Published:Updated:

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...
பிரீமியம் ஸ்டோரி
அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

பா.சூரியராஜ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

பா.சூரியராஜ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...
பிரீமியம் ஸ்டோரி
அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்னு நிறைய யோசிச்சுட்டோம். அதனால், விஜய் படத்தில் அஜித்தும், அஜித் படத்தில் விஜய்யும் நடித்தால் எப்படி இருக்கும்னு சிந்திச்சோம்.

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

விஜய்ண்ணா விளையாடும் `வீரம்'

செம்பரம்பாக்கம் ஏரியில் செருப்புக் கால்களோடு டால்பின் போல நீரில் நீந்திப் பாய்ந்துவரும் அழகை, கரையில் நின்று ரசிக்கிறார்கள் விஜய்யின் தங்கைகள். அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகளைப் பார்த்து திருமணம் செய்துவைத்த பிறகுதான் தனக்குத் திருமணம் என, கோடு போட்டு வாழும் ரத்தத்தின் ரத்தம் விஜய். ஆனால், அடிக்கடி ஒரு கனவு மட்டும் அவரை டிஸ்டர்ப் செய்கிறது. தனது நான்கு தங்கைகளில் மூன்று தங்கைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்துவிடுகிறார். கடைசித் தங்கை நிவேதா தாமஸ், `நான் அண்ணி கையால ஒரு சொம்பு தண்ணி வாங்கிக் குடிச்சுட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்' என விஜய்யை வற்புறுத்த, விஜய் அந்த டிஸ்டர்பிங் கனவைப் பற்றி சொல்கிறார். இடுப்பில் மச்சம் இருக்கும் ஒருத்தி, தினமும் அவரது கனவில் தோன்றி பெல்லி டான்ஸ் ஆடுவதால்... `இடுப்பு மச்சம் இம்பார்ட்டன்ட் சிஸ்டர்ம்மா' எனச் சொல்லிவிடுகிறார். ஒரு ஃபங்ஷனில் தன் கனவில் வந்த அதே பெண்ணை, அதே இடுப்பில் மச்சத்தோடு அச்சுஅசலாக நேரில் பார்த்துத் திக்குமுக்காடி நிற்கிறார் விஜய்ண்ணா. அதுதான் தமன்னா!

கடைசித் தங்கைக்குத் திருமணமும் நடக்கிறது. விஜய்யும் தங்கையோடு சில நாட்கள் தங்கிவரலாம் என மதுரைக்குக் கிளம்புகிறார். மாட்டுத்தாவணியில் விஜய் இறங்க, அவர் கண் முன்னே ஒருவனை அரிவாளால் வெட்டுகிறான் வில்லன் வேதநாயகம். விஜய்யின் கண்களில் வில்லன் வேதநாயகம் வெட்டுவது தெரிகிறது. அவனைச் சாட்சியோடு போட்டுக்கொடுத்ததே தமன்னாவின் அப்பா நாசர்தான். அதனால் கடுப்பான வேதநாயகம், நாசரையும் அவன் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என அலைகிறான். இதைத் தெரிந்துகொள்ளும் விஜய், தனது தங்கை வாழும் இடம் அமைதியாக இருக்க வேண்டும், என அரிவாளில் எலுமிச்சம்பழம் செருகிக்கொண்டு `ஜலபுல கஜகஜ வீரம்' என தீம் மீயூஸிக் ஒலிக்க வதம்செய்யக் கிளம்புவதுதான் மீதிக் கதை. இறுதியில் தமன்னாவைக் கரம்பிடித்து, அந்த எலுமிச்சம்பழத்துக்கு ஓய்வுகொடுக்க... தி எண்ட்!

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

`மங்காத்தா’ - எ விஜய் கேம்!

மும்பை தாராவியில் கை, கால், கழுத்துகளில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு, `மணி... மணி... மணி...' என அனத்திக்கொண்டே சுற்றுகிறார் காசுக்காக எதையும் செய்யும் ஏடாகூட ரெளடி விஜய். மணி மீது மட்டும் அல்ல, மங்காத்தா மீதும் அண்ணாவுக்கு ஆசை. தாராவியைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டத் தரகர் ஆறுமுகத்தின் ஒரே மகள்தான் மங்காத்தா. மங்காத்தாவும் விஜய்யை ஹெவியாக லவ்வ, அவர்கள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடுகிறார் ஆறுமுகம். இந்த நேரத்தில்தான் ஆறுமுகம் குடோனில் இருக்கும் பணத்தை ஆட்டையைப்போட ப்ளான் செய்கிறார்கள், அதே ஏரியாவில் இருக்கும் விக்ராந்த், ஜெய், சதீஷ் மற்றும் பிரேம்ஜி.

டேபிள் மீது தாராவியின் புளூ பிரின்ட்டை விரித்து, திட்டம்போட ஆரம்பிக்கிறார்கள் கொள்ளை பாய்ஸ். அந்த ஊரின் அண்டர்கிரவுண்டைக் கணிக்க, டேபிளுக்கு அடியில் குனிந்தவர் அரண்டேபோகிறார். ஆமாம்...  இவ்வளவு நேரம் டேபிளுக்கு அடியில் குத்தவெச்சு உட்கார்ந்து இவர்கள் தீட்டிய திட்டத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார் விஜய். தனது வருங்கால மாமனாரின் பணத்தை ஆட்டையைப்போட ப்ளான் செய்தது தெரிந்து, எங்கே விஜய் டென்ஷனாகி காய்னைச் சுண்டிவிட்டு, இரும்புக் கம்பியால் அடிப்பாரோ என நால்வரும் அஞ்சி நடுங்க... விஜய், `ஆட்டத்துக்கு நானும் வரலாமா?’ எனக் கேட்க, நால்வரும் குஷியாகி `வரலாம்... வரலாம்... வா...' என்கிறார்கள்.

அந்த கன்டெய்னரைக் கைபற்ற சேஸிங்குக்காக கார், பைக் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தாலும், தன் வீட்டு மொட்டைமாடியில் இருந்து ஒரே தவ்வாகத் தவ்வி கன்டெய்னரில் லேண்டாக முயற்சிசெய்கிறார் உயிருள்ள விமானமான விஜய். ஆனால், கன்டெய்னர் யூடர்ன் அடிக்க, விஜய் வேறு ஏதோ ஓர் இடத்தில் லேண்ட் ஆகிவிடுகிறார்.  இந்த கேப்பில் கன்டெய்னர் ஓட்டுநரை அடித்துப்போட்டு நால்வரும் பணத்தில் கைவைக்க, நால்வர் பொடனியிலும் `ஹாண்ட்ஸ் அப்' என போலீஸ் துப்பாக்கியை வைக்கிறது. கிலியாகி போலீஸைப் பார்த்துத் திரும்பியவர்களுக்கு, கையில் துப்பாக்கியோடு போலீஸ் உடையில் நிற்கும் விஜய்யைப் பார்த்ததும் அடிக்கிறது ஷாக். விஜய் ஒரு அண்டர்கவர் அதிகாரி. அதனால்தான் அன்று டேபிளுக்கு அடியில் அமர்ந்து இருந்தார். சூதாட்டக் கும்பலைப் பிடிக்கத்தான் ரௌடி வேடம்.

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

அஜித் வெடிக்கும் `துப்பாக்கி’

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அஜித், கோடை விடுமுறையில் தன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்ததும் வராததுமாக அவர் தலையில் கறுப்பு டை அடித்து, பெண் பார்க்க அழைத்துப் போகிறார்கள் அவரது பெற்றோர். தலையில் டை அடிக்கும்போது, `தலைக்கே மையா?' என பன்ச் வசனம் பேசுகிறார். பெண் பார்க்க வந்த அஜித்திடம் மணப்பெண் `வெளியே போய், தனியா பேசலாமா?' எனக் கேட்க, இருவரும் வெளியே போக காரில் ஏற, பெரியவர்கள் ஒரு சிறுவனையும் அவர்களோடு அனுப்பிவைக்கிறார்கள். அந்தச் சிறுவன் அஜித்தின் முதுகில் `வங்கு... வங்கு...' எனக் குத்துகிறான். உடனே, அந்தப் பெண் `அச்சசோ!' என ஃபீல் ஆக, அஜித் சிரித்துக்கொண்டே, `என்னை நிறையப் பேர் முதுகுல குத்தியிருக்காங்கம்மா...' எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

அந்தப் பெண்ணை அருகில் இழுத்து, சடாரென காருக்கு வெளியே தள்ளிவிடுகிறார். அந்தப் பெண்ணோ, `உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா...' என வலியில் வசனம் பேச,  கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு அங்கு இருந்து கிளம்பிவிடுகிறார் அஜித். அந்தப் பெண்ணிடம் இருந்து கார் சிறிது தூரம் சென்றதும், அந்தப் பெண் `டமாரென' வெடித்துச் சிதறுகிறார். அந்தப் பெண் ஒரு ஸ்லீப்பர் செல். ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் அஜித்தைப் போட்டுத்தள்ள மனிதவெடிகுண்டாக மாறியவர். `அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு, ஸ்லீப்பர் செல்களின் தலைவனைக் கண்டுபிடித்து அழித்தே ஆக வேண்டும்' என முடிவுசெய்கிறார் அஜித். காரில் இருந்த அந்தப் பெண்ணின் ஹேண்ட்பேக்கில் இருந்து சிவப்புப் புள்ளிகள் வைக்கப்பட்ட ஒரு வெள்ளை பேப்பரையும், ஒரு மொபைலையும் எடுக்கிறார். அதேநேரம் அந்த போனுக்கு ஓர் அழைப்பு வர, அட்டெண்ட் செய்கிறார். `தூங்காதே தம்பி தூங்காதே... நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...' என அந்தப் பக்கம் யாரோ பாடும் சத்தம் கேட்கிறது. தூங்காதே என்றால், ஸ்லீப்பர் செல்களை அலெர்ட் செய்யும் கோட்வேர்டு என யூகிக்கும் அஜித், `தமாசு... தமாசு...' எனச் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார். இங்கே விடுறோம் இன்டெர்வல்.

ஸ்லீப்பர் செல்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று, ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்லையும் போட்டுத்தள்ளுகிறார். வில்லனோ, `இதை யார் செஞ்சிருப்பா?' எனத் தலையைப் பிய்த்துக்கொள்ள, அவனின் உதவியாள் ஒருவன் வந்து, `ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு' என்கிறான். வில்லன் உடனே ஆர்வமாகி, `சொல்லு என்ன க்ளூ அது?' எனக் கேட்க, `கொலை பண்ணவன்,  கோட் போட்டிருந்தானாம். அதைவிட முக்கியமானது, எல்லா ஏரியாக்களுக்கும் நடந்தே போய் கொலை பண்ணியிருக்கான்' எனச் சொல்ல, இதைப் பண்ணது அஜித்தாதான் இருக்கும் என, ஈஸியாகக் கண்டுபிடித்துவிடுகிறான் வில்லன். பிறகு, என்ன ஆனது என்பதுதான் க்ளைமாக்ஸ்!

அங்கே வைக்கிறோம் ட்விஸ்ட்ட...

தலயின் `தெறி'

கோடம்பாக்கத்தில் `தல'ப்பாகட்டி பிரியாணிக் கடை நடத்திக்கொண்டிருக்கிறார் அஜித். அவருக்கு ஒரே ஒரு மகள், பெயர் தமிழ். பாப்பா படிக்கும் பள்ளியில் ஆசிரியர் ஸ்ருதி. அஜித்தின் வெள்ளந்தியான சிரிப்பு அவரைப் போட்டுத்தாக்க, அஜித்தை வெறித்தனமாகக் காதலிக்கிறார் ஸ்ருதி. வாழ்க்கை ரொம்ப அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள், ஸ்ருதி தனது ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு போய் லோக்கல் தாதாவின் இடையில் செருக, பிரச்னை ஆரம்பித்தது. ஸ்ருதியைத் தேடி ஸ்கூலுக்குச் செல்லும் லோக்கல் தாதா, ஸ்ருதியை அடிக்க ஆரம்பிக்கிறான். அதைத் தடுக்கும் தமிழையும் சிறுமி என்றுகூடப் பார்க்காமல் தள்ளிவிட, தமிழ் தரையில் விழுந்து அடிபடுகிறாள். இதைக் கேள்விப்படும் அஜித், தனது டுகாட்டி பைக்கை எடுத்துக்கொண்டு லோக்கல் தாதாவிடம் சென்று, `நீ கெட்டவன்னா... நான் கேடுகெட்டவன்...' என வசனம் பேசி அவனைப் போட்டுப் பொளக்கிறார்.

இதை கேள்விப்படும் அந்த லோக்கல் தாதாவுக்கும் தலைவன், தமிழைக் கடத்திச் சென்றுவிடுகிறான். அஜித் வந்து கேட்டுக்கொண்டால் மட்டுமே தமிழை விடுவதாகச் சொல்கிறான். உடனே, அஜித் கடத்திச் சென்றவனின் முன்னால் நின்று, தமிழை விட்டுவிடுமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சுகிறார். ஆனால், அவன் அஜித்தை அடிக்க கடப்பாரையைத் தூக்க, அதுவரை அழுதுகொண்டிருந்த அஜித் மெள்ள சிரிக்க ஆரம்பிக்கிறார். மாஸ் டிரான்ஸ்ஃபர்மேஷனை முடித்துவிட்டு அங்கு உள்ள அனைவரையும் ராஜ்கிரணைவிட மோசமாக இரண்டு, மூன்றாக மடக்கி எறிகிறார். அந்தப் பக்கமாக ஸ்கூட்டி ரிப்பேர் பார்க்க வந்த ஸ்ருதி, வழி கேட்பதற்காக அஜித்திடம் வர... அஜித் `தெரிஞ்சுபோச்சா... சொல்றேன்' என ஃப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்.

தமிழ்நாட்டில் தான் போலீஸாக இருந்ததையும், விவாகரத்து ஆகி மகளோடு வாழ்ந்துகொண்டிருந்த த்ரிஷாவை, பரதநாட்டியம் க்ளாஸுக்குப் போய் காதலித்ததையும், விடிந்தால் இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் வில்லன் விக்டர் த்ரிஷாவைப் போட்டுத்தள்ளியதையும், இனி பிரச்னையே வேண்டாம் என உருளைக்கிழங்கு லாரியில் ஏறி, கொல்கத்தாவுக்குக் கிளம்பி வந்ததையும் பற்றி சொல்லிவிடுகிறார். அதைக் கேட்கும் ஸ்ருதி  `விக்டர்னா முகத்தை மறைச்சு மூணு முடி விட்டிருப்பானே... அவன்தானே! அவன் கொஞ்ச நாளா தமிழையே ஃபாலோ பண்ணிட்டிருந்தான்' என்கிறார். அஜித்துக்கு நாடி, நரம்புகள் எல்லாம் துடிச்சு, நாக்குப்பூச்சி வெளியே தெரிகிறது. `இனி விக்டரை விட்டால் சரியா வராது' என முடிவெடுக்கும் அஜித், அவனைக் கண்டுபிடித்து அவன் மண்டையில் கடப்பாரையைத் தூக்கி எறிவதே மீதிக் கதை!