Published:Updated:

'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’

'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’
பிரீமியம் ஸ்டோரி
'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’

வெ.நீலகண்டன், படங்கள்: பா.காளிமுத்து

'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’

வெ.நீலகண்டன், படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’
பிரீமியம் ஸ்டோரி
'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’
'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’

ற்சாகமாக இருக்கிறார் கவிஞர் யுகபாரதி. `ஜோக்கர்' படத்தில் எழுதிய `என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்...' பாடலுக்காக வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு அலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

``தஞ்சாவூர்ல இருந்து, கொஞ்சம் கவிதைகளையும், சுய விவரக்குறிப்பு ஒண்ணையும் எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்தவன் நான். என் அப்பா, இடதுசாரி இயக்கத்துக்காரர். சினிமா மேல அவருக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நான் பொறியியல் படிச்சிருக்கேன். அந்தத் துறையில் உடனடியா வேலை கிடைக்காது. அதுவரைக்கும் ஏதாவது ஒரு பத்திரிகையில் வேலை செய்யணும்கிறதுதான் என்னோட திட்டம். சினிமா பற்றி யோசிச்சதே இல்லை. `கணையாழி' பத்திரிகையில் வேலை கிடைச்சது, என் வாழ்க்கையில் முக்கியமான கட்டம். பெரிய பெரிய இலக்கிய ஆளுமைகள் பக்கத்துல உட்காந்து வேலைசெய்யும் வாய்ப்பு அமைஞ்சது. நவீன இலக்கியம், மொழிக் கட்டமைப்பு எல்லாத்தையும் `கணையாழி’யில்தான் பழகினேன். அதன் விளைவாகத்தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.

லிங்குசாமி, என் கவிதைகளை விரும்பி வாசிப்பார். `மனப்பத்தாயம்', `பஞ்சாரம்' ரெண்டு தொகுப்புகளையும் படிச்சுட்டு, `நீங்க சினிமாவுக்கு வரணுங்க'னு சொன்னார். `ஆனந்தம்' படத்துல அவரே ஒரு வாய்ப்பையும் தந்தார். நான் எழுதிய `பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...' பாட்டு பேசப்பட்டது. ஆனா, அடுத்து எந்த வாய்ப்பும் வரலை. கனவுகளோடு எட்டு மாசம் காத்திருந்தேன். அடுத்த வாய்ப்பையும் `ரன்' படத்துல லிங்குசாமிதான் தந்தார்.

தொடக்கத்துல, எனக்கு சினிமா மேல நம்பிக்கையே வரலை. ஆறேழு ஆண்டுகள் வரை, `எங்கே யாவது ஓர் இடத்துல நாம வெளி யேற்றப்படுவோம்'கிற பதற்றம் துரத்திக்கிட்டே இருக்கும். அந்த மாதிரியான சூழலை உடைச்சு, எனக்கு நம்பிக்கை கொடுத்தது வித்யாசாகரும் எஸ்.ஏ.ராஜ்குமாரும். நிறைய இளம் கவிஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் வித்யாசாகர். அப்ப எல்லாம், ஒரு படத்துல அஞ்சு பாட்டு இருந்தாலும் ஒரே கவிஞர்தான் எழுதுவார். வித்யாசாகர், அதை அஞ்சு கவிஞர் களுக்குப் பிரித்துக் கொடுப்பார்.

வித்யாசாகர், ரசனையான மனிதர்; கவித்துவமா எழுதினா கொண்டாடுவார். மெட்டுக்கு எழுதும்போது, ஒரு வார்த்தை இடறினாலும் ஏத்துக்க மாட்டார். சந்தத்துக்கு சரியா எழுதணும். அப்படிக் கவனமெடுத்து எழுதி எழுதித்தான் எனக்கு பாடலோட வடிவம் கைவந்தது. `அழகர்சாமியின் குதிரை' படத்துல `பூவைக் கேளு... காத்தைக் கேளு...' பாட்டை எழுதின போது, `ரொம்ப நல்லா எழுது றடா'னு ராஜா சார் பாராட்டினார். அதுக்குக் காரணம் வித்யாசாகர் கிட்ட கிடைத்த பயிற்சிதான்'' என தான் பாடலாசிரியர் ஆன கதையைச் சொல்கிறார் யுகபாரதி.

“திருமணம் முடிஞ்சு எட்டு வருஷமாச்சு. காலம் ஓடினதே தெரியலை. திருமணம் பற்றி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனா, சீர்திருத்த திருமணம் செய்யணும்கிறதுல உறுதியா இருந்தேன். அன்புச் செல்வியோட அப்பா இறந்துட்டார். அம்மா ஆசிரியை. நான் சினிமாவுல இருக்கிறதால, சின்னப் பதற்றம் அவங்களுக்கு இருந்தது. அன்புச் செல்விக்கு சினிமா, கவிதை, இலக்கியம் பற்றி எல்லாம் பெரிய புரிதல் இல்லை. `பாட்டு எழுதுற துன்னா என்ன?'னு கேட்டாங்க. அது எனக்கு வசதி யாவும் இருந்தது. எந்தவிதத்துலயும் என் இயல்புகள் பாதிக்காம என்னைக் கவனிச்சுக்கிறாங்க. இந்த எட்டு வருஷத்துல என் வாழ்க்கை ரொம்பவே மாறியிருக்கு'' என்கிறார் யுகபாரதி.

யுகபாரதியின் மனைவி, முன்னாள் பள்ளி ஆசிரியை. மகள் காவ்யா, இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

“சினிமாவுல இருக்கிறவர். ரொம்ப பந்தாவா இருப்பார்னு எதிர்பார்த்தோம். பெண் பார்க்க வந்தப்போ, ரொம்ப எளிமையா வந்தாங்க. `தனியாப் பேசணும்'னு சொன்னாங்க. அதுவே எனக்குப் புதுசா இருந்தது. `புடிச்சிருக்கானு கேட்பாரு... பதில் சொல்லு'னு எல்லாரும் சொல்லி அனுப்பினாங்க. ஆனா, அப்படி எதுவுமே கேட்கலை. `என்னைப் பார்க்க எளிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க. முகம் கோணாம அவங்க எல்லாரையும் வரவேற்று உபசரிக் கணும்'னு சொல்லிட்டுச் சிரிச்சுக்கிட்டே கிளம் பிட்டாங்க. அதுவே எனக்கு ரொம்பப் பிடிச்சி ருந்தது. சீர்திருத்தத் திருமணம் பற்றி எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. மேடையில் உட்காந்துக்கிட்டு `இன்னும் அய்யர் வரலையே!'னு பார்த்துட்டிருந்தேன். இவங்க தாலி கட்டக்கூட சம்மதிக்கலை. நல்லகண்ணு அய்யாவும் ரஞ்சிதம் அம்மாவும்தான் `தாலி கட்டுப்பா'னு சொல்லி எடுத்துக் கொடுத்தாங்க.

'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்!’

திருமணத்துக்கு அவங்க அடிச்ச பத்திரிகையே ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதுல ஒரு கவிதை எழுதியிருந்தாங்க. இப்பவும் அது எனக்கு மனப்பாடம்.

`தேவதை தேவையில்லை

தெளிந்த நல் வதனம் போதும்

வைர நகையெதற்கு?

வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு

அடிக்கடி திட்ட மாட்டேன்

பாதியாய் இருக்க வேண்டாம்

முழுவதும் நீயே ஆகு

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்

இனிமைதான் ஏற்றுக்கொள்க

வருமானம் பரவாயில்லை

காதலில் விழுந்தேனில்லை

எனவே பிறக்கிற பிள்ளைக்கான

பெயரையும் நீயே இடலாம்

சமயத்தில் நிலவு என்பேன்

சமையலில் உதவி செய்வேன்

எழுதிடும் பாட்டுக்குள்ளே

எங்கேனும் உன்னை வைப்பேன்

ஒரே ஒரு கோரிக்கைதான்


உன்னிடம் வைப்பதற்கு

வேலைக்குக் கிளம்பும்போது

அழுவதைத் தவிர்க்க வேண்டும்

வெறுங்கையோடு திரும்பி வந்தால்

வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!'


இதுக்கு மேல என்ன வேணும்? திருமணம் முடிஞ்சு, சில நாட்கள்லயே சென்னைக்கு வந்துட்டோம். ஆரம்பத்துல சென்னை ரொம்ப மிரட்சியா இருந்தது. எல்லாத்தையும் கத்துக்கொடுத்தாங்க. மகள் காவ்யா பிறந்த பிறகு, வாழ்க்கை இன்னும் ரசனையாகிடுச்சு. அவ மூலமா இப்போ நிறைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. சென்னையும் பழகிடுச்சு.

எந்தப் பாடல் எழுதினாலும், முதல்ல என்னையும் காவ்யாவையும் கூப்பிட்டு பாடிக் காமிப்பாங்க. நான் ஏதாவது கருத்து சொன்னா ஏத்துக்குவாங்க. காவ்யாவும் இவங்களை மாதிரியே இருக்கா. அவர் பாடல் எழுத உட்காரும்போது, இவளும் ஒரு பேப்பரை வெச்சுக் கிறுக்கிக்கிட்டு `நானும் பாட்டு எழுதுறேன்'னு சொல்வா. புத்தகம் படிக்கும்போது, இவளும் ஒரு புத்தகத்தை எடுத்துவெச்சுக்கிட்டு உட்காந்திடுவா. நிறையப் பேசிட்டேன்ல...'' - வெட்கப்படுகிறார் அன்புச்செல்வி.

“சினிமாவுக்கு வந்து 15 வருஷமாச்சு. இந்தக் காலகட்டத்துல நிறைய முயற்சிகள் செஞ்சிருக்கேன். வைரமுத்து மிகப்பெரிய மொழிப்புரட்சியே செய்தவர். நாங்க எதைச் செஞ்சாலும் அதை வைரமுத்துவோட ஒப்பிட்டுக்கிட்டே இருப் பாங்க. இந்த அடையாளத்தை கடந்து எனக்கான ஒரு தீவிர மொழிக்காக நிறைய உழைச்சிருக்கேன்.

எல்லா பாடலாசிரி யனுக்குமே, ஒரு தோழனா தன்னை முன் நிறுத்தக்கூடிய இசையமைப்பாளர் தேவைப்படுவார். கண்ண தாசனுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மாதிரி, வைரமுத்துவுக்கு இளையராஜா, ரஹ்மான் மாதிரி, தாமரைக்கு ஹாரிஸ் மாதிரி, முத்துக்குமாருக்கு யுவன்ஷங்கர் ராஜா மாதிரி எனக்கு இமான். அவர்கூட நான் சேர்ந்து பணியாற்றிய 200 பாடல்களில் 190 பாடல்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கு. தமிழ் இசை மேலே இமானுக்குப் பெரிய பற்றும் ஞானமும் உண்டு. ஒரு படத்துல குறைந்தது ஒரு நாட்டுப்புற பாடகரையாவது அறிமுகப்படுத்தணும்னு தீவிரமா இருப்பார்.

இன்னைக்கு சினிமா பாடலாசிரியர்கள் மேல நிறைய விமர்சனங்கள் இருக்கு. சினிமாங்கிறது ஒரு வணிகம் சார்ந்த கலை. சமரசம் இல்லாம யாரும் இங்கே வாழவே முடியாது. ஒரு கவிஞன் தன் தன்மையோடவே திரையுலகத்தில் இயங்க வாய்ப்பு இல்லை. ஒரு பாடல், அந்தந்தக் கதாபாத்திரங்களோட குரல்; பாடலாசிரியரோட குரல் இல்லை. திரைப் படத்துக்குப் பாடல் எழுதுறது, ஒரு தொழில். அவ்வளவுதான். இதைக் கலை இலக்கியத்தோடு போட்டு குழப்பிக்கக் கூடாது. கவிதை வேறு... பாடல் வேறு.

ஒரு பாடலாசிரியன், கவிஞனா இருக்கவேண்டிய அவசியமே இல்லை. ரெண்டும் வெவ்வேறு துறை. ஒரு கவிதைப் புத்தகம்கூட போடாத பாடலாசிரியர்கள் நிறையப் பேர் தமிழ் சினிமாவுல மிகப்பெரிய பங்களிப்பு செஞ்சிருக்காங்க. டி.ராஜேந்தர், ஆபாவாணன், உதயகுமார் எல்லாம் எவ்வளவோ நல்ல பாடல்கள் எழுதியிருக்காங்க. நான் சிறந்த கவிஞனா இல்லையா என்பதை, என் கவிதைத் தொகுப்புகளை வைத்துத்தான் பேசணும். என் திரைப் பாடல்களை மட்டுமே வைத்து வெச்சுப் பேசக் கூடாது.

ஒரு சமூகம், தன் கலை, பண்பாட்டு அடை யாளங்களில் ஒன்றாகத்தான் சினிமாவைப் பார்க்கணும். ஆனா, தமிழ்ச் சமூகம் அப்படிப் பார்க்கலை. கேளிக்கைகளில் ஒண்ணா பார்க்குது. அதனால் அதுக்குக் கொண்டாட்டம் தேவைப் படுது. `மன்மத ராசா...' பாட்டு எழுதின பிறகுதான் எனக்கே நிலையான இடம் கிடைத்தது. கொண்டாட்டத்துக்கான பாடல் மட்டுமே இங்கே வரவேற்கப்படுது. இங்கு இருக்கும் ஆடியோ கம்பெனிகள்தான், இங்கே என்ன மாதிரி பாடல்கள் வரணும்னு தீர்மானிக்கிறாங்க. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்களும் ஃபைனான்ஸியர்களும்தான் என்ன மாதிரியான சினிமா வரணும்னு தீர்மானிக்கிறாங்க. இங்கு இருக்கும் படைப்பாளிங்க, அவர்களை மீறி எதுவும் செய்ய இயலாதவர்களா இருக்காங்க. நல்ல படம் எடுத்துட்டு, இங்கே ரிலீஸ் செய்ய முடியாது. நல்ல பாட்டு எழுதிட்டு தொடர்ச்சியா பாடலாசிரியரா இருக்க முடியாது. இதை எல்லாம் கடந்து, ஒரு சமூக மனிதனா குறைந்தபட்சப் பொறுப்புஉணர்வோடு இயங்கிட்டிருக்கேன்.

இதுவரைக்கும் ஏறக்குறைய 1,000 பாடல்கள் எழுதியிருப்பேன். அப்பா, நான் எழுதுற எல்லா பாடல்களையும் கேட்கிறார். என் மகள், `இது என் அப்பா எழுதிய பாடல்'னு மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும். அந்தப் பொறுப்புஉணர்வு எனக்கு இருக்கு'' என்று மகள் காவ்யாவை அன்போடு அணைக்கிறார் யுகபாரதி!