர் ராஜு, ``இதானாப்பா... எடுத்து தண்ணீல விட்ரலாமா?" என்றார். ``ஆமாம் சார்..!’’ என்றனர் அதிகாரிகள். ``சரி தூக்குங்க... தண்ணிக்குள்ள இறங்குறேன்..." என்று சொல்லி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டார். தெர்மாகோல் ஷீட்களை தூக்கினர். ஆனால், அணைக்காற்றின் வேகத்துக்கு அனைத்தும் சட்சட்டென உடைந்தது. வேறு வழியில்லாமல், பெயருக்கு இரண்டு தெர்மாகோல் ஷீட்கள் மட்டும் செல்லூர் ராஜு பெற்றுக்கொண்டு, வைகை அணை நீர் ஆவியாதலை தடுக்கும் பணியை தொடங்கிவைத்து, போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். காற்றில் பறந்தன தெர்மாகோல், ``தள்ளி நின்னு போடுங்க..." என்று யாரோ குரல் கொடுக்க, `கொஞ்சம் தள்ளி நின்று போடலாம்... காத்து கம்மியா இருக்கும்’ என்று அருகில் இருந்தவர்கள் சொல்ல நகர்ந்தார் செல்லூர் ராஜு.

அந்த நேரம், நைசாக நகர்ந்தார் தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம். ``என்ன சார்? எங்க போறீங்க?" என்றேன். ``என்ன நடக்குதுனே தெரியலப்பா... தெர்மாகோலில் கெமிக்கல் இருக்குமே... இப்படி தண்ணீரில் போட்டு, மதுரை மக்களுக்கு எதாவது ஆச்சுனா என்ன பண்றதுனு தெரியலயே..." என்று சொல்லி வானத்தைப் பார்த்தார். நகர்ந்த செல்லூர் ராஜு, மீண்டும் தண்ணீர் ஆவியாதலைத் தடுக்கும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆனால், காற்று இவர்களிடமிருந்து அணைத்தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுதிபூண்டது போல, விடாமல் தெர்மாகோலை தூக்கி வீசியது. ``என்னங்க இது... இப்படி பறக்குது..." என்றார் செல்லூர் ராஜு. சிறிது யோசனைக்குப் பிறகு, ``பரிசலில் தெர்மாகோலை எடுத்துச் சென்று அணைக்கு நடுவே போட்டுவிடுங்க... காத்துக்கு அணை முழுசும் தெர்மாகோல் பரவிடும்..." என்றார் வேட்டியை பிடித்துக்கொண்டு... தெர்மாகோலோடு பரிசலில் புறப்பட்டனர் சிலர். வழியனுப்பிவைத்தார் செல்லூர் ராஜு.

``அண்ணே...காத்து பலமா இருக்கும் போல, அலை வேற அடிக்குது... தாங்குமா தெர்மாகோல்?" என்று சகா ஒருவர் கேட்க. ``அதெல்லாம் தாங்குமப்பா...’’ என்றார் செல்லூரார். 

பேட்டி கொடுக்க அழைத்தனர் பத்திரிகையாளர்கள். ``பத்து லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.!" என்றார் செல்லூர் ராஜு. `தெர்மாகோல் பத்து லட்சமா’ என்று ஒருவர் கிசுகிசுக்க, `அணை முழுக்க போடனும்லப்பா..!’ என்று அசராமல் பதில் கொடுத்தார் மற்றொருவர்.

இது ஒரு சாதாரண சம்பவமல்ல....வரலாற்றின் ஒரு திருப்பத்தில் நிற்கிறோம் என்று பொறி தட்டியது. உடனடியாக நான் விகடனின் இணையதள, சமூக ஊடக பக்கங்களில் அந்தச் செய்தியை வீடியோவாகப் பதிவு செய்தேன். பின்னர் என்ன நடக்கிறது என அணைக்கரையிலேயே நின்று கொண்டு பரிசலை உற்று நோக்கினேன். தெர்மாகோல் வானத்தில் பறந்தது. ஒன்று கரையைத் தாண்டியது. செல்லூரார் காரில் ஏறுவதற்குள் அவரது காரை ஒரு தெர்மாகோல் சீட் கடந்து சென்றதுதான் வேடிக்கை.

``ஏப்பா... அணையில போட்ட தெர்மாகோல் எங்க ஊருக்கு வந்துச்சு... உங்க ஊருக்கு வந்துச்சா..." என அணைப்பகுதி கிராமத்தினர் அடுத்த நாள் வேடிக்கையாக பேசிக்கொண்டனர்.

அந்த வரலாற்று நிகழ்வுகளைக் காண இங்கு க்ளிக் செய்க 

இப்படித்தான் அந்த சரித்திர முக்கியத்துவம் சம்பவம் அன்று அரங்கேறியது. அதை நேரில் கண்ட சாட்சிகளில் நானும் ஒருவன் என்பது நல்லதுக்கா... கெட்டதுக்கா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு பத்திரிகை புகைப்படக்காரன் எந்த ஆச்சர்ய அதிசய அதிர்ச்சிக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதை கற்றுக் கொண்ட நாள் அது!