லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இருமுகன் - சினிமா விமர்சனம்

இருமுகன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இருமுகன் - சினிமா விமர்சனம்

இருமுகன் - சினிமா விமர்சனம்

இருமுகன் - சினிமா விமர்சனம்

மீண்டும் ஒருமுறை, ஒற்றை ஆளாக உலகத்தைக் காப்பாற்றுகிறார் தமிழ்நாட்டு நாயகன்... அவனே `இருமுகன்'.

`வானத்தைப்போல' விஜயகாந்தாக வாழும் டம்மிமேனை, ஐந்து நிமிடங்களுக்கு `நரசிம்மா' சூப்பர்மேனாக மாற்றும் பயங்கர மருந்தைக் கண்டுபிடிக்கிறார் வில்லன் லவ் விக்ரம். மனைவியைக் கொன்றதால் மறைந்து வாழ்கிறார் அண்டர்கவர் ஆபீஸரான ஹீரோ விக்ரம். சூப்பர்மேன் மருந்தால் உலகுக்கே ஆபத்து வர, அதைத் தடுக்க ஹீரோ விக்ரம் அழைத்துவரப்பட,   வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடுவே பூனை - எலி விளையாட்டு தொடங்குகிறது. இறுதியில் நன்முக விக்ரம் உலகத்தைக் காப்பாற்றினாரா? `பன்'முக விக்ரமைத் தோற்கடித்தாரா? நாம் எல்லாம் உயிர் தப்பினோமா என்பது க்ளைமாக்ஸ்!

கமல் நடித்த `விக்ரம்' வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நமக்கு எல்லாம் மறந்திருக்கும் என இயக்குநர் நினைத்திருப்பார்போல! நாயகனின், மனைவி ஹனிமூன் பாட்டு முடிந்ததும் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொல்லப்படுவதைக்கூடவா?

எப்போதும்போலவே இதில் ஒரு ரெகுலர் விக்ரம், ஒரு வித்தியாச விக்ரம். ரெகுலர் பாஸ் மார்க் வாங்க, வித்தியாச விக்ரமான லவ்வோ... `தான் ஓரினச் சேர்கையாளரா... திருநங்கையா... பெண்ணா... அல்லது பைத்தியமா... சைக்கோவா?' என்று ஏகப்பட்ட அதிரூபக் குழப்பங்களில் வருகிறார். கதையைத் தேர்வு செய்த பிறகு கொட்டும் உழைப்பில்  கொஞ்சம் கதைத்தேர்விலும் காட்டலாமே விக்ரம்.
நயன் Vs நித்யாமேனன் மோதலில் நித்யாமேனனே முந்துகிறார். நயனுக்கு இருந்த அந்த ஒரு சண்டைக் காட்சியையும் வெட்டிவிட்டார்கள் போல! பாடல் காட்சிகளில் ரெகுலர் டான்ஸுக்கு மேல் நயன்   பயன்படவில்லை.

`அரிமா நம்பி'யில் நம்பிக்கை கொடுத்த  இயக்குநர் ஆனந்த் ஷங்கர், பெரிய பட்ஜெட், நட்சத்திரப் பட்டாளம் என்கிற பெரிய சுமையைச் சுமக்க முடியாமல் திணறியிருக்கிறார்.

இருமுகன் - சினிமா விமர்சனம்ஸ்பீடு இன்ஹேலரில் டைமர் யாருக்காக? ஆடியன்ஸுக்கா? லவ் இடத்துக்குச் செல்லும் விக்ரம், ஸ்பீடு எடுத்து பட்டையைக் கிளப்புகிறார். லவ்வின் ஆட்களிடம் ஸ்பீடு இருக்காதா? ஏன் அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை? மருத்துவமனைக் காட்சியில் ஏதோ ஒரு கெமிக்கல் பேரைச் சொல்லி, அதனால் விறைத்துப் போகிறார்கள் என்கிறீர்கள் சரி. அப்படி என்றால், மந்திரியின் இடது கை மட்டும் எப்படி நோட்ஸ் போடுகிறது? ஒரு லோடு கேள்விகள் இருக்கு பாஸ்!

`ஹலெனா' பாட்டு மட்டும் வைரல் ஹிட். மற்றவை எல்லாம்... ம்ம்ம்ம். நறுக் நறுக் ஷாட்களால் வேகம் குறையாமல் படத்தைக் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். 

கொஞ்சமாவது நம்பும்படி கதை சொல்லியிருந்தால், `இருமுகன்' இன்முகனாகி இருப்பான்!

- விகடன் விமர்சனக் குழு