Published:Updated:

பிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்!

பிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்!

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

பிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்!

`‘நடிக்கிற உன்னையும் அழவெச்சு, பார்க்கிற ஊர் உலகத்தை எல்லாம் அழவைப்பார். பயங்கரக் கோபக்காரர். ஷூட்டிங் ஸ்பாட்ல அடி பின்னி எடுப்பார். ஏன் ரிஸ்க் எடுக்குற? சொல்லாமக் கொள்ளாம அமெரிக்காவுக்கே எஸ்கேப் ஆகிடு’ - இவை எல்லாம், பாலா சார் படத்தில் நடிக்க நான் கமிட் ஆகியிருக்கேன்னு தெரிஞ்சதும் என் ஃப்ரெண்ட்ஸ், ரிலேஷன்ஸின் ரியாக்‌ஷன்ஸ். பொதுவாவே அவருக்கு அப்படி ஒரு டெரர் இமேஜ் இருக்கு. அவர் படங்கள் எல்லாம் சீரியஸாவே இருக்கிறதும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனா, அவரை அவங்க பார்க் கிறதுக்கும், நான் நேரில் பார்த்துப் பழகுறதுக்கும் அப்படி ஒரு வித்தியாசம். காரணம், நான் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். ‘நீயும் எனக்கு ஒரு மகள் மாதிரி தான்’னு அடிக்கடி சொல்வார். எங்க அப்பா, என்னை அடிக்க மாட்டார். அதேமாதிரி பாலா சாரும் என்னை அடிக்க மாட்டார்னு நம்புறேன்” - `சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதி, இப்போது இயக்குநர் பாலாவின் புது ஹீரோயின்.

‘‘நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்கள்ல ஆனந்தி அக்காவும் ஒருத்தவங்க. நான் சூப்பர் சிங்கர்ல கலந்துக்கிட்ட அந்த நாட்கள்ல என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. எனக்கு வோட்டு போடச்சொல்லி தன் நண்பர்கள், உறவினர்கள் பலருக்கும் அவங்க மெசேஜ் அனுப்பியிருக்காங்க. அப்படித்தான் அவர் தன் உறவினர் பாலா சாருக்கும், ‘ப்ளீஸ் அண்ணா... பிரகதிக்கு வோட் பண்ணுங்க’னு மெசேஜ் அனுப்பியிருக்காங்க. அதுவரை நான் பாலா சாரைப் பார்த்ததோ பேசினதோ இல்லை. ஆனால், நான் பாடுறதை டி.வி-யில் பார்த்துட்டு எனக்கு வோட்டு போட்டிருக்கார். ஃபைனல் முடிஞ்ச அன்னைக்கு நான் ரெண்டாவது இடத்துக்கு வந்த வருத்தத்தில் இருந்ததை, ஆனந்தி அக்கா பாலா சாரிடம் சொல்ல, ‘நாளைக்கு காலையில சாங் ரிக்கார்டிங். அவளை நல்லா தூங்கி எழுந்து வரச்சொல்லு. அவளை என் படத்துல பாட வைக்கிறேன்’னு அடுத்த நாளே ‘பரதேசி’ படத்தில் என்னைப் பாடவெச்சார். அவ்வளவு பெரிய டைரக்டர், என் வருத்தத்தைப் போக்க, தன் படத்தில் பாட வைக்கிறார்ங்கிறது எவ்வளவு பெரிய விஷயம். எனக்கு அதுவே மிகப்பெரிய ஷாக். அதுவும் போட்டிக்கு மறுநாளே சினிமாவில் பாட வாய்ப்பு. இப்ப தன்னோட அடுத்த பட ஹீரோயினா நடிக்கணும்னு கூப்பிட்டது, இன்னும் பெரிய சர்ப்ரைஸ். `சாட்டை’ படத்தில் நடித்த யுவன்தான் இதில் ஹீரோ!’’

‘‘பாட்டு ஓ.கே. ஆனால், எந்த நம்பிக்கையில் உங்களை நடிக்கக் கூப்பிட்டார்?’’

‘‘பாடுவது எனக்கு இயற்கையா வர்ற விஷயம். அதனால் நல்லா பாடிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. ஆனால், நடிப்பு எந்த அளவுக்கு வரும்னு எனக்கே தெரியாது. ‘என்னை எப்படி சார் செலெக்ட் பண்ணுனீங்க?’னு திரும்பத் திரும்பத் தைரியமா அவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேன். ‘என்னை எதுக்கு இப்ப இன்டர்வியூ பண்ணிட்டிருக்க? உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை நான் மதிக்கிறேன். உனக்குப் பாடுறதே ஈஸியா வருது, நடிக்கிறது அதைவிட ஈஸி’னு என்னைத் தைரியப்படுத்தினார்.”

‘‘நீங்க அமெரிக்காவில் வளர்ந்த பெண். ஆனால், பாலாவின் ஹீரோயின்கள் வேற லெவல். எப்படிப் பொருந்துவீங்க?’’

‘‘அதையும் கேட்டேனே. ‘நீ எத்தியோப்பியாவுல பிறந்தாலும் சரி... சோமாலியாவுல பிறந்தாலும் சரி... என் கேரக்டருக்குப் பொருத்தமான முகமானு மட்டும்தான் நான் பார்க்கிறேன். திரையில் ஜனங்களும் உன்னை அப்படித்தான் பார்ப்பாங்க’னு சொன்னார்.’’

‘‘இந்தக் கதையில், கேரக்டரில் அப்படி என்ன ஸ்பெஷல்?”

‘‘அமெரிக்காவில் உள்ள என் அப்பாகிட்ட, ‘பாலா சார் நடிக்கக் கூப்பிட்டிருக்கார்’னு சொன்னேன். அவருக்குப் பயங்கர சர்ப்ரைஸ். ‘படம் பேர் என்ன?’னு கேட்டார். ‘தெரியாது’ன்னேன். ‘என்ன கதை’னு கேட்டார். அதுக்கும் ‘தெரியாது’ன்னேன். ‘உன் கேரக்டராவது தெரியுமா?’ன்னார் ‘அதுவும் தெரியாது’ன்னேன். இப்படி எது கேட்டாலும் ‘தெரியாது’னு சொன்னதும் சிரிச்சுட்டார். ‘என்ன கதை, கேரக்டர்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லாரும் ஆர்வமா இருக்காங்களே’னு நினைச்சு நானும் ஆர்வக்கோளாறுல பாலா சார்கிட்ட ‘என்ன கதை சார்?’னு கேட்டேன். அதுக்கு அவர், ‘என்னம்மா நான் வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன். தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?’ன்னார். ‘இனிமே இவர்கிட்ட எதுவுமே கேட்கக் கூடாது’னு அப்பவே முடிவு எடுத்துட்டேன்.”

பிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்!

‘‘ஆனால், அவர் தன் ஹீரோயின்களை லூஸுப் பெண்ணா நடிக்கவைப்பாரே?’’

‘‘ஆமாம்... அந்த விஷயத்தில்தான் எல்லாரும் என்னைப் பயமுறுத்தினாங்க. ‘ஐயய்யோ பிரகதி, நல்லா பாடுறியே...உன்னையப்போய் ஊமையா நடிக்க வெச்சுடப்போறார்’னு பயமுறுத்தினாங்க. அவர் ஆபீஸ்ல குத்துவிளக்கு, சாமிப்படம் இருக்கும்னு பார்த்தா, ‘நான் கடவுள்’ படத்துல பயன்படுத்தின எலும்புக் கூடு மாலையையும் சாட்டைக் கம்பையும் வெச்சிருக்கார். கொஞ்சம் உதறலாத்தான் இருக்குது. தற்செயலா பாலா சாரைப் பார்க்க வந்திருந்த ‘தாரை தப்பட்டை’யில் நடிச்ச வரலட்சுமி அக்காட்ட பேசிட்டிருந்தேன், ‘அட... அவர் ரொம்ப நல்ல மனுஷன்ப்பா. ஜாலியான ஆள்’னு சொன்னாங்க. ‘ஆனா, அவர் பட மேக்கிங் வீடியோவை எல்லாம் பார்க்கும்போது அப்படி எல்லாம் தோணலையேக்கா’ன்னேன். சிரிச்சுட்டாங்க. ‘சரிதான், ஒரு அட்வென்ச் சருக்குத் தயாராகிட வேண்டியதுதான்’னு முடிவெடுத்துட்டேன்.”

“ரொம்ப நாளைக்குப் பிறகு கர்னாட்டிக் பாடத் தெரிஞ்ச ஒரு ஹீரோயின். இந்தப் படத்துல நீங்க பாடுவீங்களா?’’

‘‘இதையேதான் பாலா சாரும் சொன்னார். ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, எஸ்.வரலட்சுமி, பானுமதினு இவாள்லாம் கர்னாட்டிக் மியூஸிக் பாடிண்டே நடிக்கவும் செஞ்சா. அவாளுக்கு அப்புறம் அந்த அதிர்ஷ்டம் நோக்குத்தான் அடிச்சிருக்கு’னு சொல்லி கன்ட்ரோல் பண்ண முடியாம சிரிச்சார். எங்க அப்பாவுக்கு நான் பாடிட்டே இருக்கணும்னு ஆசை. ஆனால் நான் நடிப்பு ஆர்வத்துல பாடுறதை விட்டுடுவேனோனு அவருக்குப் பயம். ‘இந்தப் படத்துல பாடவும் வாய்ப்பு கிடைக்குமா?’னு பாலா சாரிடம் கேட்டிருக்கேன்.‘பார்ப்போம்’னு சொல்லியிருக்கார்.”


“படிப்பா, நடிப்பா... என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”

“எனக்கு ரெண்டுமே முக்கியம்தான். அமெரிக்காவுல ஒரு ஃபிலிம் ஸ்கூல்ல சேர்ந்திருக்கேன். செப்டம்பர் மாதம் காலேஜ் ஆரம்பிக்குது. இந்த ஷூட்டிங்குக்காக பாலா சார் பேரை யூஸ் பண்ணி, ஜனவரி மாதம் வரை லீவு கேட்டிருக்கேன். ‘காலேஜ்ல ஒரு செமஸ்டர்ல என்ன பண்ணுவியோ, அதைத்தான் பாலா சார் ஷூட்டிங்ல பண்ணப்போறோம்கிறதை மனசுல வெச்சுக்க’னு, அப்பா அங்க இருந்து அட்வைஸ் பண்ணினார். இங்க எப்பயாவது பாலா சார் வீட்டுக்குப் போவேன். அவர் மகள் ப்ரார்த்தனா, அப்பா மாதிரியே என்னை நடிகையாக்கிப் பார்க்கணும்னு ஆசைப்படுறா போல. நான் எப்ப போனாலும் தலைவாரி, லிப்ஸ்டிக் போட்டுனு எனக்கு மேக்கப் பண்ணிப் பார்க்கிறதுல, அவளுக்கு அவ்வளவு இஷ்டம். அப்ப பாலா சார், ‘இங்க பாரு என் மக உனக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்குறா. ஆனா, நீ என் மகளை உன்னை மாதிரியே ஒரு நல்ல பாடகியா ஆக்கிக் காட்டணும்’னு அன்புக் கட்டளை போட்டிருக்கார். இப்ப நான் ஹீரோயினா மட்டும் இல்ல, பாட்டு டீச்சராவும் மாறணும். பொறுப்பு ரொம்பக் கூடிடுச்சு சார்!”