Published:Updated:

செல்லக் குரல்கள் நாங்கதான்!

செல்லக் குரல்கள் நாங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
செல்லக் குரல்கள் நாங்கதான்!

பி.எஸ்.முத்து, கருப்பு - படங்கள்: டி.அசோக்குமார்

செல்லக் குரல்கள் நாங்கதான்!

பி.எஸ்.முத்து, கருப்பு - படங்கள்: டி.அசோக்குமார்

Published:Updated:
செல்லக் குரல்கள் நாங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
செல்லக் குரல்கள் நாங்கதான்!
செல்லக் குரல்கள் நாங்கதான்!

கோடம்பாக்கத்தின் அறியப்படாத நாயகர்களில் முக்கியமானவர்கள் பின்னணிக் குரல் கலைஞர்கள். பியர் கிரில்ஸுக்கும் `மகாபாரத' சகுனிக்கும் குரல் கொடுக்கும் கோபி நாயர், தமன்னா தொடங்கி ஸ்ரீதிவ்யா வரை வாய்ஸ் கொடுக்கும் விலாசினி, ஐஸ்வர்யா பாஸ்கர், மானஸி மற்றும் ரவீணா ரவி முதலான குரலிகளோடு செம்மொழிப் பூங்காவில் ஒரு மீட்டிங்!

விலாசினி

``ஹாசினி என்கிற விலாசினியிடம் நீங்க எப்படி இந்தத் துறைக்கு வந்தீங்க?'' என்று கேட்டால் ``என்னை ஆர்.ஜே ஹாசினியாத்தான் பலருக்கும் தெரியும். எனக்கும் இந்த ஃபீல்டுக்கும் சம்பந்தமே கிடையாது. நான் பெரிய வாயாடிங்கிறதால ஈஸியா ஆர்.ஜே ஆகி அப்படியே வி.ஜே-வும் ஆகிட்டேன். பாண்டிராஜ் சாரோட உதவியாளர் டப்பிங் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். `கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல ரெஜினாவுக்குத்தான் முதல்ல வாய்ஸ் கொடுத்தேன். முதல் ஆடிஷனே பாட்டுதான். அதுவும் எங்க தல அஜித் பாட்டு. ரெஜினாவோட `பாப்பா' கதாபாத்திரம்தான் என்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விலாசினியா மாற்றியது. மூணு வருஷத்துல 50 படங்கள் பண்ணிட்டேன்'' என்கிறார் ஹாசினி.

செல்லக் குரல்கள் நாங்கதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐஸ்வர்யா பாஸ்கர்

இவங்க வேற யாரும் இல்லைங்க, நடிகர் எம்.எஸ்.பாஸ்கரோட பொண்ணுதான் ஐஸ்வர்யா பாஸ்கர். ``இங்கே இருக்கிறவங்கள்லேயே நான்தான் ஜூனியர். எங்க அத்தை ஹேமமாலினியும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான். எனக்கு அப்போ ஏழு வயசு இருக்கும். `சாக்லேட் வாங்கித் தர்றேன் பாப்பா, கார்ட்டூனுக்கு டப் பண்ணு'னு சொல்ல, சாக்லேட்டுக்காகவே டப் பண்ண ஆரம்பிச்சேன். லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்க ஆரம்பிச்சப்போ நாங்க எடுக்குற குறும்படங்களுக்கு நாங்களேதான் டப் பண்ணணும்கிறதால, மறுபடி டப்பிங் ஃபீல்டுல களம் இறங்கினேன். சின்ன வயசுல இருந்தே டப்பிங் பண்றதால எனக்கு இது புது புரொஃபஷனாவே தெரியலை. பிடிச்சதை வேலையா செய்றதைவிட வேற என்ன சந்தோஷம் இருந்திட முடியும் சொல்லுங்க. இதைத் தவிர்த்து என்னைப் பற்றிச் சொல்லணும்னா டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' என்கிறார் ஐஸ்வர்யா

மானஸி


``பேஸிக்கலி நான் ஒரு பாடகி. `நிர்ணயம்' படத்துல செல்வகணேஷ் சார் இசையில் பாடிட்டிருந்தேன். ரிக்கார்டிங் நடுவுல நான் பேசுறதைக் கேட்ட இயக்குநர் சரவணன் சார்தான் `உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. டப் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?'னு கேட்டார். நான் பேசினது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்படி டப்பிங்ல ஆரம்பிச்சு என் பயணம் இப்படி வாழ்க்கையாவே மாறும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை.

நான் முதல்ல டப் பண்ண படம் `நிர்ணயம்'மா இருந்தாலும், முதல்ல ரிலீஸ் ஆனது `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'தான். அதுல ஸ்வாதி ரெட்டிக்கு நான்தான் வாய்ஸ். அப்புறம் நிறையப் படங்கள் பண்ணியிருந்தாலும் ஃபேமஸ் ஆனது `அஞ்சான்' படத்துலதான். சமந்தா பேசுற `நீ நிதானமா இல்லை. உன் கால் தரையில படலை. முதல்ல நில்லு. அப்புறம் வந்து சொல்லு' டயலாக் செம்ம ஹிட்.

செல்லக் குரல்கள் நாங்கதான்!

அடுத்த மைல்கல்னா `பாகுபலி'ல தமன்னா வாய்ஸ் எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்தது. இதைத் தொடர்ந்து `தோழா', `தர்மதுரை', `தேவி' படங்களுக்கு தமன்னாவுக்கு வாய்ஸ் நான்தான் பண்ணேன். சந்தோஷமான விஷயம் என்னன்னா, தமன்னாவே எல்லா இயக்குநர்கள்கிட்டயும் `எனக்கு மானஸியே டப்பிங் பேசட்டும்'னு சொன்னாங்க'' என்று இவர் பேசப் பேச, நம் காதுகளில் தமன்னாவின் குரல் கேட்க ஆரம்பிக்கிறது.

``தமன்னா இப்போ எல்லாம் வெவ்வேற மாதிரி கேரக்டர் பண்றாங்க. அதுக்காக உங்க வாய்ஸ்ல வித்தியாசம் காட்ட நீங்க என்ன பண்றீங்க?''

`` `பாகுபலி'ல தமன்னா கதாபாத்திரம் ஒரு போராளிங்கிறதால, அவங்க வாய்ஸ் ரொம்ப ரஃப் அண்ட் டஃப்பா இருக்கணும். அதனால் பேஸ் வாய்ஸ்ல பேசிருப்பேன். `தோழா' படத்துல அவங்க நவீனமான பொண்ணுங்கிறதால ஸ்டைலிஷா பேசவேண்டியிருந்தது. ஒவ்வொரு படத்துக்கும் அந்தந்த கேரக்டர் பொறுத்து நிறைய ஹோம்வொர்க் பண்ண வேண்டியிருந்தது'' என்கிறார் `தமன்னா' ஸ்பெஷல் மானஸி.

ரவீணா ரவி

``எங்க அம்மா ஸ்ரீஜா ரவி இப்பவும் ஹீரோயின்ஸுக்கு டப்பிங் பேசிட்டு இருக்காங்க. சின்ன வயசுலேயே அம்மாகூட ஸ்டுடியோவுக்குப் போவேன். அம்மா டப்பிங் பேசப் பேச, நானும் டயலாக் எல்லாம் ரிப்பீட் பண்ணுவேன். அதைப் பார்த்து இயக்குநர்கள் என்னையும் மைக் முன்னாடி நிற்க வெச்சுட்டாங்க. சின்ன வயசுல இருந்து நிறைய மொழிகள்ல டப்பிங் பேசியிருக்கேன். ஹீரோயினுக்கு நான் டப் பண்ண முதல் படம் `சாட்டை'. எனக்கு நிறையப் பேர்கிட்ட அடையாளம் வாங்கித்தந்தது `ஐ' படம்தான். `கத்தி', `அநேகன்' படங்களும் எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்தது.''

``நீங்க ஹீரோயின் ஆகிட்டதா சொல்றாங்களே..!''

``ஆமாம். `காக்கா முட்டை' மணிகண்டன் சாரோட உதவியாளர் சுரேஷ் சங்கையா இயக்கும் `ஒரு கிடாரியின் கருணை மனு' படத்துல விதார்த்துக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்'' என்று வெட்கப்படுகிறார் ரவீணா.

செல்லக் குரல்கள் நாங்கதான்!

கோபி நாயர்

``நான் சாதாரண டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இவங்களை மாதிரி பெரிய சாதனைகள் எல்லாம் பண்ணலை'' எனச் சொல்லும்போதே ``ஐய்யய்யோ... தன்னடக்கம் ரொம்பத் தளும்புதே..!'' என கமென்ட் போட்டு கலாய்த்தனர் பெண்கள்.

``டிஸ்கவரி சேனல்ல வர்ற `மேன் Vs வைல்டு' நிகழ்ச்சில் பியர் கிரில்ஸுக்கு நான்தான் வாய்ஸ். குழந்தைகளுக்கு எல்லாம் இந்தக் குரல் ரொம்பப் பிடிச்சதால என்னையும் பலருக்கும் பிடிக்கும். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான `மகாபாரதம்' தொடரில் சகுனி கதாபாத்திரத்துக்கும் நான் வாய்ஸ் கொடுத்தேன். இந்த ரெண்டும் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தந்தது.

எங்களை மாதிரியான கலைஞர்களுக்கு அங்கீகாரம்கிறதுதான் பெரிய ஊக்கமே. திரைக்குப் பின்னால் இருக்கும் டப்பிங் கலைஞர்களை ஒன்றுசேர்த்து, திரைக்கு முன்னாடி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணதுக்காக என்னோட டப்பிங் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அனைவரின் சார்பாகவும் விகடனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.''

``பியர் கிரில்ஸ் வாய்ஸ் பேசாம எங்கே தப்பிக்கிறீங்க?'' எனப் பெண்கள் மொத்தமாக அவரை இழுத்துப் பிடிக்க, ``இவங்ககிட்ட மாட்டிக்கிட்டா பியர் கிரில்ஸ்கூட தப்பிக்கிறது கஷ்டம்தான்'' என கமென்ட் அடித்துவிட்டு அவர் வாய்ஸில் பேச ஆரம்பிக்கிறார்.


`நான் பியர் கிரில்ஸ். பிரிட்டிஷ் ராணுவப் படையில் பணிபுரிந்திருக்கிறேன். இப்போ செம்மொழிப் பூங்காவில் இருக்கிறேன். இந்தப் பெண்களுக்கு மத்தியில் இருந்து அடிவாங்காமல் எப்படி வெளியேறுவது என்பது குறித்து உங்களுக்கு நான் இப்போ விளக்கப்போகிறேன்' எனப் பேசும்போதே அவரை அடிக்க பெண்கள் அனைவரும் துரத்துகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism