Published:Updated:

நான் மீண்டும் வருவேன்!

நண்டு கதையின் கதை இங்கே...சம்யுக்தா, படம் : கே.ராஜசேகரன்

நான் மீண்டும் வருவேன்!

நண்டு கதையின் கதை இங்கே...சம்யுக்தா, படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ரு மழைப் பொழுதில் 30 ரோஜாக் களைக் கொண்டுவந்து நீட்டி, ''ஒண்ணுமில்லை நண்பா... எனக்கு வாய்ஸ் பாக்ஸ்ல கேன்சர்...'' எனப் புன்னகைக்கிறார் ரமணா... இயக்குநர் ரமணா!

 முன்பு பார்த்ததைவிட இன்னும் அழகாக இருக்கிறார். கரகரத்துக் கசியும் குரல் மட்டும்தான் கேன்சரைச் சொல்கிறது. இவர் இயக்கிய  'திருமலை’தான் விஜய்யை அழகாக ஆக்‌ஷன் ரூட்டுக்கு அள்ளிப் போனது. ரமணா... பிரமாதமான பேச்சுக்காரர். ஆவேசம் தெறிக்க அவர் கதை சொல்லும்போதே நமக்குள் படம் ஓடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆமா... ரமணான்னா அடையாளமே இந்தப் பேச்சுதான். எனக்கான இந்த வாழ்க்கையை வாங்கித் தந்ததே அதுதான். திடுதிப்புனு ஒரு நாள் கடவுள் வெள்ளை கோட் போட்டுக்கிட்டு முன்னாடி வந்து நின்னு, 'உனக்குத் தொண்டைல கேன்சர் டா’னு சொல்லிட்டார். ஆபரேஷனுக்குப் பிறகு இந்தக் குரல் என்கிட்ட இருக்குமா? இப்படி உங்ககிட்ட பேச முடியுமானு தெரியலை. அதான், இப்போ பேசிக்குவோம் நண்பா...'' எனச் சிரிக்கிறார்.

''நான் டிபிக்கல் சென்னைப் பையன். நான் நல்லாப் பேசுவேன்... திமிராத் திரிவேன். எதுன்னாலும் முட்டி மோதி முன்னாடி நின்னு குரல்விடத் தெரியும். இது போதாதா... பேச்சுப் போட்டின்னா முதல் ஆளா நிப்பேன். பச்சையப்பாஸ்ல படிச்சப்போ தமிழ்நாடு முழுக்க காலேஜ் காலேஜா கல்ச்சுரல்ஸ் போய் பின்னிஎடுப்போம். அப்பிடியே சுத்திட்டு இருந்தா படிப்பு என்னாகறது? மூணு வருஷம் காலேஜ் போயிட்டு ப்ளஸ் டூ பையனாவே திரும்பி வந்த ஆட்களில் நானும் ஒருத்தன். வெளியே வந்து என்ன பண்றதுனு புரியாம நின்னப்போதான், சினிமாஎன்னை இழுத்துக்கிச்சு!

நான் மீண்டும் வருவேன்!

நான் நல்லாக் கதை சொல்லுவேங்கிற நம்பிக்கை மட்டும்தான் இருந்துச்சு. சரி... நமக்கும் இங்கே ஒரு இடம் கிடைச்சு டாதானு திரிஞ்சப்போ செல்வமணி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா என்ட்ரி பாஸ் கிடைச்சது. அங்கே இருந்து ஆரம்பிச்ச என் வாழ்க்கையில் பிரகாஷ்ராஜ்தான் பெரிய திருப்பம்.

ராதா மோகன் மூலமா பிரகாஷ்ராஜ் நண்பனாக் கிடைச்சான். அவன் எங்களை அள்ளி அணைச்சுக்கிட்டான். இப்போ வரைக்கும் அந்த அணைப்பு கசங்காம இருக்கு. ராதா, பிரகாஷ், விஜி, திருப்பதிசாமி, தரணின்னு ஒரு வரம் மாதிரி எனக்கான நண்பர்கள் கூட்டம் அமைஞ்சது. ராதாதான் எனக்கு விஜய்க்கு கதை சொல்ற வாய்ப்பை வாங்கித் தந்தான். அப்புறம்தான் லைஃப் வேற இடத்துக்குப் போச்சு. இதோ இப்போ கேன்சர்னு தெரிஞ்ச பிறகு அவ்வளவு பேரும் ஓடிவந்து நிக்குறாங்க. நான் உடைஞ்சுடக் கூடாதுனு ஒவ்வொருத் தனும் மாறி மாறி போன் பண்றான். என் ஒய்ஃப் சாந்தாவுக்கு வீட்டுக்கு வெளியே எதுவும் தெரியாது. நான்தான் எல்லாத்தையும் பார்த்துப் பழகிட்டேன். இப்பிடி ஒரு விஷயம்னு வந்த பிறகு அவளுக்கு நண்பர்கள்தான் ஆறுதலா இருக்காங்க...' என்பவரின் தோளை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறார் சாந்தா.

''எங்களோடது காதல் கல்யாணம். அசிஸ்டென்ட் டைரக்டரா கஷ்டப்பட்டுக் கிட்டு இருந்த காலத்துல என்னை நம்பி வந்தவ. 'அழகிய தீயே’னு ஒரு படம் பார்த்திருப்பீங்க.... அது அப்படியே எங்களின் உண்மைக் கதை. தர்ஷிணி, ஸ்வேதானு ரெண்டு பெண் குழந்தைகள். நிஜமாவே அற்புதமான குடும்பஸ்தன் நான். எந்தக் கதைன்னாலும் இவகிட்டதான் முதல்ல சொல்வேன். நான் திரும்பவும் அதே குரலோட வருவேன்னு இவதான் அதிகமா நம்புறா. எங்களோட எந்தக் கஷ்டமும் பசங்களைப் பாதிக்காமப் பாத்துக்கிறா... எல்லாத்தையும் தாண்டி, இப்பிடி ஒரு குடும்பம் அமைஞ்சதுக்குச் சந்தோஷமா இருக்கு!' என்கிறவர் நிமிர்ந்து உட்கார்ந்து சொல்கிறார், 'நம்பிக்கைதான் முக்கியம்னு சும்மா சொல்லிட்டுப் போயிரலாம். அதை வாழ்ந்துப் பார்க்கிறதுதானே பெரிய விஷயம். முக்கியமா அதைப் பேசணும்னுதான் வந்தேன். அதுக்காகதான் எனக்கு கேன்சர்ங் கிறதை எல்லோருக்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கிறேன். கேன்சர் அப்படிங்கிறது கொடூரமான நோய், ஆளைக் கொல்ற விஷயம்னுதான் காலங்காலமா நாம படிச்ச கதைகளும் பார்த்த சினிமாக்களும் சொல்லி இருக்கு. இந்த வார்த்தையைக் கேட்டதும் இப்பவும் 'வசந்த மாளிகை’ சிவாஜியோ, 'வாழ்வே மாயம்’ கமலோதான் நமக்கு ஞாபகத்துக்கு வர்றாங்க. இன்னும் கேன்சரைத் தெளிவா முன்வைக்கிற ஒரு படைப்பு தமிழ்ல வரலைனுதான் நினைக் கிறேன். அதைச் செய்யணும்னு எனக்கு ஆசை. நிஜமா கேன்சர் உயிர்க்கொல்லி நோய் இல்லை. அதை நீங்க சரியாப் புரிஞ்சுக்கிட்டா, ட்ரீட் பண்ணிக்கிட்டா, அழகாக் கடந்து போயிடலாம். இதான் உண்மை!''  

'கரெக்ட். இவர் எனக்கு எழுதிக் கொடுத்ததைப் பாருங்க... நிச்சயமா இதுதான் நடக்கும்...' என சாந்தா ஒரு பேப்பரை நீட்டுகிறார்.

அதில் எழுதியிருக்கிறது... 'ஐ வில் கம் அகெய்ன், டாக் அகெய்ன், சக்ஸீட் அகெய்ன்’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism