Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 21

குறும்புக்காரன் டைரி - 21
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 21

தி.விக்னேஷ், ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 21

தி.விக்னேஷ், ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 21
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 21
குறும்புக்காரன் டைரி - 21

போன வெள்ளிக்கிழமை லஞ்ச் பிரேக் முடிஞ்சதுமே, லீவு மோடுக்கு வந்துட்டோம். ரெண்டு நாளில் என்ன பண்ணலாம்னு குஜாலா பிளான் போட்டுக்கிட்டு இருக்கும்போதே, எங்க சயின்ஸ் மிஸ், ‘நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ். எல்லோரும் ஸ்கூலுக்கு வந்துடுங்க’னு ஷாக் கொடுத்தாங்க.

 நாங்க பாவமா பார்க்க, ‘காபி தயாரிக்கிறதைப் பார்க்க நாளைக்கு ஃபேக்டரி விசிட் போறோம்’னு அடுத்த வரியிலேயே சர்ப்ரைஸை உடைச்சாங்க.

‘அதுக்கு எதுக்கு ஃபேக்டரி வரைக்கும் போகணும். பாலில் காபித் தூளைக் கொட்டினா காபி  ரெடி. வீட்டுல அம்மாவே செய்வாங்களே’னு சொன்னான் குமார். குரலில், ‘லீவு போச்சே’ ஃபீலிங்.

 ‘அது காபி போடறது. நான் சொல்றது, காபி கொட்டையை வறுத்து, பொடி தயாரிக்கிறது. அந்த அனுபவமே புதுசா, ஜாலியா இருக்கும்’னு மிஸ் சொல்லவும், எல்லோரும் ஜாலி மூடுக்கு வந்தாங்க.

 ஆனா, ஜெகன் மட்டும் சோகமா இருந்தான். ஏன்னா, காபிக்கும் அவனுக்கும் ஒரு கொடூர ஃப்ளாஷ்பேக் இருக்கு. அவனோட சித்தி கல்யாணத்தில் நடந்த விஷயம். மண்டபத்தில் காலையில் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருந்திருக்காங்க. காபியைத் தயாரிச்சு கேனில் கொண்டு வந்து வெச்ச ஒருத்தர், பேப்பர் கப்களை எடுத்துவர போனார். பயபுள்ளைக்கு ஆசை வந்துருச்சு. ‘எல்லோருக்கும் நாமே ஊத்திக்கொடுக்கலாம்’னு காபி கேனை தூக்கி இருக்கான். அந்த நேரம் பார்த்து ஏதோ ஒரு வாண்டு, சுவரில் கட்டியிருந்த பலூனை ‘டம்’னு உடைக்க, பயல் அலறி கையை விட்டுட்டான்.

 கேன் கீழே விழுந்து திறந்துக்கிச்சு. இருந்த காபி முழுக்க அவன் காலில் அபிஷேகம் ஆச்சு.  ‘உனக்கு எதுக்குடா இந்த வேலை’னு பெருசுகள் முறைக்க, சிறுசுகள் சிரிக்க, ‘இனி வாழ்க்கையில் காபியே குடிக்க மாட்டேன்’னு அன்னிக்கே சபதம் எடுத்தான்.

 ‘மிஸ்... மிஸ்... காபி ஃபேக்டரிக்குதான் போகணுமா? ஏதாச்சும் பிஸ்கட் ஃபேக்டரி, ஐஸ்க்ரீம் ஃபேக்டரினு போலாமே’னு கெஞ்சினான். ஒண்ணும் வேலைக்கு ஆகலை.

 இவன் பயத்தை எப்படியாச்சும் போக்கணுமேன்னு நண்பர்கள் ஒண்ணு கூடிப் பேசினோம்.   ‘டேய், நாளைக்கு ஜெகனை ஃபேக்டரிக்கு இழுத்துட்டு வர்றது என் பொறுப்பு. அவன் பயத்தை அங்கே போக்கறோம்’ என்றேன்.

எல்லோரும் பேசியதில் அதிரி புதிரி ஐடியா கிடைச்சது. பெருமையா மார்தட்டி, ‘ஆபரேஷன் காபி ஸ்டார்ட்ஸ்’னு கத்தினோம்.

குறும்புக்காரன் டைரி - 21

மறுநாள், சீக்கிரமே கெளம்பி ஜெகன் வீட்டுக்குப் போனோம். பயபுள்ளை சுருண்டுப் படுத்துட்டு  இருந்தான். அவன் அம்மா ‘என்னப்பா இன்னிக்கு லீவு ஆச்சே? எல்லோரும் யூனிஃபார்மில் வந்திருக்கீங்க?’னு கேட்டாங்க. சரிதான், பயபுள்ளை வீட்டுல விஷயத்தையே சொல்லலை போல.

 விஷயத்தைச் சொன்னோம். ஜெகன் அம்மா அவனை முறைக்க, ‘விடுங்க ஆன்ட்டி... மறந்துட்டு இருப்பான். இவனை நாங்க ரெடி பண்றோம்’னு பாத்ரூமுக்குத் தூக்கிட்டுப்போனோம். அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்கூலில் இருந்தோம். எல்லோரும் கிளம்பி, காபி ஃபேக்டரிக்கு போனோம்.

 நகரத்தின் உள்வாங்கிய ஒரு பகுதியில் ஃபேக்டரி இருந்துச்சு. உள்ளே நுழையும்போதே, கமகம காபி வாசனை. ஜெகன் மட்டும் பேய் பங்களாவில் நுழையுற மாதிரியே இருந்தான். ஒரு அங்கிள் வந்தார். காபி கொட்டையைப் பிரிக்கும் இடம், வறுக்கும் இடம், பொடி செய்யும் இடம், பாக்கெட் செய்யும் இடம் என ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிட்டுப்போய் விளக்கினார். நடுங்கிட்டு இருந்த ஜெகனைப் பார்த்து, ‘உனக்கு ஏன் தம்பி இப்படி வேர்க்குது?’னு கேட்டார்.

 ‘இங்கே ஓடுற மெஷின் சத்தத்தை கேட்டால், பேய் சவுண்டு மாதிரியே இருக்கு’னு புலம்பினான்.

சிரிச்ச அவர், ‘இங்கே வந்த எல்லோருக்கும் நானே காபி போட்டுத் தரேன். தம்பி, நீ என்னோடு உதவிக்கு வா’னு ஜெகனை கூப்பிட்டார்.

 ‘என்னது நானா?’னு ஜெகன் எஸ்ஸாகப் பார்க்க, ‘டேய் ஜெகன்... அடுத்தவங்க முன்னாடி நம்ம ஸ்கூல் மானத்தை வாங்கிடாதே. போய் ஹெல்ப் பண்ணுடா’னு கிசுகிசுனு பேசி தள்ளிவிட்டோம்.

 நாங்க ஹாலில் உட்கார்ந்து இருக்க, கொஞ்ச நேரத்தில் ஜெகன் வந்தான். பின்னாடியே பெரிய தட்டுகளில் காபி கோப்பைகளை வெச்சு எடுத்துட்டு வந்தாங்க. ‘காபி ருசியா இருக்க, அதன் தரத்தோடு சரியான அளவில் கலக்கறதும் முக்கியம். இந்த காபியை உங்க நண்பன் ஜெகனே போட்டான். குடிச்சுப் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க’னு சொன்னார் அங்கிள்.

 எல்லோரும் குடிச்சோம். அவ்வளவு ருசியா இருந்துச்சு. ஆளாளுக்கு ஜெகனைப் பாராட்டி தள்ள, புல்லரிச்சு நின்னுட்டு இருந்தான். எல்லோரும் கிளம்பும்போது ஆளுக்கு ஒரு பாக்கெட் காபி பொடியைக் கொடுத்தாங்க. ஜெகனுக்கு ஸ்பெஷலா இரண்டு பாக்கெட்.

 ‘என்னால நம்பவே முடியலைடா... நான் போட்ட காபி அவ்வளவு டேஸ்ட்டா இருந்திருக்கு’னு பஸ்ஸில் ஏறினதில் இருந்து ஸ்கூலுக்கு வர்ற வரைக்கும் சொல்லிட்டே இருந்தான் ஜெகன்.

 ஒரு ரகசியத்தைச் சொல்றோம் கேட்டுக்கங்க. முதல் நாளே மிஸ்கிட்டே பேசி, அந்த அங்கிள் செல்போன் நம்பரை வாங்கி விஷயத்தைச் சொல்லியிருந்தோம். அவரும் எங்க திட்டத்துக்கு  சம்மதிச்சார். காபி போட அவனை கூட்டிட்டுப் போனார். எல்லோரும் பாராட்டும்படி செஞ்சு,  ஜெகனின் பயத்தையும் வெறுப்பையும் போக்கிட்டார். ஆபரேஷன் சக்சஸ்!

இதனால் அறியப்படும் நீதி... இந்தக் குறும்புக்காரன் டைரியில் இந்த மாதிரி ஃபீலிங் விஷயங்களையும் படிக்கலாம்.

(டைரி புரட்டுவோம்...)