Published:Updated:

ரெமோ - சினிமா விமர்சனம்

ரெமோ - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெமோ - சினிமா விமர்சனம்

ரெமோ - சினிமா விமர்சனம்

ரெமோ - சினிமா விமர்சனம்

நிச்சயதார்த்தம் ஆன பெண்ணைக் காதலிக்கவைக்க, அவ்வைசண்முகியாக மாறும் காதல் மன்னனே `ரெமோ'.

`நடிகன் ஆகியே தீருவேன்' என அடமாகச் சுற்றும் எஸ்.கே (எ) சிவகார்த்திகேயனுக்கு, பெண்கள் = வைரஸ். கண்களைக் கண்டாலே சிஸ்டம் ஹேங் ஆகிவிடும். திடீரென, கீர்த்தி சுரேஷ் மீது காதல் கன்னாபின்னாவெனக் கரைபுரள, அவரை அடைந்தே தீருவேன் என முடிவெடுத்துக் கிளம்புகிறார். சினிமா சான்ஸுக்காக நர்ஸ் கெட்டப்போடும் எஸ்.கே-வை நிஜப்பெண் என்றே கீர்த்தி நினைக்க, அதுவே தொடர... கீர்த்தியின் மனதை நர்ஸ் கலைத்துப்போட, கடைசியில் சுபம்.

ஒரு பெண்ணைக் காதலிக்கவைக்க, என்னவும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பின்னாலேயே திரிந்து டார்ச்சர் கொடுக்கலாம். அந்தப் பெண்ணே `எனக்கு இந்த லவ்ல விருப்பம் இல்லை, பின்னால் வராதே!' என விரட்டினாலும் விடவே கூடாது. அவரை ஐ லவ் யூ சொல்லவைக்க, எந்த லெவலுக்கும் இறங்கலாம். இதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. படம் நெடுக நிச்சயதார்த்தம் ஆன பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ்… தூத்துக்குடி பிரான்சினாவை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்.

நாய்களைப் பழக்கப்படுத்தவே பயன்படுத்தப்பட்ட ‘விசில்’ டெக்னிக்கை, தன் காதலியைப் பழக்கப்படுத்தப் பயன்படுத்துகிறார் எஸ்.கே. ஒட்டுமொத்தப் படமும் பெண்களை அந்த லெவலில்தான் டீல் பண்ணுகிறது.

‘`அப்பா பேச்சைக் கேக்கிற பொண்ணுதான் ஹஸ்பெண்ட் பேச்சையும் கேக்கும்’’, ‘`பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றது கஷ்டம். ஆனா, கன்ஃபியூஸ் பண்றது ஈஸி’’ இது மாதிரியே பக்கம்பக்கமாக வசனங்கள். `பெண் என்பவள், இலக்குவைத்து அடையக்கூடிய பொருள்’ என்பதே இயக்குநர் முன்வைக்கும் அழுத்தமான மெசேஜ். ``உலகிலேயே கலப்படம் இல்லாதது பசங்க மனசுதான்’’ என்று தன் அம்மாவிடமே போய்ச் சொல்கிறார் எஸ்.கே... அம்மாவும் `ஓ!' எனக் கேட்டுக்கொள்கிறார்.

ஒரு படத்தில் ஓரிருவர் லூஸாக இருப்பது விபத்தாக இருக்கலாம். ஆனால் நாயகன், அவனுடைய அம்மா, நண்பர்கள், நாயகி, அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை, நாயகி வேலை பார்க்கும் மருத்துவமனையின் டாக்டர் என, பாக்கியராஜ் கண்ணன் உருவாக்கியிருக்கும் உலகத்தில் சகலருக்கும் மூளையே இல்லைபோல.

சிவகார்த்திகேயனுக்கு எது எல்லாம் இயல்பாக வருமோ, அது எல்லாமே இந்தப் படத்தில்

ரெமோ - சினிமா விமர்சனம்

தூக்கலாகவும் செயற்கையாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் நடிப்பு..? கெட்டப் மாற்றுவது மட்டுமே நடிப்பு இல்லை சிவா!

கீர்த்தி சுரேஷ் கீ கொடுத்த பொம்மைபோலவே வருகிறார். 

அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு, அட்டகாசமாக ஒரு டீம் அமைந்திருக்கிறது. ரொமான்டிக் காமெடியாக ஒரு படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், படத்தின் எல்லா காட்சிகளிலும் லாஜிக் ஓட்டைகள். 

இது மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கே கேடு!

- விகடன் விமர்சனக் குழு