சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“இதுதான் கடவுள் போடுற கணக்கு!”

“இதுதான் கடவுள் போடுற கணக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இதுதான் கடவுள் போடுற கணக்கு!”

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...

நிஷா - கணேஷ் வெங்கட்ராம்

“இதுதான் கடவுள் போடுற கணக்கு!”

`தி மோஸ்ட் ரொமான்ட்டிக் கப்புள்' என டைட்டில் தருகிறார்கள் நிஷா - கணேஷ் வெங்கட்ராம் ஜோடிக்கு. திருமணம் முடிந்து, அடுத்த மாதம் ஓர் ஆண்டு முடிவடைகிறது. ஆனால், ஜோடி இன்னும் ஹனிமூன் ட்ரிப்பில் இருந்தே மீளவில்லை. நிஷா, ஜீ டி.வி-யில் ஒளிபரப்பாகும் `தலையணைப் பூக்கள்' தொடரின் நாயகி. கணேஷ் வெங்கட்ராம் தமிழ் சினிமாவின் சேலஞ்சிங் ஆக்டர்.

``போன வருஷம் எங்களுக்குக் கல்யாணம் ஆனதும், வெள்ளம் வந்து எங்க ஹனிமூன் ப்ளான் எல்லாம் சொதப்பலாகிடுச்சு. அதான் இப்ப ஆசை தீர ஊர் ஊராச் சுத்திட்டிருக்கோம். போன வாரம்தான் நியூஸிலாந்துல இருந்து வந்தோம். அடுத்த ட்ரிப்புக்கு ப்ளான் போயிட்டிருக்கு'' நிஜமாகப் பேசும் நிஷா, சின்னமனூர் பொண்ணு.

``டென்ட்டிஸ்ட் ஆகணும்கிறதுதான் என் கனவு. ப்ளஸ் டூ முடிச்சிருந்த டைம், பேப்பர்ல ஒரு ஆடிஷன் விளம்பரம் பார்த்தேன். ட்ரை பண்ணலாமேனு போனேன். செலெக்ட் ஆகிட்டேன். `நீ என்ன வேணா பண்ணு. ஆனா, அது சம்பந்தமா முறைப்படி படிச்சுட்டுப் பண்ணு'னு வீட்ல ஸ்ட்ரிக்ட்டாச் சொல்லிட்டாங்க. அதனால எம்.ஓ.பி காலேஜ்ல மாஸ்டர்ஸ் இன் பிராட்காஸ்ட்டிங் கம்யூனிகேஷன் முடிச்சேன். இன்னொரு பக்கம் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். படிச்சுக்கிட்டே சம்பாதிக்கிறதுல ஒரு த்ரில் இருந்தது. டாக்டர் கனவுக்கு டாட்டா சொல்லிட்டு, ஃபுல்டைம் மீடியாவுக்கு வந்துட்டேன்'' என்ற நிஷாவுக்கு, ஒரே நேரத்தில் சீரியலுக்கும் சினிமாவுக்கும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

``படம் எல்லாம் நமக்கு செட்டாகாதுனு நானா முடிவுபண்ணிட்டு, `கனா காணும் காலங்கள்'ல கமிட் ஆகிட்டேன். அந்த சீரியல் சூப்பர் ஹிட். அப்புறம் வேற வேற சேனல்கள்... வேற வேற புரோகிராம்னு செம பிஸியா ஓடிட்டிருந்தேன். அப்படித்தான் நானும் கணேஷும் ஒரு ஷோ பண்ணினோம். நிச்சயதார்த்தம் முடிஞ்ச ஜோடிகளுக்குள்ள கெமிஸ்ட்ரி எப்படி இருக்குனு டெஸ்ட் பண்ற ஜாலி ஷோ அது. அவங்க கெமிஸ்ட்ரி எப்படி இருந்ததோ தெரியலை, ஷோ முடியுறதுக்குள்ள எங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகிடுச்சு. கணேஷ்தான் முதல்ல புரப்போஸ் பண்ணினார். எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. ரெண்டு பேர் வீட்லயும் பேசினாங்க. சந்தோஷமா சம்மதிச்சாங்க. நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையில் ஒன்பது மாசம் இருந்தது. அஃபிஷியலாச் சுத்தின அந்த நாட்களை மறக்க முடியாது'' நிஷாவின் கல்யாணம் முதல் காதல் வரை கதையில் அத்தனை சுவாரஸ்யம்.

``கல்யாணத்துக்குப் பிறகு, பிஹெச்.டி பண்ணணும்னு மீடியாவுல இருந்து விலகிடலாம்னு இருந்தேன். அப்பதான் ஜீ டி.வி-யில் `தலையணைப் பூக்கள்' சான்ஸ் வந்தது. கதையும் கேரக்டரும் பிடிச்சதால் யோசிக்காம `யெஸ்' சொல்லிட்டேன். அதுக்கு முன்னாடி `மகாபாரதம்' சீரியலில் திரெளபதி கேரக்டர்ல பக்கம் பக்கமா டயலாக் பேசி, கிலோ கிலோவா நகைகள் போட்டு அலுத்துப்போயிருந்த எனக்கு, இந்த சீரியல் செம ஜாலியா இருந்தது'' என்று உற்சாகம் காட்டும் நிஷா, `கிருஷ்ணடுக்கி பாரசுடு' என்ற தெலுங்குப் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

``மாசத்துல 15 நாள் ஷூட்டிங்... 15 நாள் வீடு. இதுதான் என் ஹெட்யூல். வீட்ல இருக்கும் அந்த 15 நாளும் கணேஷ்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும்... அவர்கூட ஊர் சுத்தணும். `அபியும் நானும்' படத்துல கணேஷ் கேரக்டரைப் பார்த்துட்டு, `ஐ வான்ட் டு மேரி ஜோகிந்தர்சிங்'னு சொன்னவ நான். எந்த அர்த்தத்துல அப்படிச் சொன்னேனோ தெரியலை. அது அப்படியே உண்மையாகிடுச்சு. இதுதான் கடவுள் போடுற கணக்கு. அந்தச் சந்தோஷத்தை எக்ஸ்பிரஸ் பண்ண, என்கிட்ட வார்த்தைகள் இல்லை'' என்ற நிஷாவின் கண்களில் நிஜமான காதல்!