Published:Updated:

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”
“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

ம.கா.செந்தில்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

சிலம்பரசன்

“‘மதுரை மைக்கேல்’ - இதுதான் என் கேரக்டர். படத்துல நான் என் அப்பாவோட ரசிகனா வர்றேன். ‘பார்க்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கார்’னு  எல்லாரும் அப்பாகிட்ட சொல்லி
யிருக்காங்க. ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னைக்கு என் ரசிகர்கள், இளைஞர்களை மீறி, 80-களில் டி.ராஜேந்தர் படத்தைக் கொண்டாடிப் பார்த்தவங்களும் இந்தப் படத்தை என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க!”

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படப்பிடிப்பில் செம அராத்து லுக்கில் இருக்கிறார் சிம்பு.

‘‘ஒரு விளையாட்டுப் பையனா, லவ்வர் பாயா, கமர்ஷியலா நிறையப் படங்கள் பண்ணிட்டேன். இவ்வளவு நாளா நான் எந்த மாதிரியான படங்கள் பண்ணிட்டு இருந்தேனோ, அதைப் பண்றதுக்கு இன்னைக்கு நிறைய ஹீரோக்கள் வந்துட்டாங்க. நான் பண்ணும் படங்களின் களத்தை மாற்றவேண்டிய நேரம்  இது. அதுக்கான கதை எதுனு தேடிட்டு இருந்தப்ப கிடைச்ச படம் இது. பவர்ஃபுல்லான மூணு ரோல்கள். ஒவ்வொண்ணுக்கும் அவ்வளவு மெனக்கெடணும். இப்படியான சவாலான படங்களைத்தான் இனி நான் பண்ணப்போறேன்.’’

`‘படத்தில் உங்களுக்கு மூணு ரோல்கள். பயங்கர சவாலா இருக்கா?’’

‘‘முதல் கேரக்டர் மதுரை மைக்கேல். 80-கள்ல இருக்கிறவன். டி.ஆரின் ரசிகன். அடுத்து ‘அஸ்வின் தாத்தா’.  70 வயசுத் தாத்தா கேரக்டர். அதுக்காகத்தான் வெயிட் போட்டிருக்கேன். மூணாவது ஒரு இன்ட்ரஸ்ட்டிங் கேரக்டர்.  அந்த கேரக்டருக்குத்தான் ஒல்லியா சின்னப்பையனா வரணும். ஒரு மாச இடைவெளியில் அதுக்காக வெயிட் குறைக்கணும். படத்துல ஆரம்பம் முதல் முடிவு வரை கதை எங்கேயும் தேங்கி நிற்காது. ஒரு விஷயத்துக்குள்ளயே சுத்தாது. அதனால, ஒரே டைட்டில் வேணாம்னு மூணு டைட்டிலா வெச்சிருக்கோம்.’’

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

‘‘ ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எப்படி வந்திருக்கு?’’

‘‘ ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பண்ணும்போது நான் மாஸ் இமேஜ் உள்ள ஹீரோ. அப்ப கௌதம், ‘சுராங்கனி’னு மாஸ் ஸ்க்ரிப்ட் ஒண்ணு சொன்னார். ஆனா, நான்தான் `எனக்கு லேடீஸ், யூத்னு சிட்டி ஆடியன்ஸ் கம்மி. அதனால ‘மின்னலே’, ‘அலைபாயுதே’ ஸ்டைல்ல எனக்கு சாஃப்ட்டான ஒரு படம் சொல்லுங்க’னு கேட்டேன். ‘ ‘ஜெஸ்ஸி’னு ஒரு கதை இருக்கு. ஆனா, உங்களுக்குப் பிடிக்குமானு தெரியலை’னு சொன்னார். ‘பரவாயில்லை சொல்லுங்க’னேன். அதுதான் `விண்ணைத் தாண்டி வருவாயா’. நடுவுல அவர் ஒரு சின்னப் பிரச்னையில் இருந்தப்ப, திடீர்னு போன் பண்ணி ‘நீங்க ஒரு படம் பண்ணணும்’னு கேட்டார். ‘எப்ப ஷூட்டிங் போகலாம்?’னேன். அப்படித்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆரம்பிச்சது. அவர், ‘வேட்டையாடு விளையாடு’, `காக்க காக்க’ மாதிரியான ஆக்‌ஷனும் பயங்கரமா பண்ணுவார். ‘மின்னலே’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’னு ரொமான்ஸ்லயும் உருகவைப்பார். ஆனா, ‘அச்சம் என்பது மடமையடா’ ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி. இந்தக் கலவைதான் இந்த ஸ்க்ரிப்ட்டை நான் தேர்ந்தெடுக்கக் காரணம்.’’

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

‘‘கெளதம் உங்களின் நல்ல நண்பர். ஆனால், அவரே `படம் சிம்புவால் தாமதம்’னு சொன்னார். என்ன பிரச்னை?’’

‘‘ ‘தள்ளிப் போகாதே...’ பாடல் ஷூட் தாமதமானதுக்கு, அவரோட புரொடக்‌ஷன் சைடுலயும் எங்க வீட்டுலயும் நடந்த சின்ன மிஸ்கம்யூனிகேஷன் தான் காரணம். அதுக்காகக் கோபப்பட்டு அப்படிப் பேசியிருந்தாரே தவிர, அதன் பிறகு நாங்க போய் `தள்ளிப் போகாதே...’ ஷூட் பண்ணியிருக்கோம். நான் டப்பிங் பண்ணியிருக்கேன். எனக்கும் கௌதமுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. இந்தப் படத்துல நான் அவ்வளவு கஷ்டப்பட்டுப் பண்ணவேண்டிய சில விஷயங்கள் இருந்தன. அதெல்லாம் கௌதமுக்கும் தெரியும். ‘தள்ளிப் போகாதே...’ விஷுவல்ஸ் பார்த்துட்டு கௌதம் சாரே கண்கலங்கிட்டார். ஒரு டைரக்டர் எதிர்பார்க்கிறதை நடிகனா சரியா டெலிவர் பண்றதுலதானே நம்ம சந்தோஷம் இருக்கு.’’

‘‘ஆனா, உங்களால் லேட் ஆகுது என்பதை ஏன் சரிசெய்ய முடியலை?’’

‘‘எனக்கு ஷூட்டிங்னு இல்லை, அடிப்படையிலேயே இந்தப் பிரச்னை இருக்கு. ஒரு டைம் சொல்லிட்டு அந்த புரோகிராம்படி வேலைசெய்ய எனக்கு வராது. ஏன்னா, நான் டைம் பின்னாடி போக மாட்டேன். டைம் இஸ் அன் இல்யூஷன். நிறையப் பேர் புரோகிராம்டா வாழ்றவங்க. ‘டைம் இஸ் வெரி ப்ரீஷியஸ்’னு பேசிட்டிருப்பாங்க. ஆனா, ஆன்மிகம் தெரிஞ்சவங்க, வாழ்க்கையின் அறிவியல் புரிஞ்சவங்க என்னைக்குமே டைமுக்கு முக்கியத்துவம் தர மாட்டாங்க. ஏன்னா அந்த டைம் நம்ம லைஃபை கன்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுடும். 9 மணின்னா பெர்ஃபெக்ட்டா 9 மணிக்குப் போகிற வேலை எல்லாம் எனக்கு செட்டே ஆகாது. ஒண்ணு முன்கூட்டியே போயிடுவேன். இல்லைன்னா, லேட்டா போவேன். இவங்க எல்லாருமே அந்த டைமைக் கெட்டியா பிடிச்சு ஃபாலோ பண்றதால, நான் அதை ஃபாலோ பண்ணலைன்னதும் கோபப்படுறாங்க. அவங்க கோபம் நியாயமாக்கூட இருக்கலாம். அதுக்காக என்னால அப்படி இருக்க முடியாது. தெலுங்குல `தள்ளிப் போகாதே...’ பாடலை ஆறரை நாள் ஷூட் பண்ணியிருக்காங்க. ஆனா, இங்க அதே பாட்டை ரெண்டு நாள்ல முடிச்சுக்கொடுத்திருக்கேன். இதை ஏன் பேச மாட்டேங்கிறீங்க? இந்த விஷயங்கள் கௌதமுக்கும் தெரியும். இல்லைன்னா ஏன் என்னைவெச்சு அவர் படம் பண்ணணும்? அடுத்த படமும் பேசிட்டிருக்கோம். அது எதுக்காக? அது ஒண்ணுதான் என்னைக் காப்பாத்துது. இல்லைன்னா, என்னை  வெச்சு எந்த டைரக்டர், தயாரிப்பாளர் படம் பண்ணப்போறாங்க?’’

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

* ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில்...

‘‘ஆனா, ஒட்டுமொத்த சினிமாவும் ஒரு சிஸ்டமா இயங்கும்போது, நீங்க மட்டும் சிறப்பு அனுமதி கேட்பது நியாயமா?’’

‘‘கரெக்ட். ‘நான் ஃபாலோ பண்ணிக்கிறேன், என்னை மன்னிச்சுடுங்க’னு நான் கேட்கலையே. ‘என்னால ஃபாலோ பண்ண முடியலை’னுதானே சொல்றேன். ஒரு ஸ்கூல்ல எல்லாரும் படிக்
கிறாங்க. ‘ஏன் நீ மட்டும் படிக்க மாட்டேங்கிற?’னா, ‘எனக்கு படிப்பு வரலை. ஏன் என்னைத் திட்டுறீங்க?’னு கேக்குறேன். அந்த மாதிரிதான் ‘நேரத்தையும்’ சொல்றேன். என்னால டைமை ஃபாலோ பண்ண முடியாது. அதை நானே ஒப்புக்்கிறேன். அது என்னோட பெர்சனல். `ஏன் டைமுக்கு வரலை?னு என்னைக் கேக்கிறீங்க. ஆனா, ‘ஏன் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு வர்றது இல்லை?’னு அஜித் சாரைக் கேளுங்க. `எல்லாரும்  ஹீரோயின்கூட நெருக்கமா நடிக்கிறப்ப, நீங்க மட்டும் ஏன் ஹீரோயினைத் தொட்டு நடிக்க மாட்டேங்கிறீங்க?’னு டி.ராஜேந்தரைக் கேளுங்க. `எல்லாரும் காலை நேரத்துல உட்கார்ந்து மியூஸிக் போட்டுக்கொடுக்குறாங்க. நீங்க மட்டும் ஏன் நைட்ல உட்கார்ந்து மியூஸிக் போடுறீங்க?’னு ஏ.ஆர்.ரஹ்மானைப் போய் கேளுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெர்சனல் விஷயம் இருக்குல்ல. ஏன் சிலம்பரசனை மட்டும் கேக்கிறீங்க? அஜித் சார் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு வர மாட்டார்னு தெரியும். அப்படித் தெரிஞ்சுதானே அவருக்குக் காசு கொடுத்து ஹீரோவா நடிக்கவைக்கிறீங்க. அந்த மாதிரி `சிம்புன்னா, இப்படித்தான் வருவார். லேட்டா வந்தாலும் தன் வேலையைச் சரியா பண்ணிக்கொடுத்துடுவார்’னு தெரியும். `என்னால டைமுக்கு வர முடியாது. என்னை அப்படி எதிர்பார்க்காதீங்க’னுதான் சொல்றேன். எல்லாருக்கும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். என் தவறை நான் ஜஸ்ட்டிஃபை பண்ணலையே.’’

‘‘உங்களோட ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் தாமதமாகுது. பிரச்னையில் சிக்குதே ஏன்?’’

‘‘எனக்குனு இல்லை எல்லாருக்குமே லைஃப்ல இப்படி ஒரு பீரியட் வரும். அந்த மாதிரியான ஒரு காலகட்டமாத்தான் இதை நினைக்கிறேன். இந்த இடத்துல இருக்கிறதுக்கு உண்மையில நான் சந்தோஷப்படுறேன். ஏன்னா, ‘இவ்வளவு ஜெயிச்சு இவ்வளவு உயரத்துல இருக்கீங்களே!’னு கேட்டீங்கன்னாத்தான் எனக்குப் பயமா இருக்கும். இப்போ என்னைவிட எல்லாருமே மேல இருக்காங்கனு நீங்க வெச்சுக்கங்க. நான் சொல்றது தனுஷை மட்டும் இல்லை. இன்னைக்கு புதுசா வந்த ஹீரோஸ்கூட பெரிய ஆளுனு வெச்சுக்கங்க. நான் அவங்களுக்கும் கீழேயே இருந்துட்டுப்போறேன்.  இன்னைக்கு நான் கடைசி, அதுவும் கட்டக் கடைசி. ஆமாம்... நான் ஜீரோ. ஒருநாள் ஆவேன் ஹீரோ. இப்ப என்னைத் தொந்தரவு பண்ண மாட்டீங்கள்ல?’’

‘‘சினிமாவில் எதிரும்புதிருமாப் பேசப்படுற சிம்பு - தனுஷ் இருவரையும் ஒரே சமயத்தில் கௌதம்மேனன் இயக்குகிறார். எப்படி இருக்கு அந்த ஃபீல்?’’

‘‘கௌதம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ கதையை என்கிட்ட சொல்லும்போதே, ‘இது தனுஷுக்கு நல்லா இருக்கும். அவருக்கும் புதுசா இருக்கும்’னு நான்தான் சொன்னேன். தனுஷ்கிட்டயும், ‘கௌதம் படம் பண்ணுங்க. வித்தியாசமா இருக்கும்’னு சொன்னேன். இதில் போட்டிப்போட ஒண்ணுமே இல்லை. ஒரு காசுக்கு பூ பெருசா, தலை பெருசானு கேக்குறது இல்லை. அதே மாதிரி இங்க சிம்புவும் தேவை; தனுஷும் தேவை. நான் தனுஷ் விஷயத்தில் அந்த மாதிரிதான் பார்க்கிறேன். ஏன்னா, போட்டிப்போடுறதுல எந்தப் பிரயோஜனமும் கிடையாது. இந்தப் போட்டி ரசிகர்களுக்கு வேணும்னா இருக்கலாமே தவிர, எங்களுக்குள்ள அப்படி ஒரு விஷயமே கிடையாது.

நாங்க ரெண்டு பேரும், பேச விஷயம் இருந்தா பேசுவோம்; இல்லைன்னா பேசாம இருப்போம். எப்பவுமே நிரந்தரமான நட்போ, விரோதமோ கிடையாது. ரெண்டு பேருமே அவங்கவங்க வேலைகளில் பிஸியா இருக்கோம். பார்க்க சந்தர்ப்பம் வரும்போது ஒண்ணா இருப்போம். அப்ப, ‘இருவரும் ஒண்ணாவே இருக்காங்க’னு எழுதுவாங்க. பார்த்துக்கிறது இல்லைன்னா, ‘ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு பிரிஞ்சுட்டாங்க’னு எழுதுவாங்க. இதையெல்லாம் தாண்டி அவர்மேல எனக்கு ஒரு மரியாதை. என் மேல அவருக்கு ஒரு மரியாதை. என்னைக்கா இருந்தாலும் அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம்... அவ்வளவுதான்.’’

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

‘‘நீங்க சில தவறுகள் பண்ணினாலும், டி.ஆர் எல்லா தருணங்களிலும் ஓர் அப்பாவா உங்களைத் தாங்கிப் பிடிச்சிருக்கார். அவரைச் சங்கடப்படுத்திருக்கோம்னு வருந்தினது உண்டா?’’

‘‘ஒரு சின்னப் பையனை அந்த வயசுல, டான்ஸ், ஃபைட் சொல்லிக்கொடுத்து, பாட்டு போட்டு, பெரிய செட் போட்டு, ‘ஐ யம் ஏ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...’னு யாரு சார் பண்ணியிருக்கா? ஒரு சின்னப் பையனை நம்பி வேறு யாரையாவது இன்னைக்கு அப்படிப் படம்  எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம். அந்த ஒரு கன்விக்‌ஷன், லவ்தான் டி.ஆர். இதுதான் அவரின் தனித்தன்மை. எனக்கு இன்னைக்கு சினிமா புரியுது, ஆடத் தெரியுது, பாடத் தெரியுது, ஃபைட் பண்ணத் தெரியுது... காரணம், டி.ஆர். இதெல்லாம் ப்ளஸ்னா, அவரின் மகன்கிறதால மைனஸும் உண்டு. அவரோட சினிமா, அரசியல் முடிவுகள் எனக்கு நெகட்டிவ் ஆகியிருக்கு. அதையும் மீறி நான் சக்சஸ்ஃபுல்லா வந்திருக்கேன் என்பதே அவருக்கு நான் தந்திருக்கிற சந்தோஷம்.’’

‘மகன் குடும்ப வாழ்க்கைக்குள் வரணும்னு உங்க பெற்றோர் நினைக்கிறாங்க. ஆனா, நீங்க ஆன்மிகம் அது இதுனு சாமியார் ஆகிடுவீங்கபோலிருக்கே?’’

‘‘எனக்கு 17 வயசுலயே கல்யாணம் ஆகியிருக்கணும். இன்னைக்கு 32 வயசு ஆகுது. ‘கல்யாணம் பண்ணாம அப்படியே இருந்துடலாம்’கிற ஐடியா எல்லாம் கிடையாது. ஆனா, கல்யாண வயசு வந்துடுச்சுங்கிறதுக்காகக் கல்யாணம் பண்ண முடியாது. இன்னைக்கு எத்தனையோ பேர் டிவோர்ஸ் பண்றாங்க. அதுக்கு வெவ்வேற காரணங்கள் சொல்றாங்க. நான் கோர்ட்டுக்குப் போய் டிவோர்ஸ் பண்றதுக்குப் பதிலா பிரேக்கப் பண்ணிக்கிட்டேன்... அவ்வளவுதான்.

நாம ஒரு பொண்ணுமேல காதல் வெச்சிருக்கலாம், அவங்களும் நம்மை லவ் பண்ணியிருக்கலாம். அது வாழ்க்கை முழுக்கச் சேர்ந்து வாழ்றதுக்கான புரிதலோட இருக்குமானு பார்க்கணும். காதலிக்க ஆரம்பிக்கும்போது இந்தப் புரிதல் இருக்கா... இல்லையானு தெரியாது. பிறகு பேசி, பழகி, புரிஞ்சுக்கத் தொடங்கும்போது ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கணும்னு வரும்போதுதான் பிரச்னை. விட்டுக்கொடுக்கத் தயாரா இருக்கிற ரெண்டு பேரால் மட்டும்தான் கணவன்-மனைவியா இருக்க முடியும். இப்படி எந்தப் பிரச்னை வந்தாலும் புரிஞ்சுக்கக்கூடிய, பேசித் தீர்த்துக்கக்கூடிய பொண்ணு வரும்போது தான் நான் கல்யாணம் பண்ண முடியும்.’’

‘‘அடுத்தடுத்து காதல், அடுத்தடுத்த பிரேக்கப். ‘நம்மகிட்ட ஏதாவது பிரச்னை இருக்குமோ?’னு நீங்க யோசித்தது உண்டா?’’

‘‘உண்டு... ‘அந்த ரிலேஷன்ஷிப்ல அப்படி இருந்தோம். அதனாலத்தான் பிரச்னை ஆச்சோ?’னு நினைச்சு, இந்த இடத்துல வேற மாதிரி இருந்தா, இங்க ஒட்டுமொத்தமா அதுக்கு நேர் எதிரா இருக்காங்க. ‘பிரச்னை நம்மகிட்டயும் கிடையாது; அவங்ககிட்டயும் கிடையாது. எல்லார்கிட்டயும் ஒரு பிரச்னை இருக்கும். அதைச் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் சரியா ஹேண்டில் பண்ணணும்’னு அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.’’

‘‘இப்ப நீங்க லவ் பண்றீங்களா?’’

‘‘இல்லை. இப்போ நான் சிங்கிள்.’’

“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ!”

‘‘சிம்பு இவ்வளவு நாளா ரிலேஷன்ஷிப்ல இல்லைங்கிறதே ஆச்சர்யம்தானே!’’

‘‘நயன்தாராவுக்கு அப்புறம் ஆறு வருஷம் யார்கூடவும் நான் ரிலேஷன்ஷிப்ல இல்லை. பிறகுதான் ஹன்சிகா. அதை யாராவது பேசினாங்களா? பேச மாட்டாங்க. ‘அவங்களுக்கு அப்புறம் இவங்க, இவங்களுக்கு அப்புறம் வேறு ஒருத்தவங்க. இதுதான் சிம்பு’னு மட்டுமே பேசுவாங்க. வெளியில என்ன நினைச்சுட்டு இருக்காங்களோ அது எல்லாமே என் விஷயத்தில் உல்டா. அதுதான் மிகப்பெரிய காமெடி. ‘சிம்புவால ஈஸியா லவ் பண்ணிட முடியும்’னு நினைக்கிறாங்க. அது பொய். நயன்தாராவுக்கு அப்புறம் ஏன் அவ்வளவு காலம். கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்காமலா? ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’னு தினமும் என்னைக் கேட்கிறவங்க இருக்காங்க.  அப்புறம், `சிம்பு ஏன் ஹீரோயின்களையே லவ் பண்றார்?’னு கேக்குறாங்க. பக்கத்து க்ளாஸ் பொண்ணை லவ் பண்ண நான் என்ன காலேஜுக்காப் போறேன். இல்ல வழக்கமான பெண்ணை லவ் பண்ண நான் ஒண்ணும் பேங்க் வேலைக்குப் போகலையே. தினமும் ஷூட்டிங்தானே போறேன். அங்க ஹீரோயின்ஸ்தானே இருக்காங்க?’’

‘‘பீப் பாடலுக்காக இப்ப வருந்துறீங்களா?’’

‘‘தப்பு பண்ணினாத்தானே பயப்படணும். தப்பே பண்ணலைன்னு சொல்றேன். அப்புறம் எதுக்கு வருத்தம், மன்னிப்பு? வீட்டுல நண்பர்களோடு ஜாலியா பேசிட்டு இருக்கும்போது சமயங்கள்ல கெட்ட வார்த்தைகள்ல திட்டிக்குவோம். அப்ப, ‘இவன் என்னைத் திட்டிட்டான். இவன்மேல கேஸ்போட்டு உள்ள தள்ளுங்க’னா சொல்றோம்? அப்படி அந்தப் பாட்டை நான் வீட்டுல கம்போஸ் பண்ணிவெச்சிருந்தேன். அது வெளியில வரும்னு எனக்கு எப்படித் தெரியும்? நண்பர்கள் நிறையப் பேரிடம் இருந்ததுல யார்கிட்ட இருந்து வெளியே வந்துச்சுனு தெரியலை. அதுதான் பிரச்னை. `எனக்கும் மனசாட்சினு ஒண்ணு இருக்கு. நான் தப்பு பண்ணியிருந்தேன்னா உடனே மன்னிப்பு கேட்டிருப்பேன். நான் தப்பு பண்ணலை. பிறகு யாருக்குப் பயப்படணும்? மிஞ்சிப்போனா ஜெயில்லதானே போடுவீங்க, போடுங்கனுதானே சொன்னேன். தூக்குல போடுவீங்களா ...போடுங்க. எப்படியும் ஒருநாள் போகவேண்டியதுதானே. அதுக்காக நான் போட்ட பாட்டு சரினு சொல்ல வரலை. அது எதிர்பாராம நடந்த ஒரு விஷயம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு