சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“அஜித் பற்றி கேட்காதீங்க!”

“அஜித் பற்றி கேட்காதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அஜித் பற்றி கேட்காதீங்க!”

ஆர்.வைதேகி

`` ஃபாலோ யுவர் பேஷன். ஜெயிக்கிறதுக்கு அது மட்டும் தான் ஒரே வழி. இதை நான் சொல்லலை. என் ரோல்மாடல் மேரிகோம், ஒருமுறை என்கிட்ட சொன்னாங்க. அதைத்தான் எனக்கான மந்திரமா வெச்சிருக்கேன். ஸ்போர்ட்ஸ்ல மட்டும் இல்லை, லைஃப்லயும்!'' - அதிரடியாக, ஆர்வமாகப் பேசுகிறார் ரித்திகா சிங்.

``எங்க அப்பா மோகன் சிங், ஒரு பாக்ஸர். அவர் பாக்ஸிங் பண்றதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் பாக்ஸிங் மீது ஆர்வம் வந்தது. மூணு வயசுலயே அப்பா எனக்குப் பயிற்சி தர ஆரம்பிச்சுட்டார். ஆனா, காலையில் சீக்கிரமே எழுந்திருக்கிறது, டயட் இருக்கிறது எல்லாம் கஷ்டமா இருந்தது. என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். `உனக்குள்ள ஒரு திறமை இருக்கு.  நீ ஜெயிக்கப் பிறந்திருக்கே. சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டிட்டு, பாக்ஸிங்ல கவனம் செலுத்தினா, எங்கேயோ போயிடுவே!'னு சொல்லிட்டே இருப்பார்.

அதுக்கு அப்புறம்தான் பாக்ஸிங்கில் சீரியஸா இறங்க ஆரம்பித்தேன். அப்பாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு என் திறமையை வளர்த்துக்கிட்டேன். 17 வயசுல ஒரு பாக்ஸிங் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கிட்டது, அதுல முட்டி உடைஞ்சு ஷோவில் இருந்து நீக்கப்பட்டது, அந்த போஸ்டரைப் பார்த்துட்டு பாலிவுட் டைரக்டர் ராஜ்குமார் ஹிரானியும் நடிகர் மாதவனும் `இறுதிச்சுற்று' படத்துக்கு என்னை நடிக்கக் கூப்பிட்டது, இன்னிக்கு நான் ஒரு நடிகையா பேசிட்டிருக்கிறது... எல்லாமே கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள நடந்திருச்சு'' - 21 வருட வாழ்க்கையை இரண்டே நிமிடங்களில்  சொல்கிறார் ரித்திகா.

“அஜித் பற்றி கேட்காதீங்க!”

``திடீர் நடிகையான உங்களுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது... எதிர்பார்த்தீங்களா?''

“நேஷனல் அவார்டு என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. விருது கிடைச்சிருக்குங்கிற தகவல் வரும்போது, என் போன்ல சாஃப்ட்வேர் அப்டேட் ஆகாமல் சுவிட்ச் ஆஃப்ல இருந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சு போன் ஆன் ஆனதும் எக்கச்சக்க மெசேஜ். என்ன நடக்குதுன்னே தெரியாம ஷாக் ஆகிட்டேன். யார் யாரோ போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. எல்லாம் நிஜமாத்தான் நடக்குதா...இல்லை என்னைக் கலாய்க்கிறாங்களானு தெரியலை. உண்மைதான்னு தெரிஞ்சப்ப அழுகையே வந்துவிட்டது. முதல் படத்துக்கு, இவ்வளவு பெரிய அங்கீகாரமானு இன்னும்கூட ஆச்சர்யம்.  என் இரண்டாவது படமான `ஆண்டவன் கட்டளை'யும் ஹிட் என்பதில், செம ஹேப்பி.''

`` `இறுதிச்சுற்று' பாக்ஸிங் கதை... அழகாப் பண்ணிட்டீங்க.  `ஆண்டவன் கட்டளை' பட அனுபவம் எப்படி இருந்தது?''

`` `இறுதிச்சுற்று' மதி கேரக்டர் கிட்டத்தட்ட என் ஒரிஜினல் கேரக்டர். ஹைப்பர் ஆக்ட்டிவ்னு வெச்சுக்கோங்களேன். அதுக்கு உல்ட்டாவா, `ஆண்டவன் கட்டளை'யில் ஓவரா பேசவோ, சிரிக்கவோ வாய்ப்பு இல்லாத ஒரு கேரக்டர். அதுக்குள்ள வர்றதுக்கு ரொம்பவே கஷ்டப் பட்டேன். எங்கேயாவது ரியல் ரித்திகா எட்டிப்பார்த்துடுவாளோங்கிற பயத்துலதான் நடிச்சேன். நல்லவேளை, அழகா  சமாளிச்சுட்டேன்.  அடுத்து ராகவா லாரன்ஸ் - பி.வாசுனு கமர்ஷியல் கூட்டணி. `சிவலிங்கா'வில் முதல் இரண்டு படங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே  இல்லாத கேரக்டர். `நீ இப்ப நடிகை... பாக்ஸிங் பண்றேன்னு சொல்லிட்டு, முகத்தை டேமேஜ் பண்ணிக் காதே!'னு சொன்னார் பி.வாசு சார். அட ஆமாம்ல... இத்தனை நாளா என் முகத்தைப் பற்றியோ, அழகைப் பற்றியோ கொஞ்சமும் யோசிச்சதே இல்லை. இனிமே அழகு விஷயத்துலயும் அக்கறை எடுத்துக்கணும். ஆமா... இப்போ நான் அழகா இருக்கேன்ல?”

``ஃபிட்னெஸ்க்கு என்ன பண்றீங்க?''

“எனக்கு சைஸ் ஜீரோ உடம்பே பிடிக்காது. எலும்பும் தோலுமா அந்த லுக்கைப் பார்க்கவே நல்லா இருக்காது. அது ஆரோக்கியமானதும் இல்லை. பட்டினி கிடக்கிறதும் பார்த்துப் பார்த்து சாப்பிடுறதும் தேவையா? பொண்ணுங்கன்னா உடம்புல கொஞ்சமாவது கொழுப்பு இருக்கணும். அதுதான் அழகு!”

``அடுத்து அஜித் படத்துல நடிக்கிறீங்கனு ஒரு பேச்சு இருக்கே?''

``அதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வேற எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்!''