லைஃப்ஸ்டைல்
Published:Updated:

‘நீயே என் கடவுள்!’

‘நீயே என் கடவுள்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘நீயே என் கடவுள்!’

பா.விஜயலட்சுமி, படம்: சு.குமரேசன்

‘நீயே என் கடவுள்!’

``புது ஹேர்கட் நல்லா இருக்குல்ல?''-  இளமையும் ரகளையுமாக ஹைஃபை புன்னகையோடு வரவேற்கிறார் பூஜா தேவார்யா. `மயக்கம் என்ன', `இறைவி', `குற்றமே தண்டனை' என மூன்று படங்களிலும் கெத்து காட்டியவர் பூஜா!

``நான் பிறந்தது பெங்களூரு. ஆனால் ஸ்கூல், காலேஜ் எல்லாமே சென்னைதான். மெட்ராஸ் போட் கிளப்ல படகுப் போட்டிகள்ல பிஸியா இருப்பேன். ரோயிங்ல தேசிய சாம்பியன். எம்.ஓ.பி காலேஜ்ல விஸ்காம் சேர்ந்தேன். இந்திய அணிக்காக ரோயிங் விளையாட தீவிர பயிற்சியில் இருந்தப்போதான் கால்ல அடிபட்டது. ஒரு வருஷம் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட். ரொம்பவே டிப்ரஸ் ஆகிட்டேன். அதுல இருந்து வெளியே வர, நிறைய தியேட்டர் நாடகங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். `அட, இது நல்லாருக்கே... நாமும் நடிக்கலாமே!'னு ஆர்வம் வர, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன்.''

‘நீயே என் கடவுள்!’

``தனுஷ், செல்வராகவன்னு முதல் படமே பெரிய படம். `மயக்கம் என்ன' பட அனுபவம் பற்றி சொல்லுங்க?''

``தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் `சினிமாவுல ஈஸியா நடிச்சுடலாம்'னு முதல்ல ஒரு எண்ணம் இருந்தது. ஆனால், சினிமாவுக்கு வந்த பிறகுதான் அதோட கஷ்டங்கள் புரிஞ்சது. `மயக்கம் என்ன' பண்ணப்போ இன்னும்கூட குட்டிப்பொண்ணு நான். அஞ்சு வருஷங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் சார் மூலம்தான் `இறைவி'ல ரீ-என்ட்ரி”

`` `இறைவி'யில் ரொம்பவே சவாலான, துணிச்சலான கேரக்டர். அந்த கேரக்டர் பற்றி இயக்குநர் உங்ககிட்ட சொன்னப்போ, உங்க ரியாக்‌ஷன் என்ன?''

``நாடகத்துல ஒரு ரோல் பண்றதுனாக்கூட ரொம்பவே யோசிப்பேன். இந்த கேரக்டர்ல நமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு, நாம நடிக்கிறதால அதுக்கு என்ன வேல்யூ சேரும்னு நிறைய விஷயங்களை எனக்குள்ளேயே பேசி ஒரு தீர்வுக்கு வந்த பிறகுதான் ஓ.கே சொல்வேன். கார்த்திக் சுப்புராஜ் சார் என்கிட்ட கதை சொன்னப்ப, நான் மறுத்துட்டேன். மறுபடியும் ஆபீஸ் கூப்பிட்டு `மலர்' ரோலோட முக்கியத்துவம் பற்றி சொன்னாங்க. இந்த கேரக்டர், படத்துலயே பேசப்படும் கேரக்டரா இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். `மலர்’ கேரக்டர் மாதிரி எத்தனையோ பெண்கள் இருக்காங்க. தங்களோட வாழ்க்கையைத் தாங்களே வடிவமைச்சுக்கிட்டு ரொம்பத் தைரியமா,  வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களோட அந்த கான்ஃபி டென்ஸை என்னால ஸ்க்ரீன்ல கொண்டுவர முடியும்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. ஓ.கே சொல்லிட்டேன்.''

‘நீயே என் கடவுள்!’

``மலர் கேரக்டர் பற்றி நீங்க சொன்னதும் கேட்கத் தோணுது. அவ்வளவு தைரியமா முடிவுகளை எடுக்கிற பொண்ணு, கடைசியில அழற மாதிரி ஒரு சீன் ஏன்?''

``அந்த இடத்துல அவ, அவனுக்காக அழலை. ஒரு பொண்ணு தனக்கான முடிவுகளை எடுக்க நினைக்கிறப்போ, அதை ஆண்கள் புரிஞ்சுக்கிறது இல்லைங்கிற வேதனையின் வெளிப்பாடுதான் அந்த அழுகை.”

`` ‘குற்றமே தண்டனை’ எப்படியான அனுபவம்?”

`` `குற்றமே தண்டனை' எனக்கு ரொம்பவே சவாலான படம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ‘நடிகர் யாரு... நடிகை யாரு?’னு கேட்கிற பழக்கம் இருக்கு. ஆனால், இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் கிடையாது. கதையும் கேரக்டர்களும் தான் முக்கியம். கதை படிக்கிறப்போ எப்படி ஹீரோ, ஹீரோயின்னு தனித்தனியா பார்க்க மாட்டோமோ, அப்படித்தான் இந்தப் படமும். ஒவ்வொருத் தருக்கும் தனித்தனி அடையாளங்களை சரியா கொடுத்திருக்கு. இதில் என் கேரக்டர் பெரும்பாலும் உடல்மொழியில் பேசுறதாத்தான் இருந்தது. பெருசா டயலாக்ஸே இருக்காது. அதே சமயம் ஓவர் நடிப்பும் இருக்காது. `ரொம்ப நல்ல நடிச்சிருக்க'னு என் நண்பர்கள் பாராட்டினாங்க. செம சந்தோஷம். நான் ஒரு முழு நடிகையா கிட்டேன்னு ரொம்பப் பெருமையா இருந்தது.''

`` ``இந்த மாதிரியான கேரக்டர்கள் கிடைச்சா பண்ணுவேன்'னு நீங்க நினைக்கும் கதாபாத்திரங்கள் எவை?”

``இப்ப எல்லா இயக்குநர்களுமே வித்தியாசமான கதைகளோடுதான் வர்றாங்க. ‘குற்றமே தண்டனை’யே சரியான உதாரணம். ‘டனல் விஷன்’ எல்லாம் கூகுளில்கூட நமக்குத் தெரியாத விஷயம். அதைப் பிடிச்சு மணி சார் கதை ரெடி பண்ணியிருந்தார். புதுசு, புதுசான கேரக்டர்களோடுதான் இனி இயக்குநர்கள் படம் எடுப்பாங்க. எனக்கும் இந்த கேரக்டர் எல்லாம் நடிக்கணும்னு லிஸ்ட் போடத் தேவை இருக்காது. நிச்சயம் நல்ல நல்ல கேரக்டர்ஸ்ல நடிச்சுட்டே இருப்பேன்.”

‘நீயே என் கடவுள்!’

``தனுஷ், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ்னு பிரபலமான நடிகர்களோடு நடிச்சிருக்கீங்க. அவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டீங்க?”

``அவங்ககிட்ட ஒரு ஒற்றுமை இருக்கிறதைப் பார்த்தேன். எந்த மாதிரியான உணர்ச்சிகளை, நடிப்பைக் காட்டணுமோ, அதை கரெக்ட்டா கேமராவுக்குள் அடக்கும் திறமை அவங்களுக்கு உண்டு. அவங்க எல்லாமே எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்ஸ்.''

``பூஜா சரி... அது என்ன தேவார்யா?''

``என் தாத்தாவோட பேர் அது. தமிழில் ‘நீயே என் கடவுள்’னு அர்த்தம். என் பேரோடு சொல்லும்போது ‘தேவார்யா'னு சொல்லணும். ஓ.கே-வா?”

நீ கலக்கு ராசாத்தி!