சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு!”

“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு!”

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...

“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு!”

வாணி போஜன்

`சத்யப்பிரியா போல ஒரு மகள், மருமகள் நமக்குக் கிடைக்க மாட்டாங்களா?' என, பல இல்லத்தரசிகளை ஏங்கவைத்துக் கொண்டிருப்பவர் `தெய்வமகள்' வாணி போஜன்.

நேர்த்தியான ஆடை அலங்காரங்களாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தாலும் சீரியல் ரசிகர்களின் மனதில் `பச்சக்' என பசை போட்டு ஒட்டிக்கொண்டிருப்பவர். பேச்சிலும், குணத்திலும், கலகலச் சிரிப்பிலும் நிஜமாகவே சத்யாவாகத்தான் ஜொலிக்கிறார் வாணி.

``ஹே... தாராளமா எவ்ளோ வேணும்னாலும் பேசலாம்'' என்று அன்பாக வரவேற்றவரிடம், ஒரு காபியோடு பேச்சு தொடர்ந்தது.

`` `சத்யா' நிஐத்தில் எப்படி?''

`` `நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு. ஏன்னா, பொறந்தது வளர்ந்தது எல்லாமே குளு குளு நீலகிரி மாவட்டம், ஊட்டி. படித்தது ஆங்கில இலக்கியம். சின்ன வயசில் இருந்தே நடிப்பு மேல ஆர்வம்'னு எல்லாம் கதை சொல்ல மாட்டேன். ஆனா, நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். மூணு வருஷம் ஏர்ஹோஸ்ட்டஸா உலகம் முழுக்கச் சுத்திட்டு இருக்கும்போதே நண்பர்களோட அன்புத் தொல்லை, `அழகா இருக்க. நீ ஏன் மாடல் ஆகக் கூடாது?'னு கேட்டுட்டே இருப்பாங்க.

ஃப்ரெண்ட்ஸோட ஆசையை அப்படியே ஏத்துக்கிட்டு இந்த ஃபீல்டில் வலதுகால் எடுத்து வெச்சேன்'' என்று படபடவெனப் பேசிவிட்டு பெருமூச்சு விடுகிறார் வாணி.

``விளம்பரத்தில் இருந்து சீரியல் என்ட்ரி எப்படி நடந்தது?''

``சுமார் 150 விளம்பரங்களுக்கு மேல பண்ணிட்டேன். அந்தச் சமயத்தில் விஜய் டி.வி-யில் இருந்து `ஆஹா!' சீரியல் வாய்ப்பு வந்தது. அதில் பாவாடை தாவணினு பக்கா ஹோம்லி. இன்னொரு பக்கம், `மாயா' சீரியல். ஷூட்டிங் பரபரப்புலேயே லைஃப் போயிட்டு இருக்கிறப்போ, திடீர்னு கிடைத்த பெரிய சான்ஸ் `தெய்வமகள்'.

கிட்டத்தட்ட என் வாழ்க்கையையே உச்சத்துக்குக் கொண்டுபோயிடுச்சுன்னுதான் நான் சொல்வேன். டிரெஸ், காஸ்ட்யூம் பொறுத்தவரை எல்லாமே என்னோட செலெக்‌ஷன்தான். பளிச்சுனும், அதே நேரத்தில் கம்பீரமாவும் நம்மை காட்டுற ஆடைகள்தான் என்னோட முதல் சாய்ஸ். ஆடைகள் பற்றி என்கிட்ட ஐடியா கேட்கிறவங்களுக்கு `உங்களுக்கு எது சூட் ஆகுமோ அந்த மாதிரியான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறது நல்லது'னு பியூட்டி டிப்ஸும் கொடுத்தவரிடம் குடும்பம் பற்றிக் கேட்டோம். சின்னக் குழந்தையாகக் குதூகலிக்கிறார்.

``அப்பாவோட ஆல்டைம் ஃபேவரிட் மாடல் நான்தான். ஏன்னா, அப்பா வைல்டு லைஃப் போட்டோகிராஃபர். அம்மா ஸ்வீட்டான ஹவுஸ் வைஃப். அண்ணன் ஜெர்னலிஸ்ட். முடிஞ்சவரை எல்லோர்கிட்டயும் ஃப்ரெண்ட்லியாப் பழகுவேன். ரொம்ப போல்டான பொண்ணு. அதே சமயம் ரொம்ப ஜாலி டைப்!''

``ஒரு டி.வி நாயகியா, நீங்க டி.வி சேனல்களை நினைத்து வருத்தப்படுற விஷயம் எது?''

``வட இந்திய சீரியல்கள். அந்த ஸ்லாட்டுக்கு நம்ம ஊர் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தா, நம்ம மண்ணுக்கு நெருக்கமான சீரியல்கள் அதிகம் வரும்.அவங்களோட ஸ்பெஷல் மேக்கப்பை, நாமளே அழகா கொண்டுவரலாம். அதோடு புரொடக்‌ஷன் காஸ்ட். இது ரெண்டையும் சரி பண்ணா, நம்ம ஊர் சீரியல்களை மக்கள் அதிகம் ரசிப்பாங்க!” வாணியின் குரலில் அக்கறை நிறையவே இருக்கிறது.