
பரிசல் கிருஷ்ணா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மகன், மகள் மற்றும் மனைவியுடன் சூரி
வாசலிலேயே நம்மை வரவேற்கிறது இயக்குநர் சுசீந்திரனின் பெரிய படம். `‘சுசி அண்ணனாலதான்ணே நாங்க இப்போ இந்த இடத்துல இருக்கோம்'’ என்கிறார் சூரியின் மனைவி மகாலட்சுமி. ப்ரி கே.ஜி செல்லும் மகன் சர்வான். இரண்டாவது படிக்கும் மகள் வெண்ணிலா.
“ `அப்பா மாதிரி இல்லாம, நல்லா இங்கிலீஷ் பேசணும்'னு அம்மா சொல்லிருக்காங்கண்ணே. அதான் படிப்பு படிப்புன்னு இருக்கு'’ - சூரி சொல்லச் சொல்ல, ‘`அப்படி எல்லாம் இல்லையே!'’ என மறுக்கிறாள் வெண்ணிலா.
‘`இவங்களை வெச்சுட்டு பேட்டி எடுத்த மாதிரிதான்!’' என்று சிரிக்கிறார் மகாலட்சுமி. சூரியைப் போலவே அவருடைய குடும்பமும் கலகல!
“ ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை கல்யாணத்துக்கு முந்தி பார்த்தேன் சார். `இவர்தான் மாப்பிள்ளை'ன்னதும் என்னமோ மாதிரி இருந்தது. ஒருமாதிரி வயசானவராத் தெரிஞ்சாரு” - மகாலட்சுமி ஆரம்பித்ததுமே “ஆமாமா... இவங்க அப்பா அமெரிக்காவுல இருந்து ஷாரூக் கான், அர்விந்த் சுவாமி மாதிரி மாப்பிள்ளை பார்த்து வெச்சிருந் தாருண்ணே” என்று கலாய்க்கிறார் சூரி.
“அமெரிக்கா இல்லை. சிங்கப்பூர்!” என்று அதற்கு கவுன்ட்டர் கொடுக்கிறார் மகாலட்சுமி. “நெஜமா சார்... சிங்கப்பூர் மாப்பிள்ளை பார்த்து வெச்சிருந்தாங்க. அப்புறமா இவரோட ஃபேமிலி பிடிச்சுப் போய்தான் கல்யாணத்துக்கு ஓ.கே சொன்னேன்.”
குடும்பம் என்றதுமே கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார் சூரி.
“அப்பா முத்துசாமி. அம்மா சேங்கை அரசி. ஆறு பசங்க நாங்க. அண்ணன் பேரு கண்ணன். அடுத்து நானும் லட்சுமணனும் ரெட்டைப் பிறவி. எங்களுக்கு செல்லமுத்து, ஆதீஸ்வரன், சீனிவாசன்னு மூணு தம்பிக. எல்லாருக்குமே கல்யாணம் முடிஞ்சு, மதுரையில கூட்டுக் குடும்பமா இருக்காங்க. நான் வேலைன்னு இங்கே வந்துட்டேன். ஆனா, பொண்ணு பர்த்டே, பையன் பர்த்டேனு எல்லா விசேஷமும் ஊர்லதான். அங்கே விழா வைக்கிறப்ப, பக்கத்து ஊர்ல ஷூட்டிங்ல இருக்கும் விஷால் அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கார். அப்படி எப்பவாவது வி.ஐ.பி-ங்க யாராச்சும் வருவாங்க. எனக்கு எங்க குடும்பம்தான் எல்லாமே. ஆறு மருமகள்கள் இருந்தாலும் வீட்ல எல்லாருக்குமே எங்க அம்மாதான் சமையல்'' என நெகிழ்கிறார் சூரி.
“கல்யாணத்துக்கு அப்புறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க?” - மகாலட்சுமியிடம் கேட்டதுமே பதில் வருகிறது.
“அவர் சினிமாவுலதான் சார் நடிகர். வீட்டுக்கு வந்தா வீடே கலகலன்னு இருக்கும். சினிமாக்காரராப் பார்க்கவே முடியாது. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் இதைத்தான் சொல்வேன். இப்பகூட ஃப்ரெண்ட்ஸ் போன் பண்ணி ‘புஷ்பா புருஷன் என்ன பண்றாரு?’னு கேட்டு, கிண்டல் பண்ணுவாங்க” என்கிறார்.
“அப்படிச் சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?”
“அந்தப் படத்தை நான் தியேட்டர்ல தான் பார்த்தேன். எல்லாரும் அப்படிச் சிரிக்கிறாங்க. எனக்கு சந்தோஷமாத்தான் இருந்தது. அதுதானே இவரு பொழப்பு. பண்ணித்தானே ஆகணும்! அதுக்கு எல்லாம் வருத்தப்பட முடியுமா? அதுவும் இல்லாம சிரிக்கவைக்கிறதுதான் சார், இருக்கிறதுலயே ரொம்பக் கஷ்டமான விஷயம்.”
“இவர் ஹீரோவா நடிச்சா, யாரை ஹீரோயினா போடலாம்?”
“ஹீரோ எல்லாம் வேண்டாம் சார்” என்றவர், சட்டென “அவருக்கு நயன்தாரா ரொம்பப் பிடிக்கும்” என்கிறார். சூரி நடுவில் புகுந்து “ஆமாண்ணே... அப்புறம் அன்னைய தேதியில் இந்தியாவுலேயே டாப்ல இருக்கிற அஞ்சு ஹீரோயின் பேரையும் போட்டுக்கலாம்ணே. கனவு காண்றோம்... கொஞ்சம் பெரிசாவே யோசிப்போமே!”
“ஒரே சமயத்துல நீங்க எத்தனை பரோட்டா சாப்பிடுவீங்க?”
“ரெண்டு மாசம் சாப்பிடாம, ஜீவன் போற நிலைமையில்கூட, இதைச் சாப்பிட்டாத்தான் உயிர்வாழ முடியும்னு பரோட்டாவைக் குடுத்தாக்கூடச் சாப்பிட மாட்டேன்ணே'' என சூரி சொன்னதும் இடைமறித்து, ``இதெல்லாம் வீட்லதான். பிரியாணி பிடிக்காது, பரோட்டா பிடிக்காது, வெளியே போய்ச் சாப்பிடுவார். இப்பகூட பாருங்க, 10 நாள் ஷூட்டிங் முடிஞ்சு வந்திருக்கார். வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்குவார்னு ‘என்ன சமைக்கலாம்?'னு கேட்டா, ‘வெளியில சாப்பிட்டுக்கிறேன்’ கிறார்” என்றார் மகாலட்சுமி.

“அண்ணே... பேட்டி `சொல்வதெல்லாம் உண்மை' மாதிரி போகுதுண்ணே” என்று பேச்சை மாற்றுகிறார் சூரி. “சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்கிறது இல்லைண்ணே. கிடைக்கிறதைச் சாப்பிட்டுக்கிறது. இதே சென்னையில பசிமயக்கம் வந்து ரோட்ல உட்கார்ந் திருக்கேன்ணே” என்று ஃப்ளாஷ்பேக் குக்குப் போகிறார்.
“1996-ல் சென்னை வந்தேன்ணே. சான்ஸ் கேட்டு பல ஆபீஸ் ஏறி இறங்கியிருக்கேன். நான் மட்டும் இல்லை, எல்லாருமே அப்படிக் கஷ்டப்பட்டு வந்தவங்கதான்ணே. இருந்தாலும் சொல்றேன். அப்படி ஒரு ஆபீஸுக்கு வந்து டைரக்டரைப் பார்க்கணும்னு காலையில் இருந்து வெயிட் பண்ணேன். பசி. காசு இல்லை. மயக்கமா இருந்தது. அப்படியே ரோட்ல உட்கார்ந்துட்டேன். அங்கே இருந்தவங்க கடைசி வரைக்கும் ஆபீஸ் கதவைக்கூடத் திறக்கலை.”
கேட்டுக்கொண்டே இருந்த அவர் மனைவி, ‘`அது எந்த இடம்னு தெரியுமா?” - மிகுந்த பூரிப்புடன் கேட்கிறார்.
“இப்ப நாம உக்கார்ந்திருக்கும் இந்த ஆபீஸ்தான்ணே. ஆபீஸுக்கு இடம் பார்த்தப்ப இதே தெருவுல வாங்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இதே கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. வாங்கினதும் ஆபீஸ்ல பசங்ககிட்ட ஒண்ணே ஒண்ணுதான் சொன்னேன், ‘யார் வந்தாலும் உள்ளே உக்காரவெச்சு குடிக்கவோ, சாப்பிடவோ ஏதாச்சும் குடுக்கணும். அப்புறமாத்தான் யாரு... என்னன்னு கேட்கணும்'னு. ஏன்னா, அப்படி வெளியே நின்னவன்தான்ணே நானு!”
“அப்புறம், சினிமா சான்ஸ் எப்படிக் கிடைத்தது?”
“பெயின்ட்டிங் வேலை செஞ்சுட்டிருந்தப்ப, ஆர்ட் டைரக்ஷன்ல சில பேர் பழக்கமானாங்க. அவங்க மூலமா சில படங்கள்ல ஆர்ட் டைரக்ஷன் சைடுல வேலை செஞ்சேன். அப்புறமா சின்னச் சின்ன வேஷங்கள்ல வந்து போவேன். எழில் சார்கிட்ட சான்ஸ் கேட்டு நடிச்சுக் காமிச்சேன். அப்ப சுசீந்திரன் அண்ணன் அவருகிட்ட அசிஸ்டன்ட். அவர் என்னைக் கவனிச்சு மனசுலயே வெச்சிருந்திருக்கார்போல. அவர் `வெண்ணிலா கபடி குழு' படம் பண்ணும்போது, ஆள் அனுப்பித் தேடி எனக்கு அதுல நடிக்க சான்ஸ் குடுத்தார்.”
“சுசி அண்ணன் இல்லைன்னா எங்க கல்யாணமே நடந்திருக்காது சார். எங்கேயோ சுத்திட்டிருந்த இவரைத் தேடி வாய்ப்பு குடுத்தார்ல சார்” என்ற மகாலட்சுமி, “இவரும் அப்படித்தான் சார். உதவின யாரையுமே மறக்க மாட்டார்” என்றார்.
“அதுகூட இல்லைன்னா அப்புறம் என்ன இருக்குண்ணே? நான் பெயின்ட்டிங், அது இது சின்னச் சின்ன வேலை செஞ்சுட்டே ஏவி.எம்-முக்கு எதிர்ல இருக்கும் கங்கப்பா தெருவுல நாடகம் போடுவேன். அப்ப போலீஸ் டிரெஸ் வாடகைக்கு எடுக்கிறது, மேக்கப்மேனுக்கு கடன் சொல்லிக் கூட்டிட்டு வர்றதுன்னு கஷ்டமா இருந்தாலும், நானே ஸ்க்ரிப்ட் எழுதி நடிப்பேன். வீரப்பன் மேட்டர் அப்ப டாபிக்கலா இருந்தது. அதை வெச்சு ‘என்னாது... கோரிக்கையா..?’னு ஒரு நாடகம். அசிஸ்டன்ட் டைரக்டர்கள் எல்லாரும் நின்னு பார்த்துட்டுப் பாராட்டிட்டுப் போவாங்க. போலீஸ்காரர் ஒருத்தர், நானூறு ரூபாய் வசூல் பண்ணிக் குடுத்தது இன்னமும் ஞாபகம் இருக்கு.
மேக்கப்மேன் ரத்தினம்னு ஒரு அண்ணன்தான் மேக்கப் போட வருவார். எப்பவுமே அவருகிட்ட கடன்தான் சொல்வேன். எனக்கு கொஞ்சம் படங்கள் புக் ஆகி தனியா மேக்கப்மேன் வேணும்கிறப்போ பசங்ககிட்ட சொல்லி, அவரைத் தேடிப் பிடிச்சேன். இதுல நெகிழ்ச்சியான விஷயம் என்னன்னா, பொண்ணுகளைப் படிக்கவைக்கணும், கல்யாணம் பண்ணிக் குடுக்கணும். இனி இந்த ஊர்ல பொழைக்க முடியாதுனு அவங்க ஊருக்குப் போக ரெடியாகிட்டிருந்தாங்க. ஆண்டவன் அருளால கரெக்ட்டா போய்ப் பிடிச்சுட்டேன். ரொம்ப நாளா அவருதான் எனக்கு மேக்கப்மேனா இருந்தார். இப்ப அவருக்கு உடம்பு முடியலை.”
“உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர்கள் யார்?”
“சந்திரபாபு சார், நாகேஷ் சார். அடுத்து ட்ரெண்ட் செட் பண்ணவர் வடிவேலு சார்தான். நாங்க ரசிகர்களோட ட்ரெண்டுக்குப் படம் பண்ணிட்டிருக்கோம். வடிவேலு சார் எல்லாம், ட்ரெண்டை உருவாக்கி, நடிச்சவர்ணே.”
``உங்க இங்கிலீஷ் டீச்சர் பெயர் என்ன?''
``டெனோ சான்யா. அவங்களாலதான் நான் இந்த அளவுக்கு இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறேன்'' என்று சூரி சொல்லிக்கொண்டிருக்க...
“அப்பா நீ தமிழ்லயே பேசுப்பா” என்று கலாய்க்கிறார் மகள் வெண்ணிலா. “உங்க ரெண்டு பேருக்கும் அப்பா யார்கூட நடிச்சாப் பிடிக்கும்?” என்று கேட்க, வாரிசுகள் இருவருமே `‘சிவா மாமா’' என்கிறார்கள்.
“எல்லார்கூடவும் நடிக்கணும் சார். ரஜினி சார், கமல் சார், தனுஷ் சார்கூட எல்லாம் நடிக்கணும்னு ஆசை. எந்தப் படம் பண்ணினாலும் இவர் நடிக்கிறது நல்லா பேசப்படணும்” என்கிறார் மகாலட்சுமி.
“புடவைக் கடை, நகைக் கடைக்கு எல்லாம் இவர்கூடப் போகணும்னு ஆசை. அப்படிப் போனா, அம்பது நூறு ஆளுக சுத்திக்கிடுவாங்க. சந்தோஷமா, பெருமையாத்தான் இருக்கும்.இருந்தாலும், கூட்டம் கூடுதுன்னு இவர் வர மாட்டார். அதனாலயே குழந்தைகளோடு தனியாப் போவேன்.”
“ `வெண்ணிலா கபடி குழு'ல கிராமத்தானா இருந்த இவரை ‘இது நம்ம ஆளு’ல மார்டனா பார்த்தப்ப, என்ன நினைச்சீங்க?”
“சந்தோஷமாத்தான் இருந்தது. படத்துல எப்படி இருக்கிறார்ங்கிறதை விடுங்க சார். ஃபேமிலியை நல்லா பார்த்துக்கிறார். சினிமாக் காரர்னு வேண்டாம்னு சொல்லிருந் தேன்னா, நிச்சயமா இவரை மிஸ் பண்ணிருப்பேன். அந்த விஷயத்துல நான் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கேன்” என்று மகாலட்சுமி சொல்ல, “பல நாள் ஷூட்டிங்னு வெளியே சுத்துறேன்ணே. இருந்தாலும் நான் இருக்கேன்னு இப்படிச் சொல்றாங்க பாருங்க” என்று கலாய்க்கிறார் சூரி.
“அது பொழப்பு சார். எங்கே சுத்தினாலும் வீட்டுக்குத்தானே வந்தாகணும்” என்று கலகலப் பாக்குகிறார் மகாலட்சுமி.
நிஜமாகவே, சூரியின் குடும்பம் ‘லட்சுமி’கரமான குடும்பம்தான்!