Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 19

குறும்புக்காரன் டைரி - 19
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 19

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 19

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 19
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 19
குறும்புக்காரன் டைரி - 19

சினிமாவிலும் கார்ட்டூன்களிலும் ஹீரோ, வில்லனைத் துரத்தும் காட்சிகளைப்  பாக்கும்போது உடலில் ஓடும் ரத்தம், ரசம் மாதிரி சூடாகும். உள்ளங்கை நரம்பு வழியா சுர்ருனு உச்சந்தலைக்கு வந்து நிற்கும். அவ்வளவு பரபரப்பா பார்ப்பேன். இன்னைக்கு அப்படி ஒரு விஷயத்தை நானே செய்வேன்னு நினைக்கவே இல்லை.

ஜெகனோடு ஸ்கூலுக்கு வந்துட்டு இருக்கும்போது, ‘டேய் கிஷோர், இன்னைக்கு ஜியாகிரபில மேப் டெஸ்ட். காவேரி ஆறு எங்கேடா வரும்?’ எனக் கேட்டான்.

‘காவேரி எங்கேடா வருது? சின்னப் பசங்க அரசியல் பேசக் கூடாதுடா’னு சொன்னேன்.

அப்போ, பின்னாடி இருந்து ஓடிவந்த ரித்தேஷ், ‘டேய், நம்ம குமாரை யாரோ ரெண்டு பேர் கடத்திட்டுப் போறாங்க’னு பதற்றத்தோடு சொன்னான்.

‘ச்சே... டெஸ்ட்ல இருந்து தப்பிச்சுட்டான். எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காம போச்சே’னு சொன்ன ஜெகன் தலையில் தட்டினேன்.

‘என்னடா சொல்றே? யாரு கடத்தினாங்க? நீ எங்கே பார்த்தே?’னு கேட்டேன்.

‘நம் ஆரிப் பாய் கடைக்குப் பக்கத்துல வந்துட்டு இருந்தவனை, ரெண்டு பேர் தூக்கி ஒரு வேனில் போட்டுட்டுப் போனாங்க’னு நடுங்கிக்கிட்டே சொன்னான் ரித்தேஷ்.

‘சீக்கிரம் வாங்கடா, அவனை தேடிக் கண்டுபிடிப்போம்’னு பரபரப்பானேன். முதல் வரியில் சொன்ன ரத்தம் - சூடு - உள்ளங்கை - உச்சந்தலை விஷயம் நடக்க ஆரம்பிச்சது. பேக்கிரவுண்டு  மியூஸிக்கையும் கற்பனை பண்ணிக்கிட்டேன்.

‘என்னது... நாமே எப்படிடா கண்டுபிடிக்கிறது?’னு நடுங்கினான் ரித்தேஷ்.

‘நான் ஒரு டிடெக்டிவ். போன வாரம் தொலைஞ்சுபோன ராஜேஷின் பென்சிலைக் கண்டுபிடிச்சேனே, அப்பவே இந்த உலகம் என்னை டிடெக்டிவா ஏத்துக்கிச்சு. அதுக்கப்புறம், ஹரிணியோட மேத்ஸ் புக்ல யார் கிறுக்கினான்னு கண்டுபிடிச்சேனே மறந்துட்டீங்களா? அந்த வரிசையில் கடத்தப்பட்ட குமாரைக் கண்டுபிடிக்கலாம். அதுவும் இல்லாமல் உனக்கு மேப் டெஸ்ட்டை கட் அடிக்கணுமா... வேணாமா?’னு கேட்டேன்.

அவன் கண்ல பல்பு எரிஞ்சது. ‘சூப்பர்! இப்பவே கிளம்பலாம். இந்த மாதிரி தினம் ஒருத்தனை கடத்திட்டுப்போனா எல்லா டெஸ்டையும் கட் அடிக்கலாம்’னு சொன்னான்.

குறும்புக்காரன் டைரி - 19

ரித்தேஷ் கடுப்பாகி, ‘புரியாமப் பேசாதீங்கடா. குமாரைக்் கண்டுபிடிக்கலைன்னாலும் பரபரப்பாகி, ஸ்கூலே நடக்காது’னு சொன்னான்.

‘அட, ஆமாம். வாங்க, திரும்பிடலாம்’னு சொன்ன ஜெகன் சட்டையைப் பிடிச்சு நிறுத்தினேன்.

‘இப்படி பேச உனக்கு எப்படிடா மனசு வருது. அவன் நம்மோட கிளாஸ்மேட். ஒரு  அநியாயம் நடந்தா, ரத்தம் கொதிக்கணும்டா. அதுதான் ரத்தம். இல்லைன்னா, கார்பரேஷன் தண்ணி’னு சொன்னேன்.

வில்லன்கிட்டே அடி வாங்கி, மூக்குல ரத்தம் வந்த ஹீரோ மாதிரி ஜெகனுக்கு ரோஷம் வந்துச்சு. பரபரப்போடு பாய் கடைக்குப் போனோம்.

‘அங்கிள், இந்தப் பக்கம் ஒரு வேனில் பையனைக் கடத்தினாங்களே, அந்த வேன் எந்தப் பக்கம் போச்சு?’னு கேட்டான் ரித்தேஷ்.

‘என்னது கடத்தினாங்களா? நான் கவனிக்கலையே. ஒரு சிவப்பு கலர் வேன் கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்து கிளம்பிச்சு. வேனின் கதவு அந்த சைடுல இருக்கிறதால நடந்ததை  கவனிக்கலை. அந்த வண்டி பிருந்தாவன் காலனிக்குப் போயிருக்கும்’ என்றார்.

மூணு பேரும் ஆச்சர்யமாகி, ‘உங்களுக்கு எப்படி அங்கிள் தெரியும்?’னு கேட்டோம்.

‘அந்த வண்டி நின்னுட்டு இருந்தப்போ, அதுல இருந்த ஒருத்தன் பிருந்தாவன் காலனிக்கு எப்படிப் போகணும்னு கேட்டான்’ என்றார்.

‘அப்படின்னா, கடத்தினவங்க ஏரியாவுக்குப் புதுசு. இதுல மூணாவது ஆளுக்கு லிங்க் இருக்கு. அவன் இடத்துல குமாரை அடைச்சு வெச்சுருக்காங்க. அதுதான் பிருந்தாவன் காலனி’னு படபடப்போடு சொன்னேன்.

‘வாவ்... ஷெர்லாக் ஹோம்ஸைவிட ஃபாஸ்ட்டா இருக்கேடா’னு வாயைப் பிளந்தான் ரித்தீஷ்.

‘பாராட்டு எல்லாம் க்ளைமாக்ஸ்ல. இப்போ கடமையைச் செய்வோம் கமான்’னு சொல்ல,  கொஞ்ச நேரத்தில் பிருந்தாவன் காலனியில் மூச்சிரைக்க வந்து நின்னோம்.

‘இந்த ஏரியால பாழடைஞ்ச பங்களா எங்கே இருக்குனு தேடுவோம். அதுதான் காலங்காலமா கடத்தல் வில்லன்களோட லொக்கேஷன்’னு ஜெகன் சொல்ல, ‘டேய், அந்த வேன்லதான் தூக்கிட்டுப் போனாங்க’னு ஒரு வீட்டு வாசலில் இருந்த வேனைக் காட்டினான் ரித்தீஷ்.

பாழடைந்து இல்லை; நார்மல் வீடுதான். மெதுவாக வீட்டை நெருங்கினோம். ‘அதிரடியா உள்ளே புகுந்துடலாமா?’னு முஷ்டியை முறுக்கினான் ஜெகன்.

இருடா... ஹீரோ நானே சும்மா இருக்கேன். நீ ஆக்‌ஷன்ல இறங்கறேனு சொல்றியே. வெயிட் பண்ணலாம்’னு சொல்லிட்டு இருக்கும்போதே, வாசல் கதவு சடார்னு திறந்துச்சு.

குறும்புக்காரன் டைரி - 19

வெடவெடனு ஒல்லியா இருந்த ஒருத்தர், ‘ஏய்... நீங்க குமார் ஃப்ரெண்ட்ஸா? ’னு கேட்டுக்கிட்டே எங்களை உள்ளே இழுத்து கதவைச் சாத்தினார்.

உள்ளே இரண்டு பேர் சோகமா உட்கார்ந்திருந்தாங்க. பெரிய சாக்லேட்டோடு சோபாவில் சாய்ஞ்சுக்கிட்டு இருந்த குமார், ‘‘ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... வாங்க. மாமா, இவங்களுக்கும் ஜூஸ் வாங்கிட்டு வாங்க’ என்றான்.

எங்களுக்கு திகில் பாதி; குழப்பம் மீதி. ‘என்னடா நடக்குது இங்கே?’னு கேட்டேன்.

அந்த வெடவெட அங்கிள், ‘தம்பி, நான் இவனோட மாமா. இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ். என் பையனுக்கு நாளைக்கு காதுகுத்து வெச்சிருக்கோம். மொத்த ஃபேமிலியும் இன்னைக்கு மத்தியானம் கிளம்பி, திருச்செந்தூர் போறோம். இவன் என்னடான்னா, ‘எனக்கு படிப்புதான் முக்கியம். டெஸ்ட் இருக்கு. லீவு போட்டுட்டு வர முடியாது’னு சொல்லிட்டான். என் பையன், இவன் வராம காது குத்திக்க மாட்டேன்னு சொல்றான். அதான், இவனைத் தூக்கிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல பெரிய வேன் வந்ததும் எல்லோரும் கிளம்பறோம். அதுக்குள்ளே சாக்லேட், ஜூஸ்னு கேட்டு என் ஃப்ரெண்ட்ஸை நடையா நடக்க விட்டிருக்கான்’ என்றார் சோகமாக.

‘என்னது... டெஸ்ட் எழுதணும்னு லீவு போட மாட்டேனு சொன்னானா? அடேய்...’னு குமார் மேலே ஜெகன் கொலை வெறியோடு பாய, நாங்க தடுக்க, அங்கே இருந்த அங்கிள்ஸ் எல்லாம் புரியாமல் மிரள.... அவ்ளோதான் குட் நைட்!

(டைரி புரட்டுவோம்...)