சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“சரண்யா ஹேப்பி மகன்களே!”

“சரண்யா ஹேப்பி மகன்களே!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சரண்யா ஹேப்பி மகன்களே!”

ஆர்.வைதேகி

“சரண்யா ஹேப்பி மகன்களே!”

`அம்மா கேரக்டரா... ஐயய்யோ...' என அலறிய முன்னாள் ஹீரோயின்கள் மத்தியில், அம்மா கேரக்டரில் நடிக்க போட்டியை ஏற்படுத்தியவர்; அம்மா வேடத்துக்காக தேசிய விருது வாங்க முடியும் என நிரூபித்தவர்.

தமிழ்நாட்டு அரசியலின் `அம்மா' ஜெயலலிதா என்றால், தமிழ் சினிமாவின் `அம்மா' சரண்யா. அன்பான அம்மா, அப்பாவி அம்மா,  அசட்டு அம்மா... என, தமிழ் சினிமாவில் அத்தனை இளம் ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார் சரண்யா பொன்வண்ணன்.

``1987-ம் ஆண்டு தீபாவளி...  காலேஜ்ல செகண்ட் இயர் படிச்சுட்டிருக்கேன். மணிரத்னம் சார் படத்துல நடிக்கிற வாய்ப்பு. கமல் சார் ஹீரோ. `நாயகன்'  படம். அது என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய வாய்ப்புனு அப்போ தெரியாது. சினிமா உலகத்துக்குள் சும்மா ஜாலியா நுழைஞ்சேன்.

ஆரம்பத்துல இப்படி நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க மாட்டேன்னு நிறைய  வாய்ப்புகளுக்கு நோ சொன்னேன். ஏன்னா, என் வளர்ப்பு அப்படி. அதனால அந்தக் காலத்துப் படங்களோட என்னால ஒட்ட முடியலை. அன்னிக்கு எல்லா படங்கள்லயும் ரேப் சீன், குளிக்கிற சீன், முந்தானையை எடுத்துட்டு ஆடுற டான்ஸ் எல்லாம் இருக்கும். இதை எல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னதும் நான் இண்டஸ்ட்ரிக்கே தகுதி இல்லாதவளா இருந்தேன். அதனாலதான் அந்த நேரத்தில்  என்னால் பிரபலமாக முடியலை. ஆனா, என் பொறுமைக்கும் திறமைக்கும் மரியாதை இப்போ கிடைத்தது. இதோ, இப்போ ஔவையார் ரேஞ்சுக்கு சந்தோஷமா செட்டில் ஆகியிருக்கேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லாம் சேர்த்து ஹீரோயினா 50 படங்களைத் தாண்ட முடியாத நான்,  இப்ப அம்மாவா ஒரே மொழியில்  50 படங்களுக்கும் மேல பண்ணிட்டேன்'' - படபடவெனப் பேசுகிறார் சரண்யா பொன்வண்ணன்.

 அதிர்ஷ்டமான அம்மா...


``இவ்வளவு அழகான ஒரு உலகத்துக்குள்ளே அன்னிக்கு அவ்வளவு கசப்போட நுழைஞ்சோமானு  தோணுது. இப்போ எனக்கு ஒரு மகாராணி ஸ்டேட்டஸ் கிடைச்சிருக்கு. நான் நடிச்சாலே சக்சஸ்னு சொல்றாங்க. அன்னிக்கு என் குரல் பெரிய மைனஸ். `ஆண் குரல்... கரகர தொண்டை'னு சொன்னாங்க. இப்ப என் வாய்ஸ்தான் ப்ளஸ்னு சொல்றாங்க. ஹீரோவுக்கே என்னால லைஃப்னு சொல்றாங்க. மனசுக்குள்ள சிரிச்சுக்கிறேன். அவ்வளவுதான்.

 நான் ஹீரோயினா நடிக்கணும்னு ஆசைப்பட்டது எங்க அம்மா. அது நடக்கவே இல்லை.  நான் ஹீரோயினா நடிக்கிறதுக்குள்ளஅவங்க இறந்துட்டாங்க. என்னோட இந்த செகண்ட் இன்னிங்ஸ் சக்சஸ் ஆகவெச்சது அவங்க ஆத்மாவோட வேலைதான்னு நம்புறேன். `ஆத்மாவுக்கு சக்தி இருக்கா?’னு கேட்பாங்க. `ஆனந்தபுரத்து வீடு'னு ஒரு படம் வந்தப்ப, அதுதான் எங்க வீட்ல நடக்குதுனு அழுத்தமா நம்பினேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எங்க அம்மாவோட ஆசீர்வாதம்தான் என் வெற்றிக்குக் காரணம்.

“சரண்யா ஹேப்பி மகன்களே!”

அம்மா கணக்கு...

`அலை'தான் நான் அம்மாவா அறிமுகமான முதல் படம். டைரக்டர் விக்ரம் கிருஷ்ணா என்னை சிம்புவுக்கு அம்மாவா நடிக்கவெச்சார். அப்ப நான் `வீட்டுக்கு வீடு லூட்டி’னு ஒரு சீரியல் பண்ணிட்டிருந்தேன். அழகான, இளமையான ஒரு அம்மா வேணும்னு வந்து கேட்டார். அம்மானு சொன்னதும் நான் `பண்ண மாட்டேன்’னு சொல்வேன்னு தயங்கினாராம். நானும் ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மாதானே... `சினிமாவில் அம்மா வேஷம் பண்ணினா என்ன தப்பு?'னு யோசிச்சேன். அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று வருஷம் `ராம்’, `தவமாய் தவமிருந்து’ வரைக்கும் நிறையப் படங்கள்ல அம்மாவா பண்ணியிருக்கேன்.  எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ் `நீ என்ன அம்மா மாதிரியா இருக்கே... எதுக்கு இவங்களுக்கு எல்லாம் அம்மாவா நடிக்கிறே?’னு என்னைத் திட்டியிருக்காங்க.  இதனால எனக்கு எதிர்காலம் வரும். தமிழ்நாட்டுல எல்லா படங்கள்லயும் அம்மாவா நடிக்கப்போறேன். நேஷனல் அவார்டு வாங்கப்போறேன்னு எல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்கலை. சரண்யா ஹேப்பி மகன்களே!

 நிஜத்தில் அம்மா சரண்யா எப்படி?


சினிமாவுல நீங்க பார்க்கிற அம்மாவுக்கும் நிஜ வாழ்க்கையில பார்க்கிற அம்மாவுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. அதுதான் நான். எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. மொக்கையா ஏதாவது பேசுவேன். என் பசங்க கிண்டல் பண்ணிச் சிரிப்பாங்க. தப்பு பண்ணினா, செம டோஸ் விடுவேன். அதுவே அவங்க சந்தோஷத்துக்காகன்னா,  என்ன வேணா இழுத்துப்போட்டு மெனக்கெட்டுச் செய்யுற அம்மா நான்.

எனக்கு ரெண்டு பொண்ணுங்க, பெரியவ ப்ரியதர்ஷினி, மூணாவது வருஷம் டாக்டர் படிக்கிறா. சின்னவ சாந்தினி, ப்ளஸ் டூ. ரெண்டு பேருக்கும் சினிமா ரொம்பப் பிடிக்கும். எல்லா விஷயங்கள்லயும் அப்டேட்டட். ஆனா, நடிக்கிறதுல விருப்பம் இல்லை. என் எதிர்காலம் என் பொண்ணுங்கதான். எனக்கு அமைஞ்சது மாதிரி அவங்களுக்கு நல்ல ஹஸ்பெண்ட் அமையணும்.

கணவர் ரூபத்தில் அம்மா!

என் வாழ்க்கையில நிறைய அற்புதங்கள் நடந்திருக்கு. என் கல்யாணமும் அதுல அடக்கம்.  மாச சம்பளம் வாங்குற ஒருத்தரைத்தான் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சேன்.  ஆனா, அப்படி இல்லாத ஒருத்தரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கிறிஸ்துவரான எனக்கு, ஒரு இந்து மாப்பிள்ளை.

நான் சிட்டியில பிறந்து வளர்ந்தவள். அவரோ,  கிராமத்தில் இருந்து வந்தவர்.  நினைச்சுப்பார்க்காத காம்பினேஷன் இது. `எங்க அம்மாவோட ஆவி உங்களுக்குள்ள ஏறி ஆட்டுது'னு என் வீட்டுக்காரர்கிட்ட அடிக்கடி சொல்வேன். அம்மா மாதிரியே என் விருப்பங்களுக்குத் தடை போடாதவர். அம்மா இருந்து பண்ண விஷயங்களை எனக்கு இப்ப அவர் செய்றார்.

என்னோட செகண்ட் இன்னிங்ஸ்ல நான் சக்சஸ் பண்ண பெரிய காரணம் என் கணவர்தான். வாய்ப்புகள் வந்தப்ப நான் தயங்கியிருக்கேன். `அம்மா கேரக்டர்லயா பண்ணப்போறே?’னு என்னைச் சுற்றி இருக்கிற எல்லாரும் கிண்டலா கேட்டபோது, என் கணவர்தான்,  சப்போர்ட் பண்ணினார். அவர் உண்மையிலேயே தங்கமான மனிதர்!''