
பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்
சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...
வித்யா மோகன்

``அச்சச்சோ... ஃபேமிலி பேட்டியா, எங்க ஆத்துல கேட்கணுமே!'’ என்று கண்கள் விரிய குறும்பாகப் பேசத் தொடங்குகிறார் ‘வள்ளி’ சீரியல் ஹீரோயின் வித்யா. ஃபேமிலி, நடிப்பு, கேரளா டு சென்னை பயணம் என எல்லா வற்றையும் அழகாக பேலன்ஸ் செய்யும் அக்கட தேசத்து சீரியல் சின்னக்குயிலிடம், ஹேப்பியாக ஒரு டாக்!
``கேரளாவில் கோட்டயம் சொந்த ஊர். அப்பா, பேங்க்ல வொர்க் பண்ணிட்டிருந்தார். அம்மா ஹவுஸ் வொயிஃப். வீட்டுக்கு ஒரே பொண்ணுங்கிறதால் ரொம்பச் செல்லம். ஒன்பதாவது படிக்கிறப்போதே சினிமா உலகில் நுழைஞ்சுட்டேன். அதுக்கு முன்னாடி வரை சின்னச்சின்ன விளம்பரங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன்.
சொன்னா நம்ப மாட்டீங்க... கல்யாணத்துக்கு அப்புறம்தான் முழு ஆர்வத்தோட சீரியலில் நிறைய நடிச்சுட்டு இருக்கேன். என்னோட ஃபேமிலி அந்த அளவுக்கு சப்போர்ட். சின்ன வயசில் இருந்தே ஆக்ட்டிங்னா அவ்ளோ பிடிக்கும். பிறந்த வீட்டில் யாருமே இந்த ஃபீல்டில் கிடையாது. அம்மாகூட அடிக்கடி கேட்பாங்க, ‘என்ன... எப்போ பார்த்தாலும் ஆக்ட்டிங், ஆக்ட்டிங்னு சொல்லிட்டு இருக்க. நம்ம குடும்பத்தில் யாருமே சினி ஃபீல்டில் கிடையாதே!’னு.
முதன்முதலில் நடித்தது `சீதா கல்யாணம்’. அதுக்கு அப்புறம் நாலைஞ்சு படம் நடிச்சுட்டேன். கணவர் வீட்டில் எல்லாரும் சினிமா ஃபீல்ட்டில்தான் இருக்காங்க. அப்படி ஒருமுறை, என்னோட கணவர் வினு மோகனும் நானும் ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சோம். ஆனாலும் லவ் மேரேஜ் எல்லாம் கிடையாது... நம்புங்க.
ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் எங்களுக்குத் தெரியாமலே பேசி முடிச்சுட்டாங்க. `ஃப்ரெண்ட்ஸ் எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்?'னு சண்டை போட்டோம். ஆனா, அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா காதலிக்க ஆரம்பித்தோம், நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகுதான். கிட்டத்தட்ட எட்டு மாசம் காதலித்த பிறகு `ஹேப்பிலி மேரீடு’.
நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுத்துட்டே இருப்பார். ஒருநாள் வீட்டில் யாருமே இல்லை. இவர் ஒரு கதவுக்குப் பின்னாடி மெதுவா வந்து ஒளிஞ்சுட்டு இருந்திருக்கார். ஏதோ சத்தம் கேட்குதேனு பார்க்கப்போன நான், இவரை `திருடன்'னு நினைச்சுட்டேன். அதுக்கு அப்புறம் இவர்தான்னு தெரிஞ்சதும், விழுந்து விழுந்து சிரிச்சோம். நடிப்பு, சீரியல்னு இப்போ எனக்கு அவர் ரொம்ப சப்போர்ட்டிவ்.
கல்யாணத்துக்குப் பிறகுதான் ‘வள்ளி’ சீரியல் வந்தது. என் போட்டோ பார்த்ததும் வள்ளி டீம் ஓ.கே சொல்லிட்டாங்க. முதன்முதலில் தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இப்போ தமிழில் நல்லா பேச, புரிஞ்சுக்கக் கத்துக்கிட்டேன். அதுவும் கல்யாணமாகி ஆறு மாசத்துல நடிக்க வந்தாச்சு. வினுக்கு கால் பண்ணி ‘எனக்கு உங்களை உடனே பார்க்கணும்போல இருக்கு’னு போன் பண்ணி அழுவேன். பட், இப்போ டீம்ல எல்லாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. லைஃப் ரொம்ப சந்தோஷமா போய்ட்டி இருக்கு. ஓ... ஸாரி, போயிட்டு இருக்கு’' என்று மலையாளமும் தமிழுமாகப் பேசி முடித்தார் வித்யா