Published:Updated:

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

மனம் திறக்கிறார் தனுஷ்ம.கா.செந்தில்குமார், படம்: ஸ்டில்ஸ் ராபர்ட்

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

மனம் திறக்கிறார் தனுஷ்ம.கா.செந்தில்குமார், படம்: ஸ்டில்ஸ் ராபர்ட்

Published:Updated:
“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”
“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

‘‘எனக்கு பிரபுசாலமன் சாரின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவர்கூட படம் பண்ணணும்னு ஆசை. ஒன்றரை வருடத்துக்கு முன்னாடி சந்திச்சோம். அப்ப அவரின் எனர்ஜியே எனக்கு அவ்வளவு ஆச்சர்யம். அடுத்தவங்களுக்கு நல்லதே நடக்கணும்னு ப்ரேயர் பண்ற நல்ல மனிதர். ‘இந்த பாசிட்டிவ் எனர்ஜிக்காகவே இவரை நம்பி ஒரு படம் பண்ணலாம்’னு இந்த புராஜெக்ட்டை ஒப்புக்கிட்டேன். ‘தொடரி’ கமர்ஷியலாவும் அதேசமயம் கனமாகவும் உணரவைக்கிற மாதிரி வந்திருக்கு’’ - அலுவலக டேபிள் முழுவதும் பல்லவிகளும் சரணங்களும் இறைந்துகிடக்க, தான் இயக்கும் ‘பவர் பாண்டி’ படத்துக்காக பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் ‘பொயட்’ தனுஷ்.

‘‘நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இப்ப இயக்குநர்...’’

‘‘நான் ஆசைப்பட்டு இங்கே வரலை. ஆனாலும் கடவுள் இதைத்தான் என் துறையா நிர்ணயிச்சு வெச்சிருக்கார். அதன்படி நான் சரியான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கேன். அப்படி வந்த இடம் நமக்குப் பிடிச்ச இடமாவும் அமைஞ்சிருக்கு. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இப்ப டைரக்டர். இப்படி எல்லா வேலைகளையுமே ரொம்பப் பிடிச்சு, ரசிச்சு பண்றேன். இது ஒவ்வொண்ணுக்கும் மிகச்சரியா நேரம் ஒதுக்கி, சரியாப் பிரிச்சுத் தர முடியுது. இருக்கிறதுலயே ரொம்ப கஷ்டமான வேலை டைரக்‌ஷன்தான்கிறது இப்போ இன்னும் அதிகம் புரியுது. அதே நேரத்துல இருக்கிறதுலயே மனசுக்குத் திருப்தி தரக்கூடிய வேலையும் டைரக்‌ஷன்தான்னு தெரியுது.’’

‘‘டைரக்டர் ஆகணும்னு எப்ப முடிவுபண்னீங்க?’’

‘‘டைரக்‌ஷன், ஏழெட்டு வருஷமாவே எனக்குள் இருந்த விஷயம். எல்லா விஷயங்களையும் முழுசாக் கத்துக்க முடியாதுன்னாலும், ஓரளவுக்கு தவறு செய்யாத அளவுக்காவது கத்துக்கிட்ட பிறகு போகணும்னு நினைச்சேன். இந்த எட்டு வருஷங்களா பொறுமையாக் கத்துட்டிருந்தேன். மிகச்சரியா ஒரு படம் பண்ணிடணும்னு நினைச்சேன். `பவர் பாண்டி’ கதையை டைரக்ட் பண்ண இதுதான் சரியான தருணம்னு தோணுச்சு. உடனே தொடங்கிட்டேன்.’’

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

‘‘அண்ணன் செல்வராகவன், உங்க இயக்குநர் நண்பர்கள்... என்ன சொன்னாங்க?’’

‘‘செல்வராகவன் சார் இந்த ஸ்க்ரிப்ட்டைப் படிச்சுட்டு சொன்ன முதல் விஷயம், ‘இந்தக் கதையை எனக்குக் குடுக்கிறியா... இதை நானே எடுக்கிறேன்.' அவர் அப்படிக் கேட்டதே எனக்கான மிகப்பெரிய அவார்டு. அப்ப, ‘செல்வா... உனக்கு ஒரு கதை பிடிச்சிருக்குன்னா, அதுதானே நான் முதல்ல டைரக்ட் பண்ற படமா இருக்கணும்’னு சொன்னேன். அவரோட முதல் ஆசீர்வாதத்தோடு இந்தக் கதையை நான் பண்றேன். வெற்றி மாறன், கேமராமேன் வேல்ராஜ், சுப்ரமணியம் சிவா, டான்ஸ் மாஸ்டர் பாஸ்கர்னு சிலரைப் பார்க்கும்போது, நம்மைச் சுற்றி சில நல்லவங்களும் நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்களும் இருக்காங்களேனு தோணும். வெற்றி மாறன் சாரோடு எனக்கு 13 வருட நட்பு. ‘ரொம்ப நாளா நீங்க நினைச்சிட்டிருந்த விஷயம். பண்ணுங்க’னு உற்சாகப்படுத்தினார். இவங்க எல்லாருடைய நல்ல எண்ணங்களும் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் இருக்கும்போது, நாம எந்த ஒரு விஷயத்தையும் தைரியமா பண்ணலாம்.’’

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

‘‘உங்க அப்பாவின் முதல் பட ஹீரோ ராஜ்கிரண். நீங்க இயக்கும் முதல் படத்துக்கும் அவர்தான் ஹீரோ. இது திட்டமிட்டதா?’’

‘‘இந்தக் கதை ஒரு ஐடியாவா என் மைண்டுக்குள்ள வந்து மூணு வருஷம் ஆச்சு. ‘இந்தக் கதைக்கான நாயகனா யார் இருப்பா?’னு என்னால சரியா கார்னர் பண்ண முடியலை. அப்ப டக்குனு ஒருநாள் ராஜ்கிரண் சார் என் மைண்டுக்குள்ள வந்தார். ‘இந்தக் கதை உருவானதே அவருக்காகத்தான்’னு அப்பதான் புரிஞ்சது. அவர் மட்டும்தான் இதைப் பண்ண முடியும்னு உணர்ந்தேன். ‘கடவுளின் ஆசீர்வாதம் இருந்தா ராஜ்கிரண் சார் இந்தப் படம் பண்ணுவார்’னு நினைச்சேன். ஏன்னா, அவர் 27 வருஷங்கள்ல 27 படங்களே பண்ணியிருக்கார். அவ்வளவு சுலபமா ஒரு கதையை ஏத்துக்க மாட்டார். இந்தக் கதை அவருக்குப் பிடிச்சிருந்தா, ‘நீ டைரக்‌ஷன் பண்ணு’னு கடவுள் எனக்கு கொடுக்கிற குறியீடா நினைச்சுதான் அவரிடம் கதையைச் சொன்னேன். ‘உடனே பண்றேன்’னு ஒப்புக்கிட்டார். அவர் நடிக்க ஒப்புக்கிட்டது இந்தப் படத்துக்கான மிகப்பெரிய ஆசீர்வாதம்.’’

‘‘ராஜ்கிரண் என்ன சொன்னார்?’’

‘‘எங்க அப்பா, அண்ணன் செல்வராகவன், டாக்டர்களா இருக்கிற எங்க அக்கா ரெண்டு பேர், நான்... நாங்க எல்லாருமே இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு பிள்ளையார்சுழி போட்டது ராஜ்கிரண் சார்தான். ஆமாம், இது அவர் கொடுத்த வாழ்க்கை. அவர் மூலமாகத்தான் எங்க அப்பாவுக்கு சினிமாவுல ஒரு என்ட்ரி கிடைத்தது. அந்த நன்றி உணர்வு, எங்களுக்கு என்னைக்குமே உண்டு. சார் என்னை ‘மருமகன்... மருமகன்’னுதான் கூப்பிடுவார். ‘என் மருமகன் என்னை டைரக்ட் பண்றது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!’னு நெகிழ்வா சொல்லிட்டே இருக்கார். இந்தப் படம் ஒரு குடும்பச் சந்திப்பு மாதிரி நெகிழ்வான விஷயம்.’’

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”
“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”
“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

‘‘என்ன திடீர்னு ‘கொடி’யில் அரசியல்வாதியா நடிக்கிறீங்க?’’

‘‘ ‘கொடி’ ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கான ஸ்க்ரிப்ட். நல்ல மாஸ் ஃபிலிம். இப்பதான் படத்தைப் பார்த்தோம். அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ‘ஆடுகளம்’ உள்பட இரண்டு மூன்று படங்கள்ல நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிக்கணும்னு பேசிப் பேசி மிஸ் ஆகிட்டே இருந்தது. அப்பதான், ‘இந்த ரோல்ல த்ரிஷா பண்ணினா நல்லா இருக்கும்’னு டைரக்டர் துரை செந்தில்குமார் சொன்னார். ஏன்னா, அது சும்மா வந்து டூயட் பாடிட்டுப் போற கேரக்டர் கிடையாது. அழுத்தமான பெர்ஃபார்மன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற கேரக்டர். அதை அவங்க முழுமையா உள்வாங்கிட்டு அருமையாப் பண்ணியிருக்காங்க. தீபாவளிக்கு வந்துடுவோம்.’’

‘‘கௌதம் மேனன் படங்கள் பயங்கர ஸ்டைலீஷா இருக்கும். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் உங்களை எப்படிக் காட்டியிருக்கிறார்?’’

‘‘என்னையும் ஸ்டைலா காட்டிடணும்னு அவரால் முடிந்த அளவுக்கு மெனக்கெடுறார். அவரைப் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு. நம்மை லோக்கலாவே பார்த்துப் பார்த்து எனக்கே பழகிடுச்சு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிபண்றார். இதுவரை 80 சதவிகிதம் எடுத்து முடிச்சிருக்கோம். ரொம்ப நல்லா வந்திருக்கு. இன்னும் 15 நாட்கள்தான் அதுக்குத் தேவை. அவர் இப்ப ‘அச்சம் என்பது மடமையடா’ ஃபைனல் வொர்க்ல இருக்கார். அவருக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். படம், அடுத்த வருஷம் சம்மர் ரிலீஸ். அதில் புது தனுஷைப் பார்க்கலாம்.’’

‘‘சமூக வலைதளம் உள்பட பல இடங்களில் எதிரும் புதிரும்னு குறிப்பிடப்படுற உங்களையும் சிம்புவையும் ஒரே சமயத்தில் கௌதம் மேனன் இயக்கிட்டிருக்கார். எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

‘‘சிம்புவை நான் என்னைக்குமே எதிரியா பார்த்தது இல்லை. அவரை நல்ல நண்பராத்தான் பார்க்கிறேன். நான் இந்தப் படம் பண்ணினதில் அவருக்கும் ரொம்ப சந்தோஷம். ‘கெளதம் நல்லா பண்ணுவார். உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்’னு சிம்புதான் சொன்னார். அவர் சொன்ன மாதிரி எனக்கு இது புது அனுபவம்தான். கெளதம் ‘அச்சம் என்பது மடமையடா’ல சிம்புவை ரொம்ப நல்லா காட்டியிருக்கார். ‘இதுல உங்களை நான் ரொம்ப ஃப்ரெஷ்ஷா பார்க்கிறேன்'னு நான் சிம்புகிட்டயும் போன் பண்ணிச் சொன்னேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர், இரண்டு நல்ல நடிகர்களுடன் வொர்க் பண்றார். ‘நல்ல நடிகர்’னு என்னையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன். (சிரிக்கிறார்) இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாத்தான் நான் பார்க்கிறேன்.

‘‘பிரீயட் ஃபிலிம், பெரிய பட்ஜெட், மூன்று பாகங்கள்னு வெற்றி மாறனுடன் நீங்கள் மீண்டும் சேரும் ‘வடசென்னை’ படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கே?’’

‘‘ ‘வடசென்னை’, பத்து வருடங்களுக்கு முன்பே வெற்றி மாறன் என்கிட்ட சொன்ன கதை. அப்ப ‘பொல்லாதவன்’கூட எடுக்க ஆரம்பிக்கலை. ‘ஒரு மகாபாரதம் மாதிரி இருக்கு. இதை ஒரு படத்துல சொல்ல முடியாது. ரெண்டு, மூணு பார்ட் ஆகும். 2010 அல்லது 2011-ல் பண்ணுவோம்’னு பேசினோம். ஏன்னா, அன்னைக்கு தேதியில் அந்த பட்ஜெட்டுக்கான மார்க்கெட் எனக்கு இல்லை. பிறகு ‘அந்த உலகத்தைச் சின்னது பண்ணி நாமளே பண்ணிட லாம்’கிற சூழல் வரும்போது, ‘ரெண்டு படங்கள் நாம தொடர்ந்து பண்ணிட் டோம். ஒரு படம் வெளியில பண்ணிட்டு வர்றேன்’ என்றார் வெற்றி மாறன். பிறகு, ‘வடசென்னை’யேகூட வேறு இடங் களுக்கு எல்லாம் போச்சு. ஆனா, எனக்காக உருவாக்கப்பட்ட கதை, மறுபடியும் என்னிடமே வந்து சேர்ந்துச்சு. 2014-ல் மறுபடியும் பேச ஆரம்பிச்சு, திட்டமிடலுக்கே ஒரு வருஷமாச்சு. இதுக்கு வெற்றி மாறன் சார் பண்ணின ரிசர்ச் மட்டுமே கிட்டத்தட்ட 10 வருடங்கள். எங்க இருவருக்குமே இது ஒரு ட்ரீம் புராஜெக்ட். இது எல்லாரும் திரும்பிப் பார்க்கிற படமா இருக்கும். மூணு பார்ட் பண்றோம். முதல் பார்ட் அடுத்த வருஷம் ரிலீஸ்.’

‘‘ஹாலிவுட்ல கமிட் ஆகியிருக்கும் படம் எப்ப தொடங்குது?’’

‘‘அடுத்த வருட ஆரம்பத்தில் ஷூட்டிங் தொடங்குது. அது அமைஞ்சது ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறையக் கத்துக்க, உலகரீதியா சினிமாவுல என்ன விஷயங்கள் நடக்குதுனு புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க கிடைச்ச நல்ல வாய்ப்பாத்தான் இதைப் பார்க்கிறேன்.’’

‘‘அனிருத் காம்பினேஷன்ல பண்ணின ஆல்பங்கள் எல்லாமே பெரிய ஹிட். ஆனால், அந்த ஜோடி பிரிஞ்சது ஏன்... மீண்டும் சேருவீங்களா?’’

‘‘இப்போ அவர் ரொம்ப பிஸி. அமைஞ்சா பார்க்கலாம். ஷான் ரோல்டனும் ரொம்ப பிஸியா இருகிறவர்தான். ‘பவர் பாண்டி’க்கு முதல் சாய்ஸே ஷான்தான். ‘ஜோக்கர்’ல அவரின் இசையைப் பார்த்து பிரமிச்சுப்போனேன். அதுவும் பின்னணி இசையில் அவர் காட்டிய மெச்சூரிட்டி எனக்கு பெரிய ஆச்சர்யம். இந்தப் படத்தை டைரக்ட் பண்ணணும்னு முடிவு பண்ணினதுமே முதல்ல நினைச்சது ஷான் ரோல்டனைத்தான்.’’

“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை!”

‘‘நீங்க ரஜினியின் அடுத்த படத் தயாரிப்பாளர். இது எப்படிச் சாத்தியமானது?’’

‘‘ஒரு வீடியோ கேமரா, எங்க வீட்ல வேலை செய்றவங்களே நடிகர்கள், நாங்களே ஷூட் பண்ணி, எடிட் பண்ணி, அதை நாங்க மட்டுமே பார்த்துனு பண்ணின குறும்படத்தில், சும்மா விளையாட்டா போட்டதுதான் ‘வொண்டர்பார் ஃபிலிம்ஸ்’. அப்படி 12 குறும்படங்கள் எடுத்து, எல்லாத்துலயுமே அந்தப் பேரைப் போட ஆரம்பிச்சோம். அந்தப் பேரோட ரொம்ப நெருங்கிட்டதால ‘3’ பண்ணும்போது அதையே எங்க பேனருக்கு பேரா வெச்சோம். இன்னைக்கு இந்த பேனர்ல பண்ற எல்லா படங்களும் 95 பெர்சன்ட் வெற்றி. இரண்டு தேசிய விருதுகள் வந்திருக்கு. இந்தச் சமயத்தில் சூப்பர் ஸ்டார், இந்தியாவின் உச்ச நட்சத்திரம் எங்க பேனர்ல ஒரு படம் பண்றார் என்பது மிகப்பெரிய பெருமை; கெளரவம். அடுத்த வருஷம் படம் தொடங்குது. என்ன மாதிரியான படம்னு இதுவரை முடிவாகலை. இயக்குநர் பா.இரஞ்சித் கதை விவாதத்தில் இருக்கார்.’’

‘‘உங்க பேனர்ல நடிக்கிறது பற்றி ரஜினி என்ன சொன்னார்?’’

‘‘கிட்டத்தட்ட அஞ்சு மாசம் முன்னாடியே இந்த விஷயத்தை சார் என்கிட்ட சொன்னாங்க. அதிர்ச்சி, ஆச்சர்யம்னு பயங்கர சர்ப்ரைஸ். அந்தச் செய்தியை ரொம்ப கஷ்டப்பட்டு இதுநாள் வரை ரகசியமா வெச்சிருந்தோம். இது எப்படி நடந்தது என்ற கான்வர்சேஷனை எவ்வளவு தூரம் பேசலாம்னு எனக்குத் தெரியலை. மாமனார்-மருமகன் என்பதைத் தாண்டி, ஓர் அப்பா பிள்ளைக்கு நடுவில் இருக்கும், விஷயமாவும் இதை நீங்க பார்க்கலாம். அந்த வகையில் அது பெர்சனலான, எமோஷனலான ஒரு கான்வர்சேஷன். அதை நான் பகிர விரும்பலை. தவறா நினைக்க வேணாம்.’’

‘‘ஐஸ்வர்யா அடுத்து என்ன படம் பண்றாங்க... மகன்கள் என்ன சொல்றாங்க?’’

‘‘ஐஸ்வர்யாவும் நானும் வீட்லயே நிறையக் கதைகள் பேசிட்டிருக்கோம். டிசம்பர்ல டைரக்‌ஷன் ஆரம்பிக்கிறாங்க. கதை, பெண்களை மையப் படுத்தினதா இருக்கும். குழந்தைங்க, என்னைவிட அவங்க தாத்தா - பாட்டிகூடத்தான் அதிக நேரம் செலவிடுறாங்க. சில சமயங்கள்ல ரெண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் பார்க்க முடியுது. ‘கொடி’ பட ஷூட்டிங் அப்ப 60 நாட்கள் நான் ஊர்லயே இல்லை. சாதாரண வாழ்க்கையைத்தான் என் பசங்க வாழணும்னு நினைச்சு வளர்க்கிறேன். என் சிறு வயது உலகத்தை அவங்களுக்குள் கொண்டுபோக முயற்சிபண்றேன். நான் சந்தோஷப்படுற மாதிரி என் குழந்தைகள் வளருவாங்கனு நம்புறேன்.’’

‘‘அப்போ பார்த்த மாதிரியே இப்பவும் ஒல்லியாவே இருக்கீங்களே. ஃபிட் சீக்ரெட் என்ன?’’

‘‘எவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறோம் என்பதைவிட, எவ்வளவு நாள் ஆரோக்கியமா இருக்கோம்கிறதுதான் ரொம்ப முக்கியம். உங்கள் உடம்பு உங்களை குறைந்தபட்சம் 65 முதல் 70 வருடங்கள் வரை தாங்குதுன்னா, அந்த உடம்புக்காக ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது நீங்கள் செலவு பண்ணியே ஆகணும். எவ்வளவு பிஸியா இருந்தாலும், ஒரு மணி நேரமாவது எக்ஸர்சைஸ் பண்ணுங்க. ஜிம் போய்தான் பண்ணணும்னு இல்லை. வீட்லயே யோகா பண்ணலாம். நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும் உடற்பயிற்சியைத் தவறவிடவே மாட்டேன். என்னை ஃபாலோ பண்ணணும்னு நினைச்சீங்கன்னா, இதை ஃபாலோ பண்ணுங்க.’’

‘‘2002-ல் ‘துள்ளுவதோ இளமை’. இப்ப 2016. 14 வருடங்கள், கிட்டத்தட்ட 40 படங்கள். இந்த டிராவலைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?’’

‘‘கண்ணம்மாபேட்டையில் ஆரம்பிச்சது எங்க அப்பாவின் பயணம். பிறகு கே.கே.நகர், சாலிகிராமம், நெசப்பாக்கம், ராமாவரம், ஆழ்வார்திருநகர்... இவைதான் என் உலகம். இப்பவும் அந்த ஏரியாவுக்கு ஷூட்டிங் போனா, அவ்வளவு சந்தோஷமா இருப்பேன். ‘கொடுமையில் கொடுமை இளமையில் வறுமை’னு சொல்வாங்க. நான் வளரும்போது அப்ப எனக்கு விளையாட ஒரு பலூன் கிடைக்கிறதே பெரிய அபூர்வம். ஆனாலும் நான் ரொம்ப சந்தோஷமான ஒரு குழந்தையாத்தான் இருந்தேன். என் அப்பாவும் சரி, அம்மாவும் சரி 50 பைசாவே பெரிய விஷயமா இருந்த நிலையில் இருந்து, 500 ரூபாய் பாக்கெட் மணி கொடுக்கிற நிலைமைக்கு வர்ற வரை அவங்க சக்திக்கு என்ன முடியுமோ அதைப் பண்ணின பெற்றோர். அந்த வாழ்க்கைதான் நான் எழுதுற பாடல்கள்ல நிறைஞ்சிருக்கு. ஃபன்னுக்கு எழுதுற மசாலா பாடல்களை விட்டுடுங்க. மத்தபடி ‘அம்மா... அம்மா’, ‘பிறை தேடும் இரவிலே...’, ‘போ இன்று நீயாக...’ இந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் அந்த வாழ்க்கையில் இருந்து வர்ற அர்த்தங்கள்தான். நான் ஆறேழு கதைகள் எழுதி வெச்சிருக்கேன். அந்தக் கதைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே அந்த வாழ்க்கையில் நான் பார்த்ததும், அந்த வாழ்க்கை எனக்குக் கத்துக்கொடுத்ததும்தான்.’’