லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

`குறுக்கு வழிகள்தான் தூரம்' என்பதை கவிதையாகச் சொல்லும் அழகியல் அனுபவம், `ஆண்டவன் கட்டளை’.

கடன் கழுத்தை நெரிக்க, குடியுரிமைச் சட்டங்களை மீறி லண்டனுக்குச்  சென்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார் விஜய் சேதுபதி (கூடவே யோகி பாபுவும்). சென்னைக்கு வந்து, சந்திக்கும் தரகர் சொல்லும் எல்லா குறுக்கு வழிகளிலும் புகுந்து பாஸ்போர்ட், விசா எடுக்க முயற்சிக்க, எல்லாமே முட்டுச்சந்தில் போய் முடிகிறது. கடைசியில் கடன் தொல்லையோடு புதிய பிரச்னைகளையும் எப்படிச் சமாளித்தார் என்பதே அருள்செழியனின் நெகிழ்வான கதை.

`அரசு அலுவலக வேலை களுக்கு, தரகர்களை நம்ப வேண்டாம் என்ற சமூக விழிப்புஉணர்வை உருவாக் கவே இந்தப் படம்' என ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார்கள். அதையும் தாண்டி, அழுத்தமாக  நேர்மையாக வாழ்வதன் அவசியத்தையும் அழகையும் சொல்கிறது மணிகண்டனின் திரைப்படம்.

எத்தனை படங்களில் நடிக்கிறாரோ அத்தனை வித்தியாசங்களையும் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. கூத்துப்பட்டறையில் அக்கவுன்டன்ட் போல அவரது நிஜ வாழ்வில் இருந்தே சில விஷயங்களை எடுத்துச் சேர்த்திருப்பது படுசுவாரஸ்யம்.

`இறுதிச்சுற்று’ ரித்திகாவா இது? கோபத்தை மட்டும் ரீடெயின் செய்து அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். இதுதான் சரியான ரூட் தோழி.

‘யோகி பாபு’வின் நகைச்சுவை மட்டும் அல்ல, நடிப்பும் அபாரம். படத்தின் முதல் பாதியை அவரும் சுமக்கிறார். அந்த இலங்கை அகதி தொடங்கி, விசாரணை அதிகாரி, வீட்டு ஓனர் என ஒவ்வொரு நடிகரும் அவ்வளவு ஃபிட்.

`சம்பாதிக்கிறது லண்டன்லயும் சவுதிலயும். ஆனா, முஸ்லிமுக்கும் கிறிஸ்துவனுக்கும் வாடகைக்கு விட மாட்டாங்களா?’, ‘சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கலை. ஒரே ஒரு உண்மைக்கு விசா ரிஜெக்ட்டட்’ என, படம் முழுக்க வாவ் வசனங்கள்!

இவ்வளவு நல்லவரான... திறமையான விஜய் சேதுபதிக்கு, ஊரில் எப்படி அவ்வளவு கடன்?

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

கார்மேகக் குழலி என்ற டூப்ளிகேட் ஐடி தயாரிப்பதில் என்ன சிக்கல்? கதைக்கு முடிவாக வரும் பாஸ்போர்ட் ஆபீஸரின் உதவி, எல்லா சாமானி யர்களுக்கும் கிடைக்குமா? என விடை இல்லா கேள்விகளும் இருக்கின்றன.

மேலே விமானம், கீழே சைக்கிள் என அந்த இரண்டு நண்பர்களின் அறிமுகக் காட்சிக்கோர்வைகள் அசாத்திய அழகு. ஒளிப்பதி வாளர் சண்முகசுந்தரம் அதை இறுதிவரை தொடர்ந்தி ருக்கிறார். உறுத்தாத மான்டேஜ் பாடல்களும் கே-வின் இசையும் கதைக்கு டாப்அப்.

உள்ளூர் அகதிகள் முதல் உலக அகதிகள் வரை வெவ்வேறு நிலைகளில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் வலியை ஏஜென்ட்களால் அலைக்கழிக்கப்படும் அவஸ்தையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதைப் பிரசார நெடி இல்லாமல் சொன்னவகையில், ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மணிகண்டன்!

- விகடன் விமர்சனக் குழு