Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 22

குறும்புக்காரன் டைரி - 22
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 22

தி.விக்னேஷ், ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 22

தி.விக்னேஷ், ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 22
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 22
குறும்புக்காரன் டைரி - 22

 இன்னைக்கு காலையில் ரொம்ப லேட்டா கண்முழிச்சும், எழுந்திருக்க மனசு வரலை. சண்டே காலையியே எழுந்துட்டா, சாமி குத்தமாகிடுமே. விட்டத்தை பார்த்து, ‘ஒரு பெரிய பிரபலம் ஆகணும்னா என்ன பண்ணணும்?’னு தீவிரமா ‘ஜிந்திச்சுட்டு’ இருந்தேன். ‘தடால்’னு ஒரு ஐடியா மண்டையில வந்து விழுந்துச்சு. வருங்காலப் பாடப் புத்தகங்களில் இடம்பிடிக்கப்போகிற, வெளியில வந்தாலே ஆட்டோகிராஃப் போட்டு டயர்டாகப் போகிற, டி.வி-யை ஆன் பண்ணினாலே என் மூஞ்சியா தெரியப்போகிற பிரபல கிஷோர் ஆகிய நான் ஒரு முக்கியமான வரலாற்று முடிவை எடுத்தேன்.

அந்த அசாத்திய முடிவை முதலில் அம்மாகிட்டே சொல்ல, அவங்க ஒரு ஆச்சர்யமா பார்த்தாங்க. போன புதன்கிழமை காலையில் வெச்ச தேங்காய் சட்னி, சாயங்காலம் வரைக்கும் கெட்டுப்போகமா இருந்தப்போவும் இதே மாதிரிதான் முகம் இருந்துச்சு. ம்ஹூம்... நம்மை நம்பலை. அப்படியே யூ டர்ன் போட்டு உடன்பிறப்பு லோகேஷ்கிட்டே போய் சொன்னேன். அவன் சிரிச்சுக்கிட்டே, ‘கிஷோர், நூறுக்கு மேல ஒரு நம்பர் சொல்லு’னு சொன்னான்.

‘128... ஏண்டா?’னு கேட்க, ‘அத்தனை தடவை நீ இதே டயலாக்கை சொல்லிருக்க’னு கலாய்ச்சான்.

அந்த அசாத்திய முடிவு... இன்னையில் இருந்து எல்லா கெட்ட பழக்கங்களையும் விடப்போறேன். ரொம்ப யோசிச்சாலும், லிஸ்ட் நான்கு தாண்டலை. (அட... அம்புட்டு நல்லவனா நானு?) முதல் விஷயம், எப்பவுமே கடைசி நாளில் உட்கார்ந்து ஹோம்வொர்க் செய்யறது. ஆயுத பூஜைக்கு அஞ்சு நாள் லீவுவிட்டு, அஞ்சுப் பக்கத்துக்கு ஹோம்வொர்க் குடுத்தாங்க. ஸ்கூல் முடிஞ்சு வந்ததுமே, ‘நைட்டு உட்கார்ந்து முடிக்கிறோம். அஞ்சு நாள் ஜாலியா என்ஜாய் பண்றோம்’னு நினைச்சேன். ஆனா, ஜெகன் கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டான். சரி, அப்புறம் எழுதிக்கலாம்னு கிளம்பிட்டேன்.

மறுநாள் எழுந்ததும், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் எழுதுறோம்னு முடிவு பண்ணிருந்தேன். ஆனா பாருங்க, அன்னைக்குனு பார்த்து டி.வி-ல செம படம். அப்புறமா ஒரு முடிவுக்கு வந்து, லாஸ்ட் ரெண்டு நாளில் எழுதிக்கலாம்னு செலிபரேஷன் மூடுக்குப் போய்ட்டேன். ஆனா, கடைசி நாள் நைட்டுதான் எழுதவே ஸ்டார்ட் பண்ணினேன். தூக்கம் வந்ததால மீதியை காலையில் அவசர அவசரமா எழுதி முடிச்சேன். ஸோ, இந்தப் பழக்கத்தை விடப்போறேன். இன்னையில இருந்து முதல் நாளே ஹோம்வொர்க்கை முடிக்கப்போறேன்.(நோ நோ சிரிக்கப்படாது)

அடுத்தது... பொய் சொல்லி லீவு போடுறது. சில நாள் காய்ச்சல்னும், சிலசமயம் ஸ்கூலே லீவுனும் சொல்லி, நானும் ஜெகனும் கட் அடிச்சிடுவோம். ஒரு வாட்டி, ஸ்கூல் லீவுனு ஆணித்தரமா நம்பவெச்சுட்டு, ரெண்டுப் பேரும் எங்க வீட்ல உட்கார்ந்து கார்ட்டூன் பார்த்துட்டு இருந்தோம். சாயங்காலம் அம்மா ஆபீஸில் இருந்து வர, ‘நான் கெளம்புறேன் கிஷோர்’னு கிளம்பின ஜெகன் திரும்ப வந்து, ‘டேய் கிஷோர், மறக்காம ராஜேஷுக்கு போன் பண்ணி ஸ்கூல்ல இன்னிக்கு என்ன நடந்துச்சுனு கேட்டுக்கோ’னு உளற, கையும் ரிமோட்டுமாக மாட்டினோம். இனிமே, பொய்யே சொல்லக் கூடாதுனு முடிவு பண்ணினேன்.

அப்புறம்... கிளாஸ் நடக்கும்போது பக்கத்துல இருக்கிறவன்கிட்டே பேசுறது. நான் என்ன பண்றது? முதல் நாள் நடந்த காமெடி, கிளாஸ் நடத்தும்போதுதான் ஞாபகம் வந்து தொலைக்குது. அப்பவே அதை யார்கிட்டயாச்சும் சொல்லலைனா, பெரிய பாவம் ஆகிடுமே. நிறையவாட்டி இந்த மாதிரி பேசி மிஸ்கிட்ட மாட்டியிருக்கேன். ‘சரி, பேசினாதானே பிரச்னை’னு ஒருவாட்டி வேற ஐடியா ட்ரை பண்ணேன்.

தமிழ் அம்மா, ‘திருக்குறள்’ நடத்திட்டு இருக்கும்போது எனக்கு ஒரு புதுக்குறள் தோணுச்சு. ஒரு குட்டி பேப்பரை எடுத்து, ‘உடுக்கை இழந்தவன் கைபோல செல்போனில்/சார்ஜ் குறைய வருமாம் பதற்றம்’னு எழுதி, முன் வரிசையில் இருந்த ஜெகன் மேல வீசினேன். நமக்கு குதிரை பவர். பேப்பர் ஜெகனைத் தாண்டி, தமிழ் அம்மா மேலே விழுந்துச்சு. என்ன நடந்திருக்கும்னு சொல்லணுமா? ஸோ, இனிமே கிளாஸ்ல ஒழுங்கா பாடத்தைக் கவனிக்கணும்னு முடிவு பண்ணினேன்..
இன்னொரு முக்கியமான கெட்ட பழக்கம், ஸ்கூல் புக்ல கிறுக்குறது. குறிப்பாக, வரலாறு புக்ல. வரலாற்று மன்னர்கள், தலைவர்களுக்கு டி-ஷர்ட் போட்டு மாடர்ன் ஆக்குறது, டிசைன் டிசைனா மீசை, தாடி வரையுறது செம ஜாலியா இருக்கும். ஒருவாட்டி நேரு மாமாவுக்கு பிரெஞ்ச் தாடி வரைஞ்சதை மிஸ் பார்த்துட்டு, சுளுக்கு எடுத்தாங்க. ஸோ, இனிமே புக்ல நோ கிறுக்கிங்.

குறும்புக்காரன் டைரி - 22

ஆக, இந்தக் கெட்ட பழக்கங்களை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு நல்லவனா ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டான் இந்த கிஷோர். பிற்காலத்துல என் சரித்திரத்தை எழுதறவங்க, ‘சின்ன வயதில் கிஷோரின் குறும்புகள்’னு மட்டும்தான் எழுத முடியும்.

ஆமா, எனக்கு ஒரு டவுட்டு. அடுத்தவங்க டைரியை படிக்கிறதுகூட கெட்ட பழக்கம்தானே? அய்யோ, இத்தனை நாள் என் டைரிய படிக்கவெச்சு உங்களை கெட்டவனா மாத்தி இருக்கேன். அதுக்காக, உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். இனிமே, நான் எழுதுறதை உங்களுக்கு காட்டப்போறதில்லை. உங்களையும் ரொம்ப நல்லவங்களா மாத்தறதுதான் இந்த முடிவின் நோக்கம்.

மற்றபடி, என் அண்ணன்கிட்ட ஒரண்டை இழுக்குறது, ஜெகனை ஏமாத்துறது எல்லாம் உங்க மூலம் தெரிஞ்சுடும் என்கிற பயம் எதுவும் கிடையாது.

வேணும்னா, நீங்களும் எனக்குக் காட்டாம டைரி எழுதி, என்னைப் பழி வாங்கிக்கோங்க. இதுதான் நான் உங்க கிட்ட காட்டும் கடைசிப் பக்கங்கள்.

இதுதான் கடைசி வரிகள்... இந்த ‘ள்’தான் கடைசி எழுத்து. இல்லே, ‘து’தான் கடைசி எழுத்து!

 (டைரி முடிந்தது... உங்களுக்கு!)